என் மலர்
தரவரிசை
பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் விமர்சனம். #Jarugandi #JarugandiReview
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் முயற்சி செய்து வருகிறார்.
டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, பேங்க்கில் லோனுக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதை நண்பன் டேனியிடம் சொல்ல, அவரோ இளவரசு மூலம் போலி ஆவணங்கள் வைத்து லோன் வாங்குகிறார்.
அந்த பணத்தை வைத்து கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார் ஜெய். சில நாட்களில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுக்கு, போலி ஆவணங்கள் வைத்து ஜெய் லோன் வாங்கியது தெரியவருகிறது.
ஜெய் மற்றும் டேனியை அழைத்து ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இந்த பணத்தை இரண்டு நாளில் தரும்படியும் போஸ் வெங்கட் கேட்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில், செல்வந்தரும், நாயகி ரெபா மோனிகாவை காதலிப்பவருமான ரோபோ சங்கரை சந்திக்கிறார்கள். பத்து லட்சம் பணம் தர சம்மதிக்கும் ரோபோ சங்கர், அதற்கு பதிலாக, நாயகி ரெபா மோனிகாவை கடத்தி வர சொல்லுகிறார்.
இறுதியில் ஜெய், நாயகியை ரெபா மோனிகாவை கடத்தினாரா? போஸ் வெங்கட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய்யை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமான வெகுளித்தனமான ஜெய்யாக இல்லாமல், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். ஜெய்யின் கதாபாத்திரம் அளவிற்கு டேனி மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக டேனிக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட், அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கு ரெபா மோனிகா ஜான், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.

வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘ஜருகண்டி’ ரசிக்கலாம்.
சுசீந்திரன் இயக்கத்தில் யுவன் இசையில் ரோஷன், பிரியா லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீனியஸ்’ படத்தின் விமர்சனம். #Genius #GeniusReview
ஆடுகளம் நரேன்-மீரா கிருஷ்ணன் தம்பதியின் ஒரே மகன் ரோஷன். படிப்பில் படுசுட்டியாக திகழும் ரோஷனின் திறமையை உணர்ந்த தந்தை நரேன், அவனை சிறு வயது முதலே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறார். தொடர்ந்து கோச்சிங் சென்டருக்கு அனுப்பி படிக்க வைத்து, பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மார்க்கும் வாங்க வைக்கிறார்.
இதனால், ரோஷனின் விளையாட்டு ஆர்வமும், சந்தோஷமும் பறி போகிறது. அதன் பின் ரோஷன் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஐடி கம்பெனியிலும் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கிறார். இந்நிலையில் ரோஷனின் திறமையை பார்த்து மேலதிகாரி அதிக வேலைகளை கொடுக்கிறார்.
இரவு பகல் பாராமல் வேலை செய்யும் ரோஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ரோஷன், குணமடைந்தாலும் மன அழுத்தத்தால் அடிக்கடி கோபப்படும் சூழ்நிலையும் தன்னிலை மறக்கும் நிலையும் உருவாகிறது. ரோஷனை குணப்படுத்த பெற்றோர்கள் பலவிதங்களில் முயற்சி செய்கிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? ரோஷன் குணமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் ரோஷன். தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலால், சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
பெற்றோர்களாக நடித்திருக்கும் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். டாக்டராக ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, திலீபன் ஆகியோர் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது கூடவே விளையாட்டும் முக்கியம் என்பதை ஜீனியஸ் படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? என்பதை காட்சிகளில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையோடு நல்ல அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது. ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘ஜீனியஸ்’ அட்வைஸ்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.
7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.

கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.
சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.
மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
விபி விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி, ரிஷி, பிரேம், அழகம் பெருமாள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் விமர்சனம். #Ezhumin #EzhuminReview
விவேக் - தேவயானி இருவரும் வசதியான தம்பதி. தங்கள் மகனை குத்துச்சண்டை வீரராக வளர்க்கிறார்கள். விவேக் மகனின் நண்பர்கள் திறமைசாலிகளாகவும் அதே நேரத்தில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் இல்லாததால் அகாடமியில் சேரமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
விவேக்கின் மகன் மாநில அளவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் சாம்பியன் ஆகிறான். ஆனாலும் அவர்களால் மகனின் நண்பர்களை நினைத்து அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு சோகத்தில் இருக்கிறார்கள்.
மகனின் விருப்பப்படியே நடுத்தர குடும்பத்து மாணவர்களின் விளையாட்டு கனவை நிஜமாக்க அகாடமி ஒன்றை தொடங்குகிறார் விவேக். விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல் காரணமாக பல அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றை இளம் வீரர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

இளம் வீரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் பிரவீன், வினீத், ஸ்ரீஜித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகியோர்தான் படத்தின் கதாநாயகர்கள். கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களால் முடிந்தளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார்கள்.
விவேக் வழக்கமான காமெடியனாக இல்லாமல் மகனின் கனவை நிறைவேற்ற விரும்பும் தந்தையாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி இருக்கும் தேவயானி மனதில் நிற்கிறார்.

அழகம்பெருமாள் காலம்காலமாக இருக்கும் விளையாட்டு அரசியலின் உதாரணமாக வருகிறார். அட்டு படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷி, இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அபூர்வமாக தான் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக எடுக்கப்படும் ஊக்கம் தரும் படங்கள் வெளியாகும். அந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து ஒரு படம் கொடுத்ததற்காக இயக்குனர் விபி.விஜிக்கு பெரிய பாராட்டுகள். சிறுவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். விளையாட்டு துறையிலும் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தற்காப்பு கலையின் அவசியத்தையும் கூறியிருக்கிறார்.

கணேஷ் சந்திரசேகரனின் இசையும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிராக்கிள் மைக்கேல் ராஜின் சண்டைக்காட்சிகள் பெரிய ஹீரோக்களின் படங்களை பார்ப்பது போல இருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராமின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எழுமின்’ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பார்க்கவேண்டிய படம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் விமர்சனம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர். வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.
ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில், வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார். கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.

இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.
எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.
சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு, அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர். இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர்.

இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷின் கை ஓங்குகிறது.
கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும் தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும் வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.
காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன், சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில் காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது. வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது.

உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும், மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வடசென்னை' அதகளம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
அம்சன் குமார் இயக்கத்தில் ராஜீவ் ஆனந்த் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மனுசங்கடா’ படத்தின் விமர்சனம். #ManusangadaReview #RajeevAnand
நாயகன் ராஜீவ் ஆனந்தின் தந்தை இறந்ததாக அவருக்கு தகவல் வருகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய கிராமத்துக்கு வருகிறார். ஊரில் இருக்கும் சாதிவெறி மக்கள் பொதுப்பாதையில் பிணத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆதிக்க சாதிக்கு ஆதரவாக செயல்பட, பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டை நாடுகிறார். கோர்ட்டு உத்தரவிட்டும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை.
கடைசியில், ராஜீவ்வுக்கு நியாயம் கிடைத்ததா? ராஜீவின் போராட்டம் வென்றதா? அதன் பின்னணியில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக தெரியாமல் ஒரு கதாபாத்திரமாகவே ராஜீவ் ஆனந்த் தெரிகிறார். மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது.

