என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஹுகோ வேவிங், ராபர்ட் ஷீஹன், ஹேரா ஹில்மார் ஆகியோர் நடிப்பில் கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மோர்ட்டால் என்ஜின்ஸ் படத்தின் விமர்சனம். #MortalEngines
    மோர்ட்டால் என்ஜின்ஸ் திரைப்படம் வருங்கால கதை. ஒரு போரின் போது உலகத்தில் உள்ள பல பகுதிகள் அழிந்து விடுகிறது. இதில் மீதமுள்ள ஊர்களை இயந்திரமாக மாற்றி எடுத்து செல்கிறார்கள். பெரிய ஊராக இருக்கும் லண்டனை ஹுகோ வேவிங் தலைமை வகித்து வருகிறார்.

    இவருடன் முக்கிய பொறுப்பில் ராபர்ட் ஷீஹன் இருந்து வருகிறார். இந்த லண்டன் ஊர் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊர்களை பிடித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி ஹேரா ஹில்மார் இருக்கும் ஒரு ஊரை லண்டன் ஊர் அபகரிக்கிறது.

    இதனால் கோபமடையும் ஹேரா ஹில்மார், ஹுகோ வேவிங்கை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் ராபர்ட் ஷீஹன் அதை தடுத்து விடுகிறார். இருந்தாலும் ஹேரா ஹில்மார், ஹுகோ வேவிங்கை கத்தியால் குத்திவிட்டு, என் அம்மாவை கொலை செய்ததற்காக என்று சொல்லிவிட்டு தப்பித்து விடுகிறார்.



    அப்போது ஹேரா ஹில்மாரை துரத்தி செல்லும் ராபர்ட் ஷீஹன், அவர் மூலம் ஹுகோ வேவிங் பற்றியை உண்மைகளை தெரிந்துக் கொள்கிறார். அதன்பின் கத்தியால் குத்துப்பட்ட ஹுகோ வேவிங்கிடம் இருந்து இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.

    இருப்பினும் ஹுகோ வேவிங்கை கொலை செய்ய இருவரும் திட்டம் போடுகிறார்கள். இறுதியில் ஹுகோ வேவிங்கை ஹேரா ஹில்மார் மற்றும் ராபர்ட் ஷீஹன் இருவரும் கொலை செய்தார்களா? ஹேரா ஹில்மார் ஹுகோ வேவிங்கை கொலை செய்ய துடிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஹேரா ஹில்மார் முதன்மை நாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹுகோ வேவிங் ஊருக்கு நல்லவராகவும் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.



    பழி வாங்கும் கதையை நிகழ்காலத்தில் புது டெக்னாலஜியுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டியன் ரிவர்ஸ். படத்தில் 80 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சியிலேயே படமாக்கி இருக்கிறார்கள். இருப்படியும் உருவாக்க முடியுமா என்று பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள். ரசிகர்கள் விரும்பும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மோர்ட்டால் என்ஜின்ஸ்’ சிறப்பு.
    அரசர் ராஜா இயக்கி நடித்திருக்கும் `பயங்கரமான ஆளு' படத்தின் விமர்சனம். #BayangaramanaAaluReview #ArasarRaja
    நாயகன் அரசர் ராஜாவும், நாயகியும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மேலும் 4 பேர் அங்கு வேலை பார்க்கிறார்கள். இதையடுத்து அந்த தொலைக்காட்சியின் உயரதிகாரி, கூடுவிட்டு கூடு பாய்வது பற்றிய தகவல்களை சேகரிக்கும்படி கூறி, அதற்கான பொறுப்பை அரசர் ராஜாவுக்கும், நாயகிக்கும் கொடுத்து விடுகிறார்.

    இதனால் கடுப்பாகும் மற்ற 4 பேரும், அரசர் ராஜாவை காலி செய்ய திட்டமிடுகின்றனர். இதையடுத்து கூடு விட்டு கூடு பாய்வது பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக 6 பேரும் இணைந்து ஆனைமலையில் இருக்கும் யோகி ஒருவரை சந்தித்து அவரிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக செல்கின்றனர்.



