search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanaa Review"

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விமர்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj
    கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் சத்யராஜ். குடும்பம், விவசாயம், கிரிக்கெட் மூன்றையும் உயிராக கருதுபவர். அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றுப்போக அதை பார்த்து சத்யராஜ் கண் கலங்குகிறார்.

    தனது அப்பா கண் கலங்குவதை முதல்முறையாக பார்த்து வருத்தப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க தானே இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.



    மேலும் தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை விரும்பாத அவரது அம்மாவான ரமா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார்.

    மேலும் ஊர் மக்கள், சூழ்நிலை, தேர்வாளர்கள், சக அணி வீராங்கனை, எதிர் அணி என வரிசையாக முட்டுக்கட்டைகளை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில் சத்யராஜும், விவசாயத்தில் சரிவை சந்திக்கிறார்.



    அதேநேரத்தில் அதே கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தர்ஷனுக்கு ஐஸ்வர்யா மீது காதல் வருகிறது. தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்.

    இவ்வாறாக தனக்கு வரும் தடைக்கற்களை எல்லாம், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி படிக்கற்களாக மாற்றினார்? இந்திய அணியில் விளையாடி தனது அப்பவை எப்படி சந்தோஷப்படுத்துகிறார்? தர்ஷனின் காதல் என்னவானது? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

    தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்குவது, பீல்டிங் செய்ய தெரியாமல் விழுவது என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாகவே தெரிவது அவரது நடிப்பின் சிறப்பு. அப்பாவிடம் பாசம், அம்மாவிடம் பிடிவாதம், அணிக்காக விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக காட்டுகிறார். சோகத்தை மறைத்து அப்பாவிடம் பேசும் காட்சி அவரின் நடிப்புத்திறமைக்கு ஒரு பதம்.



    விவசாயியாக விவசாயத்தின் அருமையை புரிய வைக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மனதில் பதிகிறார். வாழ்ந்து கெட்ட விவசாயியை பிரதிபலிக்கிறார். அவருக்கு இணையாக ரமா கிராமத்து சராசரி தாயாக தனது பாணியில் நடித்து கவர்கிறார். 

    ஜெட் வேகத்தில் செல்லும் படம் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன் வந்த பிறகு ராக்கெட் வேகத்துக்கு பறக்கிறது. அவர் பேசும் தன்னம்பிக்கை வசனம் ஒவ்வொன்றும் பாடம். கடைசி அரை மணி நேரம் இருக்கை நுனிக்கே கொண்டு வருகிறார்.

    இளவரசு, தர்‌ஷன், முனீஸ்காந்த், சவரி முத்து, ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யாவின் கிரிக்கெட் தோழர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    ஒரு தமிழ்ப்பெண்ணின் கனவு, தமிழ்நாட்டு விவசாயியின் வேதனை நிலை என இரண்டு வெவ்வேறு கதையை ஒரே நேர்க்கோட்டில் அழகாக இணைத்து ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டுக்கள். அழிந்து வரும் விவசாயத்தை மக்களுக்கு புரிய வைக்க விளையாட்டை தேர்ந்தெடுத்தது சிறப்பு. கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும், கொண்டாடும் நம் நாட்டில், சோறு போடும் விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்வதில்லையே என்ற ஆதங்கத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்கள்.

    விளையாட்டில் சாதிக்க ஆசைப்படும் தமிழ்ப்பெண்ணுக்கும், விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கும் தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக காட்டலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருப்பது இயக்குநரின் திறமை.



    “இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா”, “ஒண்ணு லஞ்சம் கொடு, இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க”, “ஜெயிச்சுடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சுட்டு சொன்னா தான் கேட்கும்” என வசனங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. கிரிக்கெட் போலவே சினிமாவும் கூட்டுமுயற்சி தான். அனைத்து துறைகளும் ஒருசேர கனாவை சாம்பியனாக்கி இருக்கின்றன.

    திபுநிணன் தாமஸ் தனது இசையால் படத்தையே தாங்கி பிடித்து இருக்கிறார். பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையில் நம்மை ஒன்ற வைக்கிறார். பசுமை, வெறுமை, வறுமை, தேசபக்தி அனைத்தையும் வண்ணங்களால் பிரித்து காட்டுகிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ரூபனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `கனா' வெற்றி. #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj #Darshan

    ×