என் மலர்
தரவரிசை
வினோ இயக்கத்தில் ப்ரித்வி விஜய் - மஹி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மங்கை மான்விழி அம்புகள்' படத்தின் விமர்சனம்.
மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் நாயகன், ப்ரித்வி விஜய் அவருடன் படிக்கும் நாயகி மஹியை காதலித்து வருகிறார். மஹியிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். காதலை சொன்னால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலே இருக்கிறார்.
இந்த நிலையில், ப்ரித்வி ஒரு விபத்தில் சிக்கி தனது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். மஹியை காதலித்ததையும் மறந்துவிட, கடைசியில் தனது காதலை மஹியிடம் சொன்னாரா? அவர்களது காதல் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ப்ரித்வி விஜய் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார். மஹி அழகான பதுமையாக வந்து செல்கிறார். இருவருக்கிடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கல்லூரி காதல் பற்றி பல்வேறு படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஒரு கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் வினோ. புதுமையான காதல் காட்சிகள், காமெடி என சில இடங்களில் தொய்வுடன் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
தமீம் அன்சாரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். தினேஷ் லக்ஷ்மணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `மங்கை மான்விழி அம்புகள்' கூர்மை.
இரண்டு பாகங்களாக வந்து ரசிகர்களை கவர்ந்த ஹோட்டல் டிரான்ஸில்வானியா தற்போது மூன்றாவது பாகமாக சம்மர் வெகேசன் என்னும் பெயரில் வெளியாகி இருக்கிறது. இதன் விமர்சனம்...
மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். மனிதர்கள் எந்த நேரத்திலும் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் இருக்கும் பூதங்களுக்கு, ஒரே அடைக்கலம ஹோட்டல் டிரான்ஸில்வேனியாதான். மனிதர்களின் கால் தடம் கூட பதியாத ஒரு காட்டுக்குள் ஹோட்டல் ஒன்றை மான்ஸ்டர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறது 540 வயதான கௌன்ட் டிராகுலா.
இவரின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா. டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்திரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா. டிராகுலாக்களும், பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். மனிதர்கள் என்றாலே மோசமானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள் மேவிஸ்.
முதல் பாகத்தை (2012) விட இரண்டாம் பாகத்தில் (2015) காமெடிக் காட்சிகள் குறைவு என அலுத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் மூன்றாம் பாகமான ஹோட்டல் டிராஸில்வேனியா 3 : சம்மர் வெக்கேஷன் வெளியாகி இருக்கிறது.
ஒரு குட்டி ப்ளாஷ்பேக்குடன் கதை ஆரம்பிக்கிறது. கௌன்ட் டிராகுலா நண்பர்களுடன் ரயிலில் புடாபெஸ்ட் செல்ல, அங்கு வரும் வேன் ஹெல்சிங், இவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். வழக்கம் போல, டிராகுலா வென்றுவிட, எப்படியேனும் பழிவாங்குவேன் என சபதம் எடுக்கிறார்.

நிகழ்காலத்தில், ஹோட்டலில் வேலை செய்து போரடித்ததால், ஜாலியாகக் கப்பலில் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறாள் மேவிஸ். ஒட்டுமொத்த பூதக்கூட்டமும் அங்கு செல்ல, களைகட்டுகிறது. கப்பலின் கேப்டனாக வேன் ஹெல்ஸிங்கின் கொள்ளுப்பேத்தி எரிக்கா.
டிராகுலாவுக்கு எரிக்கா மேல் காதல் வருகிறது. இறுதியில் வேன் ஹெல்ஸிங் டிராகுலாவை பழி தீர்த்ததா? வேன் ஹெல்ஸிங்க்கின் பேத்தி எரிக்காவுக்கும் டிராகுலாவுக்கும் இடையேயான காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹோட்டலுக்குப் பதிலாக புதிய இடம், கப்பல், ரயில், விமானம் என கலர் புல்லாக இருக்கிறது இந்த பாகம். வண்ணவண்ண மீன்கள், புதிய கோணத்தில் பெர்முடா முக்கோணம் என ஒவ்வொரு காட்சியிலும் அனிமேஷன் அருமை. குழந்தைகளை இது அதிகம் மகிழ்விக்கும்.
மொத்தத்தில் கலர்புல்லான காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது ஹோட்டல் டிரான்ஸில்வானியா இந்த சம்மர் வெக்கேஷன்.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மோகினி' படத்தின் விமர்சனம்.
பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.
தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும் என்று யோகி பாபு கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர்.