    போன இடத்தில் அரசர் ராஜா அந்த யோகியிடம் இருந்து கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக் கொள்கிறார். அதே பகுதியில் அரசர் ராஜா தோற்றத்தில் இருக்கும் மற்றொருவர் பெரிய ப்ளேபாய். அவரை அவரது காதலியே கொன்றுவிடுகிறார்.

    இதற்கிடையே தனது உடலை விட்டு வெளியே வந்திருக்கும் நாயகன் அரசர் ராஜாவின் உடலை அவருடன் வேலைபார்ப்பவர்கள் எரித்துவிடுகிறார்கள். இதனால் செய்வதறியாது தவிக்கும் அரசர் ராஜாவின் ஆவி, அந்த யோகியின் வழிகாட்டுதலின் படி, காதலியால் கொலை செய்யப்பட்ட அரசர் ராஜாவின் உடலில் புகுந்து கொள்கிறது.



    அதன்மூலம் அரசர் ராஜா ஒரு பயங்கரமான ஆளாக மாறிவிடுகிறார். கடைசியில் தனது உடலை எரித்தவர்களை அரசர் ராஜா பழிவாங்கினாரா? நாயகியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன், இயக்குநர் என இரு வேலைகளை எடுத்து, இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துமிருக்கிறார் அரசர் ராஜா. நாயகி, கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கின்றனர். கூடுவிட்டு கூடு பாய்வதை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். கதை கேட்கும் போது நல்லா இருந்தாலும், அதை காட்சிப்படுத்துவதில் இயக்குநர் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். திரைக்கதையையும் கவனித்திருக்கலாம்.



    சுபீர் அலி கானின் இசையில் பின்னணி இசை ஓரளவுக்கு வலுசேர்த்திருக்கிறது. செல்வமணியின் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடியாக உள்ளது.

    மொத்தத்தில் `பயங்கரமான ஆளு' பயங்கரமா இல்லை. #BayangaramanaAaluReview #ArasarRaja

    பி.வெற்றிசெல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜானி' படத்தின் விமர்சனம். #JohnnyReview #Prashanth #SanchitaShetty
    பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.



    பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.

    கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

    2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.



    ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஜானி' த்ரில்லர் ஜர்னி. #JohnnyReview #Prashanth #SanchitaShetty

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
    நாயகன் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 30 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறார். என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிரை கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். விக்ரம் பிரபுவோ அம்மா மீது பாசமாக இருந்தாலும், செய்யும் தொழிலை மிகவும் நேசித்து வருகிறார்.

    இந்நிலையில், ஹன்சிகாவை பார்க்கும் விக்ரம் பிரபு அவர் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பழகி வரும் நிலையில், போலீஸ் வேலையால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். அதே சமயம், தன்னுடைய வேலையில் இருந்து விக்ரம் பிரபு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.



    சில நாட்களில் ராமேஸ்வரம் பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் 14 வயது மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது.

    இதை விசாரிப்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் இவர், எம்.எஸ்.பாஸ்கர் மூலம், என்கவுண்டர் செய்ய இருக்கும் நபரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இதில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.



    இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் ஸ்டைலிஷ் உடைகளில் வந்து கவர்கிறார்.



    கதாநாயகி ஹன்சிகா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தேவையில்லாத காட்சிகள் என்று இல்லாமல் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதை படத்தில் உணர்த்தியிருக்கிறார். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்னளை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.



    முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘துப்பாக்கி முனை’ ஷார்ப். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika

    பி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `தோனி கபடிகுழு' படத்தின் விமர்சனம். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu
    நாயகன் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். கிரிக்கெட் என்றால் போதும் அனைவரும் ஒன்றுகூடும் அளவுக்கு விளையாட்டு மீது பற்றாக இருக்கிறார்கள். அதே ஊரில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர், கபடி விளையாட்டின் பெருமையை சொல்லி கபடி விளையாட சொல்கிறார். ஆனால் அவரது பேச்சை அவர்கள் கேட்பதாக இல்லை.

