என் மலர்
தரவரிசை
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் விமர்சனம். #SarvamThaalaMayamReview #SarvamThaalaMayam #GVPrakashKumar
இசை உலகத்துக்கே சக்ரவர்த்தியாக விளங்குகிறார் மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு. அவருக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். ஜி.விக்கு இயல்பிலேயே இசை ஞானம் உண்டு. நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் வேணுவும் அவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார்.
வேணுவிடம் நீண்ட நாட்களாக இருக்கும் வினீத்துக்கு இது எரிச்சலை தருகிறது. வெளியேறும் வினீத் வேணுவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகளை தன் இசையால் வெல்லும் ஜிவி, வேணுவிற்கும் ஒரு பாடம் சொல்கிறார்.

வேம்பு ஐயரின் கர்வத்துக்கும், பீட்டரின் ஏக்கத்துக்கும் நடக்கும் போராட்டமே சர்வம் தாள மயம். இருவருமே கடைசி வரை அதை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து இருப்பது அந்த கதாபாத்திரங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.
வேம்பு ஐயர் மனதை கவர்ந்து அவரிடம் சிஷ்யனாகிவிட வேண்டும் என்ற துடிப்பை பார்வை, நடை, பாவனை என அனைத்திலும் காட்டி, அடித்தட்டு இளைஞனின் ஏக்கத்தை உணர்த்திவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ். பீட்டராக லந்து கொடுப்பது, அப்பா கஷ்டப்படுவதை பார்த்து உருகுவது, போதையில் சவால் விடுவது, இரட்டை குவளை முறையை பார்த்து ஆவேசப்படுவது என அவர் நடிப்பில் இந்த படம் ஒரு மைல்கல். நீ கச்சேரி வாசிக்கணும் என்று குரு சொல்லும்போது ஏற்படும் பரவசத்தை அப்படியே நமக்கு கடத்துகிறார். விருதுகளை அள்ள வாழ்த்துகள்.

வேம்பு ஐயராகவே வாழ்ந்து இருக்கிறார் நெடுமுடி வேணு. மேதை என்ற கர்வத்தையும், தகுதியானவனுக்கு தகுதியானது சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற தர்மத்தையும் படம் முழுக்க தாங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை உணர்ந்து அவர் திரும்பும் காட்சிகளில் அனுபவ நடிப்பு வெளிப்படுகிறது. அவருக்கும் விருதுகள் குவியும்.
எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் அதிலும் நியாயம் செய்து இருக்கிறார் வினீத். அண்ணா, அண்ணா என்று சுற்றும் அவரே வேம்பு ஐயருக்கு எதிராக மாறுவது திரைக்கதை திருப்பம்.

ஜிவி.பிரகாஷின் பெற்றோராக குமரவேல், தெரசா நடுத்தர குடும்பத்தை பிரதிபலிக்கிறார்கள். இயலாமையையும் தொழில்பக்தியையும் இயல்பாக கடத்துகிறார் குமரவேல். அவருக்கும் இது முக்கியமான படம். அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பணியை நிறைவாக செய்துள்ளார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை வைத்தே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து இருப்பது கெத்து.
பல ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க நம் பாரம்பரிய இசை பற்றிய ஒரு படம். அதற்குள் குரு சிஷ்யன் உறவு, சாதி ஏற்றத்தாழ்வுகள், தந்தை மகன் பாசம், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் டிஆர்பி விளையாட்டு என பல விஷயங்களை சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் அழகாக கோர்த்து திரைப்படமாக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன்.

இசைக்கு சாதி, மதம், பொருளாதாரம் எதுவும் தெரியாது. அன்பும் அர்ப்பணிப்பும் மட்டுமே இசைக்கான ஆதாரங்கள் என்பதை உணர்த்திய விதத்தில் சர்வம் தாள மயம் தலையில் வைத்து கொண்டாட கூடிய ஒரு படைப்பு. மொத்தத்தில் இசை, திரைக்கதை, நடிப்பு மூன்று துறைகளிலும் நம்மை பரவசப்படுத்தி நெகிழ்ச்சி அடைய வைக்கிறது சர்வம் தாள மயம்.
சிறிது பிசகினாலும் ஆவணப்படம் போல் மாறி இருக்கவேண்டிய படத்தை திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் சுவாரசியமாக்குகின்றன. முதல் பாதி வரை நெகிழ வைக்கும் திரைக்கதை இடைவேளைக்கு பின்னர் சில நிமிடங்கள் எங்கெங்கோ செல்கிறது. குருவுடன் சிஷ்யன் சேர்ந்த பிறகு மீண்டும் வேகம் எடுக்கிறது. பீட்டரின் இசை தேடும் பயணத்தை இன்னும் சுவாரசியமாக்கி இருக்கலாம்.

