என் மலர்
தரவரிசை
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் விமர்சனம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha
எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.
விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார். மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.

அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி - திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.
விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை. கூச்சம், வெட்கம், நளினம் ஆங்காங்கே தனது பாணி நக்கல் வசனங்கள் என்று படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார். போலீசாகவும், தாதாவாகவும் பார்த்த விஜய்சேதுபதியா இது? என தோன்ற வைக்கிறது.

திரிஷா அறிமுகமான முதல் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். தன்னை பார்க்க வந்த ராமை தவறவிட்டதை நினைத்து, அவர் அழும் அந்த ஒரு காட்சி போதும். தமிழ் சினிமாவில் காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் திரிஷாவுக்கு நிகர் அவரே.
தற்போதைய ராம், ஜானுவுக்கு போட்டியாக நடித்திருக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், கவுரி கிஷனும். சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு தான்.
நாத்தனாரே என்று திரிஷாவை கிண்டலடிக்கும் போதும், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எல்லை மீறிவிடுவார்களோ என்று பயப்படும்போதும் தேவதர்ஷினி பின்னி எடுக்கிறார். பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.

விஜய்சேதுபதி போட்டோ எடுக்கும் அழகான காட்சியமைப்புடன் படம் தொடங்குகிறது. அவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழையும்போது நாமும் நமது பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழைகிறோம். நீண்டகாலம் கழித்து கை பிடித்து இளவயது நினைவுகளுக்கு கூட்டி சென்றிருக்கும் பிரேமுக்கு நன்றிகள்.
ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.

படம் முடியும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அந்த கைதட்டலில் ஒவ்வொருவரின் கைகூடாத பள்ளிப்பருவ காதல் ஒளிந்திருக்கிறது.
படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `96' காவியம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் `பரியேறும் பெருமாள்' படத்தின் விமர்சனம். #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர். ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.
ஊருக்காக போராட வேண்டுமென்றால், ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார். எதையும் வெளிப்படையாக பேசும் கதிருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அவரது வகுப்பில் படிக்கும் யோகி பாபுவுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. இந்த காரணத்தாலேயே இருவரும் நண்பர்களாகின்றனர்.

அதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. மற்றவர்களை விட கதிருடன் பேச ஆவல் கொள்கிறார். கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.
இந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். தனது நண்பனிடம் ஒரு நல்ல துணியை வாங்கி போட்டுக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது. கயல் ஆனந்தியை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரது தந்தையான மாரிமுத்து மற்றும் ஆனந்தியின் அண்ணன் கதிரை ஒரு அறையில் பூட்டிவைத்து அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.
இதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார். ஆனால் விடாத கருப்பாக கதிருக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.

இந்த பிரச்சனை கல்லூரி முதல்வர் வரை செல்கிறது. அந்த கல்லூரி முதல்வர், தனது அனுபவத்தை கதிருக்கு அறிவுரையாக கூறி, கதிரை தேற்றிவிடுகிறார். மேலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார்.
கல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். மேலும் கதிரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்கள்.

கடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா? தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா? ஆனந்தியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதிருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக பரியேறும் பெருமாள் அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொரு முறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கயல் ஆனந்தி இன்முகத்தோடு வருகிறது. தன்னை சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதை அறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். கயல் ஆனந்தியை இனிமேல் ஜோ ஆனந்தி என்று கூறும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக, பதியும்படியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
மற்றபடி மாரிமுத்து, சண்முகம், லிங்கேஸ்வரன், கராத்தே வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்களும் கலைஞர்களோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
படத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `பரியேறும் பெருமாள்' சிறப்பான படைப்பு. #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi
ஆர்செல் ஆறுமுகம் இயக்கத்தில் விவாந்த் - நீரஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஏகாந்தம்' படத்தின் விமர்சனம். #EkanthamReview #Vivanth #Neeraja
நாயகன் விவாந்த் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது அம்மா அனுபமா குமார் கிராமத்திலேயே தங்கி இயற்கை மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். விவாந்துக்கு அனுபமாவின் தம்பி தென்னவனின் மகள் நீரஜா தான் மனைவி என்பதை சிறுவயதிலேயே முடிவு செய்துவிடுகிறார்கள்.
அதற்கான நேரம் நெருங்கி வரும்போது நீரஜாவால் ஒரு குழப்பம் ஏற்பட்டு திருமணம் தடைபடுகிறது. அது என்ன குழப்பம்? இருவருக்கும் திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் கதை.
கதாநாயகனாக விவாந்த் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம். கதாநாயகியாக வரும் நீரஜா ரசிக்க வைக்கிறார். தனது குண்டு கண்களால், வாயாடியாக பேசும்போது பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போல இருக்கிறது. அனுபமா குமாருக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து நிறைய கருத்துகளை கூறி இருக்கிறார்.

படத்தின் பலங்களாக படத்தில் வரும் மலைக் கிராமத்தையும் வெள்ளந்தி மனிதர்களையும் சொல்லலாம். நீரஜா விவாந்த் திருமணம் நிற்பது தான் படத்தின் முக்கிய திருப்பம். ஆனால் அதற்கு நீரஜா சொல்லும் காரணத்தில் வலு இல்லை. மிக எளிமையான ஒரு கதையை எடுத்து, அதற்கு நல்ல கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கிய இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் அந்த கதைக்கு அழுத்தமான திரைக்கதையை உருவாக்க தவறிவிட்டார். வாழ்வியல் படங்களுக்கு வலுவான கதையும் அவசியம் என்பதை உணர்த்தும் படம்.
அழகான கிராமத்தை நம் கண்முன்னே கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பூபதிக்கு பாராட்டுகள். கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் எங்கேயோ கேட்ட ரகம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக மல்லிய கேளு முல்லைய கேளு பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
மொத்தத்தில் `ஏகாந்தம்' நல்ல முயற்சி. #EkanthamReview #Vivanth #Neeraja
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் விமர்சனம். #CCV
சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.
பிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார். இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்படுகிறார்.

இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார்.
அதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் மூத்த மகனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனே பயணிக்கும் இவர், நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன் என்று கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மூன்றாவது மகன் சிம்பு, இளமை துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அரவிந்த் சாமியின் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
அரவிந்த்சாமியின் மனைவியாக வரும் ஜோதிகா, ரிப்போர்ட்டராக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தாதாவான தந்தை இறந்த பிறகு, அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு, கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ செம வெயிட்.
மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தரணி தரண் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி இருக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் விமர்சனம். #RajaRanguski
போலீஸ் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சிரிஷ். இவர் வில்லா வளாகத்தில் தினமும் ரோந்து சென்று வருகிறார். அப்போது அந்த வில்லாவில் நாயகி சாந்தினியை பார்க்கிறார் சிரிஷ். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எழுத்து துறையில் ஆர்வமாக இருக்கும் சாந்தினி, ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்றால் செய்யும் எண்ணம் கொண்டவர்.
இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் சிரிஷ். அவரே வேறொரு போனில், யாரோ ஒருவர் போல் பேசி, நீ சிரிஷுடன் பழக்கக்கூடாது என்று பேச, அவரோ நான் பழகுவேன் என்று கூற, இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சிரிஷுக்கு அவரது குரலிலேயே ஒரு போன் வருகிறது. அதிர்ச்சியடையும் சிரிஷ், அது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கு போது, ஒரு மர்மான முறையில் கொலை நடக்கிறது. இந்த கொலைப்பழி சிரிஷ் மேல் விழுகிறது.

