என் மலர்
தரவரிசை
ராஜ்பாபு இயக்கத்தில் நகுல் - ஆஞ்சல் முஞ்சல் நடிப்பில் வெளியாகி இருக்கும் `செய்' படத்தின் விமர்சனம். #SeiReview #Nakhl #AanchalMunjal
எளிமையான குடும்பத்தில் பிறந்த நாயகன் நகுல் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். இவருடைய தந்தை ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் கடைகளை ஏமாற்றி தன்னை ஒரு விளம்பர மாடலாக காட்டிக் கொண்டு ஏமாற்றி வருகிறார்.
நாயகி ஆஞ்சல் முஞ்சல் சில கதைகளை எழுதி வைத்துக் கொண்டு திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஒரு நாள் தயாரிப்பாளராக இருக்கும் மனோபாலாவிடம் பல கதைகளை கூறியும் அவருக்கு பிடிக்காததால், உங்களை கவர்ந்த ஒருவரின் கதாபாத்திரத்தை படமாக்க சொல்கிறார். யாரை வைத்து படம் எடுக்கலாம் என்ற யோசனையில் வரும் ஆஞ்சல், நாயகன் நகுல் ஒரு பெண்ணை ஏமாற்றுவதை பார்க்கிறார்.
இதையடுத்து அவரை பின் தொடர்ந்து, அவரைப் பற்றி அறிந்து கொள்கிறார். ஒருநாள், நகுலுக்கு போன் செய்து, அவர் ஏமாற்றியது பற்றி சொல்லி அவரை திட்டுகிறார். தன்னை ஆஞ்சல் பின் தொடர்வதை அறிந்த நகுல், அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆஞ்சலை தன்னுடைய காதல் வலையில் விழவைக்க, வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் நகுல். இந்நிலையில், நகுலின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய ஆம்புலன்ஸை வேலையை நகுல் பார்க்கிறார். அப்போது, ஒருவரின் சடலத்தை எடுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. உறவினராக நாசரும் அந்த உடலுடன் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் நாசர் மீது நகுலுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

அப்போது, அந்த சடலத்தை பார்க்கும் போது, இறந்தவர் தனது தந்தையை காப்பாற்றியவர் என்பது தெரியவருகிறது. இதையடுத்து அவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உணரும் நகுல், அதை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில், சடலத்தை எடுத்து செல்லும் நகுலுக்கு பல்வேறு அரசியல் தலையீடுகளும், பிரச்சனைகளும் வருகிறது.
இதிலிருந்து நகுல் எப்படி மீண்டார்? அந்த சடலத்தின் பின்னால் இருக்கும் மர்மம், அதில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன? ஆஞ்சலுடனான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நகுல் தனக்கே உரிய கலகலப்பு, சுறுசுறுப்புடன் படத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். படம் முழுவதும் எனர்ஜியாகவே நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஞ்சல் முஞ்சல் தமிழுக்கு புது என்றாலும், அழகாலும், நடிப்பாலும் கவனிக்க வைத்திருக்கிறார். நாசர், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ் பாபு, இப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார். படம் ஆரம்பத்தில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக வேகமெடுத்திருக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தின் அறிமுக பாடல் சிறப்பாக உள்ளது.
விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள் சிறப்பு. நிக்ஸ் லோபஸின் ஒளிப்பதிவில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘செய்’ செயல்மிக்கவன். #SeiReview #Nakhl #AanchalMunjal
டேவிட் ஏட்ஸ் இயக்கத்தில் எட்டி ரெட்மயின், ஜானி டெப், ஜூட் லா, கேத்தரின் வாட்டர்சன், சியோ கிராவிட்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள்' படத்தின் விமர்சனம். #FantasticBeastsTheCrimesofGrindelwaldReview
ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்காவின் மந்திர சக்திகளின் குழுவால் வில்லனான ஜானி டெப் (கிரின்டல்வால்ட்) நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்டுகிறார். அதன் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐரோப்பாவில் செய்த குற்றங்களுக்காக ஜானி டெப்பை லண்டன் சிறைக்கு மாற்றுகின்றனர்.
அப்போது தனது மந்திர சக்தியை பயன்படுத்தி தப்பிக்கும் ஜானி டெப், கடைசி பாகத்தில் இறந்துவிட்டதாக நினைக்கப்பட்ட எஸ்ரா மில்லரை (கிரெடென்ஸ்) தேடுகிறார். இதற்கிடையே வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தனது தடையை நீக்கக் கோரி நாயகன் எட்டி ரெட்மயின் (ஸ்கேமண்டர்) நியூயார்க்கில் உள்ள மந்திர சக்திகளின் குழுவிடம் கோருகிறார்.

