search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று தேய்பிறை அஷ்டமி: விரதம் இருந்து பைரவரைத் தொழத் தேயும் துன்பங்கள்...
    X

    இன்று தேய்பிறை அஷ்டமி: விரதம் இருந்து பைரவரைத் தொழத் தேயும் துன்பங்கள்...

    • பைரவர் காவல் தெய்வம் போன்றவர்.
    • பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி.

    கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவ வழிபாடு செய்யச் செய்ய, வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

    பைரவர் பன்னிருகரங்களுடன் நாகத்தை முப்புரிநூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தியும் பாசக் கயிற்றைக் கையில் கொண்டும், அங்குசம் போன்ற ஆயுதங்களை தரித்தும் வீரமான திருக்கோலம் கொண்டு அருள்கிறவர். நாயை வாகனமாகக் கொண்டவர். பைரவர் அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார். பைரவரே சிவாலயக் காவலர். தினமும் ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் சந்நிதியில் வைத்துச் செல்வர்.

    பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் ஒன்றான சனியின் குரு. குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைரவரை வழிபடுவதன் மூலம் சனி பகவானை குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.

    பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி.

    பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. சிவாலயங்களில், பைரவருக்கு சந்நிதி இருக்கும். பொதுவாகவே, சந்நிதி என்று இல்லாமல், பைரவரின் திருவிக்கிரகம் மட்டுமே இருக்கும். இந்தநாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் சென்று, பைரவரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

    எதிரிகளால் தொல்லை என்று கலங்குவோர், எந்தக் காரியம் செய்தாலும் தடையாக இருக்கிறதே எனப் புலம்புவோர், கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியவில்லையே என்று கண்ணீர் விடுவோர், தீய சக்திகளின் தாக்கம் இருப்பதாக வருந்துவோர்... மறக்காமல் பைரவரை நினைத்து பூஜிக்கலாம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதும் செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் மகத்துவம் வாய்ந்தது. ராகுகாலத்தில் இந்தப் பூஜைகளை மேற்கொள்வதும் நாய்களுக்கு உணவளிப்பதும் மகோன்னத பலன்களை வழங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    வீட்டில் இருக்கும் சிவபெருமான் படத்துக்கு முன்னால் நெய்விளக்கேற்றுங்கள். சிவப்புநிற மலர்கள் கிடைத்தால் அதைச் சாத்தி வழிபடுங்கள். சிவனே பைரவர் ஆதலால் தவறாமல் சிவபுராணம் படியுங்கள். ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். இவையெல்லாம் மனதுக்கு மிகுந்த வலிமையைத் தரும். மேலும், எளிமையாக ஏதேனும் ஒரு பிரசாதம் செய்து நிவேதனம் செய்யுங்கள். குடும்பத்தில் அனைவரும் கூடி நின்று இந்த வழிபாட்டைச் செய்யும்போது அந்த கால பைரவரின் அருள் நம் குடும்பத்தை எப்போதும் காக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

    மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் ஆதரவற்றோருக்கும் பக்தர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.

    Next Story
    ×