search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15-ந்தேதி நடை திறப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15-ந்தேதி நடை திறப்பு

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் (தமிழ் மாதம்) முதல் தேதியில் இருந்து 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதே போல், கோவில் திருவிழா நாட்கள், பிரதிஷ்டை தினம், விஷூ பண்டிகை, ஓணம் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    இந்த நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15- ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. தொடர்ந்து 16-ந் தேதி அதிகாலை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்பட வழிபாடுகள் நடைபெறும்.

    முன்னதாக, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 11- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 12- ந் தேதி பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதை யொட்டி, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

    மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை உள்பட முக்கிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக நிலக்கல்லில் கட்டுப்பாட்டு அலுவலகம் திறக்கப்பட்டு சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×