என் மலர்tooltip icon

    தரவரிசை

    மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சிபி, சாந்தினி, அனிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் விமர்சனம். #VanjagarUlagamReview #GuruSomasundaram
    கணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். 

    இந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.



    இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

    கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.

    மற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.



    மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram

    மது ராஜ் இயக்கத்தில் பிரித்விராஜன் - வீணா நடிப்பில் வெளியாகி இருக்கும் தொட்ரா படத்தின் விமர்சனம். #ThodraReview #PrithiviRajan #Veena
    ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாயகன் பிரித்விராஜன் கல்லூரியில் படித்துக் கொண்டே பேப்பர் போடும் வேலை பார்த்து வருகிறார். நாயகி வீணாவும் அதே கல்லூரியிலேயே படிக்கிறார். ஒருநாள் பேப்பர் போடும் போது நாயகியை பார்க்கும் பிரித்விராஜனுக்கு, கண நேரத்தில் வீணா மீது காதல் வந்து விடுகிறது. வீணா பின்னாலேயே சென்று தனது காதலை சொல்ல முயற்சி செய்கிறார்.

    ஒருகட்டத்தில் பிரித்விராஜனின் காதலை புரிந்து கொள்ளும் வீணாவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். வீணாவின் அப்பா கஜராஜ் மற்றும் அண்ணன் எம்.எஸ்.குமார் ஜாதிக் கட்சியை சேர்ந்தவர்கள். ஜாதி வெறியோடு இருக்கும் இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்த இருவர் இணைவதையே தடுத்து வருகின்றனர்.



    இந்த நிலையில், வீணாவின் காதல் எம்.எஸ்.குமாருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து உடனடியாக வேறு ஒருவருடன்  திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக வீணா, பிரித்விராஜனுடன் ஓடிவிடுகிறார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கஜராஜ் இறந்துவிடுகிறார்.

    பின்னர் திருமணமான தனது தங்கையை பிரித்விராஜனிடம் இருந்து பிரித்து விடுகிறார் எம்.எஸ்.குமார். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? எம்.எஸ்.குமாரின் ஜாதி வெறிக்கு முடிவு வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    பிரித்விராஜ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்தாலும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கேரளாவை சேர்ந்த நாயகி வீணா திரையில் பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக வந்துள்ளது. 



    எம்.எஸ்.குமாரின் நடிப்பு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது, மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. கஜராஜ், ஏ.வெங்கடேஷ் உள்ள மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர்.

    தனது முதல் படத்திலேயே ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். ஜாதியால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் பாதிக்கப்படுபவர்களை மையப்படுத்தி காதல் படமாக கதை நகர்கிறது. ஜாதி வெறி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாக படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள். அதுவும் உண்மை கதையை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கம் ரகம் தான். பின்னணி இசையின் மூலமும் வலுசேர்த்திருக்கிறார். செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கிராம சாயலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் `தொட்ரா' ஜாதியை விடுறா. #ThodraReview #PrithiviRajan #Veena

    ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ், மகிமா, மயில்சாமி, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ விமர்சனம். #AnnanukkuJey #AnnanukkuJeyReview
    பனைமரத்தில் இருந்து கள் இறக்கும் வேலையை குடும்பத் தொழிலாக செய்து வருகிறார் மயில்சாமி. மகன் தினேஷ் வேலைக்கு வைத்து அவருக்கான கூலியையும் அதிகம் வழங்குகிறார். டுடோரியல் காலேஜில் படித்து வரும் மகிமாவை தினேஷ் காதலிக்கிறார். மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் உள்ளூர் அரசியல் பிரமுகரும், பார் உரிமையாளருமான தினா குறுக்கிடுகிறார். 

    அரசியல் பலம் இல்லாததால் கண்முன்னேயே அப்பாவை அடித்துவிட்டார்கள் என்ற விரக்தியில் அவரை அரசியலில் ஆளாக்க நினைக்கிறார் தினேஷ். அதற்காக ராதாரவியின் ஆலோசனைப்படி லட்சக்கணக்கில் செலவு செய்கிறார். இந்த சூழலில் கள் இறக்கும் உபகரணங்கள், இடம் என எல்லாவற்றையும் தீயிட்டு எரித்து சின்னாபின்னமாக்குகிறார் தினா. 