அவங்களுக்கு தோல் முக்கியம். நமக்கு தொழில் முக்கியம், உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் காலேஜ் கோட்டால சீட்டு கிடைக்குமே... இங்கே ஏன் கத்துக்க வர்றே... என வசனங்கள் சமகால சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. கல்லுல இருந்து சிற்பம் வரலைன்னா அது சிற்பியோட தப்பு போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் இன்னொரு கதாநாயகனாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. லைவ் ரெக்கார்டிங் என்பதை நம்பவே முடியவில்லை. பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றன. ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் கச்சிதம்.
மொத்தத்தில் `சர்வம் தாள மயம்' இசையின் வெற்றி. #SarvamThaalaMayamReview #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali #NedumudiVenu #Vineeth #RajivMenon #ARRahman
ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரன்பு' படத்தின் விமர்சனம். #Peranbu #PeranbuReview #Mammootty #Anjali #ThangaMeengalSadhana
மனைவி ஓடிப்போனதால், முடக்கு வாதத்தால் அவதிப்படும் தனது குழந்தை சாதனாவை பார்த்துக்கொள்ள இந்தியா வருகிறார் மம்முட்டி. இங்கு வந்த பிறகு தான், தனது குடும்பத்தினருக்கே தனது மகள் தொந்தரவாக இருப்பதை உணர்கிறார். இதையடுத்து சாதனாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில், இயற்கை சூழலில் இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்கிறார்.
தாய் பாசத்தால் ஏங்கும் சாதனாவின் அனைத்து தேவைகளையும் ஒரு தந்தையாக நிறைவேற்றி வைக்கவும் முயற்சிக்கிறார். தேனப்பனும், ஜே.எஸ்.கே சதீஷும் மம்முட்டி குடியிறுக்கும் வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், மம்முட்டி வீட்டிற்கு வேலைக்காரியாக வரும் அஞ்சலி, சாதனாவை தன் பெண்ணாகவே கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். இதற்கிடையே மோசடி மூலம் தேனப்பன் மம்முட்டியின் வீட்டை எழுதி வாங்கிவிடுகிறார். வீட்டை இழந்த நிலையில், சாதனாவுடன் சென்னை திரும்புகிறார் மம்முட்டி.
பரபரப்பாக இயங்கும் சென்னை சூழலில் மம்முட்டி தனது குழந்தையை எப்படி கவனித்துக் கொள்கிறார்? குழந்தையின் தேவையை நிறைவேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்பதே பேரன்பின் மீதிக்கதை.

10 வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான கதையின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மம்முட்டிக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் மாஸான நடிகராக இருக்கும் மம்முட்டி இதுபோன்ற ஒரு படத்தில் நடித்தது அவரது தரம் மற்றும் நற்சிந்தனையை காட்டுகிறது. ராமின் தேவையை ஒரு சாதாரண அப்பாவாக மம்முட்டி நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யும், தனது மகள் படும் கஷ்டங்களை பார்த்து வேதனைப்படும் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார்.
தங்கமீன்கள் படத்திற்கு பிறகு சாதனா இதில் முற்றிலும் மாறுபட்ட, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மனதில் பதிகிறார். கள்ளங்கபடமற்ற காதல், பேரன்பு, ஆசை, பாசம், இரக்கம் என அவளது உலகம் புதிரானது, வித்தியாசமானது. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். தனக்காக தனி உலகம் இருந்தாலும், அதில் தனக்கும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை புரிய வைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சாதனாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்க மீன்கள் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனாவுக்கு, இந்த படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது கொடுத்தாலும் போதாது. தங்கமீன்கள் சாதனா இனி பேரன்பின் சாதனாவாக மிளிர்வார்.