    இந்த நிலையில், அவர்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்திற்கு சொந்தக்காரர், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், அந்த இடத்தை கடன் வாங்கியவரிடமே கொடுத்து விடுகிறார்.



    இதையடுத்து கிரிக்கெட் விளையாட இடமில்லாமல் தவிக்கும் அந்த ஊர் இளைஞர்கள், அந்த இடத்தை வாங்கியவரிடம் சென்று அந்த இடத்தை தரும்படி கேட்கின்றனர். தனக்கு வர வேண்டிய கடன் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டு அந்த இடத்தை வாங்கி செல்லும்படி அவர் சொல்ல, அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையே தனது ஊருக்கு வரும் நாயகி லீமா பாபு மீது அபிலாஷுக்கு காதல் வருகிறது.

    நாயகன் அபிலாஷின் தந்தை சொந்த வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுக்கிறார். அதேபோல் ஊர் மக்களிடமும் பணம் வசூலிக்க, அவர்களுக்கு தேவையான காசு ஓரளவுக்கு சேர்த்து விடுகிறது. மீதி காசை சேர்க்க வழி தெரியாமல் தவிக்க, டீ கடைக்காரர் அவர்களை கபடி விளையாடி வென்றால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சொல்கிறார்.



    அவர்களுக்கும் அது சரியாக பட கபடி விளையாடுவதற்கு தயாராகிறார்கள். அந்த டீக்கடைகாரர் அவர்களுக்கு கபடி பயிற்சி அளிக்கிறார். 

    கடைசியில், கபடி போட்டியில் வென்று பரிசை வென்றார்களா? கிரிக்கெட் விளையாடும் இடத்தை திரும்பப் பெற்றார்களா? கபடி விளையாட்டின் அருமை புரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அபிலாஷ் கல்லூரி இளைஞராக, கிரிக்கெட், கபடி விளையாட்டு வீரராக போதுமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனினும் நடிப்பில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். லீமா பாபுவுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



    முதலாவதாக கபடியின் மகத்துவத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பி.ஐயப்பனுக்கு பாராட்டுக்கள். கிரிக்கெட்டையே பெரிதாக நினைக்கும் இளைஞர்களுக்கு தமிழனின் விளையாட்டான கபடியின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ஒன்றவில்லையோ என்றும் யோசிக்க வைக்கிறார்.

    சி.ஜே.ரோஷன் ஜோசப்பின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `தோனி கபடிகுழு' வளர வேண்டும். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் விமர்சனம். #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri
    விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

    யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.



    இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் சிங்கம் புலி அங்கிருந்து ஒரு பையை எடுத்து வருகிறார். அந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, அதிலும் லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

    இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் இருவரையும் தேடி வருகிறார்.



    கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி புயல் மியாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். சிங்கம் புலி குருவாக வர, விமல் அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். சிங்கம் புலி வழக்கமான தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

    ஆஷ்னா சவேரி காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மியா ராய் லியோன் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். மற்றபடி ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ் வருகைக்கு பின் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' சிறியதாக இருக்கு. #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri

    சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் கீதன் பிரிட்டோ, வர்ஷா பொலம்மா, விஜி சந்திரசேகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சீமத்துரை படத்தின் விமர்சனம். #SeemathuraiReview #GeethanBrito #VarshaBollama
    கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை சேர்த்து வைக்கின்றனர்.

    பக்கத்து ஊரை சேர்ந்த நாயகி வர்ஷா பொலம்மா பள்ளிக்கு முடித்து கல்லூரியில் சேர்கிறார். வர்ஷாவை பார்த்ததும் கீதனுக்கு அவள் மீது காதல் வந்து வர்ஷா பின்னால் சுற்றுகிறார். இதனால் வர்ஷா வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்.



    அவர் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையே கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது. 

    கடைசியில், கீதன் - வர்ஷா இணைந்தார்களா? அவர்களது காதல் என்னவானது? காசிராஜான் தனது மாமாவை பழிவாங்கினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கீதன் கிராமத்து மாணவர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அடி வாங்கிக்கொண்டே வர்ஷா சொன்னதை நினைத்து சிரிக்கும்போது அவரது நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.



