என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கதிர் - ராஜ் பரத் - மீரா நாயர் - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிகை' படத்தின் விமர்சனம். #SigaiReview #Kathir
    ராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர் அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத் அதிர்ச்சிக்குள்ளாகிறார். மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார். அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

    கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்படி இறந்தார்? மீரா நாயர் எங்கே போனார்? அவரைத் தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.



    கதையில் முக்கிய திருப்பம் தரும் வேடத்தில் வருகிறார் கதிர். அவரது பாசம், ஏக்கம், பேச்சு என திருநங்கையின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரது நடையில் இருக்கும் நளினம் ஒன்றே போதும். கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கும் கதிருக்கு பாராட்டுக்கள். துணிச்சலான வேடத்தை அனாயசமாக செய்து கைதட்டல் பெறுகிறார்.

    யாரும் செய்ய தயங்கும் வேடத்தில் ராஜ் பரத். செய்யும் தொழிலை நினைத்து விரக்தி அடையும்போதும் மீராவை தேடும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்குகிறார். தங்கையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்லும் மீரா நாயரின் முடிவு பரிதாபம். ரித்விகாவுக்கு முக்கிய வேடம். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணாக வரும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மல் முருகா என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.



    ஆரண்ய காண்டம், மேற்கு தொடர்ச்சி மலை என்று தமிழில் உலக திரைப்படங்களுக்கு நிகரான படங்கள் உருவாகின்றன. அந்த வரிசையில் இடம்பெறக்கூடிய ஒரு கல்ட் திரில்லர் படமே சிகை. முதல் படத்திலேயே எளிமையான ஒரு கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சிறந்த திரைப்படமாக்கி கொடுத்து இருக்கும் ஜெகதீசன் சுபுவுக்கு பாராட்டுகள்.

    படத்தின் டைட்டிலில் வரும் சென்னையின் இரவுக் காட்சிகளே இவர்களது கூட்டணியின் உழைப்பை பறைசாற்றுகிறது. இறுதிக்காட்சி வரை அது தொடர்ந்து நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறது.



    படம் முடிந்த பின்னர் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சின்ன இரக்கமாவது நிச்சயம் ஏற்படும். மனிதாபிமானத்தை தூக்கி நிறுத்திய வகையில் சிகை அனைவரும் கொண்டாடி ஏற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு. இதுபோன்ற நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் போவது என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். படம் நாளை இணையத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

    நவின் குமாரின் ஒளிப்பதிவும், ரான் யோகனின் இசையும், அனுசரணின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

    மொத்தத்தில் `சிகை' தேவையானது. #SigaiReview #Sigai #Kathir #RajBharath #MeeraNair #Riythvika

    மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூசா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாணிக்' படத்தின் விமர்சனம். #MaaniikReview #Maaniik #MaKaPaAnand #SuzaKumar
    மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே சர்ச்சைக்குரிய குழந்தையாக பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்.

    இதையடுத்து பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கிறார் மா.கா.பா.ஆனந்த். பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னை வரும் மா.கா.பா. தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற சபதம் கொள்கிறார்.



    இந்த நிலையில், மா.கா.பா. சாமியார் ஒருவரை சந்திக்க, அவர் மா.கா.பா.வுக்கு தெரியாமல் அவருக்குள் இருக்கும் சக்தி பற்றி சொல்கிறார். அதை பரிசோதித்து பார்க்கும் மா.கா.பா., தாதாவான அருள்தாசிடம் மாட்டிக் கொள்கிறார். அருள்தாஸ், தான் சொல்வதை செய்யாவிட்டால் மா.கா.பா.வின் காதலி, குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.

    கடைசியில் தனது சக்தியை வைத்து மா.கா.பா. பணம் சம்பாதித்தாரா? தனது கனவை நிறைவேற்றினாரா? தனது காதலியை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    மா.கா.பா. ஆனந்த் வழக்கமான தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோபாலா, மதுமிதா ஆகியோரும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த பயத்தை உண்டு பண்ணுகிறது.

