என் மலர்
தரவரிசை
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் விமர்சனம். #MrChandramouli #Gauthamkarthik #Karthik
அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர்.
ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.

இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.
இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர்.

அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.
அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார்.

கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.

இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `மிஸ்டர்.சந்திரமௌலி' வலுவில்லை.
#MrChandramouli #Gauthamkarthik #Karthik
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் விமர்சனம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் அதர்வாவை தேற்ற முயற்சி செய்யும் அவரது நண்பன் கருணாகரன், மிஷ்டியை மறப்பதற்காக அதர்வாவை மற்றொரு பெண்ணுடன் கோர்த்து விடுகிறார். முதலில் அதற்கு ஆர்வம் காட்டாத அதர்வா பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார்.
இதையடுத்து விலைமாதுவான அனைகா சோதியை, அதர்வா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் கருணாகரன். இந்த நிலையில், அதர்வாவுக்கு மிஷ்டி போன் செய்து தான் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வருவதாகவும், இருவரும் சேர்வது குறித்து பேச தனது மாமாவும் தன்னுடன் வருவார் என்றும் கூறுகிறாள். மிஷ்டி வருவதற்குள் அனைகாவை வெளியே அனுப்பி விட அதர்வா முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருக்கும் தேவதர்ஷினி தனது மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதர்வாவின் உதவியை கேட்கிறார். இதையடுத்து அனைகாவை தனது வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு அதர்வா மருத்துவமனைக்கு செல்கிறார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, அனைகா வாயில் இரத்தத்துடன் செத்துக் கிடக்க அதிர்ச்சியடையும் அதர்வா கருணாகரனுக்கு போன் செய்கிறார்.
இந்த நிலையில், அனைகாவுக்கு போன் வர அதை எடுத்து பேசும் போது, அனைகா கேரளாவை சேர்ந்தவள் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து மிஷ்டிக்கு போன் செய்து அவளை இன்னொரு நாள் வரும்படியும், அனைகாவின் உடலுக்கு துணையாக கருணாகரனையும் வைத்து விட்டு, அனைகாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க அதர்வா கேரளா செல்கிறார்.

அங்கு அவருக்கு நிறைய இடைஞ்சல்கள் வருகிறது. அதையெல்லாம் முறியடித்து அனைகா மரணத்தில் இருக்கும் மர்மத்தை அதர்வா கண்டுபிடித்தாரா? மிஷ்டியுடன் மீண்டும் இணைந்தாரா? அனைகா உடலுக்கு காவலுக்கு இருந்த கருணாகரன் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள அதர்வா, இந்த படத்தில் முற்றுலும் மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக கருணாகரனும் காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கருணாகரனின் காமெடிக்கு சிரிப்பொலி கேட்கிறது.

மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம் என்றாலும், மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருப்பதுடன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனைகா சோதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் முக்கிய திருப்பமாக அவரது கதாபாத்திரம் பார்க்கப்படுகிறது. ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பானா காத்தாடி படத்திற்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். காதல், காமெடி, கிளுகிளுப்பு, கவர்ச்சி, த்ரில்லர் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார். எனினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் தனது பழைய ஃபார்முடன் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `செம போத ஆகாதே' மயக்கம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
ஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan
சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து விடுகின்றனர்.
அந்த பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்காக மூன்று பேரும் வங்கிக்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கி செல்கின்றனர். வங்கி மேலாளரான சித்ரா லட்சுமணனிடம் இதுகுறித்து மூன்று பேரும் புகார் கூற, பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் மட்டுமே அதனை திருப்பித் தர ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் கையை விரிக்கிறார்.

பணம் போனதை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் மூலமாக அவர்களுக்கு துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.
அந்த துப்பாக்கியை பயன்படுத்தி, பணத்தை தொலைத்த வங்கியில் இருந்தே கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் போலீசார் அந்த வங்கியை சுற்றிவிட, வங்கியில் இருக்கும் அனைவரையும் பிணயக் கைதிகளாக பிடித்து வைத்து அங்கிருந்து தப்பிக்க மூன்று பேரும் முயற்சி செய்கின்றனர்.