    நஸ்ரியாவின் நகலாக இருக்கும் வர்ஷா, மேக்கப்பை குறைத்து கிராமத்து பெண்ணுக்கு ஏற்றவாறு மாறி நடித்திருப்பது சிறப்பு. கண்களை உருட்டி சிரிக்கும்போது அழகாக இருக்கிறார். இனி தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். கீதனின் அம்மாவாக வந்து கருவாடு விற்கும் வேடத்தில் விஜி சந்திரசேகர் கிராமத்து அம்மாக்களை பிரதிபலிக்கிறார். 

    வர்ஷாவின் தாய்மாமா காசிராஜன், ஊமையனாக வரும் நிரஞ்சன், கீதனின் நண்பர்களான மகேந்திரன், வின்செண்ட் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    எளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். எனினும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கதையை முழுமைப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதையில் தொடர்ச்சி இல்லாமல், ஒவ்வொரு காட்சிக்குண்டான இடைவெளியும் நீளமானதாக இருக்கிறது. காதல், பாசம் என ஒருசில இடங்களில் உருக வைத்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கதாபாத்திரங்களை நல்லவே வேலை வாங்கியிருக்கிறார். கீதன், வர்ஷா, விஜி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்ளுமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். ஆண்கள் ஒருதலைக்காதலால் பெண்கள் பின்னால் சுற்றுவதால் அவர்களுக்கு வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக சொன்ன விதத்தில் சந்தோஷ் தியாகராஜனுக்கு பாராட்டுகள்.

    ஜோஸ் பிராங்ளினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு பட்டுக்கோட்டை கிராமங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது.

    மொத்தத்தில் `சீமத்துரை' உருக வைத்திருக்கலாம். #SeemathuraiReview #GeethanBrito #VarshaBollama

    நிக் லயான் இயக்கத்தில் ட்ரவர் டோனோவன் - ம்யா - லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெர்முடா' படத்தின் விமர்சனம். #2014RudramReview #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton
    அமெரிக்க அதிபர் செல்லும் விமானம் கடலுக்கு மேல் செல்லும் போது பருவநிலை மாற்றம் காரணமாக விபத்தில் சிக்குகிறது. இதையடுத்து விமானத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் மூலம் அதிபரை மட்டும் தப்பிக்க வைக்கின்றனர். அந்த பெட்டகம் நேராக கடலில் சென்று விழுகிறது. இந்த தகவல் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டு அதிபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.

    அமெரிக்க கப்பல் படையின் அட்மிரல் லிண்டா ஹேமில்டன். அவரது அறிவுறுத்தலின் பேரில் நாயகன் ட்ரவர் டோனாவன் தலையிலான குழு அதிபரை காப்பாற்ற கடலுக்கு அடியில் செல்ல தயாராகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தாசமான ஜந்து போன்ற வால்கள் மனிதர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.



    இதற்கிடையே கடலுக்கிடையில் நரகம் போன்ற ஒரு இடத்தில் இருந்து அதிபரை காப்பாற்றி கூட்டிவருகின்றனர். இதில் ட்ரவர் டோனாவன் குழுவினர் உயிர்தியாகம் செய்கின்றனர்.

    அதிபரை அழைத்துக் கொண்டு கப்பல்தளத்திற்கு வருவதற்குள் அமெரிக்க கப்பல் படையில் பாதி அழிந்துவிடுகிறது. மேலும் தாக்குதல் நடத்துவது மிருகமா அல்லது வேறு எதுவுமா என்று தெரியாமல் மொத்த படையும் தவித்து வர, அந்த ராட்சத மிருகம் முழுவதும் கடலினுள் இருந்து மேலெழுகிறது.



    அந்த மிருகத்தை அழிக்க ட்ரவர் ஒரு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கிடையே ட்ரவருக்கும், ம்யாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

    கடைசியில், ட்ரவர் அந்த மிருகத்தை அழித்தாரா? ம்யாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ட்ரவர் டோனோவன் கதாபாத்திரம் ஹீரோயிசம் காட்டும்படியாக அமைந்திருக்கிறது. ஹிரோ என்பதால் அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ம்யா பொறுப்புடன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லிண்டா ஹேமில்டன் அட்மிரல் கதாபாத்திரத்தற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.



