search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohini Review"

    ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மோகினி' படத்தின் விமர்சனம்.
    பிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.

    தனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும் என்று யோகி பாபு கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர். 



    அங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருக்கம் காதலாகவும் மாறவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது. 

    ஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. 

    கடைசியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார்? எதற்காக கொலைகளை செய்கிறது? அதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. படத்தை தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபு காமெடி அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். 

    லண்டனில் கொலை செய்யப்படும் பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் ஆர்.மாதேஷ். சாதாரணமாக த்ரிஷா அழகு என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார். த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இடமில்லாமல் லண்டன் சென்று பேய் படத்தை எடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஓரளவுக்கு படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 



    அருள்தேவ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. விவேக் - மெர்வினின் பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `மோகினி' அழகான பேய். 

    ×