search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • வராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
    • ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது.

    மகா வராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும்.

    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    மகா வராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது. வேத ஜோதிடத்தில் 12 ராசிகளில், 6 ஆவது ராசியான கன்னியின் ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மேலும், கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில், ஆறாம் வீடு என்பது கடன், பகை, வம்பு, வழக்கு, நோய் ஆகியவற்றைக் குறிக்கும். புதன் கிழமையின் அதி தேவதை மகா விஷ்ணு, மகா விஷ்ணுவின் சொரூபம் தான் விஷ்ணுமாயா என்று அழைக்கப்படும் ஸ்ரீ வராஹி அம்மன். எனவே, புதனின் 6 ஆம் வீட்டு காரகத்தால் ஏற்படும் பாதிப்பை போக்குவதற்கு வராஹி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

    • சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.
    • வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள்.

    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.

    வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை விரதம் இருந்து வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

    நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    கடன் தொல்லை அகல புதன் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீ வராஹியை வழிபட வேண்டும்.

    இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

    பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

    அன்னை வராஹிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

    கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.

    வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வராஹி தேவி!

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.
    • சித்திர குப்தரை விரதம் இருந்து வழிபட்டால் கேது தோஷம் நீங்கும்.

    1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.

    2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.

    3. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    4. சித்ரா பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

    5. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.

    6. சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும்.

    7. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    8. சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று விரதம் இருந்து சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.

    9. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.

    10. மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.

    11. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.

    12. சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    13. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    14. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.

    15. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.

    16. சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    17. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    18. சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    19. சித்திர குப்தரை விரதம் இருந்து வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    20. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

    21. சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    22. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    23. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது.

    24. எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    25. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது....

    • முருக மந்திரம் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடலாம்.
    • உங்கள் வாழ்க்கையிலிருந்த கஷ்டங்கள் தீரும்.

    சித்திரை மாதம் கிருத்திகை முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்குச் சிறப்பான நாளாகும். சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரமாக இந்த கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. எனவே சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் அருள் பெற வேண்டுமென்றால், சித்திரை மாத கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    அதிகாலை எழுந்து குளித்துவிட்டு விரதத்தைத் தொடங்கினால், முருகப்பெருமானின் அருளும், ஆசியும் பூரணமாகக் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு மலர்கொண்டு பூஜித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். அதிகாலை தொடங்கியது முதல் மாலை வரை உணவு எடுத்துக் கொள்ளாமல், முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பின்பு, பால் பழம் அல்லது பழச்சாறு அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    இந்நாளில் விரதம் ஏற்று வீட்டில் இருப்பவர்கள், முருக மந்திரம் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்து வழிபடலாம், மேலும் கேசரி சக்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். விரதத்தை முடிக்கக் கூடிய மாலை நேரத்தில் செம்பருத்தி சிவப்பு ரோஜா செவ்வரளி போன்ற மலர்களைக் கொண்டு முருகப்பெருமானைப் பூசிக்கலாம்.

    காக்கும் கடவுளான முருகப் பெருமான், சித்திரை மாதத்தில் கிருத்திகை விரதம் மேற்கொள்பவர்களுக்கு, வீடு பிரச்சனை, குடும்ப பிரச்சனை, எதிரிகள் பிரச்சனை, பணப்பிரச்சனை, சொத்து பிரச்சனை என எல்லா விதமான தடைகளையும் நீக்குவார். குறிப்பாகச் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கும்.

    கார்த்திகை நாயகனான முருகப்பெருமானுக்காக, கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொண்டால், அன்பு அறிவு செல்வம் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் என அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    அதேசமயம் இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருந்து முருகப்பெருமானின் மந்திரங்களைப் பாராயணம் செய்து, மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு, பசியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும், மேலும் உங்கள் வாழ்க்கையிலிருந்த கஷ்டங்கள் தீரும்.

    • இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும்.
    • ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும்.

    சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

    ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

    கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

    பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்

    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சித்திரை மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் ஆகும்.
    • உங்கள் வீட்டில் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.

    சித்திரை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கு யோகமான காலமாக அமையும்.

    சித்திரை மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் ஆகும். இந்த சித்திரை மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மேற்கண்டவற்றை செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை விரைவில் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார்.
    • பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் முக்கியமானதாக கருதப்படுபவை தைப்பூசம், மாசி மாதம் நடக்கும் பூச்சொரிதல் விழா, சித்திரை மாதம் நடக்கும் தேர்த் திருவிழா, வைகாசியில் நடக்கும் பஞ்சப்பிரகார விழா ஆகியவையாகும். தைமாத விழாவில் தைப்பூசத்தன்று அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று தனது அண்ணனான ரெங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகளை பெறும் நிகழ்ச்சி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. பூச்சொரிதல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி, அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைகிறது.

    பூச்சொரிதல் தொடங்கிய நாளில் இருந்து நிறைவடைவது வரை 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களை காத்து வருகிறார். அந்த காலகட்டத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் இல்லாமல், துள்ளு மாவு, இளநீர், கரும்பு, பானகம், நீர்மோர், வெள்ளரி போன்றவை வைத்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்களும் மஞ்சள் உடை உடுத்தி மாலை போட்டுக்கொண்டு கடும் விரதம் இருப்பார்கள்.

    இவர்களும் அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.தன்னை நம்பி வரும் பக்தர்களை சமயபுரம் மாரியம்மன் என்றுமே கைவிட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக தன்னை நாடி வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், நினைத்தது நடக்கவும், வேண்டும் வரம் கிடைக்கவும், பக்தர்களுக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இந்த அம்மனின் தனிச்சிறப்பு ஆகும். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை நினைத்து மனமுருக வேண்டி வணங்குவார்கள்.

    அமாவாசை அன்று இரவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை விடிய, விடிய கண்விழித்து வேண்டி, அதிகாலையில் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதன் காரணமாகவே அமாவாசை அன்று கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி இருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    • ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்தின் பலனை ஒரு சோம பிரதோஷ விரதம் தரும்.
    • எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் இந்த விரதத்தால் அது போய்விடும்.

    பிரதோஷம் எந்த கிழமைகளில் வருகிறதோ அதற்கு ஏற்ப பெயரிட்டு அழைப்பார்கள். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) வரும் பிரதோஷத்திற்கு சோமவார பிரதோஷம் என்று பெயர். மேலும் இந்த பிரதோஷம் மகாலட்சுமியின் பூரம் நட்சத்திரத்தில் வருகின்றது. எனவே இன்றைய பிரதோஷம் மிகவும் தனித்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

    இன்றைய பிரதோஷம் சந்திரன், மகாலட்சுமி இருவரின் வழிபாட்டுக்கும் உரியதாகும். சந்திரன், மகாலட்சுமி இருவரும் பாற்கடலில் இருந்து தோன்றியவர்கள். அந்த பாற்கடல் கடைந்த நாளும் இந்த நாள்தான். பாற்கடலில் வந்த விஷத்தைத்தான் உண்டு, நீலகண்டனாகி, நல்லவற்றை மற்றவர்களுக்குத் தந்தார் சிவபெருமான். இன்றைய பிரதோஷம் இதை பிரதிபலிக்கிறது.

    விரதங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த விரதம் சோமவார பிரதோஷ விரதம் என்று சொல்வார்கள். எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் இந்த விரதத்தால் அது போய்விடும். ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்தின் பலனை ஒரு சோம பிரதோஷ விரதம் தரும். எனவே இன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். விளக்கேற்றி, நந்தியையும் சிவனையும் வணங்க வேண்டும். இதனால் சகல துன்பங்களும் விலகும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.
    • தவறவிடக் கூடாத விரத நாள் இது.

    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர்.

    இன்றைய சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு 'பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    இன்று பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து சாபம் நீங்கப் பெற்ற மஞ்சுகோஷை என்ற தேவகன்னியின் கதையை அறிந்துகொள்வோம்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால், மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, "தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி" என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், "நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், "இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே" என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, "உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக..." என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், "சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்" என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம்.

    ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு 'பாரணை' என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional

    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும்.
    • சனிக்கிழமைகளில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

    சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைப்பார்கள். சனி பகவானுடைய ஆதிக்கத்தை பொருத்தே மனிதர்களின் ஆயுட்காலம் அமையும். அந்த சனிபகவானை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பெருமாள். எனவே பெருமாளை 'சனி அதிபதி' என்றும் அழைப்பார்கள்.

    பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆகையால், சனிக்கிழமை அன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டுமென்றால், சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். முக்கியமாக சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள, சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    சனிக்கிழமை விரதம் எப்படி இருக்கவேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். பகல் முழுவதும் பழங்களையும் நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, நல்லெண்ணை தீபம் ஏற்றி, திருமாலை வழிபட்டு பின்பு இரவு உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். சனிக்கிழமை விரதம் என்பது எல்லா மாதங்களிலும் கடைப்பிடிப்பது சிறப்பாகும். முக்கியமாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கிழமை விரதம் எடுக்காத பக்தர்களும் கூட, சனிக்கிழமை தோறும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    சனிக்கிழமைகளில் பக்தர்கள் இன்னும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவசர அவசிய காரணங்கள் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்வது. விதை விதைப்பது போன்ற விவசாயம் சம்பந்தமான காரியங்களை சனிக்கிழமை செய்வதை தவிர்க்கலாம். மங்களகரமான காரியங்களை சனிக்கிழமை செய்வதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

    சனிக்கிழமைகளில் எந்த காரியங்களை செய்யலாம் என்று கேட்டால் வழக்கு சம்பந்தமான காரியங்கள், பிரச்சனைகளை பேசி முடிப்பதற்கான சந்தர்ப்பங்கள், சமாதானம் பேசுவதற்கான நாளாகவும் சனிக்கிழமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அரசியல் ரீதியாக வெற்றிகளை கொடுக்கக்கூடிய நாளாக சனிக்கிழமை இருக்கும். சனிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வணங்கினால் நன்மைகள் நம்மை நாடி வரும்.

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    • வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும்
    • வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

    இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான்.

    வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியவைகள்:

    1. கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும். வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில்

    2. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.

    3. வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும். அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.

    4. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

    5. வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

    • பைரவர் காவல் தெய்வம் போன்றவர்.
    • பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி.

    கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவ வழிபாடு செய்யச் செய்ய, வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

    பைரவர் பன்னிருகரங்களுடன் நாகத்தை முப்புரிநூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தியும் பாசக் கயிற்றைக் கையில் கொண்டும், அங்குசம் போன்ற ஆயுதங்களை தரித்தும் வீரமான திருக்கோலம் கொண்டு அருள்கிறவர். நாயை வாகனமாகக் கொண்டவர். பைரவர் அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார். பைரவரே சிவாலயக் காவலர். தினமும் ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் சந்நிதியில் வைத்துச் செல்வர்.

    பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் ஒன்றான சனியின் குரு. குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைரவரை வழிபடுவதன் மூலம் சனி பகவானை குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.

    பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி.

    பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. சிவாலயங்களில், பைரவருக்கு சந்நிதி இருக்கும். பொதுவாகவே, சந்நிதி என்று இல்லாமல், பைரவரின் திருவிக்கிரகம் மட்டுமே இருக்கும். இந்தநாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் சென்று, பைரவரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

    எதிரிகளால் தொல்லை என்று கலங்குவோர், எந்தக் காரியம் செய்தாலும் தடையாக இருக்கிறதே எனப் புலம்புவோர், கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியவில்லையே என்று கண்ணீர் விடுவோர், தீய சக்திகளின் தாக்கம் இருப்பதாக வருந்துவோர்... மறக்காமல் பைரவரை நினைத்து பூஜிக்கலாம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதும் செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் மகத்துவம் வாய்ந்தது. ராகுகாலத்தில் இந்தப் பூஜைகளை மேற்கொள்வதும் நாய்களுக்கு உணவளிப்பதும் மகோன்னத பலன்களை வழங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    வீட்டில் இருக்கும் சிவபெருமான் படத்துக்கு முன்னால் நெய்விளக்கேற்றுங்கள். சிவப்புநிற மலர்கள் கிடைத்தால் அதைச் சாத்தி வழிபடுங்கள். சிவனே பைரவர் ஆதலால் தவறாமல் சிவபுராணம் படியுங்கள். ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். இவையெல்லாம் மனதுக்கு மிகுந்த வலிமையைத் தரும். மேலும், எளிமையாக ஏதேனும் ஒரு பிரசாதம் செய்து நிவேதனம் செய்யுங்கள். குடும்பத்தில் அனைவரும் கூடி நின்று இந்த வழிபாட்டைச் செய்யும்போது அந்த கால பைரவரின் அருள் நம் குடும்பத்தை எப்போதும் காக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

    மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் ஆதரவற்றோருக்கும் பக்தர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.

    ×