என் மலர்
தரவரிசை
ராஹேஷ்.ஆர் இயக்கத்தில் துருவ் - ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நடிப்பில் வெளியாகி இருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் விமர்சனம். #MIPMEReview #Dhruvaa #AishwaryaDutta
நாயகன் துருவ் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீடு வீடாக கேஸ் சப்ளை செய்து வரும் துருவ், ஒரு நாள் நடுரோட்டில் பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் திருடுபவர்களை பார்க்கிறார்.
பறித்து சென்றவர்களை துரத்தி சென்று, அவர்களை அடித்து அந்த செயினை எடுத்து செல்கிறார். இதையடுத்த மைம் கோபியின் செயின் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள், துருவ் யார் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார் துருவ்.

துருவ்வை கொல்ல நினைக்கும் நிலையில், துருவ்வும் அவர்கள் கும்பலில் ஒரு ஆளாக சேர்ந்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் செயின் திருடும் கும்பலை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் போலீஸ் அதிகாரி ஜே.டி.சக்ரவர்த்தி.
இறுதியில் ஜே.டி.சக்ரவர்த்தி செயின் திருடும் கும்பலை பிடித்தாரா? நாயகன் துருவ் செயின் திருடனாக மாற காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துருவ், ஆக்ஷன், காதல், எமோஷனல் என்று நடிப்பில் குறை வைக்கவில்லை. துறுதுறுவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா தத்தாவும், பிற்பாதியில் துருவ்விற்கு மனைவியாக வரும் அஞ்சனாவும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
துருவ்விற்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, அருள்தாஸ், மைம் கோபி என அனுபவ நடிகர்களும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

தினசரி செய்திகளில் ஒன்றாகிப்போன செயின் பறிப்பு சம்பவங்களின் பின்புலத்தில் உள்ள நெட்வொர்க் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகேஷ். அதை சமூக விழிப்புணர்வு படமாக தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள். வலிமையான கதையாலும், சுளீர் வசனங்களாலும் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதிக நகைகள் அணிந்து செல்லும் பெண்களுக்கு இப்படம் ஒரு பாடமாக அமையும். அதுபோல், இது சாதாரண திருட்டு மட்டுமில்லாமல், பெரிய கும்பல் இருக்கிறது என்றும், இதனால் பலர் உயிர் இழக்கும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திகில் கூட்டியிருக்கிறது. பிஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளை துல்லியமாக காட்டி இருக்கிறது.
மொத்தத்தில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ விறுவிறுப்பு. #MIPMEReview #MarainthirunthuParkkumMarmamEnnaReview #Dhruvaa #AishwaryaDutta
குரு சோமசுந்தரம், லட்சுமி பிரியா நடிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் விமர்சனம். #OduRajaOdu
சென்னையில் கதாசிரியராக இருக்கிறார் நாயகன் குருசோம சுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி படம் பார்க்க ஆசைப்படுகிறார். இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து வாங்க சொல்லுகிறார்.
அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அந்த பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விடுகிறார். ஆனால், இவரது தம்பியோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார்.
நாசரால் ஏமாற்றப்பட்ட ஒருவர் 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.

அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள் சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவருக்கு மனைவியாக வரும் லட்சுமி பிரியா, கோபப்படும் மனைவியாக நடித்திருக்கிறார். நண்பராக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் மனதில் பதிகிறார் நாசர். மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

டார்க் காமெடி பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார்கள் ஜதின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகள் அங்கும் இங்குமாக திரைக்கதை அமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.
தோஷ் நந்தாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. ஜதின் சங்கர் ராஜ் மற்றும் சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஓடு ராஜா ஓடு’ தேவையில்லாத ஓட்டத்தை குறைத்திருக்கலாம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனம். #KolamavuKokilaReview #Nayanthara
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.
இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.

கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது.

நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.

தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `கோலமாவு கோகிலா' கொண்டாட்டம். #KolamavuKokilaReview #Nayanthara
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் விமர்சனம். #PyaarPremaKaadhal
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்.
ஹரிஷ் கல்யாணோ, தன்னுடைய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகி ரைசாவை தினமும் பார்த்து ஒருதலையாக காதலித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் ரைசா, ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் அலுவலத்தில், அவருடைய பக்கத்து சீட்டுக்கே வேலைக்கு வருகிறார். இதனால், அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைகிறார் ஹரிஷ் கல்யாண்.
எந்த பழக்கமும் இல்லாத ஹரிஷ் கல்யாண், ரைசாவிடம் பயந்து பயந்து பழகுகிறார். ஆனால், ரைசா மிகவும் யதார்த்தமாக பழகி வருகிறார். தன்னுடைய காதலை ஹரிஷ் சொல்லுவதற்கு முன்னதாகவே இருவரும் ஒன்றாகி விடுகிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தன்னுடைய காதலை சொல்லுகிறார் ஹரிஷ். ஆனால், ரைசா எனக்கு காதல் செட்டாவது என்று கூறி காதலை ஏற்க மறுக்கிறார்.

இருந்தாலும் இருவரும் ஒன்றாக பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலைக்கு வருகிறார்கள். இதனால், லிவ்விங் டூ கெதராக இருக்கலாம் என்று முடிவு செய்து, ஹரிஷ் கல்யாண் இருக்கும் பக்கத்து வீட்டிற்கு குடியேறுகிறார். தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவில் ரைசாவுடன் தங்கி வாழ்ந்து வருகிறார் ஹரிஷ்.
இந்நிலையில், ரேகாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், ரைசா திருமணத்திற்கு மறுக்கிறார்.
இறுதியில் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தாய்க்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? ரைசாவுடனான காதல் என்ன ஆனது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், முந்தைய படங்களை இட இப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரைசாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ், ரைசா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் ஈடுபாடு அமைந்துள்ளது. குறிப்பாக இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை சீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்திருக்கிறது.

அம்மாவாக வரும் ரேகா, மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். அப்பாவாக வரும் பாண்டியன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரைசாவின் அப்பாவாக வரும் ஆனந்த் பாபு, தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இருப்பது மகிழ்ச்சி. முனிஷ்காந்த் காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக இவரிடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகளில் சிரிப்பு சரவெடி.
பெற்றோர்கள் பார்க்கும் திருமணமும் சரி, லிவ்விங் டு கேதர் இருப்பவர்களும் சரி எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையான காதல் இருந்தால் அதுதான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளன். முதல் படத்திலேயே இளைஞர்களை தன் வசமாக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரம் தேர்வு. அவர்களிடம் கையாண்ட விதம். போரடிக்காத வகையில் திரைக்கதையின் ஒட்டம் என செவ்வனே படத்தை கொடுத்திருக்கிறார் இளன்.
இப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமும் இவருடைய இசை. நிறைய பாடல்கள், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் நான் தான் முன்னணி என்று நிருபித்திருக்கிறர் யுவன். ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பியார் பிரேமா காதல்’ இளமை துள்ளல்.
கமல்ஹாசன் - பூஜா குமார் - ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `விஸ்வரூபம் 2' படத்தின் விமர்சனம். #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார்.
பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.

இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார்.
கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை.

கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.

கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `விஸ்வரூபம் 2' ரூபங்கள் குறைவு. #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah
யுரேகா இயக்கத்தில் ஜெய்வந்த் - ஐரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காட்டுபய சார் இந்த காளி’ படத்தின் விமர்சனம். #KaatuPayaSirInthaKaaliReview #Jeivanth
சைக்கோ கொலையாளியையும், அவனின் பின்னணியையும் கண்டுபிடிக்கும் காட்டுப்பய போலீஸ் தான் இந்த காளி. பைனான்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலம் வாங்கப்பட்ட வாகனங்கள் அடையாளம் தெரியாத சைக்கோவால் இரவு நேரத்தில் எரிக்கப்படுகின்றன.
அந்த சைக்கோவை கண்டுபிடிக்க முரட்டு போலீசான ஜெய்வந்த் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில் ஜெய்வந்த்தின் நண்பர் ஒருவர் அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கிறார். பணத்தை திருப்பி செலுத்தாததால் அவரது மனைவியை பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றனர். அதிலிருந்து மீள முடியாமல் ஜெய்வந்த்தின் நண்பனின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் நாயகி ஐரா தங்கி இடமின்றி தவிக்கிறார். நாயகியை ஒரு விடுதியில் தங்க வைக்கிறார் ஜெய்வந்த். பின்னர் விடுதியில் பிரச்சனை ஏற்படுவதால், ஐரா, ஜெய்வந்த்துடன் தங்குகிறார்.