இதிலிருந்து சிரிஷ் தப்பிதாரா? அந்த மர்ம குரல் யார்? கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மெட்ரோ படம் மூலம் புகழ் பெற்ற சிரிஷ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்பாவி போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு செட்டாகி இருக்கிறது என்று சொல்லலாம். நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால், சிறப்பான இடத்தை பிடிக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். காதல் காட்சிகளிலும் பிற்பாதியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிரிஷின் நண்பராக வரும் கல்லூரி வினோத், ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தரணி தரண். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். க்ரைம் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, அதை திறம்பட கொடுத்திருக்கிறார். படத்தின் திருப்பங்கள் ரசிக்கும் படி உள்ளது.
யுவனின் இசை படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சிம்பு பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணியிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ ராஜா.
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் விமர்சனம். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.
ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார்.

இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் - பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.
அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.

கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.
இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.

கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.
பெருமாள் பிச்சை - ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்' டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ விமர்சனம்:
அப்துல் மஜித் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்தின் விமர்சனம். #TorchLightReview #Sadha
ரித்விகாவுடன் இணைந்து நெடுஞ்சாலையில் விபச்சார தொழில் செய்து வருகிறார் நடிகை சதா. ஒருநாள் பேருந்தில் செல்லும் போது தன்னை உரசும் ஒருவருக்கு சதாவை தக்க பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து தைரியமாக செயல்படட்ட சதா மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இதையடுத்து அவளை திருமணம் செய்ய முடிவு செய்து, சதாவிடம் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
இதற்கிடையே சதா விபச்சாரத்தில் ஈடுபடுவது, அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும் விபச்சார தொழிலை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்த, தனக்கு திருமணம் ஆன உண்மையை சதா அவரிடம் தெரிவிக்கிறாள். தான் ஒரு நல்ல குடும்பத்து பெண் என்றும், தனக்கு திருமணம் ஆனதையும், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதலாளி தன்னை அடைய நினைத்ததையும், அவருடன் தனது கணவர் சண்டை போட்டதையும் விவரிக்கிறாள்.
இந்த நிலையில், ஒருநாள் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை காப்பாற்ற தனது தோழி ரித்விகாவின் உதவியுடன் தான் விபச்சார தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள்.

மறுபுறம் உடல்நலம் பெற்று திரும்புகிறார் சதாவின் கணவர். இந்த நிலையில், தன்னை காப்பாற்ற சதா விபச்சார தொழிலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர் சதாவை விட்டுபிரிய முடிவு செய்கிறார்.
கடைசியில் தனது கணவரை காப்பாற்ற தன்னையே அர்பணித்த சதாவின் வாழ்க்கை என்ன ஆனது? சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சதா, முற்றிலும் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நெடுஞ்சாலைகளில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் சதா, ரித்விகா என இருவரது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதையின் போக்குக்கு ஏற்ப படத்தோடு ஒன்றி நடித்திருக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் விபச்சார தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள், அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம், அந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படும்யடியாக உண்மை கதையை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜித். படத்தில் வசனங்கள் அவர்களது வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிப்பதாக உள்ளன. படத்தில் தனது கணவனை காப்பாற்ற மனைவி தவறான வழியில் செல்கிறாள் என்பதை அறியும் கணவன் மற்றும் கணவன் முன்னாலேயே மனைவியை பலர் வர்ணிப்பது போல காட்சிகள் நெருடலாக உள்ளது.
கணவன் முன்பே மனைவியை மற்றவர்கள் வர்ணித்து பேசுவது அந்த கணவனுக்கு, இறப்பை விட பெரிய வலியை கொடுக்கும் என்பதை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் முடிவு ஏற்கும்படியாக இல்லை.
ஜே.வி.யின் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு திருப்தியாக வந்துள்ளது.
மொத்தத்தில் `டார்ச் லைட்' தூக்கிப்பிடிக்கப்பட வேண்டும். #TorchLightReview #Sadha #Riythvika
அசோக் ஆர் நாத் இயக்கத்தில், ஆதவா, அவந்திகா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படத்தின் விமர்சனம். #RajavinPaarvaiRaniyinPakkam
நாயகன் ஆதவாவும், நாயகி அவந்திகா மோகனும் ஏழு மாதமாக காதலித்து வருகிறார்கள். சிறு பிரச்சனையால் இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில், நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதையறிந்த ஆதவா, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்கிறார்.
இதற்காக தன் நண்பர் துணையுடன் ஒரு தாதா கும்பலுடன் சென்று அவந்திகாவை கடத்தி வர திட்டம் போடுகிறார். அதன்படி தாதா கும்பலுடன் ஒரு வண்டியில் பயணிக்கிறார் ஆதவா. இறுதியில் நாயகன் ஆதவா, நாயகி அவந்திகாவை கடத்தி திருமணத்தை நிறுத்தினாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதவா, சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்புதான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது. நடிப்பில் கவனம் செலுத்தினால் இனிவரும் படங்கள் சிறப்பாக அமையும். நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பல இடங்களில் இவர்கள் செய்யும் காமெடி கடுப்பாக இருக்கிறது. காதலியை கடத்தி திருமணம் செய்யும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அசோக் ஆர் நாத். ஆனால், திரைக்கதையில் தான் கோட்டை விட்டிருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்க தெரியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