    முழு காமெடி படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மார்டின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே காமெடி எடுபடுகிறது. மற்றபடி வழக்கமான கதையாகவே காட்சிகள் நகர்கிறது.



    சி.தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாணிக்' வீரியமில்லா டானிக். #MaaniikReview #Maaniik #MaKaPaAnand #SuzaKumar

    அகரம் கமுரா இயக்கத்தில் ஆதவா பாண்டியன் - நேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பிரான்மலை' படத்தின் விமர்சனம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha
    பிரான்மலையில் வசித்து வருகிறார் நாயகன் ஆதவா பாண்டியன். சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால், அப்பா வேல ராமமூர்த்தியின் வளர்ப்பில் வளர்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வரும் வேல ராமமூர்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

    ஆனால் ஆதவா பாண்டியன் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி நேகா. ஒருநாள் ரோட்டில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர் ஒருவரை குளிப்பாட்டி தயார் செய்து விடும் நேகா மீது ஆதவா பாண்டியனுக்கு காதல் வருகிறது. 

    இந்த நிலையில், ஊருக்குள் ஆதவா பாண்டியன் செய்யும் சேட்டைகள் அதிகமாவதால் அவரை வெளியூரில் சென்று வேலை பார்க்கும்படி அனுப்பி வைக்கிறார் வேல ராமமூர்த்தி. இதையடுத்து கோயமுத்தூர் செல்லும் ஆதவா, தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். மேலும் கோவையில் நாயகியை பார்த்துவிடுகிறார்.



    ஒரு கட்டத்தில் ஆதவா - நேகா இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. விடுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், பாதிரியார் ஒருவரின் ஆலோசனையில் பேரில் வீட்டிற்கு தெரியாமல் நேகாவை, ஆதவா திருமணம் செய்து கொள்கிறார். அதேநேரத்தில் வேல ராமமூர்த்தி வேறு உறவுக்கார பெண்ணை பார்த்து வைக்கிறார்.

    கடைசியில், தனது மகன், மருமகளை வேல ராம மூர்த்தி ஏற்றுக் கொண்டாரா? ஆதவா - நேகாவின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முதல் படம் என்றாலும் ஆதவா பாண்டியனின் நடிப்பு குறைசொல்லும்படியாக இல்லை. கதைக்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கிறார். நேகா கிறிஸ்த்துவ சமயத்து பெண்ணாக கதையோடு ஒன்றி, சிறப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றத்தில் வந்தாலும், சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. எனினும் கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடி பெரிதாக எடுபடவில்லை.

    பாரதி பாஸ்கரின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `பிரான்மலை' செல்லலாம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha

    வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன் லால் - மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒடியன்' படத்தின் விமர்சனம். #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier
    கேரளாவின் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒடியனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்காத அந்த காலத்தில், ஒடியன் என்று அழைக்கப்படுபவர்கள், விலங்குகளை போல வேடம் தரித்துக் கொண்டு ஒருவரை பயம்கொள்ளச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால்.

    மோகன் லாலுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த மஞ்சு வாரியருடன் காதல் வருகிறது. ஆனால் தனது காதலை மஞ்சு வாரியரிடம் சொல்லாமல் மறைக்கிறார். மறுபுறம் மஞ்சு வாரியரிக் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அத்துடன் கண் பார்வையற்ற மஞ்சு வாரியரின் தங்கையையும் அடைய நினைக்கிறார்.

    பிரகாஷ்ராஜின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் மஞ்சு வாரியர், நரேனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில காலங்களில் நரேன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.



    அதேபோல் மஞ்சு வாரியரின் பார்வை தெரியாத தங்கையின் கணவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லால் தான் காரணம் என்று மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள்.

    இதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார் மோகன்லால், மஞ்சு வாரியரின் மகளின் மூலம் உண்மைகளை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பி அந்த இருவிரன் கொலைக்கும் காரணமானவரை எப்படி பழிதீர்க்கிறார்? மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மோகன் லால் ஒடியன் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளம்வயது மற்றும் முதிர்ச்சியான தோற்றம் என ரசிக்கும்படியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒடியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.



    மஞ்சு வாரியர் மோகன் லால் மீதான காதல், தனது வாழ்க்கை, தனது தங்கையின் வாழ்க்கை என இரண்டையும் தொலைத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவம் காட்டுகிறார். பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் கருத்த தோளுடன் வரும் பிரகாஷ் ராஜின் தோற்றம் பேசும்படியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஸி, நந்து, நரேன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.

    வித்தயாசமான கதையை தொட்டதற்காகவே இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கு பாராட்டுக்கள். கதையும், கதைக்கு அச்சாணியாக மோகன் லால், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் என பிரபலங்கள் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கிட்டிருக்கலாம்.

    எம்.ஜெயச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் `ஒடியன்' பலமில்லை. #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே.ஜி.எஃப்' படத்தின் விமர்சனம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty
    கர்நாடகாவில் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார் யஷ். சிகிச்சை செய்ய பணமில்லாமல் யஷ்ஷின் தாய் இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில், நீ சாகும் போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

    தனது தாய்யின் கட்டளையை நிறைவேற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை செல்லும் யஷ்ஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். கையேந்தினால் சில்லறை தான் கிடைக்கும், கையை ஓங்கினால் தான் நிறைய கிடைக்கும் என்று அந்த பிச்சைக்காரர் சொல்கிறார்.



    இனி தனக்கான பாதை என்னவென்பதை யஷ் தீர்மானிக்கிறார். இந்த நிலையில், மும்பையில் அட்டகாசம் செய்து வந்த போலீஸை ஒருவரை அடித்து தனக்கென்று ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார். தொடர்ந்து மும்பையில் அட்டூழியம் செய்து வரும் பெரிய தலைகளை குறிவைக்கும் யஷ், வேகமாக மும்பையில் ஒரு மான்ஸ்டராக உருவாகிறார்.

    இந்த நிலையில், கர்நாடகாவில் இருக்கும் தங்கச் சுரங்கமான கே.ஜி.எஃப்.பின் தலைவரை கொலை செய்ய நிறைய பேர் முயன்றும் முடியாததால், யாராலும் நெருங்க முடியாத அவரை தான் எதிர்ப்பதாக யஷ் கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த உடனே காதல் வர, தனது காதலையும் ஸ்ரீநிதியிடம் சொல்லிவிடுகிறார்.



    சாதாரணமாக பின்னர், யாராலும் எளிதில் நுழைய முடியாத கே.ஜி.எஃப். சுரங்கத்திற்குள் செல்லும் யஷ் கே.ஜி.எஃப். தலைவரை கொன்றாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? ஸ்ரீநிதியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். யாருக்கும் பயப்படாத மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.



    ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு மாஸ் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் பிரஷாந்த் நீல். தனக்கென்று யாருமே இல்லாத ஒருவன், தனது தாயின் சொல்லிற்காக பணக்காரனாக அவன் எடுக்கும் முடிவுகளும், அதன்மூலம் என்னவாகிறான் என்பதையே படமாக உருவாக்கி இருக்கிறார். கதை பெரிதும் நாயகனையே மையப்படுத்தியே நகர்கிறது. படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம்பெறும் சில காட்சிகள் படத்திற்கு முட்டுக்கட்டை போடும்படியாக இருக்கிறது. மற்றபடி கன்னட சினிமாவில் இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.

    ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் `கே.ஜி.எஃப்' பார்க்க வேண்டிய இ(ப)டம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விமர்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj
    கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் சத்யராஜ். குடும்பம், விவசாயம், கிரிக்கெட் மூன்றையும் உயிராக கருதுபவர். அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றுப்போக அதை பார்த்து சத்யராஜ் கண் கலங்குகிறார்.

    தனது அப்பா கண் கலங்குவதை முதல்முறையாக பார்த்து வருத்தப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க தானே இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.



    மேலும் தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை விரும்பாத அவரது அம்மாவான ரமா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார்.

    மேலும் ஊர் மக்கள், சூழ்நிலை, தேர்வாளர்கள், சக அணி வீராங்கனை, எதிர் அணி என வரிசையாக முட்டுக்கட்டைகளை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில் சத்யராஜும், விவசாயத்தில் சரிவை சந்திக்கிறார்.



    அதேநேரத்தில் அதே கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தர்ஷனுக்கு ஐஸ்வர்யா மீது காதல் வருகிறது. தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்.

    இவ்வாறாக தனக்கு வரும் தடைக்கற்களை எல்லாம், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி படிக்கற்களாக மாற்றினார்? இந்திய அணியில் விளையாடி தனது அப்பவை எப்படி சந்தோஷப்படுத்துகிறார்? தர்ஷனின் காதல் என்னவானது? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

    தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்குவது, பீல்டிங் செய்ய தெரியாமல் விழுவது என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாகவே தெரிவது அவரது நடிப்பின் சிறப்பு. அப்பாவிடம் பாசம், அம்மாவிடம் பிடிவாதம், அணிக்காக விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக காட்டுகிறார். சோகத்தை மறைத்து அப்பாவிடம் பேசும் காட்சி அவரின் நடிப்புத்திறமைக்கு ஒரு பதம்.



    விவசாயியாக விவசாயத்தின் அருமையை புரிய வைக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மனதில் பதிகிறார். வாழ்ந்து கெட்ட விவசாயியை பிரதிபலிக்கிறார். அவருக்கு இணையாக ரமா கிராமத்து சராசரி தாயாக தனது பாணியில் நடித்து கவர்கிறார். 

    ஜெட் வேகத்தில் செல்லும் படம் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன் வந்த பிறகு ராக்கெட் வேகத்துக்கு பறக்கிறது. அவர் பேசும் தன்னம்பிக்கை வசனம் ஒவ்வொன்றும் பாடம். கடைசி அரை மணி நேரம் இருக்கை நுனிக்கே கொண்டு வருகிறார்.

    இளவரசு, தர்‌ஷன், முனீஸ்காந்த், சவரி முத்து, ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யாவின் கிரிக்கெட் தோழர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    ஒரு தமிழ்ப்பெண்ணின் கனவு, தமிழ்நாட்டு விவசாயியின் வேதனை நிலை என இரண்டு வெவ்வேறு கதையை ஒரே நேர்க்கோட்டில் அழகாக இணைத்து ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டுக்கள். அழிந்து வரும் விவசாயத்தை மக்களுக்கு புரிய வைக்க விளையாட்டை தேர்ந்தெடுத்தது சிறப்பு. கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும், கொண்டாடும் நம் நாட்டில், சோறு போடும் விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்வதில்லையே என்ற ஆதங்கத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்கள்.

    விளையாட்டில் சாதிக்க ஆசைப்படும் தமிழ்ப்பெண்ணுக்கும், விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கும் தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக காட்டலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருப்பது இயக்குநரின் திறமை.



    “இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா”, “ஒண்ணு லஞ்சம் கொடு, இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க”, “ஜெயிச்சுடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சுட்டு சொன்னா தான் கேட்கும்” என வசனங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. கிரிக்கெட் போலவே சினிமாவும் கூட்டுமுயற்சி தான். அனைத்து துறைகளும் ஒருசேர கனாவை சாம்பியனாக்கி இருக்கின்றன.

    திபுநிணன் தாமஸ் தனது இசையால் படத்தையே தாங்கி பிடித்து இருக்கிறார். பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையில் நம்மை ஒன்ற வைக்கிறார். பசுமை, வெறுமை, வறுமை, தேசபக்தி அனைத்தையும் வண்ணங்களால் பிரித்து காட்டுகிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ரூபனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `கனா' வெற்றி. #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj #Darshan

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள். 

    ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.



    நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.



    ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.

    இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.

    கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

    பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.



    என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் விமர்சனம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi #BalajiTharaneetharan
    சிறிய வயதில் நாம் நிறைய மேடை நாடகங்களை பார்த்திருப்போம். தொழில்நுட்ப வளர்ச்சி, படங்களின் வரவால், மேடை நாடகங்களை அதிகளவில் பார்க்க முடியவில்லை. எனவே நாடக கலைஞர்களின் வாழ்க்கை, கலையின் மீதான அவர்களின் தாகம் எந்த அளவுக்கு இருந்தது, தற்போதும் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கும்.

    அந்த மாதிரியான ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கை, அந்த கலையின் மூலமாக ஒரு கலைஞன் மற்றவர்களை மற்றவர்களை எவ்வாறு சந்தோஷப்படுத்துகிறான். கலையின் மீது அவன் காட்டும் ஈடுபாடு, கலைக்கான அவனது சேவை என்னவாக இருக்கும் என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.



    நடிக்க வருபவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிகனாக முடியாது. நடிகனாக தேவையான திறமை, தரம் இருந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு கூட கலையின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த காட்சி முழுமை பெறும். நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்குள் கலைஞன் என்ற வார்த்தை அடங்கி உள்ளது. கேமரா முன்னால் நிற்பவர் அனைவரும் நடிகர் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் பெரியதாக ஜொலிக்க முடியாது. சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார்கள்.

    கலைக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியால் இருந்திருக்கலாம் அல்லது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனின் உயரத்தை உயர்த்தி கூறியிருப்பதே படத்தின் கதை.



    விஜய் சேதுபதி தான் வரும் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கையை, அவர்களது திறமையை, அவர்கள் கலையை நேசிப்பதையும், அவர்கள் கலை மீது வைத்திருக்கும் பற்றையும் அழகாக வெளிக் காட்டியிருக்கிறார். அவர் விட்டுச் செல்லும் கலை, அதனுடைய தொடர்ச்சி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 

    ராஜ்குமார் தனது ஒவ்வொரு அசைவாலும், பேச்சாலும், பார்வையாலும் ரசிக்க வைக்கிறார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார் என்றும் சொல்லலாம். சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் வைபவ்வின் அண்ணனான சுனில் ரெட்டி, படத்தின் இரண்டாவது பாதியை தூக்கிச் செல்கிறார் என்று சொல்லலாம். மௌலி தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இயல்பான வருகிறார்கள். பகவதி பெருமாள், கருணாகரன், ரம்யா நம்பீசன், அர்ச்சனா, காயத்ரி, பார்வதி நாயர் என மற்ற கதாபாதத்திரங்கள் அனைவருமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.



    ஒரு உச்ச நடிகரை நம்பி படம் பண்ண வேண்டுமென்றால், அவரது தோள் மீதேறி அவருடன் பயணம் செய்தால் தான், மக்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது தனித்துவமான படைப்பின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அதற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். நாம் ஒன்று நினைத்து போக, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதுமுகங்களுடன் படத்தை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

    நடிகர் யாராக இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை மக்களின் முன் ஜொலிக்க வைக்க என்ன தேவை என்பதை பாலாஜி தரணிதரன் புரிந்து வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். அதனை படத்தின் முடிவில் உணர முடிகிறது. எனினும் விஜய் சேதுபதியின் 25-வது படம் இது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார் பாலாஜி தரணிதரன் என்பதை உறுதியாக கூறலாம். இவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு இந்த படம் போதும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். இது விஜய் சேதுபதி படம் என்று சொல்வதை விட, பாலாஜி தரணிதரனின் திறமையை வெளிப்படுத்தும் படம் என்பதே நிதர்சனமான உண்மை.



    படத்தின் நீளம் ஒரு வித சோர்வை ஏற்படுத்தினாலும், படத்திற்கு அது தேவை என்பதையும் உணர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் கதையின் ஓட்டத்திற்கு தடை போடும்படியான சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

    கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. சரஸ்காந்த்.டி.கே.வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `சீதக்காதி' காவியம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi # BalajiTharaneetharan

    ஜேசன், நிக்கோல் கிட்மேன், ஆம்பர் ஹியர்டு ஆகியோர் நடிப்பில் உருவான சமுத்திர புத்திரன் (ஆக்வாமேன்) படத்தின் விமர்சனம். #AquaMan #SamuthiraPuthiran
    ஜேசன், நிக்கோல் கிட்மேன், ஆம்பர் ஹியர்டு ஆகியோர் நடிப்பில் உருவான ‘ஆக்வாமேன்’ திரைப்படம், தமிழில் சமுத்திர புத்திரன் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. 

    ஆழ்கடலில் வசிப்பவரான நிக்கோல் கிட்மேனும், நிலத்தில் இருக்கும் டெமுரா மோரிசனுக்கும் மகனாக பிறக்கிறார் ஜேசன். நாளடைவில் ஆழ்கடலில் இருப்பவர்கள் நிலத்திற்கு வந்து நிக்கோலை தாக்குகிறார்கள். இதனால், மகன் கணவரை விட்டு ஆழ்கடலுக்கு சென்று விடுகிறார்.

    ஜேசன் வளர்ந்த பிறகு தனக்குள் ஒரு சக்தி இருக்கிறதை உணர்கிறார். இந்நிலையில், ஆழ்கடலில் அட்லாண்டிஸ் ஊரில் ராஜா இருக்கும் ஜேசனின் தம்பியான பேட்ரிக் வில்சன், நிலத்தில் இருப்பவர்களை அழிப்பதற்காக ஆழ்கடல் ராஜ்ஜியங்களை ஒன்று திரட்ட முயற்சி செய்கிறார்.



    இதையறிந்த ஆழ்கடல் ராஜ்ஜியங்களில் இருக்கும் ஆம்பர் ஹியர்டு, ஜேசனிடம் இதை சொல்லி அட்லாண்டிஸுக்கு ராஜாவாகி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அழைக்கிறார். முதலில் மறுக்கும் ஜேசன் பின்னர் ஒப்புக் கொண்டு ஆழ்கடலுக்கு செல்கிறார்.

    பின்னர், போட்டி அடிப்படையில் அண்ணன் ஜேசனுக்கும், தம்பி பேட்ரிக் வில்சனுக்கு சண்டை ஏற்படுகிறது. இதில் ஜேசன் தோற்றுபோவதால், அவரது ஆலோசகர் அட்லாண்டிஸின் முதல் ராஜா பயன்படுத்தி கோள் இருப்பதாகவும், அதை நீ கண்டுபிடித்தால் அதிக சக்தி பெற்று ஆட்லாண்டிஸை கைப்பற்றலாம் என்று கூறுகிறார்.

    இதை கேட்ட ஜேசன் அந்த கோளை தேடி ஆம்பர் ஹியர்டுடன் பயணிக்கிறார். இறுதியில் அந்த கோளை கைப்பற்றினாரா? தம்பியை வீழ்த்தி அட்லாண்டிஸுக்கு ராஜாவானாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஆக்வாமேன் திரைப்படம் தமிழில் சமுத்திர புத்திரன் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காமெடியான வசனங்களை வைத்திருக்கிறார்கள். 

    அக்வாமேனாக நடித்திருக்கும் ஜேசன் நல்ல தேர்வு. அவரைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துகு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. அந்தளவிற்கு திறமையாக நடித்திருக்கிறார். இவருடன் வரும் ஆம்பர் ஹெர்ட் தான் படத்தின் கதையையே நகரச் செய்கிறார். 



    நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் பல நேரம் எனக் கதை நீள்கிறது. ஆழ்கடலில் நாம் பார்த்திராத உயிரினங்கள், பிரமிப்பூட்டும் வாழிடங்கள் என வேறு உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். பின்னணி இசை, பிரமாண்ட விஷுவல் காட்சிகள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. 

    மொத்தத்தில் ‘சமுத்திர புத்திரன்’ ஆழ்கடல் வீரன்.
    பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ரோட்னே ரோத்மேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம்' படத்தின் விமர்சனம். #SpiderVerse #SpiderManIntoTheSpiderVerse
    பள்ளி மாணவரான ஷமீக் மூர் நல்ல ஒழுக்கமானவனாக மாற வேண்டும் என்று போலீஸ் அதிகாரியான அவனது அப்பா பிரையன் ஷமீக்கை வேறு பள்ளியில் சேர்க்கிறார். புதிய பள்ளி மீது ஈர்ப்பில்லாமல், தனக்கு பிடித்த கலர் பெயிண்டிங் செய்வதையே விரும்புகிறார்.

    அதற்காக ஷமீக்கின் மாமா மஹர்ஷலா அலி அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருக்கும் சுரங்கப்பாதையில் உள்ள இடமொன்றை காட்டுகிறார். அதில் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஷமீக்கை ஸ்பைடர் ஒன்று கடித்துவிடுகிறது.



    அதன்பின்னர் தனக்குள் வித்தியாசமான உணர்வு ஏற்படுவதை உணரும் ஷமீக், ஒரு ஸ்பைடர்மேன் தானே இருக்கமுடியும், தானும் ஸ்பைடர் மேனா என்று ஆச்சரியப்படுகிறார். இந்த நிலையில், விபத்தில் தனது குடும்பத்தை இழந்த லீவ் ஸ்கிரீபர் போர்டல் மிஷின் மூலமாக இறந்த தனது மனைவி, குழந்தையை நிகழ்காலத்திற்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

    இதனால் பல்வேறு உயிர்சேதங்கள் ஏற்படும் என்பதால், ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர், அந்த இடத்திற்கு வந்து லீவ் ஸ்கிரீபரை தடுக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், அந்த இடத்திற்கு வரும் ஷமீக், ஸ்பைடர் மேனுக்கு உதவி செய்கிறார்.



    ஆனால், லீவ் ஸ்கிரீபரை முழுவதுமாக தடுப்பதற்குள் ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர் உயிரிழக்கிறார். உயிர் பிரியும் நேரத்தில் அந்த போர்டல் மிஷினை அழிப்பது குறித்த தகவலை பீட்டர் பார்க்கர் ஷமீக்கிடம் சொல்லிவிடுகிறார்.

    இதையடுத்து போர்டல் மிஷனை அழிக்கும் வேலை தன்னுடையது என்பதை உணரும் ஷமீக், அந்த போர்டல் மிஷினை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அதற்குள், அந்த போர்டல் வழியாக விதவிதமான ஸ்பைடர்மேன்கள் வருகிறார்கள்.



    இதனால் குழப்பத்திற்குள்ளாகும் ஷமீக், அந்த போர்டலை அழித்தாரா? விதவிதமான ஸ்பைர்மேன்கள் அங்கு எப்படி வந்தார்கள்? அவர்கள் திரும்பி சென்றார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் பாகங்கள் அனைத்தையுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அந்த வகையில் அனிமேஷன் வாயிலாக பார்த்து ரசிக்கும்படியாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ரோட்னே ரோத்மேன். அனிமேஷனில் காமிக்ஸ் சம்பந்தப்பட்டவற்றை இணைத்திருப்பது கவனிக்க வேண்டியது. ஸ்பைர்மேன்களின் வித்தியாசமான தோற்றம், குறிப்பாக பன்னி தோற்றமுடைய ஸ்பைடர்மேன் செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் கவரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 3டியில் படத்தை பார்க்கும் போது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது. 



    வழக்கம்போல தமிழ் டப்பிங் அசத்தல். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்கள் வந்து சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க முழுக்க வண்ணமயமாக இருப்பது குழந்தைகளை கவரும். இசையில் டேனியல் பெம்பர்டன் மிரட்டியிருக்கிறார். 

    மொத்தத்தில் `ஸ்பைடர்-மேன் புதிய பிரபஞ்சம்' காண வேண்டியது. #SpiderVerse #SpiderManIntoTheSpiderVerse 

    ×