கடைசியில் அந்த சைக்கோ யார்? எதற்காக வாகனங்களை எரிக்கிறார்? ஜெய்வந்த் அந்த சைக்கோவை பிடித்தாரா? பைனான்ஸ் நிறுவனத்தினருக்கு தண்டனை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இன்ஸ்பெக்டர் காளியாக ஜெய்வந்த் தனது மீசையை முறுக்கிக்கொண்டே இருக்கிறார். அவரின் கட்டுமஸ்தான உடலும் வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. அழகு பதுமையாக வரும் ஐரா திரையில் மின்னுகிறார். அதிகம் வேலையில்லை என்றாலும், வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேனின் கம்பீரமான தோற்றமும், நடிப்பும் கச்சிதம். மார்வாடியாக வரும் சி.வி.குமார், அவரது தம்பியாக வந்து வில்லத்தனங்கள் செய்யும் அபிஷேக், போலீஸ்காரராக வரும் மூணாறு ரமேஷ், மானேஜராக வரும் மாரிமுத்து என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் ஓரளவுக்கு நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக வந்து கம்பீரமாக வசனம் பேசும் ’கயல்’ தேவராஜ் நடிப்பு சிறப்பு.

பிழைப்புக்காக மற்ற மாநிலத்திலிருந்து இங்கு வரும் சிலரால், பாதிக்கப்படும் நம் மாநில மக்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் யுரேகா. படம் முழுக்க பிரசாரமாக இருக்கிறது. நல்ல ஒருவரி கதையையும் சரியான நடிகர்களையும் ஒன்றிணைத்த யுரேகா திரைக்கதையை வலுவாக்கி விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து ரசிக்கும்படி படமாக்கியிருந்தால் இந்த ‘காளி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.
விஜய் சங்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மணி பெருமாளிள் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் ‘காட்டுபய சார் இந்த காளி’ வலுக்கூட்டியிருக்கலாம். #KaatuPayaSirInthaKaaliReview #Jeivanth
தம்பி ராமையா இயக்கத்தில் உமாபதி ராமையா - மிருதுளா முரளி நடிப்பில் வெளியாகி இருக்கும் மணியார் குடும்பம் படத்தின் விமர்சனம். #ManiyarKudumbamReview #UmapathyRamayya
ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொருட்கள், பண்ட பாத்திரங்களை விற்று சமாளித்து வருகிறார்.
அப்பாவுக்கு மகன் தப்பாமல் பிறந்துவிட்டான் என்பது போல, தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் வேலைக்கு செல்லாமல் ஊர்
சுற்றி வருகிறார். உமாபதி எப்போதும் தனது மாமாவான விவேக் பிரசன்னாவுடனேயே நேரத்தை கழிக்கிறார்.

இந்த நிலையில், தம்பி ராமையாவின் தங்கை மகளான நாயகி மிருதுளா முரளியை, உமாபதிக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக குடும்பத்துடன் தனது தங்கை வீட்டிற்குச் செல்கிறார் தம்பி ராமையா. ஆனால் மிருதுளாவின் அப்பா ஜெயப்பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் உமாபதிக்கு பெண் தர முடியாது என்று தம்பி ராமையா குடும்பத்தை அவமானப்படுத்தி விடுகிறார்.
இதனால் கோபமடையும் உமாபதி, தொழில் செய்து பெரிய ஆளாக வந்து, மிருதுளாவை திருமணம் செய்வேன் என்று ஜெயப்பிரகாஷிடம் சபதம் செய்கிறார். மிருதுளாவுக்கும் உமாபதி மீது காதல் இருக்கிறது. எனவே உமாபதிக்கு சில யோசனைகளையும் வழங்குகிறார். இதையடுத்து ஊரில் காற்றாலை ஒன்றை வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் உமாபதி. அதற்காக பணத்தை சேர்க்க முயற்சி செய்கிறார்.

