என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி பயணக் குறிப்புகள்"

    ஆர்.ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் ஆத்விக் ஜலந்தர் - பூஜா ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விண்வெளி பயணக் குறிப்புகள் படத்தின் விமர்சனம். #VinveliPayanaKurippukal #AthvikJalandhar
    ஊரில் பெரிய தலைக்கட்டான நாயகன் ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அமைச்சர் ஒருவரின் ஒத்துழைப்பில் ஊரில் இருக்கும் அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்தி, அந்த சங்கங்களின் தலைவர்களை தனது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி பணிக்கிறார். போலீசும் ஜலந்தரின் பேச்சைக் கேட்டு நடப்பதால் அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.

    ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார். 



    இதையடுத்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சங்கங்களிடம் இருந்து பணத்தை பறித்து விண்வெளிக்கு போக முடிவு செய்கிறார் ஜலந்தர். ஆனால் அவ்வளவு பணத்தை தங்களால் கொடுக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஆசைக்கு வெளிநாட்டிற்கு சென்று வாருங்கள் என்றும் அந்த அந்த ஊர் மக்கள் கூற, ஜலந்தர் விட்டபிடியாக இல்லை.

    இதனால் ஜலந்தர் மீது கோபமடையும் ஊர்மக்கள் மற்றும் அவரின் எதிரிகள் ஜலந்தரை கொல்ல முடிவு செய்கின்றனர். காவல்துறையும் அவரை குறிவைக்க ஜலந்தர் காட்டுக்குள் ஓடி ஒளிகிறார்.

    இவ்வாறாக காட்டுக்குள் ஓடி ஒளியும் ஜலந்தர் ஊருக்குள் திரும்ப வந்தாரா? அவருக்கு தேவையான பணத்தை ஊர் மக்கள் கொடுத்தார்களா? அல்லது ஜலந்தரை கொன்றார்களா? ஜலந்தரின் விண்வெளி ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன், நாயகி உட்பட அனைவருமே புதுமுகங்கள் எனினும், ஜலந்தர் சிறப்பாகவே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் ஓட்டத்துக்கு துணையாக இருந்துள்ளனர். 

    படத்தை முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுத்திருப்பது, அந்த கிராமத்துக்கே சென்று திரும்பிய அனுபவத்தை கொடுக்கிறது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜலந்தரை கொலை செய்ய திட்டமிடும் காட்சிகள் எதார்த்தத்தை கொடுக்கின்றன. வன்முறை, இரட்டை அர்த்தம், பாடல்கள், காதல், காமெடி எதுவும் இல்லாமல் ஒரு நாவல் படிக்கும் சுவாரசியத்தை மட்டும் தர முயன்ற இயக்குனர் ஜெயப்பிரகாசுக்கு பாராட்டுகள். இறுதியில் வரும் அந்த திருப்பம் எதிர்பாராதது. திரைக்கதையின் நீளத்தை குறைத்திருந்தால் விறுவிறுப்புடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வழக்கமான படங்கள் பார்த்து போரடித்து போனவர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.



    கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஓரளவுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.ஜெயப்பிரகாஷ், ஆர்.டி.லோகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `விண்வெளி பயணக் குறிப்புகள்' ரொம்ப நீளம். #VinveliPayanaKurippukal #AthvikJalandhar

    ×