அங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருக்கம் காதலாகவும் மாறவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது.
ஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது.
கடைசியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார்? எதற்காக கொலைகளை செய்கிறது? அதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. படத்தை தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபு காமெடி அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள்.
லண்டனில் கொலை செய்யப்படும் பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் ஆர்.மாதேஷ். சாதாரணமாக த்ரிஷா அழகு என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார். த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இடமில்லாமல் லண்டன் சென்று பேய் படத்தை எடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஓரளவுக்கு படம் ரசிக்கும்படியாக இருக்கிறது.

அருள்தேவ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. விவேக் - மெர்வினின் பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `மோகினி' அழகான பேய்.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் விமர்சனம். #JungaReview #VijaySethupathi
கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்துவிடுகிறார்.
தன்னை அடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று யோசிக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் யோகி பாபுவிடம் இதுபற்றி கூறி, யோசனை கேட்கிறார். தனக்கு ஒரு அரசியல்வாதியை தெரியும் என்று கூறி, விஜய் சேதுபதியின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் கடுப்பாகும் விஜய் சேதுபதி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று புரட்டி எடுக்கிறார். விஜய் சேதுபதி அடிதடியில் ஈடுபட்டது அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது.

அப்பா, தாத்தாவைப் போல நீயும் டானாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் சேதுபதியை வேறு ஊருக்கு அழைத்து வந்ததாக கூறும் சரண்யா பொன்வண்ணன், சென்னையில் விஜய் சேதுபதியின் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு ஒரு சொந்தமாக தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். தனது குடும்பம் டான் குடும்பம் என்பதை அறிந்து குஷியாகும் விஜய் சேதுபதி, அவர்களது திரையரங்கை மீட்பதற்காக சென்னை வருகிறார்.
சென்னையில் சிறிய, சிறிய கட்டப் பஞ்சாயத்துகளை செய்து, சென்னையில் டானாகிறார். இதனால் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துகள் அவரைத் தேடி வருகிறது. அவரும் அவை அனைத்தையும் முடித்து வைக்கிறார். தனது தியேட்டரை மீட்கவும் பணத்தை சேர்த்து வருகிறார்.
இது சென்னையில் இருக்கும் மற்ற டான்களுக்கு பிடிக்காமல் போக, விஜய் சேதுபதியை கொல்ல முடிவு செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்க, தியேட்டரை இடித்து விட திட்டம் போடுகிறார்.

இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து, தியேட்டரை தான் வாங்கிக் கொள்வதாக விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால் சுரேஷ் மேனன், விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப, அவரை பழிவாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார் விஜய் சேதுபதி.
பாரிஸில் சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க, சாயிஷாவை கடத்த விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார்.
கடைசியில், விஜய் சேதுபதி, சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டரை கைப்பற்றினாரா? தனது காதலியான மடோனாவை திருமணம் செய்தாரா? சாயிஷாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வந்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் கஞ்ச டான் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
சாயிஷாவும் பணக்கார வீட்டு பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் சாயிஷா, பாடல் காட்சிகளில் ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப் போட்டிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியின் காதலியாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதியின் பாட்டி கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. இருவரும் திரையில் கலக்கியிருக்கிறார்கள். ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு இந்த படத்தை ஒரு வித்தியாசமான காமெடி படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோகுல். தான் ஒரு டான் குடும்பம் என்பதை அறியாத நாயகன், டானாக மாறி செய்யும் அட்டகாசங்கள் படத்தின் திரைக்கதையாக நகர்கிறது. ஒரு பக்கம் கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதிக்கு செலவு வைக்கும் யோகி பாபு என காட்சிகள் சுறுசுறுப்பை கூட்டுகின்றன. மற்றொரு பக்கம் சரண்யா பொன்வண்ணனும், பாட்டியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாவது பாதியில் பாட்டி கலக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே வந்திருக்கிறது. டூட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது. சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `ஜுங்கா' பார்க்கலாம் தெம்பா. #JungaReview #VijaySethupathi
டிவைன் ஜான்சன் நடிப்பில், ராசன் மார்ஷல் தர்பர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஸ்கை ஸ்கிராப்பர்’ படத்தின் விமர்சனம். #SkyScraper #SkyScraperReview
எஃப்பிஐயில் பணியாற்றி வரும் டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால், எஃப்பிஐயில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு 10 வருடங்கள் கழித்து செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வருகிறார்.
தன்னுடைய நண்பர் மூலமாக ஹாங்காங்கில் மிகப்பெரிய கட்டிடத்திற்கு செக்யூரிட்டி கார்டாக நியமிக்கப்படுகிறார். இதில் ஒரு தளத்தில் தன்னுடைய குடும்பத்துடன் குடியேறுகிறார் டிவைன் ஜான்சன். இவருக்கு அந்த கட்டிடத்தின் அனைத்து தளங்களுக்கும் செல்லுக் கூடிய ஆக்சஸ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்துவிட்டு, தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான்.

இறுதியில் அந்த கட்டிடத்தின் தீயை டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார். அதே கட்டிடத்தில் சிக்கி இருக்கும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
டிவைன் ஜான்சன் தன்னுடைய அசாத்திமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இப்படத்தில் டிவைன் ஜான்சனை சோலோ ஹீரோவாகக் களமிறக்கி, ராக்கின் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் இயக்குனர். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் மிரள வைக்கிறது. குறிப்பாக அந்த கட்டிடத்தில் டிவைன் ஜான்சன், தொங்குவது, தாவுவது, குதிப்பது போன்ற காட்சிகள் சீட்டின் நுனிக்கே பார்ப்பவர்களை வரவழைத்து விடுகிறார்கள்.
டிவைன் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குனர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படம் இது. இவர்கள் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். தமிழ் டப்பிங்கையும் நன்றாக ரசிக்கும் படி செய்துள்ளனர்.

ஸ்டீவ் ஜப்லான்ஸ்கையின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காண்பித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘ஸ்கை ஸ்கிராப்பர்’ பிரம்மாண்டம்.
சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி - மிப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் `போத' படத்தின் விமர்சனம். #Bodha #Vicky
நாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை எடுப்பதாகவும், அந்த படத்தில் விக்கியை நாயகனாக நடிக்க வைப்பதாகவும் கூறி பணம் கேட்கிறார்.
வேலையில்லாமல் அன்றாட பிழைப்புக்கே அல்லல்படும் விக்கி, பணத்தை புரட்ட கஷ்டப்படுகிறார். இந்த நிலையில், மிப்புவும், விக்கியும் பார்ட்டி ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் விக்கியை கால் பாயாக அனுப்பி வைப்பதாக கூறி, விக்கிக்கு பணம் தருவதாக கூறுகிறார்.
விக்கியும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், கால் பாயாக செல்ல சம்மதிக்கிறார். கால் பாயாகவும் செல்கிறார். இதுஒருபுறம் இருக்க மிப்பு தனது கடைக்கு சரிபார்க்க வரும் செல்போன்களில் இருக்கும் தகவல்களை திருடி எடுத்து வைத்துக் கொள்கிறார். அவ்வாறு அவர் திருடும் ஒரு செல்போனில் சண்முகசுந்தரம் பேசுவதை கேட்கிறார். அதில் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இதையடுத்து சண்முகசுந்தரம் வீட்டில் இருந்து பணத்தை திருட முடிவு செய்யும் மிப்பு, அதற்காக அந்த வீட்டிற்கு செல்ல, கால் பாயான நாயகன் விக்கி அந்த வீட்டில் இருந்து வெளியே வருகிறார்.
இதையடுத்து விக்கியிடம் பணம் குறித்த தகவல்களை மிப்பு கூறுகிறார். அந்த பணத்தை இருவரும் திருட முடிவு செய்து அந்த வீட்டிற்குள் செல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க இருவரும் செய்வதறியாது முழிக்கின்றனர். மேலும் அந்த பணமும் காணாமல் போகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பிப்பதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியே ஓடி வரும் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்கின்றனர்.
கடைசியில் விக்கி - மிப்பு போலீசில் இருந்து தப்பித்தார்களா? அந்த பணத்தை கைப்பற்றினார்களா? அந்த வீட்டில் இருந்த பெண்ணை கொன்றது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்கி நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. நாயகனாக அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். மிப்பு காமெடியில் கைகொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்துள்ளனர்.
ஒரு சிறிய குழுவை வைத்து, சிறிய பட்ஜெட்டில் படம் பண்ணுவது என்பது எளிதில்லை, அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. கால் பாய் என்பது நிஜ வாழ்க்கையில் இருந்தாலும், பணத்திற்காக நாயகன் கால் பாயாக மாறுவதாக காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் படம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக வந்திருக்கிறது.
சித்தார்த் விபின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். ரத்தின குமார் ஒளிப்பதிவும் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `போத' குறைவு தான். #Bodha #Vicky
ஆர்.ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் ஆத்விக் ஜலந்தர் - பூஜா ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விண்வெளி பயணக் குறிப்புகள் படத்தின் விமர்சனம். #VinveliPayanaKurippukal #AthvikJalandhar
ஊரில் பெரிய தலைக்கட்டான நாயகன் ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அமைச்சர் ஒருவரின் ஒத்துழைப்பில் ஊரில் இருக்கும் அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்தி, அந்த சங்கங்களின் தலைவர்களை தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி பணிக்கிறார். போலீசும் ஜலந்தரின் பேச்சைக் கேட்டு நடப்பதால் அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.
ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.

இதையடுத்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சங்கங்களிடம் இருந்து பணத்தை பறித்து விண்வெளிக்கு போக முடிவு செய்கிறார் ஜலந்தர். ஆனால் அவ்வளவு பணத்தை தங்களால் கொடுக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஆசைக்கு வெளிநாட்டிற்கு சென்று வாருங்கள் என்றும் அந்த அந்த ஊர் மக்கள் கூற, ஜலந்தர் விட்டபிடியாக இல்லை.
இதனால் ஜலந்தர் மீது கோபமடையும் ஊர்மக்கள் மற்றும் அவரின் எதிரிகள் ஜலந்தரை கொல்ல முடிவு செய்கின்றனர். காவல்துறையும் அவரை குறிவைக்க ஜலந்தர் காட்டுக்குள் ஓடி ஒளிகிறார்.
இவ்வாறாக காட்டுக்குள் ஓடி ஒளியும் ஜலந்தர் ஊருக்குள் திரும்ப வந்தாரா? அவருக்கு தேவையான பணத்தை ஊர் மக்கள் கொடுத்தார்களா? அல்லது ஜலந்தரை கொன்றார்களா? ஜலந்தரின் விண்வெளி ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன், நாயகி உட்பட அனைவருமே புதுமுகங்கள் எனினும், ஜலந்தர் சிறப்பாகவே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் ஓட்டத்துக்கு துணையாக இருந்துள்ளனர்.
படத்தை முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுத்திருப்பது, அந்த கிராமத்துக்கே சென்று திரும்பிய அனுபவத்தை கொடுக்கிறது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜலந்தரை கொலை செய்ய திட்டமிடும் காட்சிகள் எதார்த்தத்தை கொடுக்கின்றன. வன்முறை, இரட்டை அர்த்தம், பாடல்கள், காதல், காமெடி எதுவும் இல்லாமல் ஒரு நாவல் படிக்கும் சுவாரசியத்தை மட்டும் தர முயன்ற இயக்குனர் ஜெயப்பிரகாசுக்கு பாராட்டுகள். இறுதியில் வரும் அந்த திருப்பம் எதிர்பாராதது. திரைக்கதையின் நீளத்தை குறைத்திருந்தால் விறுவிறுப்புடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வழக்கமான படங்கள் பார்த்து போரடித்து போனவர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஓரளவுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.ஜெயப்பிரகாஷ், ஆர்.டி.லோகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `விண்வெளி பயணக் குறிப்புகள்' ரொம்ப நீளம். #VinveliPayanaKurippukal #AthvikJalandhar
பெய்டன் ரீட் இயக்கத்தில் பால் ருத் - எவாஞ்சலின் லில்லி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் படத்தின் விமர்சனம். #AntManAndTheWasp
எவாஞ்சலின் லில்லியிடம் அவரது அப்பாவான மைக்கேல் டக்ளஸ் தான் ஆன்ட்மேனாக இருந்த போது மக்களை காப்பாற்றுவதற்காக ஏவுகணை ஒன்றை அழிக்க சென்றதாகவும், அப்போது வாஸ்ப்பான எவாஞ்சலினின் அம்மா அந்த விபத்தில் மாயமாகிவிட்டதாக கூறுவார். எவாஞ்சலினின் அம்மாவை மீட்கும் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் கேப்டன் ரோஜர்ஸ் உடன் கூட்டணி வைத்ததற்காக தற்போதைய ஆன்ட்மேனாகிய பால் ருத் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அவருடன் அவரது பெண் குழந்தையும் அந்த வீட்டில் தங்கி வருகிறது.

வாஸ்ப் இன்னும் உயிரோடு இருப்பதாக தான் உணர்வதாக கூறும் மைக்கேல் டக்ளஸ், எவாஞ்சலினின் அம்மாவை மீட்பதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறார். அதேநேரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் பால் ருத்துக்கு எவாஞ்சலின் மற்றும் அவரது அம்மா பேசுவது போல் தோன்றுகிறது. இதை வாய்ஸ் மெசேஜாக மைக்கேல் டக்ளசுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதையடுத்து பால் ருத்துக்கு பதிலாக ஒரு எறும்பை அவரது வீட்டில் வைத்துவிட்டு, பால் ருத்தை அவர்களது உதவிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதன்பின்னர் எவாஞ்சலினின் அம்மாவை மீட்க அவர்களது திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகின்றனர். அதனை செயல்படுத்த ஒரு கருவி தேவைப்பட அதனை எடுத்து வர ஆன்ட்மேன் மற்றும் வாஸ்ப் செல்கின்றனர்.

அதேநேரத்தில் ஹன்னா ஜான் கமானும் அதே பொருளை எடுக்க வருகிறாள். கடைசியில் அந்த பொருளை யார் எடுத்தார்கள்? எவாஞ்சலினின் அம்மாவை காப்பாற்றினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆன்ட்மேனாக நடித்துள்ள பால் ருத் சிறிய தோற்றம், பெரிய தோற்றம் என இரண்டிலும் கவர்கிறார். வாஸ்பாக நடித்திருக்கும் எவாஞ்சலின் லில்லி சண்டைக்காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். ஹன்னா ஜான் கமென், மிசசெல் பிஃப்பர், வால்டன் காகின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பொறுப்பு வகித்துள்ளனர்.

ஆக்ஷன், அதிரடி, காமெடியுடன் ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் பெய்டன் ரீட். சிறிய தோற்றம் முதல் மாபெரும் தோற்றம் என ஆன்ட்மேனை வித்தியாசமாக காட்டியிருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. குழந்தைகளும் ரசிக்கும்படியாக படத்தை உருவாகி இருக்கிறார்கள். தமிழ் வசனங்களும் ரசிகர்களை கவர்கிறது.
கிறிஸ்டோஃபி பெக்கின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். டேன்ட்டி ஸ்பினோட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்' அதிரடி. #AntManAndTheWasp
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #KKS #KadaiKuttySingam #Karthi
விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.
சத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

இதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர்.
10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம் வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார்.

ஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி.
வீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார்? கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா? பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

இதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார்.
இதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர்.

அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் விமர்சனம். #TP2 #Tamizhpadam2
தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார்.

இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார்.
மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம்.

கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது.
திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர்.

தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது.
அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும்.

கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon
கே.எஸ்.பழனி இயக்கத்தில் ஷாரூக் - காயத்ரி ரெமா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காசு மேலே காசு' படத்தின் விமர்சனம். #KasuMelaKasu
மயில்சாமியின் மகன் நாயகன் ஷாரூக். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி தனது மகனை பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க வைத்து எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர்கள் பகுதியில் இருக்கும் பணக்கார வீட்டு பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்க சொல்கிறார்.
இதுஒருபுறம் இருக்க தனது அப்பாவும், அம்மாவும் பிச்சை எடுப்பதை விரும்பாத நாயகி காயத்ரி ரீமா, தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறாள். அதன்படி அவர்களது பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் வேலைக்கும் சேர்கிறாள்.

இந்த நிலையில் அந்த பங்களாவில் இருந்து வரும் காயத்ரி ரீமாவை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரி என்று நினைத்து, தனது மகனை காதலிக்க சொல்கிறார் மயில்சாமி. இதையடுத்து காயத்ரியிடம் தனது காதலை சொல்லும் ஷாரூக், காயத்ரியிடம் சம்மதமும் வாங்குகிறார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் காயத்ரி ரீமாவை கடத்தி செல்கின்றனர். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவளை உயிருடன் அனுப்புவதாக கூற, சொத்து ஆசையால், தனது வீட்டை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்கிறார் மயில்சாமி.