செய்திகளில் அடிக்கடி தென்படும் ஒரு உண்மை சம்பவத்தை இயல்பு மாறாமல் படமாக்கி இருக்கிறார் அம்சன். குறைந்த செலவில் அழுத்தமான படைப்பு. சுடுகாட்டுக்கு பிணத்தை கொண்டு செல்லக்கூட தடுக்கும் சாதிவெறி என உண்மை சம்பவங்களை யதார்த்தமான படமாக்கி சர்வதேச பட விழாக்களில் கவனம் ஈர்த்தவர் அம்சன் குமார். பல விருதுகளை வென்ற அந்த படம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகி இருக்கிறது. அம்சன் குமாரின் முயற்சிக்கு பாராட்டுகள்.
‘உலகம் பூரா சுத்தி பெரிய பெரிய மனுஷங்களோட போட்டோ எடுத்திக்கிட்டாலும் சொந்த கிராமத்துல செருப்பு காலால நடக்க முடியலேன்னு சொன்னவங்க தான் ஞாபகத்துக்கு வந்தாங்க’ போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

கதை, வசனம் இரண்டிலும் கவனம் செலுத்திய இயக்குனர் பிற தொழில்நுட்ப விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தாலும் சாதிவெறிக்கு எதிரான அழுத்தமான பதிவு என்ற வகையில் படம் கவனத்தை ஈர்க்கிறது.
அரவிந்த் சங்கர் இசையும், பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மனுசங்கடா’ உரிமை. #ManusangadaReview #RajeevAnand
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் விமர்சனம். #AanDevathaiReview #Samuthirakani
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது.
இதையடுத்து சமுத்திரக்கனி தனது வேலையை விட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ரம்யா தனது பணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சொந்தமாக வீடு, கார் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல செல்ல, தனது நட்பு வட்டாரத்துடன் பார்ட்டிக்கு செல்ல தொடங்குகிறார்.

ஒருநாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுதி ஒன்றில் தங்குகிறார். அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள்.
கடைசியில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? அவர்களது குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமுத்திரக்கனிக்கு என்ன வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுகிறார். மனைவியிடம் பொறுமை, குழந்தைகளிடம் கனிவு என்று வழக்கம் போலவே பொறுப்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறார். ரம்யா பாண்டியனுக்கு சற்று நெகட்டிவ் கலந்த வேடம். சராசரி பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்.
சுஜா வருணி, அபிஷேக், ராதாரவி, காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் அனைவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா, கவின் இருவரும் சிறப்பான பங்களிப்பு தந்திருக்கிறார்கள்.

இன்றைய இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமிரா. தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் சண்டையால் சிலர் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும். ஆடம்பரத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்க்கையையே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்ல வருகிறார் இயக்குநர்.
திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் எளிதில் காட்சிகளை கணிக்க முடிவது பலவீனம். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்ற சுவாரசியமான ஒருவரிக் கதைக்கு இன்னும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இருந்தால் ஆண் தேவதையை இன்னும் கொண்டாடி இருக்கலாம். குடும்ப அமைப்பின் அவசியத்தை உணர்த்தியதற்காக ஆண் தேவதையை பாராட்டலாம்.
ஜிப்ரானின் இசையும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் `ஆண் தேவதை' தேவை. #AanDevathaiReview #Samuthirakani
ராஜ்குமார், ஸ்ரிஜிதா, நடிப்பில் வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கூத்தன்’ படத்தின் விமர்சனம். #Koothan #KoothanMovieReview
சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும் அப்படியே அனுப்ப மனம் இல்லை. அதனால், தங்களால் முடிந்த பணத்தை கொடுக்கிறோம் என்று நாயகன் ராஜ்குமார் கூறுகிறார்.
அதன்படி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் கிடைப்பதை அறிந்து அதில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.

மற்றொரு புறத்தில் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் நாயகி ஸ்ரிஜிதா. இவரின் ஒரே உரிக்கோள் பெரிய நடன கலைஞராக இருக்கும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடிப்பது. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரிஜிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரிஜிதாவும் பணப்பிரச்சனையில் சிக்குகிறார். இதற்கு ஒரே வழி நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
இறுதியில் நாயகன் ராஜ்குமார் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று கலைஞர்களுக்கான குடியிருப்பு பகுதியை தக்க வைத்தாரா? நாயகி ஸ்ரிஜிதா, நாகேந்திர பிரசாத் மீது கோபமாக இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரலாம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை நடனத்தால் கவர்ந்திருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.