    இதனால் கோபமடையும் தினேஷ், தினாவை பழிவாங்கினாரா? அப்பாவுக்கு அரசியலில் பதவி வாங்கிக் கொடுத்தாரா? காதலியைக் கரம் பிடித்தாரா? அரசியல் வாய்ப்பு அவருக்கு எப்படி வருகிறது என்பதே படத்தின் மீதிக்கதை. 



    இந்த படத்துக்கு அட்டகத்தி பார்ட் 2 என்று பெயர் வைத்திருக்கலாம். அட்டகத்தி கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தினேஷும் சிறப்பாக நடித்து இருக்கிறார். மகிமாவுக்கு வழக்கமான கதாநாயகிகளைவிட அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்.

    ராதாரவி சிரிப்பாலேயே வில்லத்தனம் காட்டுவது அனுபவ நடிப்பு. மயில்சாமி, ஜானி ஹரி, தீனா, தங்கதுரை ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்கி இருக்கிறார்கள்.

    படத்தின் பெரிய பலம் அரோல் கரோலியின் இசை. பாடல்களும் பின்னணியும் ரசிக்க வைக்கிறது.



    அட்டகத்தியாகவே கடைசி வரை இருந்து வெல்லும் கதாநாயகனின் கதை. உள்ளூர் அரசியலை களமாக எடுத்து ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக கணிக்க முடிவது பலவீனம். தாராளமாக செலவழித்து இன்னும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருந்தால் அண்ணனுக்கு ஜே முக்கியமான அரசியல் படங்களில் ஒன்றாகி இருக்கும்.

    மொத்தத்தில் ‘அண்ணனுக்கு ஜே’ காமெடிக்கு ஜே.
    சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பா.விஜய் இயக்கி, நடித்திருக்கும் `ஆருத்ரா' படத்தின் விமர்சனம். #AaruthraReview #PaVijay
    ஞானசம்பந்தம், பா.விஜய் இணைந்து சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள். அத்துடன் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

    இதற்கிடையே சமூகத்தில் சில பெரிய மனிதர்கள் கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். அவரது உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் வருகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. அவரை கைது செய்து விசாரிக்கையில் அதற்கான காரணங்கள் தெரிய வருகிறது. 



    அதன்படி பா.விஜய் ஏன் குற்றவாளி ஆனார்? சமூகத்தின் முக்கிய மனிதர்களை கொலை செய்வது ஏன்? அவர் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    சிறுமிகளை சீரழிக்கும் சில மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரமே ஆருத்ரா. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கும் தர வேண்டிய தண்டனை என்ன? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். பா.விஜய் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி இருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தின் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டும்போதும், சிவாவாக வில்லன்களிடம் ஆவேசம் காட்டும்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 



    ரொமான்ஸ் காட்சி இல்லாமல் திரைக்கதை அமைத்தது சாமர்த்தியத்தை காட்டுகிறது. இருப்பினும் திரைக்கதை, படத்தொகுப்பில்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை ஆங்காங்கே பாதியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்குமே பெரிய வேலை இல்லை. சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான கதையில் பெண்கள் முகம் சுளிக்கும் சில வசனங்களை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி கிரைம் திரில்லராகவும் இரண்டாம் பாதி குடும்ப படமாகவும் இருக்கிறது. அழுத்தமான வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கின்றன.



    தனியார் துப்பறியும் நிபுணராக பாக்கியராஜ் தனது பாணியில் கதையை கலகலப்பாக நகர்த்துவதோடு, முக்கிய திருப்பத்துக்கும் உதவுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணன், ஞானசம்பந்தன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

    வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `ஆருத்ரா' தேவையான தரிசனமே. #AaruthraReview #PaVijay

    ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் விமர்சனம். #60VayaduMaaniram #60VayaduMaaniramReview
    சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

    வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார். இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

    இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா கவனித்து வருகிறார்.

    விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்ல முடிவு செய்கிறார்.



    அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன் சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

    இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ் தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர் அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

    அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் ராதாமோகன். 

    இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன் பாசப்பிணைப்பு.

    60 வயது மாநிறம் வீடியோ விமர்சனம் பார்க்க:


    நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் விமர்சனம். #ImaikkaNodigal #ImaikkaNodigalReview
    பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார்.

    மேலும் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு போனில் மிரட்டல் விடுகிறார். இதனையடுத்து தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. ஆனால், நயன்தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். 

    இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.

    இவர்கள் இருவரும் பெங்களூருவில் சந்திக்கிறார்கள். அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐயிடம் மாட்டிக் கொண்டதால் நயன்தாராவிற்கு வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது.



    இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா? ராஷி கன்னா என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அதற்கு ஏற்றார் போல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும். தம்பியை காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். தமிழ் சினிமாவில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமை துள்ளலுடன் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அதுபோல் நயன்தாராவிற்கு குழந்தையாக நடித்திருப்பவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    கிரைம் திரில்லர் கதையை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முந்தைய படமான டிமான்ட்டி காலனி சிறந்த வரவேற்பை பெற்றதுபோல், இப்படத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இயக்கி இருக்கிறார். சில லாஜிக் மீறல்கள் சற்று படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறார். திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விஜய்சேதுபதி, நயன்தாரா பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘இமைக்கா நொடிகள்’ மிதமான வேகம்.

    இமைக்கா நொடிகள் வீடியோ விமர்சனம் பார்க்க: 


    கோடி ஸ்மிட் – மெக்பீ, லியோனர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆல்ஃபா படத்தின் விமர்சனம். #Alpha #AlphaReview
    சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுவாசிகள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடி நரபலி கொடுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தலைவர். 

    ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் தலைவர். தன்னுடன் மகனையும் அழைத்து செல்கிறார். இவர்கள் செல்லும் போது, பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அப்போது நிறைய காட்டெருமைகளை இருப்பதை கண்டு, வேட்டையாட முயற்சிக்கிறார்கள்.

    இதில் எதிர்பாராத விதமாக தலைவரின் மகன் மலையில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். இவன் இறந்துவிட்டதாக கருதி, இதர வேட்டைக்காரர்கள், தம் பயணத்தைத் தொடர்கின்றனர். விழித்தெழும் சிறுவன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிறான். தனிமையில் தவிக்கிறான்.



    பல தடைகளை சந்திக்கும் சிறுவன் இறுதியில் தன் இனத்தாறுடன் சேர்ந்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ, லியோனர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் மற்றும் ஜோஹனஸ் ஹெளகுர் ஜோஹனசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் எஸ். டிபீலி இசையமைக்க மார்ட்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



    இப்படத்தை ஆல்பர்ட் ஹுஸ் எழுதி இயக்கியுள்ளதோடு தயாரிப்பிலும் பங்கு பெற்றுள்ளார். 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் முதல் 15 நிமிடம் காட்டு வாசிகளின் வாழ்க்கையை கூறுகிறது. பின்னர் கதைக்குள் செல்லும் படம், விறுவிறுப்பாக நகரும் நேரத்தில் சிறுவன் சிக்கி தவிக்கும் காட்சிகள் சற்று நீண்ட காட்சிகளாக அமைந்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. 

    மொத்தத்தில் ‘ஆல்ஃபா’ மிரட்டல்.
    பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிறுமி தித்யா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லக்ஷ்மி படத்தின் விமர்சனம். #Lakshmi #LakshmiReview
    சிறுமி தித்யா அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவியாக இருக்கிறார். ஆனால் அவளது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ் நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள். 

    அவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் பிரபுதேவா, நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா. 

    நடனம் என்றாலே வெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்? என்பதே மீதிக்கதை.



    தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி' படத்தில் நிரூபித்த பிரபுதேவாவிற்கு, இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரண விஷயமாக அமைந்துவிட்டது. அதிலும் நடனம் என்றால் சொல்லவா வேண்டும். அனைத்து காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். 

    ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர். 

    நடனத்தை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம். 



    படத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது. 

    பரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர் புல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது. 

    மொத்தத்தில் ‘லக்ஷ்மி’ நடன பிரியர்களுக்கு மட்டும்.
    கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களரி' படத்தின் விமர்சனம். #KalariReview #Krishna #VidyaPradeep
    கிருஷ்ணா கேரளவில் தமிழர் வாழும் பகுதியான வாத்துருதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகிவிடுகிறார். இதனாலேயே சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை நிற்க கூடியவர். 

    அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார். கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம். 



    ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விட்டுப்போகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

    உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்பட, எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவளது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.



    கடைசியில் சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோ‌ஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.



    தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கச்சி அறிமுகம். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

    கோழையாக இருக்கும் ஒருவன் தங்கைக்காக பழி வாங்க எடுக்கும் அவதாரமாக படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதையில் எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது படம். கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது. படம் கேரளாவில் உருவாகி இருந்தாலும் ரொம்பவும் மலையாள வாசனை இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் களரி மனம் கவர்ந்து இருக்கும்.

    வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. 

    மொத்தத்தில் `களரி' நன்றாக கிளறியிருக்கலாம். #KalariReview #Krishna #VidyaPradeep

    கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் விமர்சனம். #EcharikkaiReview #Varalakshmi
    உலகத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க நினைத்தால் என்ன ஆகும் என்ற எச்சரிக்கையே படம்.

    தனது அக்கா கணவரை கொன்ற குற்றத்துக்காக சிறைக்கு சென்று திரும்பும் கிஷோர், சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலுக்கு எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வரும் கிஷோர், பைக் திருடி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் விவேக்கை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.



    அதற்காக ஒரு பெரிய கடத்தலை செய்யவும் முடிவு செய்து, அதற்கான வேலையில் இறங்குகிறார். கடைசியில் விவேக்கை வைத்து ஆள்கடத்தல் செய்து அதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறார். அதன்படி தொழிலதிபரின் மகளான வரலட்சுமி சரத்குமாரை கடத்துகின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க மனைவியை இழந்த, ஓய்வுபெற்ற காவலரான சத்யராஜ் தனது மகளுடன் வசித்து வருகிறார். தனது மகளை விட்டு பிரியமுடியாமல் தவிக்கும் சத்யராஜிடம் வரலட்சுமி கடத்தப்பட்ட செய்தியை அவரது அப்பா கூறி, தனது மகளைக் காப்பாற்றி தரும்படி சொல்கிறார்.



    சத்யராஜ், காவல்நிலைய அதிகாரிகளின் உதவியுடன் தனது வீட்டில் வைத்தே கடத்தல்காரர்களை தேடி வருகிறார். கடைசியில், சத்யராஜ், கடத்தல்காரர்களை பிடித்தாரா? கிஷோர், விவேக் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்களா? வரலட்சுமி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கிஷோர் வழக்கமான தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார். சத்யராஜ் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்குடனும், தனக்கே உரித்தான நக்கலுடனும், மகள் மீது பாசம் காட்டுவதில் அப்பாவாகவும் அசத்தியிருக்கிறார்.



    தனது ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். விவேக் ராஜகோபாலின் நடிப்பு கவரும்படியாகவே இருக்கிறது. தனது உடல்மொழிகளால் அனைவரையும் ஈர்க்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. அனைவருமே அவர்களது கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்து இருக்கிறார்கள்.

    ஒரே நாள், அதிகபட்சமாக இரண்டே இடங்கள், பிரதானமாக ஐந்து கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நிறைவான திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் சர்ஜுன்.கே.எம். தான் எடுத்துக்கொண்ட கதையை அதன் களத்தில் அழகாகப் பொருத்திப் பார்வையாளருக்குத் தெளிவாகக் கடத்தியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். குறும்படங்கள் மூலம் தனது திறமையை காட்டிவந்த சர்ஜுன் தற்போது முழு நீள படத்திலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். எனினும் முதல் பாதியில் வேகமாக செல்லும் படத்தை, இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை பாதிக்கிறது. அனைவருமே தவறான வழியில் சம்பாதிக்க நினைப்பதையே திரைக்கதையாக நகர்கிறது. கருத்து பழையதாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குனர் சர்ஜுன்.



    நீ புத்திசாலி என்றால் நான் முட்டாள் இல்லை என்று உனக்குத் தெரியும், ஒரு முறைதான் தப்பு பண்ணிணேன். மறுபடியும் அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன், ஜெயில் வாழ்க்கை நிறைய மாத்திருக்கு. அது எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சுருச்சு என வசனங்கள் நச்சென்று இருக்கின்றன. 

    கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல், பின்னணி இசை ஆகியவை படத்தை மெருகேற்றுகின்றன. சுதர்‌ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

    மொத்தத்தில் `எச்சரிக்கை' விறுவிறுப்பு.

    விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் விமர்சனம். #MerkuThodarichiMalai #MerkuThodarichiMalaiReview
    விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் நடந்து செல்லும் காலம் முதல் ரோடு போட்டு வாகனங்கள் செல்லும் காலம் வரைக்கும் இடையேயான சம்பவங்களை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி.