பல கோடிகள் செலவாகும் என்பதால், அந்த ஊரில் இருக்கும் மக்களை பங்குதாரர்களாக்கி அவர்களிடம் இருந்து பணம் வாங்கி காற்றாலை வைக்க தயராகி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார் பவன். மேலும் உமாபதியிடமிருந்த பணத்தையும் மொட்டை ராஜேந்திரன் எடுத்துச் செல்கிறார்.
இவ்வாறாக பிரச்சனைகள் தன்னை சூழ கடைசியில், தொலைத்த பணத்தை மீட்டாரா? காற்றாலை அமைத்தாரா? தனது சபதத்தை நிறைவேற்றி, மிருதுளாவை மணந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வரும் உமாபதி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் சிறப்பகவே நடித்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். விவேக் பிரசன்னா - உமாபதி சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. மிருதுளா முரளி அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார்.
தனக்கு உரிய தனித்துவமான நடிப்புடன் பார்ப்போரை பரவசப்பட வைத்திருக்கிறார் தம்பி ராமையா. வேலைக்கு செல்லாமல் விற்று திண்ணும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் பொறுப்புடன் வந்து செல்கிறார். ராதா ரவி, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றனர். ஒரு பாடலுக்கு வந்தாலும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது குடும்ப கதையில், தனது மகனை வைத்தே படத்தை இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா. படத்தை ரசிக்கும்படியாகவே உருவாக்கியிருக்கிறார். ஒரு அப்பாவாக, மகனை சிறப்பாகவே இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் படத்தை முழுமைப்படுத்தவில்லையோ என்ற எண்ணத்தையும் தோன்ற வைத்துவிட்டார். திரைக்கதையில் ஆங்காங்கே பிணைப்பு இல்லாமல் கதை நகர்கிறது.

அதிகாரம் பண்ணி வேலை வாங்கிய குடும்பத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்படும் போது, அந்த குடும்பம் நிற்கதியாக நிற்கும். அப்படி நிற்கும் குடும்பத்தில் வேலையில்லாமல் சொத்துக்களை விற்று திங்கும் அப்பா, கணவனை உள்ளங்கையில் தாங்கும் மனைவி, மனைவியுடன் இலவசமாக வந்த தம்பி, அவரது மகன் என குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றிய கதை தான் மணியார் குடும்பம்.
தம்பி ராமையாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படியாக உள்ளது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `மணியார் குடும்பம்' பலமாகியிருக்கலாம். #ManiyarKudumbamReview #UmapathyRamayya #MridulaMurali
வைகரை பாலன் இயக்கத்தில் கிஷோர் - ஷெரின் பில்லக்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடிகார மனிதர்கள்' படத்தின் விமர்சனம். #KadikaraManithargalReview
பிழைப்புக்காக ஊரில் இருந்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சென்னை வருகிறார் கிஷோர். ஊரில் வாழ வழியில்லாத இவருக்கு, சென்னையிலும் தங்க வீடு கிடைக்காமல் அல்லப்படுகிறார். கடைசியாக குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதாக கூறி, தனது கடைசி மகனை பெட்டிக்குள் வைத்து மறைத்து ஒரு வீட்டில் குடிபோகிறார்.
பன் சப்ளை தொழில் செய்து வரும் கிஷோர், தனது மகனை வீட்டு உரிமையாளரான பாலா சிங்குக்கு தெரியாமல் பன் பெட்டியில் வைத்து, பள்ளிக்கு கூட்டிச் செல்கிறார். கிஷோர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கருணாகரன் பாட்டி ஒருவருடன் வசித்து வருகிறார். கருணாகரனுக்கும் வீட்டு உரிமையாளரின் மகளான நாயகி ஷெரின் பில்லக்களுக்கும் காதல் மலர்கிறது.

இந்த நிலையில், பாலா சிங் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை துவங்குகிறார். அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நாயகி ஷெரின் கருணாகரன் வீட்டில் தங்குகிறார். ஆனால் தனது மகள் ஓடிப்போனதாக கருதி ஷெரினை தேடி வருகிறார். இந்த நிலையில் கிஷோரின் கடைசி மகனும் காணாமல் போகிறார்.
கடைசியில் கிஷோரின் மகன் கிடைத்தானா? கருணாகரன் - ஷெரின் இணைந்தார்களா? பாலா சிங்குக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
கிஷோர் ஒரு நடுத்தர வீட்டு குடும்பஸ்தராக கடிகார மனிதனாக தினசரி வேலையை கவனித்து வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன் காமெடியில் சிரிக்க வைக்கிறார். ஷெரினுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி பாலாசிங், பிரதீப் ஜோஷ், ஷீலா கோபி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையடைய வைத்திருக்கின்றனர்.