நடனத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. படத்தில் ஒரு சில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டி.ஆர். பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கூத்தன்’ ஜித்தன்.
ராபர்ட், சரவணன், சேதுபதி ஜெயச்சந்திரன், தமிழடியான் ஆகியோர் நடிப்பில், ஸ்ரீரஞ்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆடவர்’ படத்தின் விமர்சனம். #Aadavar #AadavarReview
அரசு வேலையில் இருக்கும் நான்கு இளைஞர்களுக்கு சென்னையில் நடந்த வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் எதிர்காலத்தில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க புதிய திட்டத்தை வகுத்து தரவும் மேலதிகாரிகள் பணிக்கிறார்கள்
அவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து ஒரு வீட்டில் வாடகைக்கு தங்குகின்றனர். அங்கு ஒரு சமையல்காரர் இருக்கிறார். ஒரு சிறுவனின் ஆவியும் இருக்கிறது.
பூசாரி அடக்கி வைத்திருந்த அந்த பேய் ஒரு இளைஞன் அஜாக்கிரதையாக செய்த காரியத்தால் வெளிவந்து அவனோடு ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த இளைஞன் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. சமையல்காரனையும் அது துன்புறுத்துகிறது. பேயாக இருக்கும் சிறுவன், அந்த வீட்டு உரிமையாளர் பேரன் என்பதும் சொத்துக்காக இருவரையும் சலவை தொழிலாளி கொன்று இருப்பதும் தெரிய வருகிறது.
வாடகைக்கு தங்கிய இளைஞனை வைத்து கொலையாளியை பழிவாங்க பேய் முயற்சிப்பதும் அது நடந்ததா? இல்லையா? என்பதும் மீதிக்கதை.

பெண்கள் இல்லாமல் முழுக்க ஆண்கள் நடித்துள்ள படம். ராபர்ட், சரவணன், சேதுபதி ஜெயச்சந்திரன், தமிழடியான் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பேயாக வரும் சிறுவன் கிரண் மிரட்டுகிறான். கண்களை உருட்டுவது, இளைஞரின் தோளில் உட்கார்ந்து பயமுறுத்துவது, குரூரமாக சிரித்து கழுத்தை நெரிப்பது என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குழந்தை நட்சத்திரமாக மனதில் நிற்கினான். கானா உலகநாதன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.
ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் படத்தை பேய் வந்த பிறகு விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஸ்ரீரஞ்சன். அவரது ஒளிப்பதிவில் சென்னை வெள்ள காட்சிகள் கண்களை விரிய வைக்கின்றன. கிளைமாக்சை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். தஷியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ஆடவர்’ சுமாரானவர்.
ரூபன் ப்ளெய்சர் இயக்கத்தில் டாம் ஹார்டி - மிச்செல் வில்லியம்ஸ், ஜென்னி ஸ்லேட் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெனம்' படத்தின் விமர்சனம். #VenomReview #TomHardy
ஸ்பைடர்மேன் மூன்றாம் பாகத்தில் வில்லனாக வந்து கலக்கிய வெனம் என்ற வில்லன், நாயகன் டாம் ஹார்டியின் (எடி பிராக்) உடலுடன் இணைந்து போடும் ஆட்டம் தான் வெனம் படம்.
ரிஸ் அஹமது (டாக்டர்.கார்ல்டன் டிரேக்) தலைமையில் செயல்படும் லைஃப் பவுண்டேஷன் என்ற நிறுவனம், விண்வெளியில் வாழும் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறது. அந்த ஆய்வில் 4 வகையான வேற்றுகிரக உயிரினங்களை (சிம்பியாட்ஸ்) கண்டுபிடித்து, அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் போது, விண்கலம் விபத்திற்குள்ளாகிறது. அதில் ஒரு உயிரினம் தப்பித்துவிடுகிறது. மற்ற மூன்றும் அமெரிக்காவில் உள்ள ரிஸ் அஹமதுவின் ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார் டாம் ஹார்டி. ரிஸ் அஹமதுவின் நிறுவனத்தில் முக்கிய பணியில் இருக்கிறார் டாமின் காதலி மிச்செல் வில்லியம்ஸ். இந்த நிலையில், ரிஸ் அஹமதுவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு டாம் ஹார்டிக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டாம் ஹார்டி, தனது காதலியின் லேப்டாப்பில் உள்ள ரகசிய தகவல்களை திருடி அவரை பேட்டி காண்கிறார்.
இதனால் டாமுக்கும், ரகசிய தகவல்களை சேகரித்ததாக அவரது காதலிக்கும் வேலை பறிபோகிறது. இதையடுத்து டாம் - மிச்செல் இருவரும் பிரிகின்றனர். இந்த நிலையில், லைஃப் பவுண்டேஷனில் வேலை பார்க்கும் மெலோரா வால்டர்ஸ், லைப் பவுண்டேஷன் சமூக விரோத செயல்களை செய்து வருவதாக கூறி, அதை தடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தனது காதலி, வேலையை இழந்த டாம் ஹார்டி, முதலில் அதனை ஏற்க மறுத்து பின்னர், அங்கு செல்கிறார். அப்போது வெனம், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உடலில் இருந்து டாம் ஹார்டியின் உடலுக்குள் நுழைகிறது. தனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் தவிக்கும் டாம் ஹார்டி, வெனம் தனது உடலில் இணைந்ததற்கான காரணத்தை தேடுகிறார்.
கடைசியில், வெனம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதா? டாம் ஹார்டியின் உடலில் இருந்து வெளியேறியதா? ரிஸ் அஹமது தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