    இப்படத்தை திரையில் பார்க்கும் போது, கதையோடு ஒன்றி பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.



    சினிமாவில் நகைச்சுவை, காதல், சண்டை என படங்களாக பிரிக்கலாம். ஆனால், இப்படத்தை அங்கு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பதிவாகத்தான் கூறமுடியும். அந்த ஊர் மக்களின் நேர்மை, ஒருத்தருக்கொருவர் உதவுவது, அவர்களின் உண்மைத் தன்மை என சிறந்த அனுபவமாக படத்தை கொடுக்கிறார்கள். 

    நாம் ஏன் அந்த ஊரில் வாழவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. படத்தில் கருத்து ஒன்றும் இல்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் போல் நாம் வாழ வேண்டும் என்றுதான் கருத்தாக சொல்லமுடியும். 

    ஒரு படத்தின் நடிகர்கள் தேர்வே பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதுவே முழு வெற்றியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்பவர்களை வைத்தே படமாக்கி இருக்கிறார்கள்.



    இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட நம் மனதில் பதிகிறார்கள். 

    இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். இவரது இசை மென்மையான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அருமை. கேமராவால் தான் நாம் இந்த படத்தை பார்க்கிறோம் என்று நாம் மறந்து விடும் அளவிற்கு பதிவு செய்திருக்கிறார். இவரது கேமரா யதார்த்தமான பதிவாக பதிய வைத்திருக்கிறது. 



    மொத்தத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ சிறந்த அனுபவம்.

    வீடியோ விமர்சனம் பார்க்க:

    ஜான் டர்டல்டாப் இயக்கத்தில் ஜேசன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தி மெக்’ படத்தின் விமர்சனம். #TheMeg #TheMegReview
    ஆழ்கடல் மீட்புக்குழுவில் வேலை பார்த்து வருகிறார் ஜேசன். கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பலில் சுறா தாக்கியதால் உயிருக்கு போராடி வருபவர்களை சில பேரை காப்பாற்றுகிறார். அதே போல் மீண்டும் ஒருமுறை சுறா தாக்குகிறது. இதில் ஜேசனின் முன்னாள் மனைவி பாதிக்கப்படுகிறார். இவரை ஜேசன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தரையில் வாழ்ந்த ராட்சத மிருகம் டைனோசர் என்றால், கடலில் வாழ்ந்த விலங்கு மெக்லோடன் என்கிற சுறா. தற்போதுள்ள சுறாக்களை விட பத்து மடங்கு பெரியது. டைனோசரை வைத்து ஜூராசிக் பார்க் வந்த மாதிரி, மெக்லோடனை வைத்து வந்துள்ள படம், தி மெக். 70 அடி நீளம் கொண்ட மெக், மனிதர்களை அழிக்க தொடங்குகிறது. எனவே, அதை வேட்டையாட கிளம்புகிறார் ஜேசன். தி டிரான்ஸ்போர்ட்டர் படங்களில் கார் ஓட்டி கலக்கிய அவர், இதில் சுறாவை தீவிர வேட்டையாடுகிறார். 

    திங்பிக், ரஷ் அவர், நேஷனல் டிரஸ்சர் ஆகிய படங்களை இயக்கிய ஜோன் டுர்ட்வலட்டப் இயக்கியுள்ளார். பிரமாண்ட கடல், அதைக் கட்டியாளும் மெக், நவீன யுத்திகளை பயன்படுத்தி அதை வேட்டையாட கிளம்பும் டீம் என, சுறா படங்களுக்கே உரித்தான ஆடுபுலி ஆட்டம்தான் திரைக்கதை. இந்த ஆக்‌ஷனுக்குள் ஒரு சிறுமியை ஊடுருவ விட்டு பரபரப்பு காட்டுகின்றனர். 



    குழந்தைகள் மிரண்டு ரசித்து சிரிக்கிறார்கள். ஏற்கனவே வந்த சுறா படங்களை பார்த்தவர்கள் நெளிகிறார்கள். காட்சிகள் பிரமாண்டமாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு. சில காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் பளிச்சென்று தெரிகிறது. எனினும், கடல் துரத்தல் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ், சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறது. 

    மொத்தத்தில் ‘தி மெக்’ கிக்.
    ×