    நிக் லயான் இயக்கத்தில் இதுஒரு புதுமையான முயற்சி என்றே கூறலாம். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஜந்து போன்ற தோற்றத்தை வைத்தே படத்தை முடித்துவிட்டார். மற்றவர்களுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் எதுவும் இல்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், ஜந்து போன்ற ஒன்று அங்கே எப்படி வந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பது போன்றவை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    கிறிஸ் ரிடென்ஹரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு படத்திற்கு பலம் தான். அலெக்சாண்டர் எல்லனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `பெர்முடா' த்ரில் பயணம். #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `2.0' படத்தின் விமர்சனம். #2Point0Review #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
    எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் 2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார். அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில் செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. திடீரென செல்போன்கள் அனைத்தும் பறந்ததால் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், செல்போன் கடை வைத்திருக்கும் ஐசரி கணேஷ் இந்த நேரத்தில் அனைத்து செல்போன்களையும் விற்று லாபம் பார்க்க எண்ணி, புதிய மொபைல்களை வரவைக்கிறார். அந்த போன்களும் காணாமல் போகின்றன. மேலும் ஐசரி கணேஷ் மர்மமான முறையில் இறக்கிறார்.



    இந்த நிலையில், இந்த பிரச்சனைகள் குறித்து தனது ஆராய்ச்சியை தொடங்குகிறார் (விஞ்ஞானி வசீகரனான) ரஜினிகாந்த். ரஜினிக்கு துணையாக அவரது புதிய ரோபோவான ஏமி ஜாக்சன் உதவி செய்கிறது. இவர்களது ஆராய்ச்சியில் அனைத்து மொபைல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று வந்துள்ளது என்றும், மனிதர்களுக்கு எதிராக இது செயல்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.

    இதையடுத்து நடக்கும் உயர்மட்டகுழு ஆலோசனையில், வந்திருப்பது பயங்கரமான சக்தி, சிட்டி வந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ரஜினி கூறுகிறார். எந்திரன் படத்தில் வசீகரனின் குருவான போஹ்ரா சிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அதேபோல் இந்த பாகத்தில் அவரது மகன் சுதஸ்னு பாண்டே எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிட்டியால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், சிட்டிக்கு ஆதரவு குறைகிறது. இந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் உயிரிழக்க சிட்டியை மீண்டும் கொண்டுவர முடிவு செய்கின்றனர்.



    சிட்டியின் வருகைக்கு பிறகு அந்த மாய சக்தி மனிதர்களை தாக்க ஆரம்பிக்கிறது. பறவையாக மாறி வரும் அந்த சக்தியால் மேலும் பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த சண்டையில் சிட்டி அழிக்கப்படுகிறது.

    கடைசியில், அந்த பறவையை கட்டுப்படுத்தியது யார்? மாய சக்தியான பறவை அழிக்கப்பட்டதா? அக்‌ஷய் குமார் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வசீகரன், சிட்டி, எந்திரன் 2.0, 3.0 என வித்தியாசமாக ரோபோக்களாக ரஜினிகாந்த் கலக்கியிருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அக்‌ஷய் குமார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், உணர்வுப்பூர்வமாக நம்மை கலங்க வைக்கிறார். ரோபோவாக ஏமி ஜாக்சனும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    சுதஸ்னு பாண்டே, அடில் உசைன், கலாபவன் ஷாஜன், மயில்சாமி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.



