search icon
என் மலர்tooltip icon
    • 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
    • 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நாளந்தா இண்டர்நேஷனல் பொதுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், இப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற தினேஷ்ராஜ் என்ற மாணவர் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதே போல் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற 10 மாணவர்கள் 500 க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பில் பயின்ற மாணவர் ருத்ராட்சம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, இயக்குனர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் முதல்வர்கள் நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.

    • கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு முட்டை, பிஸ்கட், பால் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
    • முகாமில் பங்கேற்ற 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.

    தருமபுரி,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடைபெற்றது.

    இதில் தடகளம், கால்பந்து, ஆக்கி, வாலிபால், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், கபடி ஆகிய விளையாட்டுகளில் பயி ற்சிகள் அளிக்கப்பட்டன.

    இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு முட்டை, பிஸ்கட், பால் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

    இந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் கபடி பயிற்சியாளர் பியாரா வரவேற்றார்.

    விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.

    இந்த கோடைகால பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி செய்திருந்தார். முடிவில் கைப்பந்து பயிற்சியாளர் தினேஷ் நன்றி கூறினார்.

    • தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
    • மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றம் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பெற்றது. அதன்படி, தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதிகைள பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உரிமம் பெற்று செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், பொதுப் பணித்துறையின் கட்டிட உறுதித்தன்மை சான்றும் மற்றும் பார்ம் -டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கான விடுதி, காப்பகங்களில் விடுதிக் காப்பாளர் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண், பெண் ஆகவும் இருக்க வேண்டும்.

    பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் மற்றும் உரிமத்தை புதுப்பிக்கவும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்ட விதிகள் 2015ல் காணப்படிம் படிவம் -1, படிவம் -4 ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், தொலைபேசி எண்.04343-235717 மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
    • பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    தருமபுரி,

    தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்து றையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் "தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்" ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும்.

    இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறை களில் வேலையளிப்பவர் கோரும் பட்சத்தில், உரிய விதிகளின்படி நேர்முகத்தேர்விற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸி க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்க வுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 19.5.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடை பெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
    • ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

     ஓசூர்,

    ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

    இந்த தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாள்களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் இன்று முதல் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

    • பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
    • வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிபிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூணுப்படுகிறது. இதனால் கவிபிரியா கணவருடன் கோபித்து கொண்டு நார்த்தம் பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

    இதையடுத்து பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு கவிபிரியா வர மறுத்ததால் விரக்தியில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை.
    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது37). இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவுதா (32) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி தனது வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பவுதா பெரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.

    இதேபோல் பெரும்பாலை அருகே கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்த சீனு. இவரது மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு கடந்த 6 மாதங்களாக செம்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பிரியாவின் தந்தை முருகேசன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பிரியாவை தேடி வருகின்றனர்.

    • கிலோ 8 ரூபாய் இருந்து 10 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
    • கனமழை காரணத்தால் தக்காளி வரத்து அதிகரித்து அதனால் விலை குறைந்துள்ளது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான சாமனூர், அத்தி மூட்லு, கானூர் கைனி, அகரம், கல்லாகரம், சாஸ்திர முட்லு, பன்னி பட்டி, உலகானஅள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர் .

    இந்நிலையில் மாரண்டஅள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் தக்காளிகள் செடியிலே அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி , தக்காளி நாற்று, உரம் குச்சி கட்டுதல் ஆள் கூலி என ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம் .தற்போது தக்காளியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ 8 ரூபாய் இருந்து 10 ரூபாய் வரை விற்பனை ஆகிறது கனமழை காரணத்தால் தக்காளி வரத்து அதிகரித்து அதனால் விலை குறைந்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் சுமார் 70 ஆயிரம் நடப்பட உள்ளது.
    • சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கடத்தூர்,

    தமிழகத்தில் பாழடைந்த 33.290 ஹெக்டேர் வன நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மீட்கும் வகையில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ரூ.457 கோடி கடனுதவி அளித்து, பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும், குறைவான அடர்த்தி கொண்ட வனப் பகுதிகள் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக, முக்கியமான நீர்நிலைகளின் காடுகள், இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் வனச்சரகத்தில் 2023-24 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் மர அடர்த்தி குறைந்த 700 ஹெக்டேர் காப்பு காடுகள் , பொம்மிடி அருகேயுள்ள கவரமலை காப்பு காட்டுப் பகுதியில் கண்டறிப்பட்டுள்ளது.

    இதில் ஆங்காங்கே அடர்த்தி குறைந்த பகுதிகளில் சீதா, தான்றி, வேங்கை, கள்ளச்சி, ,சிவப்பு, சந்தனம், தேக்கு, வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான மரக்கன்றுகள் சுமார் 70 ஆயிரம் நடப்பட உள்ளது.

    வரும் ஜீன் - ஜீலை மாதத்தில் கன்றுகள் நடவுப் பணி தொடங்க உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் அரூர் வனச்சரகம்,கோட்டப்பட்டி வனச்சரகம் உள்ளிட்ட வனசரகங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள நடப்பட உள்ளதாகவும், இதற்கான வனகாப்பு காடுகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது வனத்துறையினரின் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.

    • சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது.
    • காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிைலயம் கட்டி சில ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த பேருந்து நிலையத்திக்கு சூளகிரி சுற்றுபுறப்பகுதி கிராமங்களில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வெளி மாநிலத்தவர் என 10 ஆயித்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த பேருந்து நிலையத்திற்க்கு ஒசூர்- கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு நுழைவாயில் தோரணம் உள்ளது.

    அதன் அருகில் சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் பேருந்துகள் பள்ளத்தில் இறங்கி செல்வதால் அதிர்வு எற்படுகிறது. இதனால் அக்கம் பக்க சுவர் அதிர்கிறது.

    இதனால் காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது. அதனால் பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.
    • சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

     ஒகேனக்கல்,

    ஒகேனக்கல் சுற்றுலா தலமானது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லும் நடைபாதை, கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.

    சில நாட்களாக சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

    இதனை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பாக்கு தட்டு மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மொத்தம் 306 மனுக்களை கொடுத்தனர்.
    • மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மொத்தம் 306 மனுக்களை கொடுத்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×