என் மலர்
ஆசிரியர் தேர்வு
- போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
- 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில் ஃபைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில் 185 பேரில், 108 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஃபைசலாபாத் நகர காவல் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 58 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷிபிலி ஃபராஸ், சார்தாஜ் குல், ஷாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட இம்ரான் கான் கட்சியின் மூத்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
- முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
- 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
- சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.
இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
- மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில சுழ்நிலைக்காரணமாக பாடலை வெளியிட கூறிய நேரத்தில் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே இன்னிங்சில் 732 ரன்கள் குவித்திருந்தார்.
- சுப்மன் கில் இதுவரை இங்கிலாந்தில் தொடரில் 737 ரன்கள் அடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி கேப்டனான சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ரன்கள் குவித்திருந்தார்.
இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ரன்கள் எடுத்துள்ளார். 11 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 732 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். தற்போது வரை 737 ரன்கள் அடித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-
* முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.
* கல்வி நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
* பா.ஜ.க. வில் இருந்து தற்போது எந்த அழைப்பும் வரவில்லை.
* அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் மேற்பார்வையில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்.
* நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த பாஜக- அதிமுக தற்போது இணைந்துள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததற்காக வாழ்த்துகள்.
இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
- லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் ரத்தானது.
- பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன் ரத்து செய்யப்பட்டது.
இன்று ஜூலை 31, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது ரத்து செய்யப்பட்டது என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
- ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது.
பேலன்ஸ் சரிபார்ப்பதற்கான கட்டுப்பாடு:
GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
வங்கி கணக்கு விவரங்களை பார்ப்பதற்கான கட்டுப்பாடு:
உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்கு நேர கட்டுப்பாடு:
இனிமேல், ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும்.
கட்டண நிலையை பார்ப்பதற்கான வரம்பு:
ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும்.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.
- கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது.
சென்னை:
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பிற்கு எஞ்சிய மழைப்பொழிவு பதிவாகும். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.
கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக கூடும்.
இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழகம் & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடிமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
- ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தொண்டு நிறுவன நிதி திரட்டல் கிரிக்கெட் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.
இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
- சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
- இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.
இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
- சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்.