சென்னையில் வீடு தேடுவதில் இருக்கும் சிக்கல், வீடு கிடைக்காமல் கஷ்டப்படும் குடும்பங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் வைகரை பாலன். அடுத்தடுத்த காட்சிகள் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
சாம்.சி.எஸ் பின்னணி இசை ஓரளவுக்கு வலுகூட்டியிருக்கிறது. உமா சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `கடிகார மனிதர்கள்' போராட்டம். #KadikaraManithargalReview
ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் மிதுன் மகேஸ்வரன் - ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `எங்க காட்டுல மழை' படத்தின் விமர்சனம். #EngaKattulaMazhaiReview #MithunMaheshwaran
ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வரும் நாயகன் மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடுகிறார். அப்புக்குட்டி எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் போகவே, தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் வீட்டிலேயே சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனை பார்க்கும் மிதுன், ஸ்ருதி மீது காதல் வயப்படுகிறார். இதற்கிடையே அவரது நண்பன் அப்புக்குட்டியையும் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரத்தில் ஸ்ருதியும், மிதுனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க டாலர்களை கடத்த, கடத்தல் கும்பல் ஒன்று திட்டம் போடுகிறது.

பணத்தின் மீது பேராசை கொண்ட போலீஸ் அதிகாரி அருள்தாஸ், அந்த பணத்தை கைப்பற்றுகிறார். அந்த பணத்தை எடுத்துச் செல்லும் போது, வழியில் வரும் மிதுன், அருள்தாசுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக அந்த பணத்தை பிடிங்கிச் செல்கிறார். அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரித்து பார்க்கும் போது, அதில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைகிறார்.
பின்னர் அந்த பணத்தை அப்புக்குட்டியுடன் சேர்ந்து சந்தோஷமாக இஷ்டத்துக்கு செலவு செய்து வருகிறார். மேலும் அந்த பணத்தை அப்புக்குட்டி தங்கியிருந்த பழைய கட்டிடத்தில் குழி தோண்டி மறைத்து வைக்கின்றனர். கொஞ்ச நாள் கழித்து அங்கு இடத்திற்கு திரும்பி வரும் போது, அந்த இடம் காவல் நிலையமாக மாறியிருக்கிறது.
கடைசியில், மிதுன், ஸ்ருதியை கரம்பிடித்தாரா? அருள்தாஸ், மற்றும் கொள்ளை கூட்டத்தில் இருந்து மிதுன் தப்பித்தாரா? காவல் நிலையம் இருக்கும் இடத்தில் உள்ள பணத்தை கைப்பற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

எங்கேயும் எப்போதும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, மேலும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிதுன் மகேஸ்வரன், இந்த படத்தில் ஒரு நாயகான அவருக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன், தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த படமாகும். அவர் நாயகியாக வந்து ரசிக்க கவர முயற்சி செய்திருக்கிறார்.
கதாபாத்திரமாகவே மாறிவிடும் அருள்தாஸ் இந்த படத்தில் போலீஸாக வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடிக்கு ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறார்.

குள்ளநரி கூட்டம் படத்திற்கு பிறகு 7 வருடங்களுக்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ பாலாஜி. காதல், காமெடி, த்ரில்லர் என அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பை கூட்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நாய் பேசுவது போன்ற காட்சிகள் வித்தியாசமாக உள்ளது. குள்ளநரி கூட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு படத்தை பார்க்கும் போது அதற்கான தீனி இந்த படத்தில் கொஞ்சம் குறைவு தான் என்று சொல்ல வேண்டும். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
ஸ்ரீ விஜய்யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `எங்க காட்டுல மழை' குறைவு தான். #EngaKattulaMazhaiReview #MithunMaheshwaran
சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கஜினிகாந்த்' படத்தின் விமர்சனம். #GhajinikanthReview #Arya
ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். அவர் தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் வைத்தே ஆர்யா பிறக்கிறார். இதையடுத்து, தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆர்யா வளர வளர, அவருடன் மறதி நோயும் சேர்ந்தே வளர்கிறது.
ஆர்யா ஒரு வேலையில் இருக்கும் போது, யாராவது அவரை அழைத்தாலே, அல்லது அவரிடம் ஏதாவது சொன்னாலோ தான் முன்பு செய்த வேலையை மறந்து அப்படியே விட்டுவிட்டு, சென்று விடுவார். இதையடுத்து நீ ரஜினிகாந்த் இல்லை, கஜினிகாந்த் என்று அனைவரும் ஆர்யாவை கிண்டல் செய்கின்றனர்.

இப்படி மறதி நோயுடன், பெரிய ஆளாகும் ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் நரேன் பெண் தேடி வருகிறார்.ஆனால் ஆர்யாவின் குறையை காரணம் காட்டி யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இந்த நிலையில், சாயிஷாவை, ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
அதில் சாயிஷாவின் அப்பாவான சம்பத் ஆர்யாவை சந்திக்க வருகிறார். ஆனால் அவரை சந்திக்க வேண்டும் என்பதையே ஆர்யா மறந்துவிடுகிறார். வெகுநேரம் காத்திருந்துவிட்டு, ஆர்யா வராத கோபத்தில் சம்பத் திரும்பி செல்கிறார். அவரை சமாதானப்படுத்த செல்லும் ஆர்யா, தனது மறதி பற்றி சம்பத்திடம் சொல்ல, தனது மகளை ஆர்யாவுக்கு திருமணம் செய்த தர முடியாது என்று சம்பத்தும் கைவிரித்துவிடுகிறார்.

இதையடுத்து, சாயிஷாவை சந்திக்கும் ஆர்யாவுக்கு, அவள் மீது காதல் வருகிறது. தனது காதலை சாயிஷாவிடம் சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இருப்பினும் தனக்கு மறதி இருப்பதை சாயிஷாவிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் ஆர்யா. இதற்கிடையே சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள போலீஸ்காரரான சாயிஷாவின் சொந்தக்காரர் ஒருவரும் முயற்சி செய்து வருகிறார்.
இவ்வாறாக தனக்கு இருக்கும் மறதி பிரச்சனையை ஆர்யா எப்படி சமாளிக்கிறார்? சாயிஷாவுடன் கரம்பிடிக்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்? அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா மீண்டும் முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு அப்பாவித்தனமான ஆர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. தனது வழக்கமான ஆர்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
சாயிஷாவுக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆர்யாவுடனான காதல், கொஞ்சும் காட்சிகளில் சாயிஷா ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சொல்லத் தேவையில்லை. தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார். கருணாகரன், சதீஷ் இருவருமே சமஅளவில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஆர்யாவுடன் இவர்கள் இருவரும் இணையும் காட்சிகளுக்கு சிரிப்பொலியை கேட்க முடிகிறது.

ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், சம்பத் என மற்ற கதாபாத்திரங்களும் கிடைத்த இடங்களில் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.
தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார், இந்த முறை குடும்பபாங்கான கதை மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது முதல் 2 படங்களின் சாயல் ஏதும் இன்றி, முற்றிலும் காமெடி படமாக ரசிக்கும்படி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும், அதிலும் சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பது சிறப்பு. திரைக்கதையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார்.
பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `கஜினிகாந்த்' கலகலப்பு. #GhajinikanthReview #Arya #Sayyeshaa
கிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஷன் இம்பாசிபிள்' படத்தின் விமர்சனம். #MissionImpossibleFalloutReview
மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் நாயகன் டாம் க்ருசுக்கு ஒரு மிஷன் கொடுக்கப்படும். கடைசி பாகத்தில் தி சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். இந்த பாகத்தில் அந்த சிண்டிகேட் குழுவில் இருந்து சிதறிக் கிடக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களை தி அபோஸ்டில்ஸ் என்று கூறிக் கொள்கின்றனர்.
இவ்வாறு பிரிந்து கிடக்கும் அந்த அமைப்பினர் மூன்று சக்தி வாய்ந்த ப்ளூட்டோனியம் அணுகுண்டுகளை வாங்க திட்டமிடுகின்றனர். அந்த அணுகுண்டு அவர்களிடம் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என்பது டாம் மற்றும் அவரது குழுவுக்கு வழங்கப்படும் மிஷன்.