அப்போது ஜானி டெப் தப்பித்ததும், அவர் எஸ்ரா மில்லரை தேடி அவனை பயன்படுத்திக்க நினைப்பதும் எட்டிக்கு தெரிய வருகிறது. கடைசியில், ஜானி டெப் எஸ்ராவை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை தேடி செல்லும் எஸ்ராவின் நிலை என்ன ஆனது? எட்டி காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
ஜானி டெப் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். எட்டி ரெட்மயின், ஜூட் லா, கேத்தரின் வாட்டர்சன், சியோ கிராவிட்ஸ், எஸ்ரா மில்லர் என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கடைசி பாகத்தில் நடித்த பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர். டேன் போஜ்லர் வழக்கமான தனது காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க மந்திரி சக்திகளை மையப்படுத்தி ஸ்வாரஸ்யமான குழப்பத்துடனான திரைக்கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் டேவிட் ஏட்ஸ். கிராபிக்ஸில் வரும் மிருகங்கள், மாய சக்திகள் என வண்ணமயமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஜேம்ஸ் நியூட்டன் ஹோவார்டின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிலிப் ரோஸ்லாட்டின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: கிரின்டல்வால்டின் குற்றங்கள்' ரசிக்கலாம். #FantasticBeastsTheCrimesofGrindelwaldReview #EddieRedmayne #JohnnyDepp
ஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா அழகப்பன் - பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உத்தரவு மகாராஜா' படத்தின் விமர்சனம். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka
உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நண்பர்களிடம் பொய்கள் கூறி தன்னை பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திடீரென்று காணாமல் போகும் உதயா ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்புகிறார். ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை.
அந்த நினைவுகனை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்க தொடங்குகின்றன. இதனால் நிம்மதியை இழக்கிறார். உதயாவை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது? உதயா நல்லவரா? கெட்டவரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

உதயா மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். நிம்மதி இழந்து அவர் தவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். உதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார். நடிப்பில் வழக்கமான கம்பீரம்.
கதாநாயகிகள் பிரியங்கா, சேரா இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலாவின் அடியாட்களாக மனோஜ்குமார், ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரும் நிறைவான நடிப்பு.

அறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை 2 ஆம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோஷனல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் நீளத்தை குறைத்து, வேகத்தை அதிகரித்திருக்கலாம்.
நரேன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `உத்தரவு மகாராஜா' கவனிக்க வைக்கிறான். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka
விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கணேஷா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் விமர்சனம். #ThimiruPudichavan #ThimiruPudichavanReview
சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் ஆண்டனி, தனது தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒருநாள் ஒரு பிரச்சனையில், விஜய் ஆண்டனியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி.
சில காலங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.

இதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பல சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது தெரிய வருகிறது. இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.
இறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.

எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். ஆனால், சில லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘திமிரு புடிச்சவன்’ சாந்தமானவன்.
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் - ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.
ஜோதிகாவுக்கு இரு அக்காள்கள், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், ஜோதிகாவை இருவரும் மட்டம் தட்டி வருகிறார்கள். இதற்கிடையே தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். தனது தனித்துவமான முகபாவனை, பேச்சின் மூலம் படத்தின் காட்சிகளை நகர்த்துகிறார்.

ஜோதிகாவுடன் வரும் காட்சிகளில் விதார்த் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். காட்சிக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
லக்ஷ்மி மஞ்சு, மனோபாலா, இளங்கோ குமரவேல் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.