டாம் ஹார்டி, ரிஸ் அஹமது இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வெனமாக மாறி இருவரும் சண்டையிடும் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மற்றபடி மிச்செல் வில்லியம்ஸ், ஜென்னி ஸ்லேட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.
முதல் பாதியின் தொடக்கத்தில் வேகமில்லாமல் இருந்தாலும், லேட்டானாலும் லேட்டஸ்டா வருவது போல, அரைமணி நேரத்திற்கு பின்னர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. படம் பெரும்பாலும் இருட்டில் நடப்பது போல இருந்தாலும், அந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கிறது. வேகமான திரைக்கதை, காமெடி, கிராபிக்ஸ் என மற்ற துறைகளும் சிறப்பாக பணியாற்றியிருக்கின்றனர்.
லட்விக் கோரான்சனின் இசையில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மேத்தியூ லிபேட்டிக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `வெனம்' நல்ல குணம். #VenomReview #TomHardy
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நோட்டா' படத்தின் விமர்சனம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.

இப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.
நாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.
இந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய், மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.
இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய். அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.

கடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார்? தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா? முதலமைச்சராக நீடித்தாரா? தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. சத்யராஜ் அவரது உண்மையான தோற்றத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் நாசர் முக்கிய பங்காற்றுகிறார். அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.
பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் நீளமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இரண்டாவது பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `நோட்டா' ஒருமுறை வாக்களிக்கலாம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராட்சசன் படத்தின் விமர்சனம். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால், தனது கதைக்காக பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறி வருகிறார். ஆனால் இவரது முயற்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார். ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற 2 நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறாள்.
ஒருவழியாக சை்ககோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளை மீட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.

காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார். காளி வெங்கட் ஆங்காங்கு வந்து செல்கிறார். ஒரு சில இடங்களிலேயே அவருக்கு சொல்லும்படியான காட்சிகள் இருக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.
முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.

படத்தில் சைக்கோ கொலையாளி பற்றி எந்த இடத்திலும் கொடூரமான முகத்தையோ, தோற்றத்தையோ காட்டவில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களை படம் முழுக்க அச்சுறுத்தியிருக்கிறார் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `ராட்சசன்' ஆர்வத்தை தூண்டுகிறான். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul






