search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junga Review"

    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் விமர்சனம். #JungaReview #VijaySethupathi
    கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்துவிடுகிறார். 

    தன்னை அடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று யோசிக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் யோகி பாபுவிடம் இதுபற்றி கூறி, யோசனை கேட்கிறார். தனக்கு ஒரு அரசியல்வாதியை தெரியும் என்று கூறி, விஜய் சேதுபதியின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் கடுப்பாகும் விஜய் சேதுபதி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று புரட்டி எடுக்கிறார். விஜய் சேதுபதி அடிதடியில் ஈடுபட்டது அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது.



    அப்பா, தாத்தாவைப் போல நீயும் டானாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் சேதுபதியை வேறு ஊருக்கு அழைத்து வந்ததாக கூறும் சரண்யா பொன்வண்ணன், சென்னையில் விஜய் சேதுபதியின் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு ஒரு சொந்தமாக தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். தனது குடும்பம் டான் குடும்பம் என்பதை அறிந்து குஷியாகும் விஜய் சேதுபதி, அவர்களது திரையரங்கை மீட்பதற்காக சென்னை வருகிறார். 

    சென்னையில் சிறிய, சிறிய கட்டப் பஞ்சாயத்துகளை செய்து, சென்னையில் டானாகிறார். இதனால் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துகள் அவரைத் தேடி வருகிறது. அவரும் அவை அனைத்தையும் முடித்து வைக்கிறார். தனது தியேட்டரை மீட்கவும் பணத்தை சேர்த்து வருகிறார். 

    இது சென்னையில் இருக்கும் மற்ற டான்களுக்கு பிடிக்காமல் போக, விஜய் சேதுபதியை கொல்ல முடிவு செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்க, தியேட்டரை இடித்து விட திட்டம் போடுகிறார். 



    இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து, தியேட்டரை தான் வாங்கிக் கொள்வதாக விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால் சுரேஷ் மேனன், விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப, அவரை பழிவாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார் விஜய் சேதுபதி. 

    பாரிஸில் சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க, சாயிஷாவை கடத்த விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார். 

    கடைசியில், விஜய் சேதுபதி, சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டரை கைப்பற்றினாரா? தனது காதலியான மடோனாவை திருமணம் செய்தாரா? சாயிஷாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வந்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் கஞ்ச டான் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    சாயிஷாவும் பணக்கார வீட்டு பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் சாயிஷா, பாடல் காட்சிகளில் ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப் போட்டிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியின் காதலியாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 



    சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதியின் பாட்டி கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. இருவரும் திரையில் கலக்கியிருக்கிறார்கள். ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு இந்த படத்தை ஒரு வித்தியாசமான காமெடி படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோகுல். தான் ஒரு டான் குடும்பம் என்பதை அறியாத நாயகன், டானாக மாறி செய்யும் அட்டகாசங்கள் படத்தின் திரைக்கதையாக நகர்கிறது. ஒரு பக்கம் கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதிக்கு செலவு வைக்கும் யோகி பாபு என காட்சிகள் சுறுசுறுப்பை கூட்டுகின்றன. மற்றொரு பக்கம் சரண்யா பொன்வண்ணனும், பாட்டியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாவது பாதியில் பாட்டி கலக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். 

    சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே வந்திருக்கிறது. டூட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது. சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். 

    மொத்தத்தில் `ஜுங்கா' பார்க்கலாம் தெம்பா. #JungaReview #VijaySethupathi
    ×