லியாண்டர் லி மார்ட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜே.எஸ்.கேவின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ சுமார் ரகம்.
பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் விமர்சனம். #UTurnReview #Samantha
இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை நகர்த்திவிட்டு சாலையை கடப்பவர்களை தேர்வு செய்து அவர்களை பேட்டி எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சாலை விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.
ஒருநாள் தனது லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து, அவரை பேட்டி காண செல்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். இந்த நிலையில், சமந்தா பேட்டி காண சென்ற நபர், மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அதில் மரணத்தில் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் சமந்தாவை கைது செய்கின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

சமந்தாவின் பேச்சில் உண்மை இருப்பதாக உணரும் ஆதி, சமந்தாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். அதேநேரத்தில் சமந்தாவிடம் உள்ள அனைவரின் தகவல்களையும் வாங்கி தனது விசாரணையை தொடங்குகிறார். அதில் சமந்தா சேகரித்த பட்டியலில் உள்ள அனைவருமே இறந்து விடுகின்றனர்.
இந்த மரணங்களில் இருக்கும் ஆதியும், அந்தமும் புரியாமல் தவிக்கும் ஆதி இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தாரா? சமந்தாவின் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் இறக்க காரணம் என்ன? சமந்தா இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு இளம் பத்திரிகை நிருபராக, என்னவென்றே புரியாத ஒரு வழக்கில் சிக்கித் தவித்தும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு அபாரமாக இருக்கிறது, பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஆதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய அங்கமாக பயணிக்கிறது. எப்போதுமே வித்தியாசமாக கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கும் நரேனின் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. பூமிகா இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாகவே வந்துள்ளது. மற்றபடி ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ், கீதா ரவிசங்கர் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்துள்ளனர்.
கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் ரீமேக் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான அச்சாணியை போட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார். படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு செல்வதே இயக்குநரின் பலம். அடுத்ததடுத்த காட்சிகள் வேககமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `யு டர்ன்' விறுவிறுப்பு. #UTurnReview #Samantha #Aadhi
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சீமராஜா' படத்தின் விமர்சனம். #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha
சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.
கடைசியில் ஒரு வீடு மற்றும் சில வயல்வெளிகள் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் அந்த ஊர் மக்கள் நெப்போலியனை பெரிய ராஜா என்றும், சிவகார்த்திகேயனை சின்ன ராஜா என்றும் அழைக்கின்றனர்.

ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் அளித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் ஒரு ராஜாவுக்கு உண்டான கெத்துடனும், மிடுக்குடனும் எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணம் செய்கிறார். ஒரு ராஜாவாக ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கணக்கு பிள்ளையாக சூரியும் எப்போதும் அவருடனேயே இருக்கிறார்.
சிங்கப்பட்டி ஊருக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. புளியம்பட்டியில் பெரிய பணக்காரர் லால். அவரது மனைவி சிம்ரன். என்னதான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், புளியம்பட்டி மக்களும் சிவகார்த்திகேயன் குடும்பத்தையே ராஜாவாக பார்க்கின்றனர். இதனால் கடுப்பாகும் லால் மற்றும் சிம்ரன், சிவகார்த்திகேயனை சரிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சமந்தாவை பார்க்கும் சிவகார்த்திகேயன் அவர் மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை சமந்தாவிடம் சொல்ல பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். ஆனால் சமந்தா, சிவகார்த்திகேயனின் காதல் ஏற்பதாக இல்லை.
ஒரு கட்டத்தில் சந்தை போடுவதில் இரு ஊருக்கு இடையேயான சண்டை முற்ற, பிரச்சனை தீரும் வரையில் யாரும் அங்கு சந்தை போடக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கவும், சமந்தாவின் சம்மதத்தை பெறவும் ராஜாவான சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் எதிலும் பெரியதாக சிரத்தை காட்டாத சிவகார்த்திகேயனுக்கு தனது மூதாதையரின் பெருமை என்னவென்பதும் தெரியாமலேயே இருக்கிறார்.

கடைசியில் சின்ன ராஜா சிவகார்த்திகேயன் தனது பூர்வ பெருமையை தெரிந்து கொண்டாரா? சந்தை போடுதில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்த்தார்? சிவகார்த்திகேயனின் காதல் தூதை சமந்தா ஏற்றுக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு ராஜாவாக சிவகார்த்திகேயன் தனக்கே உண்டான குறும்புத்தனத்துடன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணிப்பதும், கணக்குப்பிள்ளை சூரியை தன்னுடனேயே வைத்துக் கொள்வது, சமந்தாவுடன் காதல் என காமெடி, ஆக்ஷன், காதல், அதிரடி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனேயே பயணிக்கும் சூரிக்கும் படத்தில் பெரிய பங்கு இருக்கிறது. படம் முழுவதும் சிவகார்த்திகேயன் உடனேயே பயணிக்கிறார். எப்போதும் போல் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி, சண்டை எல்லாமே ரசிக்க வைக்கிறது. காதல் காட்சி, ரொமேன்ஸ் காட்சிகளில் கூட சூரி வரும் அளவுக்கு தனக்கு சமமான கதாபாத்திரத்தை சூரியுடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள். சூரி இனி சிக்ஸ்பேக் சூரி என்று அன்போடு அழைக்கப்படுவார். சிக்ஸ் பேக்குக்கான அவரது உழைப்பை பார்க்க முடிகிறது.

உடற்கல்வி ஆசிரியராக சமந்தா படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் சமந்தாவில் சிலம்பம் சுற்றுவது சிறப்பாக வந்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் காட்சியும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்ரன், வில்லி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார். சிவகார்த்திகேயனுக்கு, சிம்ரன் சவால் விடும் காட்சிகளில் அனல் பறக்கிறது. லால் வில்லனுக்குண்டான மிடுக்குடன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்ரன் - லால் கூட்டணி சிறப்பாக வந்துள்ளது. நெப்போலியன் தான் ராஜா எனபதையே மறந்து ஒரு சாதாரண மனிதராக, ராஜாவுக்குண்டான குணநலன்களுடன் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
மற்றபடி மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்தீப் சுர்னேனி, ரகு என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