கடைசியில், காயத்ரி ரெமாவை மீட்டார்களா? காயத்ரி ரெமா பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்பது மயில்சாமிக்கு தெரிந்ததா? ஷாரூக் - காயத்ரி ரெமா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஷாரூக், பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகளில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி காயத்ரி ரெமா சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக வந்து செல்கிறார். படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு மயில்சாமி முக்கிய காரணமாக இருந்துள்ளார். நாயகியின் அப்பாவாக பிச்சைக்காரராக நடித்திருப்பவர் மயில்சாமியுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்திருக்கிறார்.

பேராசை பெருநஷ்டம் என்ற கருத்தை மையப்படுத்தி வழக்கமான கதையுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி. தற்போதைய அரசியல், சினிமா என அனைத்தையும் பிச்சைக்காரர் ஒருவரின் கண்ணோட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். வசனங்களுக்கு சிரிப்பு மழை கேட்கிறது. காமெடியுடம், சுறுசுறுப்பாக ரசிக்கும்படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
எம்.எஸ்.பாண்டியன் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சுரேஷ் தேவன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `காசு மேல காசு' சிரிப்பு விருந்து. #KasuMelaKasu
எழில் வேந்தன் இயக்கத்தில் இராமாயண காவியத்தில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் `அனுமனும் மயில்ராவணனும்' படத்தின் விமர்சனம். #AnumanumMayilraavananum
இராமாயண இதிகாசத்தில் இராவணன் சீதையை கடத்திச் சென்றதால் இராமயண யுத்தம் தொடங்கும். யுத்த களத்தில் இராமனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்பார் இராவணன். ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஒருவரை தாக்குவது போர் தர்மம் அல்ல என்பதால், இன்று போய் நாளை வா இராவணா என்று இராமன் கூறுவார்.
இவ்வாறாக யுத்த களத்தில் இருந்து செல்லும் இராவணன், நாளை விடிவதற்குள் இராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட எண்ணி, பாதாள உலகில் சக்கரவர்த்தியாக திகழும் தனது சகோதரர் மயில்ராவணனின் உதவியை நாடுகிறான். தீரா தவம் செய்து மாபெரும் சக்தியை அடைய நினைக்கும் இராவணனின் சகோதரர் இராமனையும், லட்சுமணனையும் கொன்று விடுவதற்கு பதிலாக, தனது தவத்தை முழுமையாக்க இருவரையும் பலிகொடுக்க முடிவு செய்கிறார்.

இந்த விஷயம் இராமனின் விசுவாசியும், இராவணனின் தம்பியுமான விபீஷணனுக்கு தெரியவர, இராமனையும், லட்சுமணனையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து அவர்களுக்கு துணையாக அனுமனையும் இருக்கச் செய்கிறார்.
உருமாறும் சக்தி கொண்ட மயில்ராவணன், விபீஷணன் தோற்றத்தில் வந்து அனுமனை ஏமாற்றி இராமனையும், லட்சுமணனையும் பலிகொடுப்பதற்காக தனது பாதாள உலகத்திற்கு கவர்ந்து செல்கிறான்.

இந்த தகவல் விபீஷணனுக்கு தெரியவர, விடிவதற்குள் ராமன், லட்சுமணனை மீட்க வேண்டும் என்றும், இருவரையும் மீட்பது எளிதான காரியமில்லை என்றும், அதில் பல்வேறு தடங்கல்கள் வரும் என்று கூறி, இருவரையும் மீட்டு வர அனுமனை அனுப்பி வைக்கிறார்.
கடைசியில், பாதாள உலகத்தில் இருக்கும் இராமன் மற்றும் லட்சுமணனை அனுமன் எப்படி மீட்டார்? என்னென்ன இன்னல்களை அனுபவித்தார்? பாதாள உலகின் சக்கரவர்த்தியை அழித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இன்று போய் நாளை வா ராவணா என்று ராமன் கூற, அடுத்த நாளைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் எழில் வேந்தன். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சூப்பர் ஹீரோக்களையே தங்களது ரோல்மாடலாக நினைத்துக் கொள்ளும் தற்போதைய தலைமுறை, நமது புராண காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து இந்த கதையை கார்ட்டூன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக நகர்கிறது.
மொத்தத்தில் `அனுமனும் மயில்ராவணனும்' அனைவரையும் கவர்ந்தார்கள். #AnumanumMayilraavananum