அஞ்சலி குறைவான நேரமே வந்தாலும், இதுவரை நடிக்காத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருநங்கை அஞ்சலி அமீர், தங்களை போன்றவர்களுக்கும் அன்பு, பாசம் உண்டு என்பதை உணர்த்திச் செல்கிறார்.
வாழ்க்கையின் எதார்த்தத்தை திரையில் அப்பட்டமாக காட்டுவதில் ராம் ஆகச்சிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் யாரும் தொடாத, எளிதில் தொட முடியாத ஒரு கதைக்கருவை பேரன்பாக படைத்திருக்கும் ராமுக்கு பாராட்டுக்கள். படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை விட்டுச் செல்லும் தாய், தாய் பாசத்தால் ஏங்கும் குழந்தை, குழந்தையை அரவணைக்க துடிக்கும் தந்தை என காட்சிகளை மனதில் பதிய வைக்கிறார். தன் மீது பாசம் காட்டும் அனைவரும் தன்னை விட்டு விலகிச் செல்வதை விரும்பாத குழந்தையின் கள்ளங்கபடமற்ற பாசம் உயர்வானது என்பதை புரியவைக்கிறார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை உணர வைத்திருக்கிறார். இயற்கையை பல அத்தியாயங்களாக காண்பித்திருக்கும் ராம் முடிவில் இயற்கையின் பேரன்பில் மகிழ்ச்சியடைகிறார். படத்தின் வசனங்கள் அருமை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் திரைக்கு கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த சூரிய பிரதாமனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம். ராமின் சிறந்த படைப்பாக பேரன்பு பேசப்படும்.

முதல் பாதியில் யுவனின் மெல்லிசை மனதை வருட, இரண்டாவது பாதியில் பாடல்களால் மனதை குலைக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் எழில் கொஞ்சம் விதமாக உள்ளது.
மொத்தத்தில் `பேரன்பு' இயக்குநரின் பெயர் சொல்லும். #Peranbu #PeranbuReview #DirectorRam #Mammootty #Anjali #ThangaMeengalSadhana #AnjaliAmeer
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் - கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் விமர்சனம். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன். அவரது தங்கை ரம்யா கிருஷ்ணன் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்.
பின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரபுவை அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார். தனது தவறை நினைத்து தினம்தினம் வருத்தப்படும் நாசர், தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்கிறார்.

இவ்வளவு பணம் இருந்தும், தாத்தா நிம்மதியாக இல்லை என்பதை உணரும் சிம்பு, இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார் பிரபு. கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் பிரபுவின் மகள்கள். பிரபுவின் அபிமானத்தை பெற்று அவர்களது வீட்டில் வேலைக்கு சேரும் சிம்புவுக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது.
கடைசியில், சிம்பு ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாரா? தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சரியாக போகாத நிலையில், செக்கச் சிவந்தவானம் படம் சிம்புக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்பு ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை என அனைத்திலும் பழைய சிம்புவை நினைவுபடுத்துகிறார். சிம்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதில் மாற்றமேதுமில்லை.
மேகா ஆகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது முதல் வெளியீடாக ரஜினியின் பேட்ட படம் தான் ரிலீசானது. அதில் மேகாவுக்கு குறைவான காட்சிகள் தான் இருந்தது. இந்த நிலையில், மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ள முதல் படமாக சிம்பு படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் மேகா ஆகாஷ் காதல், நடனம் என ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார். கேத்தரின் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார்.