    படம் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது. குறிப்பாக தமிழில் முழுநீள 3டி படத்தை  பார்க்கும் போது வித்தியாசமான, புதுமையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பை கொடுத்திருக்கும் ஷங்கருக்கு பாராட்டுக்கள். படத்தில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். காட்சிகள் பிரம்மாண்டத்தை உணர வைக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பது ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் கதாபாத்திரங்களுக்கு பெரியதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையோ என்ற ஏமாற்றத்தை உண்டுபண்ண வைக்கிறது. திரையில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை விட பறவையின் தோற்றமே வந்து விளையாடி சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு பறவையை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

    ரஜினியை மாஸாக பார்க்க வேண்டும் என்றோ, வித்தியாசமான அக்‌ஷய் குமாரை பார்க்க வேண்டுமென்றோ சென்றால் அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். இது ரஜினி படம் அல்லது அக்‌ஷய் குமார் படம் என்று கூறுவதை விட இது ஷங்கர் படம் எனலாம். அந்த அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மொத்த பிரம்மாண்டத்தையும் இறக்கியிருக்கிறார். அத்துடன் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான சஸ்பென்ஸையும் இணைத்திருப்பது ரசனை.



    ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் 4டி ஆடியோ சவுண்ட் அபாரம். இருவரும் இணைந்து இசையில் அடுத்த லெவலுக்கே சென்றிருக்கின்றனர். நிரவ் ஷாவின் 3டி ஒளிப்பதிவு உண்மையான விஷுவல் ட்ரீட் தான்.

    மொத்தத்தில் `2.0' மிகப் பிரம்மாண்டம். #2Point0Review #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    சதீஸ் சுப்ரமணியம் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள `செம்மறி ஆடு' படத்தின் விமர்சனம். #SemmariAaduReview #SathishSubramaniam
    பெற்றோரை இழந்த நாயகன் சதீஸ் சுப்ரமணியம் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் இவர் மீது நாயகி ஹரிதாவுக்கு காதல் வருகிறது. ஹரிதாவின் அம்மா வட்டி தொழில் செய்து வருகிறார்.

    ஹரிதாவுக்கு சதீஸ் மீது தீவிரமான காதல் இருக்க, சதீஸ், ஹரிதா மீது ஈர்ப்பில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில், வேறு சாதி பெண்ணை காதலிக்கும் தனது நண்பரை அவரது காதலியுடன் சேர்த்து வைக்கிறார் சதீஸ். இது ஊருக்குள் பெரிய பிரச்சனையாக மாற சதீஸ் ஊரைவிட்டு வெளியேறுகிறார்.

    இந்த நிலையில் மற்றொரு நாயகியான கோபிதாவை பார்க்கும் சதீசுக்கு அவர் மீது காதல் வருகிறது. கோபிதாவும் சதீஸை காதலிக்க இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிலையில், சதீஸ் கொலை செய்துவிட்டதாக போலீஸார் அவரை கைது செய்கின்றனர்.

    கடைசியில், உண்மையில் கொலை செய்தது யார்? கொலைப்பழியுடன் ஜெயிலுக்கு போன சதீஸ் வாழ்க்கை என்னவானது? கோபிதாவை மணந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சதீஸ் சுப்ரமணியம் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என பொறுப்புடன் தனது பணியை செய்திருக்கிறார். நாயகிகள் ஹரிதா, கோபிதா கொடுத்த கதபாத்திரத்தை சிறப்பாக மெருகேற்றியிருக்கின்றனர். மற்ற துணை கதாபாத்திரங்களும் காட்சிகளுக்கு ஏற்றவாறு நடித்து வலுசேர்த்திருக்கிறார்கள்.

    கிராமத்தில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாக காட்ட நினைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சதீஸ் சுப்ரமணியம். சாதிய கொடுமை, குடிப்பழக்கம், நெறிமுறை தவறி இருப்பவர்கள் மற்றும் அவர்களால் ஏற்படும் மாற்றங்கள், மண் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. 