தனது முதல் இரண்டு படங்களையும் கிராமத்து சாயலில் எடுத்தது போல், இந்த படத்தையும் ராஜா கதையை மையப்படுத்தி கிராமத்து சாயலில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவரது படங்களில் இருக்கும் காதல், காமெடி காட்சிகள் இதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். வசனங்களும் படத்திற்கு பலம் தான்.
இசையும் மற்றும் ஒளிப்பதி தான் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சீமராஜா' விருந்து. #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha
கோரின் ஹார்டி இயக்கத்தில் டெமியன் பிச்சர், டெய்சா பார்மிங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தி நன்' படத்தின் விமர்சனம். #TheNunReview
1950-களில் நடக்கும் இந்த கதையில் ரோமானியாவின் காடு சூழ்ந்த பகுதியில் பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று உள்ளது. அதில் இரு கன்னியாஸ்திரிகள் (நன்கள்) உள்ளனர். அங்கு ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அங்கு அமானுஷ்யம் இருப்பதை உறுதி செய்ய தேவாலயத்தின் குறிப்பிட்ட இடமொன்றில் சோதனை செய்கின்றனர். அதில் நன் ஒருவர் இறந்துவிடுகிறார்.
இதையடுத்து மற்றொருவர் அந்த தேவாலயத்தின் வாசலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். பைபிள் வாசகத்தின்படி தற்கொலை செய்வதென்பது பாவச் செயல். கன்னியாஸ்திரியாக இறைவனுக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வாட்டிகனில் உள்ள கிறிஸ்தவ தேவ சபைக்கு தெரிய வருகிறது.

இதையடுத்து அந்த அமைப்பில் பாதிரியாராக இருக்கும் டெமியன் பிச்சரும், கன்னியாஸ்திரியாவதற்கான பயிற்சியில் இருக்கும் நன், டெய்சா பார்மிங்காவும் அந்த தேவாலயத்துக்கு செல்கின்றனர். அமானுஷ்ய சக்தியால் அங்கு அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருகிறது.
கடைசியில் அந்த நன் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? அங்குள்ள அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? அந்த தேவாலயத்திற்குள் சென்ற பாதிரியார் மற்றும் நன் என்ன ஆனார்கள்? அந்த தேவாலயத்திற்குள் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டெமியன் பிச்சர், டெய்சா பார்மிங்கா, ஜோனஸ் ப்ளோகெட் என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
தி கான்ஜூரிங், அனபெல் படத்தில் வரும் வாலக் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. தி கான்ஜூரிங், அனபெல் படங்களில் வாலக் என்ற கதாபாத்திரம் எப்படி உருவானது என்பது பற்றி 1950-களில் நடப்பது போன்று படத்தை உருவாக்கி உள்ளனர். பின்னோக்கி பயணிப்பது போல் இருக்கும் கான்ஜூரிங் படத்தில் ஒரு முக்கிய பங்காற்றும் வாலக் கதாபாத்திரத்தை விவரிக்கும் பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோரின் ஹார்டி. படத்தின் கதை தாக்கத்தை ஏற்படுத்தும்படியாக இருந்தாலும், திரைக்கதை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திகிலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
அபெல் கோர்ஷெனொவஸ்கியின் பின்னணி இசை படத்திற்கு பலம். மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவும் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `தி நன்' திகில் குறைவு. #TheNunReview
கேசவன் இயக்கத்தில் பூவரசன், அனுபமா பிரகாஷ், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ படத்தின் விமர்சனம். #AvalukkEnnaAzhagiyaMugam
காதலில் தோல்வியடைந்த நண்பர்கள் மூன்று பேர், காதலால் பிரிந்தவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த சமயத்தில் காதலியை பிரிந்து இருக்கும் நாயகன் பூவரசனை சந்திக்கிறார்கள். இவருடைய காதலை சேர்த்து வைப்பதற்காக பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.
செல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய காதல் எப்படி பிரிந்தது என்று பகிர்ந்துக் கொள்கிறார்கள். இறுதியில், நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது? நண்பர்கள் பூவரசனின் காதலை சேர்த்து வைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பூவரசன் துறுதுறுவென நடித்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக வரும் அனுபமா பிரகாஷ், அழகு பதுமையாக வந்து சென்றிருக்கிறார். நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.
பிரிந்த காதலை நண்பர்கள் மூலம் சேர்த்து வைக்கும் கதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கேசவன். மிக எளிமையான கதையை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். சிறு பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை தரமாகவே கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.

டேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். நவநீதனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ ரசிக்கும் முகம்.