அழுத்தமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் கைதட்டலை வாங்குகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் மிரள வைக்கிறார். நாசர் வயதான கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யோகி பாபு, ரோபோ ஷங்கர் இருவருமே காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த படம் என்றாலும், ரீமேக் மூலமும் சுந்தர்.சி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தனது பாணியில் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பில் சிம்புவின் ஆக்ஷன் சிறப்பாக வந்துள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் சிம்புவுக்கு ஏற்ற வரிகளுடன் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' ராஜாதான். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR #Simbu #MeghaAkash #CatherineTresa #SundarC #RamyaKrishnan
சிவசக்தி இயக்கத்தில் திலீபன் - அமலா ரோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `குத்தூசி' படத்தின் விமர்சனம். #Kuthoosi #KuthoosiReview #Dhileban #AmalaRose #YogiBabu
படித்துமுடித்து வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் திலீபன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு தனது பெற்றோரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திலீபனும், நாயகி அமலா ரோசும் காதலித்து வருகிறார்கள்.
இதற்கிடையே திலீபனின் அப்பா இறந்துவிட, இரண்டு முக்கிய நிகழ்வுகள் அவரது வாழ்க்கையையே மாற்றுகின்றன. தனத சொந்த ஊரில் உள்ளவற்றையே தன்னால் சரிசெய்ய முடியவில்லையே என்று யோசிக்கும் திலீபன், நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் என்பதை உணர்ந்து, தனது வெளிநாட்டு ஆசையை விட்டுவிட்டு, விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

கடைசியில், விவசாயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? அவரது முயற்சிக்கு எதுவெல்லாம் தடையாக வந்தது? திலீபன் - அமலா ரோஸ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக திலீபன் கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். அமலா ரோசுக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். யோகி பாபு, ஜெய பாலன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஒட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

வெளிநாடு செல்ல துடிக்கும் இளைஞன் ஒருவன், தனது ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதை படமாக்கியிருக்கிறார் சிவசக்தி. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த, படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்த்தும்படியாக இயக்கியிருக்கிறார்.
என்.கண்ணனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பாகீயின் ஒளிப்பதிவில் விவசாய கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `குத்தூசி' பாதுகாக்க வேண்டியது. #Kuthoosi #KuthoosiReview #Dhileban #AmalaRose #YogiBabu
அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பனுஸ்ரீ மேஹ்ரா - பிரேம்ஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிம்பா' படத்தின் விமர்சனம். #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பரத், பிரபல நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். போதைக்கு அடிமையான பரத்தின் தாத்தாவின் இறப்புக்கு பிறகு, பரத்தும் போதைக்கு அடிமையாகிறார். தனிவீட்டில் வசித்து வரும் இவர் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை, தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பரத் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிறுக்கும் நாயகி பனுஸ்ரீ மேஹ்ரா, தனது நாயை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் செல்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் பரத்துக்கு நாய், நாய் மாதிரி இல்லாமல் பிரேம்ஜியாக தெரிகிறது. இவர் பிரேம்ஜியுடன் பேசி நட்பாகிறார்.

பனுஸ்ரீ மேஹ்ராவும் அடிக்கடி பரத் வீட்டிற்கு வந்து செல்ல பரத் பனுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். தனது காதலுக்கு உதவும்படி பரத், பிரேம்ஜியிடம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க பனுஸ்ரீயுடன் ஒன்றாக பணிபுரியும் ரமணாவும் பனுஸ்ரீயை காதலிக்கிறார்.
இதில் யார் காதல் வெற்றி பெற்றது? பரத்துக்கு பிரேம்ஜியாக தோன்றும் நாய் அவரது காதலுக்கு உதவியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதுவரை இல்லாத ஒரு வித்தாயசமான கதாபாத்திரத்தில் பரத் நடித்திருக்கிறார். போதை ஆசாமியாகவே படம் முழுக்க வந்து போதைக்காரர்களின் உலகத்தை காட்டிச் செல்கிறார். பனுஸ்ரீ மேஹ்ரா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் தலைப்பாக சிம்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். காமெடியில் கலகலக்கியிருக்கும் பிரேம்ஜி, படத்தின் கதை ஓட்டத்திற்கு காரணமாகிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள்.
போதைக்கு அடிமையான ஒருவரின் உலகம், அவரது பார்வை எப்படி இருக்கும் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு கதையாக்கி இருக்கிறார் அரவிந்த் ஸ்ரீதர். படத்தில் நாயாக வரும் பிரேம்ஜியின் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். அச்சு விஜயனின் படத்தொகுப்பு படத்தை போதை உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `சிம்பா' நன்றியுள்ளது. #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi
ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத் இயக்கத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாயாக கங்கனா நடித்துள்ள `மணிகர்னிகா' படத்தின் விமர்சனம். #Manikarnika #ManikarnikaReview
கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வந்த காலம், அவர்களது பார்வை இந்தியாவின் செல்வத்தின் மீதிருந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஜான்சியையும் கைப்பற்ற நினைத்தார்கள்.
மணிகர்னிகாவின் வீரத்தை பார்த்த ஜான்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜான்சியின் ராஜாவான கங்கதர் ராவ்வுக்கு மணிகர்னிகாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த நிலையில், ஜான்சிக்கு வருகை தரும் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்தவர்களுக்கு அரசர் உட்பட அரசவையில் இருக்கும் அனைவரும் தலைவணங்க, ஜான்சியின் ராணியான மணிகர்னிகா, தான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன் என்று வீராப்புடன் நிற்கிறார். தனக்கு தலைவணங்காத மணிகர்னிகாவை பழிவாங்குவதாக ஆங்கிலேயர்கள் சபதமிட்டு செல்கிறார்கள்.

