search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maari 2 Review"

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    ×