சாதாரண திரைக்கதையில் சென்டிமெண்ட் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் அன்பு, காதல், காமெடி என அனைத்து கலந்த கலவையான தனது பாணியில் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டிய இயக்குநர், தொடக்கம் முதல் இறுதிவரை ஜோதிகாவை ஒரே மாதிரியாக காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் உடை, அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க வசதியான வீட்டுப் பெண்ணாகவே வலம் வருகிறார்.
ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `காற்றின் மொழி' இனிமை. #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
எகச்சாய் உக்ரோந்தம் இயக்கத்தில் டோனி ஜா, டால்ப் லன்ட்க்ரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வேதாள வீரன்' படத்தின் விமர்சனம். #VedhalaVeeranReview #DolphLundgren #TonyJaa
தாய்லாந்தில் பெண்களை கடத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார் ரான் பெர்ல்மேன். இவரை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஹாங்காங் போலீஸ் அதிகாரி டோனி ஜா. இந்த நிலையில், தொழில் விஷயமாக அமெரிக்கா வருகிறார் ரான் பெர்ல்மேன். அவருக்கு தண்ணி காட்டி, அவரை எப்படியாவது கைது செய்ய திட்டமிடுகிறார் அமெரிக்க போலீஸ் அதிகாரி டால்ப் லன்ட்க்ரன்.
மேலும் தனது திட்டப்படி ரான் பெர்ல்மேனை கைது செய்கிறார். இருவருக்குமிடையேயான சண்டையில் ரானின் கடைசி மகனை டால்ப் லன்ட்க்ரன் சுட்டதில் அவரது மகன் உயிரிழக்கிறார்.

இதனால் கடும் கோபத்திற்குள்ளாகும் ரானின் மூத்த மகன்கள் டால்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடுகிறார்கள். டால்ப் மயிரிழையில் உயிர் தப்புகிறார். இதற்கிடையே ரான் பெர்ல்மேன் விடுதலையாகி தாய்லாந்துக்கு திரும்புகிறார்.
தனது குடும்பத்தையே அழித்த ரானை கொல்வதற்காக டால்ப் லன்ட்க்ரனும் தாய்லாந்துக்கு வருகிறார். டால்ப்பை கண்காணிக்கும்படி டோனி ஜாவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கடைசியில் தனது குடும்பத்தை கொன்ற ரான் பெர்ல்மேனை, டால்ப் லன்ட்க்ரன் பழி வாங்கினாரா? டோனி ஜா அவரை தடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
டால்ப் லன்ட்க்ரன், டோனி ஜா என இருவருமே அதிரடியாக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் இருவருமே தங்களது திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ரான் பெர்ல்மேன் இருவருக்கும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். பீட்டர் வெல்லர், செலினா ஜேட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

டோனி ஜா, டால்ப் லன்ட்க்ரன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து அதிரடி கலந்த த்ரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எகச்சாய் உக்ரோந்தம். அமெரிக்கா, தாய்லாந்து என காட்சிகளை நகர்த்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.
ஜேக்கப் குரோத்தின் இசையும், பென் நாட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `வேதாள வீரன்' வேகமானவன். #VedhalaVeeranReview #DolphLundgren #TonyJaa
விஜய் கிருஷ்ண ஆச்சர்யா இயக்கத்தில் அமீர் கான், அமிதாப் பச்சன் - கேத்தரீனா கெய்ஃப், பாத்திமா சனா சைக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் விமர்சனம். #ThugsOfHindostanReview #AamirKhan
1795-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களை கைப்பற்றி, அவர்களது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வந்தார்கள். அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்த குறுநில ராஜ்ஜியம் ரோனக்பூரை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
இதற்கு அடிபணியாத ஆங்கிலேயர்கள் அவர்கள் மீது போர் தொடுத்து அந்நாட்டு மன்னர், ராணி, மன்னரின் மகன் ஆகியோரை கொன்று விடுகிறார்கள். இதில் மன்னரின் மகள் பாத்திமா சனா சைக்கை புரட்சியாளரான அமிதாப்பச்சன் ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

11 வருடங்கள் கழித்து மன்னரின் மகளை வீரமங்கையாக வளர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கிறார் அமிதாப்பச்சன். இவர்கள் தனிப்படையாக உருவாகி, தாங்கள் இழந்த நாட்டை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். இதையறிந்த ஆங்கிலேயர்கள், ஊரில் சின்ன சின்ன திருட்டு, ஏமாற்று வேலைகளை செய்து வரும் அமீர்கானை, அவர்களுடன் இணைந்து காட்டிக்கொடுக்க சொல்லி அனுப்புகிறார்கள்.
இறுதியில் ஆங்கிலேயர்கள் அமிதாப்பச்சனின் படைகளை அழித்தார்களா? பாத்திமா சனா சைக் தனது பகையை தீர்த்து கொண்டாரா? அமீர்கான் காட்டி கொடுக்கும் வேலையை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்பச்சன், பாகுபலி படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை ஞாகப்படுத்துகிறார். வயதானாலும் அவரது சுறுசுறுப்பான நடிப்பு வியக்க வைக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு உளவு சொல்லும் உளவாளியாக நடித்திருக்கிறார் அமீர்கான். வித்தியாசமான தோற்றத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார் அமீர்கான். ஆங்கிலேயர் ஆதிக்கத் திமிரை தன் பார்வை மூலமே மிரட்டி இருக்கிறார் லாயிட் ஓவன்.
புரட்சிக்கார பெண்ணாக நடித்திருக்கும் பாத்திமா சனா ஷேக், ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குவதும், வாள் வீசுவதும் என நடிப்பில் அசத்தி இருக்கிறார். இரண்டு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் கேத்ரினா கைப். அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வரலாற்று படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சர்யா. சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார். பல இடங்களில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து தொய்வில்லாமல் கொடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மற்ற படங்களின் ஞாபகம் வந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
ஹேமந்த்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை நமக்கு அழகாக காண்பித்திருக்கிறார். அஜய்யின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ பிரம்மாண்டம். #ThugsOfHindostanReview #AamirKhan #AmitabhBachchan #KatrinaKaif
தினேஷ், அதிதி மேனன், தேவயானி, ஆனந்த் ராஜ் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் விமர்சனம். #KalavaniMappillai
மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.
தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.
தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் நடனம் சிறப்பாக ஆடியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். ஆனால் ஓரளவிற்கே காமெடி கைகொடுத்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
ரகுநந்தன் இசையில் முதல் பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘களவாணி மாப்பிள்ளை’ காமெடிகாரன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் விமர்சனம். #Sarkar #SarkarReview
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.
முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார்.

விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.
இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிரளவைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.
மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான்.
ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா நடிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பில்லா பாண்டி’ விமர்சனம். #BillaPandi #BillaPandiReview
மதுரையில் தீவிரமான, வெறித்தனமான, பக்தியான அஜித் ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். பில்லா படம் ரிலீசுக்கு பிறகு தனது பெயரை பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். அஜித்தை போற்றிப் பாடும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவரது முறைப்பெண் சாந்தினி தமிழரசன். ஆர்.கே.சுரேஷும், சாந்தினியும் ஒருவர் மேல் ஒருவர் பிரியமாக இருக்கிறார்கள். கட்டிட தொழிலில் வரும் பணத்தையெல்லாம் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்வது வருவதால் சாந்தினியை, ஆர்.கே.சுரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் மாரிமுத்து.
ஆர்.கே.சுரேஷ் காண்ட்ராக்ட் எடுத்து கட்டும் வீட்டுக்கு சொந்தக்காரரான இந்துஜாவுக்கு சுரேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் ஆர்.கே.சுரேஷோ இந்துஜாவை கண்டுகொள்ளாமல், சாந்தினியையே காதலிக்கிறார்.

இந்த நிலையில், இந்துஜாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க, அனைவர் முன்பும் இந்துஜா, தான் ஆர்.கே.சுரேஷை காதலிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே ஒரு விபத்தில் இந்துஜாவின் வீட்டார் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இந்துஜா மனநிலை பாதிக்கப்படுகிறார்.
தனது குடும்பத்தை இழந்த இந்துஜாவை தனது பொறுப்பில் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இவருக்கும், சாந்தினிக்கும் இடையே பிரிவு வருகிறது.
கடைசியில், ஆர்.கே.சுரேஷ் காதல் என்ன ஆனது? இருவரில் யாரை கரம்பிடித்தார்? இந்துஜா பழைய நிலைமைக்கு திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
வில்லன் வேடங்களில் பார்த்த ஆர்.கே.சுரேஷ் பில்லா பாண்டி மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதியில் கலகலக்கவும் இரண்டாம் பாதியில் கலங்கவும் வைக்கிறார். நடிப்பில் பக்குவம் தெரிகிறது.