ஜான்சியின் ராணியாகும் மணிகர்னிகாவுக்கு ஒரு குழந்தை பிறந்து சில காலங்கில் இறந்து விடுகிறது. இந்த நிலையில், ஜான்சியின் மன்னரும் நோய்வாய்ப்பட, சிறுவன் ஒருவனை அடுத்த ராஜாவாக தத்து எடுக்கிறார்கள்.
பின்னர், ஜான்சியின் அரசர் கங்கதர் ராவ் மறைவால், அரியணைக்கு சொந்தமான சிறுவன், வளரும் வரை ஜான்சியை ராணி மணிகர்ணிகா ஆட்சி செய்கிறார். இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஜான்சி மீது போர் தொடுக்கிறார்கள். போரை கண்டு அஞ்சாத ராணி மணிகர்னிகா ஆங்கிலேயர்களை தனது பராக்கிரமங்கள் மூலம் எப்படி எதிர்கொண்டார்? ஜான்சியை காப்பாற்றினாரா? என்ற வீரமங்கையின் வரலாறு தான் இந்த கதை.

கங்கனா மணிகர்னிகா ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். துறுதுறுவென இருக்கும் இளம் பருவம், யாருக்கும் அஞ்சாத குணம், போர் புரியும் வீரம் என அனைத்திலும் ஜான்சியின் ராணியை கண்முன் நிறுத்துகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் கங்கனா, தனது வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். இயக்குநர் கங்கனாவுக்கு வாழ்த்துக்கள்.
அதுல் குல்கர்னி, ஜிசு செங்குப்தா, சுரேஷ் ஓபராய், டேனி டென்சோங்பா, வைபவ் டட்லவாடி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கதை என்பதால், படம் முழுக்க கங்கனாவே ஆக்கிரமித்துள்ளார். ராஜாவின் மறைவுக்கு பின்னர், ஆங்கிலேயர்களை எதிர்க்க மக்களை தயார்படுத்துவது, மக்களின் தேசப்பற்றை ஊக்குவிப்பது என கங்கனாவின் கதாபாத்திரம் விரிகிறது. படத்தின் முதல் பாதியில் மணிகர்னிகாவின் இளம்வயது, திருமண வாழ்க்கையை விவரித்திருக்கும் நிலையில், இரண்டாவது பாதியில் போர் பயிற்சி, தேசப்பற்று என கதை நகர்ந்து படத்தின் இறுதியில் போருடன் முடிவடையும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார்கள் ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

படத்திற்கு ஷங்கர் எக்சான் லாய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. கிரண் டோகன்ஸ், ஞானசேகரின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `மணிகர்னிகா' வீரம். #Manikarnika #ManikarnikaReview #KanganaRanaut #JhansiKiRani
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் விமர்சனம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
மேட்ரிமோனி நடத்தி வரும் பிரபுதேவா, தனக்கு ஏற்ற பெண்ணையும் தேடி வருகிறார். அரவிந்த் ஆகாஷ், சந்தனா இருவரும் இவரின் நண்பர்கள். கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக மருத்துவரான பிரபுவை சந்திக்க செல்லும் இவருக்கு, நிக்கி கல்ராணி 15 நாளில் இறந்து விடுவார் என்று தெரிய வருகிறது.
இதையடுத்து நிக்கி கல்ராணியை திருமணம் செய்வதற்கான முயற்சியில் பிரபுதேவா இறங்க, ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணிக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது. அத்துடன் நிக்கி கல்ராணி பிரபுவின் மகள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.