டாம் குரூஸ் தனது குழுவுடன் அந்த ப்ளூடோனியம் அணுகுண்டை கைப்பற்றுகிறார். இதில் தனது நண்பனை காப்பாற்றுவதற்காக அணுகுண்டை தவறவிடுகிறார். இந்த நிலையில், சிஐஏ அமைப்பின் பார்வையில் டாம் க்ரூஸ் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இதற்கிடையே கடைசி பாகத்தில் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் நிபந்தனை வைக்கின்றனர்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், ப்ளூட்டோனியம் அணுகுண்டை வெடிக்க வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடைசியில், டாம் க்ரூஸ் தனது குழுவுடன் எதிரிகளின் திட்டத்தை முறியடித்தாரா? சீன் ஹாரிஸ் விடுவிக்கப்பட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டாம் க்ரூஸ் வழக்கம் போல் இந்த பாகத்திலும் தனது ஆக்ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் அதகளப்படுத்தி இருக்கிறார். இத்தனை வயதிலும் இளமையானவர் போல் அவர் செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சூப்பர் மேனாக அனைவரது இதயங்களை கவர்ந்த ஹென்றி கேவில் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சிமான் பெக் காமெடியில் கலக்கி இருக்கிறார்.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் மிஷனை மேற்கொள்ளும் குழுவுக்கு கடைசியில் வெற்றி தான் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றியை எட்டிப் பறிப்பது என்பது எளிமையாக இருக்காது. பல்வேறு சாகசங்கள் மூலம் டாம் க்ரூஸ் தனது குழுவினருடன் வெற்றிக் கனியைப் பறிப்பார். அந்த வகையில் இந்த பாகத்தில் ஆங்காங்கு பழைய நியாபங்களை காட்டியிருப்பது உணர்ச்சிப்பூர்வமாக காட்டியும், ஆக்ஷன், அடுத்தடுத்த காட்சிகள் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் மிக்வாரி. மிஷன் இம்பாசிபிள் தீமுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

ஜோ க்ரேமர், கோமேல் ஷானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ராப் ஹார்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `மிஷன் இம்பாசிபிள்' ஆக்ஷன் அதிரடி. #MissionImpossibleFalloutReview #TomCruise
விக்ரம் ஜெகதீஷ், நேஹா நடிப்பில் பரணி இயக்கம் மற்றும் இசையில் வெளியாகி இருக்கும் ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் விமர்சனம். #Ondikatta #OndikattaReview
கிராமத்தில் நாயகன் விக்ரம் ஜெகதீஷ் தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் நாயகி நேஹாவிற்கு விக்ரம் ஜெகதீஷும் சிறு வயதில் இருந்தே பழகி வருகிறார்கள். நேஹாவிற்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்.
நாளடைவில் நேஹா மீது விக்ரம் ஜெகதீஷுக்கு காதல் ஏற்படுகிறது. நேஹா படித்து ஒரு பள்ளிக்கு ஆசிரியராக வேலைக்கு சேருகிறார். தன்னுடைய சம்பள பணத்தில் விக்ரம் ஜெகதீஷுக்கு சட்டை எடுத்துக் கொடுக்கிறார். இதனால், நேஹா தன்னை காதலிப்பதாக நினைத்துக் கொள்கிறார் விக்ரம் ஜெகதீஷ்.
ஒரு கட்டத்தில் நேஹாவிடம் விக்ரம் ஜெகதீஷ் தன்னுடைய காதலை சொல்லுகிறார். ஆனால், அவரோ, தன்னுடன் வேலை பார்க்கும் தர்மராஜை காதலிப்பதாக கூறிவிடுகிறார். இதனால் வருத்தமடையும் விக்ரம் ஜெகதீஷ், மதுவுக்கு அடிமையாகிறார்.

நேஹாவோ, தர்மராஜை திருமணம் செய்துக் கொள்கிறார். சில தினங்களில் விக்ரம் ஜெகதீஷ், நேஹாவின் நினைவில் இறந்து விடுகிறார். இதையறிந்த நேஹா, தான் கட்டியிருந்த தாலியை கழட்டி விடுகிறார்.
விக்ரம் ஜெகதீஷ் இறந்ததற்கு நேஹா ஏன் தாலியை கழட்டினார்? தன் கணவர் தர்மராஜுடன் இணைந்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ஜெகதீஷ் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். நாயகி நேஹா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பரணி. காதல், சென்டிமென்ட் என சிறு படஜெட்டிற்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு படத்தை திறமையாக இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இவரே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
மொத்தத்தில் ‘ஒண்டிக்கட்ட’ ரசிக்கலாம்.