வழக்கமான கதாநாயகியாக அறிமுகமாகும் இந்துஜா விபத்துக்கு பின் குழந்தையாகவே மாறி நம்மை உருக வைக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். தம்பி ராமய்யா, அமுதவாணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.
மதுரைப்பகுதியை பின்புலமாக கொண்டு நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாம் கலந்த ஒரு படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருக்கிறார். எம்.எம்.எஸ்.மூர்த்தியின் எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது.
இளையவனின் இசையும் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் `பில்லா பாண்டி' பார்க்கலாம் சீண்டி.
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ விமர்சனம். #SanthoshathilKalavaram
ஒரே கல்லூரியில் படித்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு பங்களாவிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். இதில் ஒருவர் ஆன்மீகம், தியானம் பற்றி நிறைய தெரிந்தவர். அந்த பங்களாவில் ஒரு ஆவி இருப்பதை இவர்களுக்கு தெரிய வருகிறது.
அந்த ஆவி இவர்களை வெளியே போக விடாமல் தடுக்கிறது. மேலும், நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது. அந்த ஆவி யார்? எதற்காக நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக் என புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் நிரந்த் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். மற்றவர்கள் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ரவி மரியா இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
வழக்கமான பேய் படக் கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கிராந்தி பிரசாத். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், அவர்களுக்குள் ரொமான்ஸ், சண்டை என வழக்கமான திரைக்கதை. பேய் படங்களுக்கு உரித்தான பங்களா என அதே டெம்ளேட்டுடன் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பாசிடிவ் வைப்ரேஷன் நம்மிடம் இருந்தால், எந்த தீய சக்தியும் ஒன்றும் செய்யாது என்று சொல்லியிருக்கிறார்.

இப்படத்துக்கு பவுலியஸ் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பணியாற்றியவர். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. படத்திற்கு பலம் என்றும் சொல்லலாம். சிவநக் இசையில் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ சந்தோஷம் குறைவு.
நாகராஜ் இயக்கத்தில் மணிகண்டன் - ரஃபியாஜாபர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வன்முறைப்பகுதி' படத்தின் விமர்சனம். #VanmuraiPaguthiReview #Manikandan
நாயகன் மணிகண்டன் வேலைக்கு ஏதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாறித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். ஊருக்குள் எந்த பிரச்சனை என்றாலும், மணிகண்டன் தான் காரணம் என்னும் அளவுக்கு ஊரில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகளுக்கு போக மாட்டார் என்று மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.
இவரது முன்கோபம் மற்றும் அடிக்கடி பிரச்சனைகளுக்கு போவதால் உள்ளூரில் அவருக்கு பெண்கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பெண் ஒருவரின் சொந்தக்கார பெண்ணான நாயகி ரஃபியாஜாபரை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

ரஃபியாஜாபருக்கு இரு அண்ணன்கள். சொத்து தகராறில் தனது அப்பாவை கொலை செய்த சித்தப்பாவை வெட்டிவிட்டு இருவரும் ஜெயிலுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே திருமணத்துக்காக காத்திருக்கும் இருவரும் மனதில் ஆசையை வளர்த்து காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் திருமணம் நெருங்கும் வேளையில் மணிகண்டன் குணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரியவர திருமணம் நிறுத்தப்படுகிறது. தடைபட்ட திருமணம் நடந்ததா? மணிகண்டனின் முன்கோப குணம் அவருக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய கதைதான் என்றாலும், இயக்குனர் நாகராஜ் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக எடுத்திருப்பதால் வித்தியாசம் தெரிகிறது. கிராமத்து மனிதர்களை மேக்கப் இல்லாமல் இயல்பாகவே படம் பிடித்து அசத்தி இருக்கிறார். திரைக்கதையும் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக செல்கிறது.
கதாநாயகன், கதாநாயகி என்று பிரிக்காமல் அனைவருமே சிற்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் ரசிக்கும்படியான மூன்று பாடல்கள் இருக்கின்றன.
டி.மகேஷின் ஒளிப்பதிவு, அனந்த லிங்ககுமாரின் படத்தொகுப்பு படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வன்முறைப்பகுதி' செல்லவேண்டிய இடம்தான். #VanmuraiPaguthiReview #Manikandan