இதற்கிடையே நிக்கி கல்ராணி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடையும் பிரபுதேவா, நிக்கியை கேவலமாக திட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பிவிடுகிறார். பின்னர், நிக்கி மீது தவறில்லை என்பது அறிந்த பிரபுதேவா, அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்தவிடுதற்கு முன்பாக அதை அழிக்க நினைக்கிறார்.
கடைசியில் நிக்கி அந்த வீடியோவை பார்த்தாரா? பிரபுதேவா - நிக்கி கல்ராணி திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரபுதேவா தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் கவர்கிறார். நிக்கி கல்ராணியை, அந்த வீடியோவை பார்க்க விடாமல் பண்ண பிரபுதேவா எடுக்கும் முயற்சிகள் பழைய பிரபுதேவாவை நினைவுபடுத்துகின்றன. நிக்கி கல்ராணி படம் முழுக்க மாடர்னான குடும்ப பெண்ணாக வருகிறார். அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பிரபு, டி.சிவா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அமித் பார்கவ், சமீர் கோச்சார் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சார்லி சாப்ளின் என்ற முழுநீள காமெடி படத்தை கொடுத்த சக்தி சிதம்பரம், சார்லி சாப்ளின் 2 படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி சிதம்பரம் இயக்கிய படமா இது என்று யோசிக்கும்படி படம் இருக்கிறது. திரைக்கதை ஓரளவுக்கு வேகமாக நகர்ந்தாலும், அது படத்திற்கு பலமாக அமையவில்லை. குறிப்பாக காமெடி காட்சிகளில் சிரிக்க முடியவில்லை. ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஓரளவுக்கு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

அம்ரிஷ் கணேஷ் இசையில் சின்ன மச்சான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சார்லி சாப்ளின் 2' ஏமாற்றம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
விஜய் ரத்னாகர் இயக்கத்தில் அனுபம் கெர் - சுசான் பெர்னெர்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' படத்தின் விமர்சனம். #TheAccidentalPrimeMinisterReview #TheAccidentalPrimeMinister #AnupamKher
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை தழுவி அதே தலைப்பில் சுனில் போரா தயாரிப்பில் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் அனுபம் கெர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம்.
2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் ஆகாமல் மன்மோகன் சிங்கை முன்மொழிந்தார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பிறகு நடந்த சிக்கல்கள், சூழல்கள், எதிர்ப்புகள் பதவிக்காலம் முடிந்து கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைப்படம்.
2004 முதல் 2014 வரையிலான காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியை பற்றிய படமாகவே இது உருவாகி இருக்கிறது. தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகத்தில் 2008 வரையிலான ஆட்சி பற்றி மட்டுமே இருக்கும்.

சஞ்சய் பாரு வேடத்தில் பத்திரிகையாளராக நடித்து இருக்கும் அக்ஷய் கன்னா சொல்வது போல படம் தொடங்குகிறது. படம் முழுக்கவே அவர் சொல்ல சொல்ல காட்சிகள் விரிகின்றன. ஒரு ஆவணப் படம் பார்ப்பது போல் இருக்கிறது. 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதில் இருந்து படம் தொடங்குகிறது.
சோனியா காந்தி பிரதமராவதில் சிக்கல் இருப்பதால் ராகுல் காந்தி பக்குவம் அடையும்வரை, பிரதமர் பதவி மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படுகிறது. சோனியா காந்தி கட்டுப்பாட்டின் கீழ், கடும் அழுத்தங்களுடன் மன்மோகன் சிங் பணியாற்றுகிறார். படம் முழுவதும் பத்திரிகையாளர் சஞ்சய் பாரு உரையாடிக்கொண்டே அந்தந்த காலகட்ட அரசியல் சூழலை பற்றி விரிவாக பேசுகிறார்.
மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடித்திருக்கிறார். இந்தி முன்னணி நடிகரான அவர் 2014-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் ஆதரவாளராக மாறினார். அவரின் மனைவி கிரோன் கெர் பா.ஜனதாவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர்.