    ரெஞ்சித் வாசுதேவ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவில் கிராமத்து சாயல் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `செம்மறி ஆடு' வாசனையானது. #SemmariAaduReview #SathishSubramaniam

    ஜெயதேவ் பாலசந்திரன் இயக்கத்தில் கலையரசன் - அனஸ்வரா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் பட்டினப்பாக்கம் படத்தின் விமர்சனம். #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கலையரசன் தனது அம்மா, தங்கையுடன் சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் கலையரசனுக்கு அந்த பகுதி தாதாவான ஜான் விஜய்யிடம் கடன் வாங்கிவிட்டு அதை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கலையரசனும், பணக்கார வீட்டு பெண்ணான நாயகி அனஸ்வரா குமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில், கலையரசனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அம்மாவை காப்பாற்ற லட்சங்கள் செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டு புரோக்கரான சார்லியுடன் ஒரு வீட்டுக்கு செல்கிறார் கலையரசன். வயதான பெண் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கொள்ளையடித்தால் செட்டில் ஆகி விடலாம் என்று சார்லி விளையாட்டாக சொல்கிறார். இதையடுத்து அந்த வீட்டில் திருட முடிவு செய்து கலையரசன் அந்த வீட்டுக்கு செல்கிறார்.



    இதுஒருபுறம் இருக்க மனோஜ் கே.ஜெயன் தனது மனைவி சாயா சிங்கை கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் மனோஜ் மீது சாயாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் தன்னுடன் பாசமாக பழகும், இளைஞர் ஒருவருடன் சாயா நெருக்கமாகிறார். இதையடுத்து அந்த இளைஞரை ஒருநாள் இரவு தனது அம்மா வீட்டிற்கு வர சொல்கிறார் சாயா. 

    மேலும் வயதானவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்து வரும் சைக்கோ கொலையாளி சாயாவின் அம்மாவை கொல்ல நினைக்கிறான்.



    இவ்வாறாக கலையரசன், சாயா சிங், சைக்கோ கொலையாளி என இவர்கள் சந்திக்கும் போது என்ன நடந்தது? கலையரசன் தனது அம்மாவை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கலையரசன் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞராக சிறப்பாக நடித்தியிருக்கிறார். கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் அவரது நடிப்பு நேர்த்தியானதாக இருந்தது. நாயகி அனஸ்வரா குமாருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். சாயா சிங்குக்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுக்கள். 

    மற்றபடி மனோஜ் கே.ஜெயன், , ஜான் விஜய், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யோக் ஜபி, ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.



    இயல்பான நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ஜெயதேவ் பாலசந்திரன். எனினும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்தின் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    ராணா ஒளிப்பதிவும், இஷான் தேவ், பிரணவ் தாஸ், ஸ்ரீஜித் மேனன் இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `பட்டினப்பாக்கம்' பார்த்து போங்க. #PattinapakkamReview #Kalaiyarasan #AnaswaraKumar

    ராஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வண்டி' படத்தின் விமர்சனம். #VandiReview #Vidharth #ChandiniTamilarasan
    விதார்த், கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் மூன்று பேரும் சாந்தினி வீட்டிற்கு அருகில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து கொடுக்கிறார் சாந்தினியின் அப்பா. விதார்த்தும், சாந்தினியும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விதார்த் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேலை ஒன்றில் சேர முடிவு செய்கிறார். வண்டி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்படுப்படும் விதார்த் எப்படியாவது அந்த வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பைக் ஸ்டாண்ட்டில் பணிபுரியும் ஸ்ரீராம் மூலம், ஒரு வண்டியை வாங்கிக் கொண்டு போகிறார். 



    தான் ஓட்டிச் செல்வது திருட்டு வண்டி என்பதை அறியாமல் போலீசில் சிக்கிக் கொள்ளும் விதார்த்துக்கு, அந்த வண்டியால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

    இவ்வாறாக வண்டியின் மூலம் வரும் பிரச்சனைகளில் இருந்து விதார்த் எப்படி தப்பிக்கிறார்? சாந்தினியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த் இந்த படத்திலும் ஒரு நாயகனுக்கு உண்டான அலட்டல் இல்லாமல், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாந்தினியும் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், விஜித் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    படத்தின் கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் ராஜீஷ் பாலா, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத காட்சிகளும், வசனங்களும் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளன. தேவையில்லாத இடங்களை கத்தரித்து, படத்தொகுப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    சுராஜ் கே குரூப்பின் பின்னணி இசை ஓரளவுக்கு பலம் தான். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `வண்டி' வேகமில்லை. #VandiReview #Vidharth #ChandiniTamilarasan

    ×