என் மலர்
நீங்கள் தேடியது "பம்பிள்பீ விமர்சனம்"
டிரான்ஸ்பார்மரில் நம்முடைய மனதை கவர்ந்த பம்பிள்பீ பற்றிய படமாக வெளியாகி இருக்கும் பம்பிள்பீ படத்தின் விமர்சனம். #Bumblebee #BumblebeeReview
சைபர்ட்ரான் கிரகத்தில் ஆட்டோபாட்கள், (ராட்சத எந்திர மனிதர்கள்) வாழ்ந்து வருகின்றனர். அங்கு டிசெப்டிகான்களுக்கும் ஆட்டோபாட்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டையில் சைபர்ட்ரான் கிரகமே அழிய ஆரம்பிக்கிறது. இதனால், ஆட்டோபாட்களின் தலைவனான ஆப்டிமஸ் ப்ரைம், B-127 என்னும் பம்பிள் பீ-யை பூமிக்கு சென்று தஞ்சம் அடைய சொல்கிறார். மேலும் பூமியில் மற்ற ஆட்டோபாட்கள் வந்து தஞ்சமடைய ஏற்பாடுகளையும் பம்பிள்பீ-யிடம் சொல்லி அனுப்புகிறார் ஆப்டிமஸ் ப்ரைம்.
அதன்படி பூமிக்கு செல்கிறது பம்பிள் பீ. இது செல்வதை அறிந்த டிசெப்டிகான்களை சேர்ந்த ரோபோ, பூமியில் பம்பிள் பீ-யை தாக்குகிறது. இதில் பம்பிள் பீ-க்கு பேசும் திறனும், சுயநினைவையும் இழக்கிறது. பூமியில் மறைந்து வாழ, ஒரு பழைய காரின் உருவத்தை பெற்று, பழைய கார் மெக்கானிக் செட்டில் கிடக்கிறது அந்த பம்பிள்பீ.

அதே ஊரில் வாழும் சார்லி வாட்சன் என்ற பெண்ணுக்கு, சொந்த கார் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அவளது பிறந்த நாள் அன்று பம்பிள்பீ கார் பரிசாக கிடைக்கிறது. அதன் பிறகுதான், அது கார் அல்ல, டிரான்ஸ்பார்மர் என்று தெரிந்துகொண்டு, அதை அன்புடன் கவனித்து வருகிறாள்.
பழைய ஞாபகங்களை இழந்த பம்பிள் பீ, தான் எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை மறந்து, சார்லி வாட்சனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் பம்பிள் பீ மூலமாக ஒரு சிக்னல் கிடைத்து, டிசெப்டிகானை சேர்ந்த இரண்டு ரோபோக்கள் பூமிக்கு வருகிறது.
இந்த ரோபோக்கள், பம்பிள்-பீயை அழித்ததா? பம்பிள்-பீக்கு சுய நினைவு திரும்பியதா? பம்பிள்பீ-யுடன் இருக்கும் சார்லி வாட்சனுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சார்லி வாட்சனாக வாழ்ந்து இருக்கிறார், ஹெய்ஸ்லி ஸ்டீன்பீல்ட். அவருடைய நண்பனாக வரும் ஜார்ஜ் லென்போக், அமெரிக்க ராணுவ தளபதி ஜான் சீனா என, அனைவரும் தரமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். சென்டிமென்டுடன் கூடிய ஒரு சயின்ஸ்பிக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார், டிராவிஸ் நைட்.
பல காட்சிகள் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. டிரான்ஸ்பார்மர் ரசிகர்களுக்கு இப்படம் சிறப்பு விருந்தாக அமைந்திருக்கிறது. பம்பிள் பீயை மட்டும் மையமாக வைத்து படம் உருவாக்கி இருக்கிறார்கள். ஆப்டிமஸ் ப்ரைம் ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றம்தான்.
மொத்தத்தில் ‘பம்பிள்பீ’ சுவாரஸ்யம்.