மன்மோகன் சிங்கைப் பல இடங்களில் நினைவுபடுத்த முயற்சி செய்து இருக்கிறார். நடை, பேச்சு, பாவனை என அனைத்திலும் மன்மோகன்சிங்கே தெரிகிறார். படத்தில் சில காட்சிகளில் நிஜ மன்மோகன் சிங் வரும் வீடியோக்களை சேர்த்து இருப்பதால், உண்மையான மன்மோகன் சிங்குக்கும், அனுபம் கெரின் மன்மோகன் காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அனுபம் கெர் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும் செய்கிறார்.
சோனியாகாந்தி முதல் ப.சிதம்பரம் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். ஜெர்மனியில் பிறந்த சுசான் பெர்னெர்ட் சோனியா காந்தியாக நடித்திருக்கிறார். எந்த நேரமும் சிடுசிடுவென இருக்கும் முகத்துடன், மன்மோகன்சிங்குக்கு கட்டளை பிறப்பிக்கும் சர்வாதிகாரியாக சோனியா காந்தி காட்டப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி கதாபாத்திரம் அரசியலில் இறக்கிவிடப்பட்ட பணக்கார வீட்டுப்பிள்ளையாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கியுள்ளார். ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் பற்றிய வரலாற்று திரைப்படம், பிரதமர் அலுவலகம், சோனியா காந்தி இல்லம் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே இடம்பெறும் இடங்களில் நிகழ்வது சலிப்பை தருகிறது.
‘மன்மோகன் சிங் பீஷ்மர் போன்றவர். சோனியா காந்தி குடும்பத்துக்காக எந்த முடிவையும் எடுக்கக் கூடியவர். மகாபாரதத்திலாவது இரண்டு குடும்பங்கள் இருந்தன; துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒரே குடும்பம்தான் இருக்கிறது’ என்று வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வெளியாகியுள்ளது இந்தத் திரைப்படம்.
ஆனால் அந்த விமர்சனம் முழுவதும் பிரசார ரீதியில் மட்டுமே இருக்கின்றன. காட்சிப்படுத்துதலில் கோட்டை விட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியையும், மன்மோகன் சிங் ஆட்சியையும் பற்றி நடுநிலையுடன் இன்னும் ஆதாரங்களுடன் தெளிவாக விமர்சித்து இருக்கலாம். ஆனால் இந்தத் திரைப்படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரமாக மட்டுமே உருவாகி உள்ளது. #TheAccidentalPrimeMinisterReview #TheAccidentalPrimeMinister #AnupamKher #SuzanneBernert
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified
ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார்.
இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.

இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.

நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.

அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் `பேட்ட' சூப்பர்ஸ்டார் படம். #Petta #PettaReview #Rajinikanth #PettaFromToday #PettaParaak #Rajinified #PettaFDFS #Simran #Trisha #Sasikumar #VijaySethupathi #NawazuddinSiddiqui
சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara
கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.
10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.

இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.
அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.

நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `விஸ்வாசம்' குடும்பத்தின் தேவை. #Viswasam #ViswasamReview #ViswasamFromToday #ViswasamFDFS #ViswasamThiruvizha #BlockbusterViswasam #AjithKumar #Nayanthara
லெராய் கின்கைடே, மரிஸியோ நடிப்பில் வெளியாகி இருக்கும் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் படத்தின் விமர்சனம். #KingdomOfGladiators #KingdomOfGladiatorsReview
பல நாடுகளிடம் போர் செய்து வென்று வருகிறார் அரசர். திடீர் என்று போர் செய்யும் நாடுகளிடம் தோற்று போகிறார். இதனால் வருத்தத்தில் இருக்கும் அவரிடம் தீய சக்தி ஒன்று வந்து வாள் ஒன்றை கொடுத்து விட்டு செல்கிறது. இந்த வாளை வைத்து பல நாடுகளை மீண்டும் கைப்பற்றி வருகிறார்.
இந்நிலையில், அரசருக்கு குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தையை தீய சக்தி ஒன்று எடுத்து சென்று விடுகிறது. இதனால் மனமுடைந்து போகிறார் அரசர். நாளடைவில் அரசரின் மகள் ஒரு இடத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. இதையறிந்து அங்கு சென்று மகளை அழைத்து வருகிறார்.
ஆனால், அவள் அரசரின் மகள் இல்லை. இறுதியில் அவள் யார்? எதற்காக இங்கு வந்தாள்? அந்த தீய சக்தி எது? அதன் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
2011ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் உள்ளது. காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. மிகவும் சினிமாத்தனமாக காட்சி அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி இல்லை.
மொத்தத்தில் ‘கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ்’ சுமார் ரகம்.
டிரான்ஸ்பார்மரில் நம்முடைய மனதை கவர்ந்த பம்பிள்பீ பற்றிய படமாக வெளியாகி இருக்கும் பம்பிள்பீ படத்தின் விமர்சனம். #Bumblebee #BumblebeeReview
சைபர்ட்ரான் கிரகத்தில் ஆட்டோபாட்கள், (ராட்சத எந்திர மனிதர்கள்) வாழ்ந்து வருகின்றனர். அங்கு டிசெப்டிகான்களுக்கும் ஆட்டோபாட்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையில் சைபர்ட்ரான் கிரகமே அழிய ஆரம்பிக்கிறது. இதனால், ஆட்டோபாட்களின் தலைவனான ஆப்டிமஸ் ப்ரைம், B-127 என்னும் பம்பிள் பீ-யை பூமிக்கு சென்று தஞ்சம் அடைய சொல்கிறார். மேலும் பூமியில் மற்ற ஆட்டோபாட்கள் வந்து தஞ்சமடைய ஏற்பாடுகளையும் பம்பிள்பீ-யிடம் சொல்லி அனுப்புகிறார் ஆப்டிமஸ் ப்ரைம்.
அதன்படி பூமிக்கு செல்கிறது பம்பிள் பீ. இது செல்வதை அறிந்த டிசெப்டிகான்களை சேர்ந்த ரோபோ, பூமியில் பம்பிள் பீ-யை தாக்குகிறது. இதில் பம்பிள் பீ-க்கு பேசும் திறனும், சுயநினைவையும் இழக்கிறது. பூமியில் மறைந்து வாழ, ஒரு பழைய காரின் உருவத்தை பெற்று, பழைய கார் மெக்கானிக் செட்டில் கிடக்கிறது அந்த பம்பிள்பீ.

அதே ஊரில் வாழும் சார்லி வாட்சன் என்ற பெண்ணுக்கு, சொந்த கார் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அவளது பிறந்த நாள் அன்று பம்பிள்பீ கார் பரிசாக கிடைக்கிறது. அதன் பிறகுதான், அது கார் அல்ல, டிரான்ஸ்பார்மர் என்று தெரிந்துகொண்டு, அதை அன்புடன் கவனித்து வருகிறாள்.
பழைய ஞாபகங்களை இழந்த பம்பிள் பீ, தான் எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை மறந்து, சார்லி வாட்சனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் பம்பிள் பீ மூலமாக ஒரு சிக்னல் கிடைத்து, டிசெப்டிகானை சேர்ந்த இரண்டு ரோபோக்கள் பூமிக்கு வருகிறது.
இந்த ரோபோக்கள், பம்பிள்-பீயை அழித்ததா? பம்பிள்-பீக்கு சுய நினைவு திரும்பியதா? பம்பிள்பீ-யுடன் இருக்கும் சார்லி வாட்சனுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சார்லி வாட்சனாக வாழ்ந்து இருக்கிறார், ஹெய்ஸ்லி ஸ்டீன்பீல்ட். அவருடைய நண்பனாக வரும் ஜார்ஜ் லென்போக், அமெரிக்க ராணுவ தளபதி ஜான் சீனா என, அனைவரும் தரமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். சென்டிமென்டுடன் கூடிய ஒரு சயின்ஸ்பிக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார், டிராவிஸ் நைட்.
பல காட்சிகள் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. டிரான்ஸ்பார்மர் ரசிகர்களுக்கு இப்படம் சிறப்பு விருந்தாக அமைந்திருக்கிறது. பம்பிள் பீயை மட்டும் மையமாக வைத்து படம் உருவாக்கி இருக்கிறார்கள். ஆப்டிமஸ் ப்ரைம் ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றம்தான்.
மொத்தத்தில் ‘பம்பிள்பீ’ சுவாரஸ்யம்.