அவர்கள் தனது ஆட்கள் தான் என்று கூறி, தீவிரவாதியான மன்சூர் அலி கான் போலீசுக்கு தகவல் கொடுத்து ஜெயிலில் இருக்கும் தனது ஆளை ரிலீஸ் செய்ய நிபந்தனையிடுகிறார்.
இதனால் மூன்று பேரும் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட கடைசியில், விட்ட பணத்தை மீட்டார்களா? போலீசில் சிக்கினார்களா? சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `இட்லி' இன்னும் வேகவைத்திருக்கலாம். #ITLY #SaranyaPonvannan #KovaiSarala #Kalpana
மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அசுரவதம்' படத்தின் விமர்சனம்.
மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய் என்று மிரட்டுகிறார். யார் என்று தெரியாத ஒருவர் போன் செய்து மிரட்டுவதால் வசுமித்ரா பதட்டமடைகிறார். மறுநாள் கடை வாசலில் நிற்கும் சசிகுமார், வசுமித்ராவை முறைத்து பார்க்க, இவன் தான் தன்னை மிரட்டியது என்று தெரிந்துக் கொள்கிறார்.
பின்னர் இவர்களுக்குள் நடக்கும் சண்டையில், வசுமித்ராவை நடுரோட்டில் கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், வசுமித்ரா தப்பித்து விடுகிறார். பின்னர் பல முறை அவரை கொலை செய்ய முயற்சித்து வேண்டுமென்றே விட்டு அவருக்கு மரண பயத்தை காண்பிக்கிறார் சசிகுமார்.

பின்னர் தன் நண்பர்கள் மூலமாக சசிகுமாரை பிடிக்க முயற்சிக்கிறார் வசுமித்ரா. சிக்காமல் இருக்கும் சசிகுமார், ஒருகட்டத்தில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் வசுமித்ராவிடம் சிக்கிக் கொண்ட சசிகுமார், உயிர் தப்பினாரா? எதற்காக வசுமித்ராவிற்கு மரண பயத்தை காண்பிக்கிறார்? அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்புடன், அவருக்கே உரிய பாணியில் ஆக்ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதாவிற்கு சின்ன வேலைதான். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக வரும் வசுமித்ரா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சசிகுமாருக்கு பயந்து ஓடும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார். அவைகா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
சமூக அக்கறைக் கொண்டு ஒரு கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் மருது பாண்டியன். ஆனால், கருத்தை ஏற்றுக் கொண்டாலும், திரைக்கதையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா என்ற வசனம் வரும். அதையே இப்படத்தில் வில்லனுக்கு சசிகுமார் மரண பயத்தை காண்பிப்பதை மட்டுமே முழு திரைக்கதையாக வைத்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர், அவர்களை சரியாக உபயோகிக்க வில்லையோ என்று தோன்றுகிறது.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கோவிந்த் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அசுரவதம்’ மிரட்டல். #Asuravadham #Sasikumar
பிராட் பர்டு இயக்கத்தில் கிரெய்க் டி.நெல்சன் - ஹாலி ஹன்டர், சாமுவேல் எல் ஜாக்சன், சோபியா புஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இன்க்ரெடிபில்ஸ் 2' படத்தின் விமர்சனம். #Incredibles2
இன்க்ரெடிபில்ஸ் படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோக்களான கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர் மற்றும் இவர்களது குழந்தைகள் சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ இணைந்து உலகத்தை காப்பாற்றி இருப்பார்கள். இரண்டாவது பாகத்தில் கிரெய்க் - ஹாலிக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறக்கிறது.




இந்த பாகத்தில் சூப்பர் ஹீரோக்கள் சட்டப்படி இயங்கவில்லை என்று அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உலகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களாக வாழ்ந்தால் போதும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்படுகிறது. இது சூப்பர் ஹீரோவான இன்க்ரெடிபில்ஸ்சுக்கு வருத்தத்தை கொடுத்ததால், நாம் நல்லது செய்தாலும் அவர்களுக்கு அது தப்பாகவே தெரிகிறது, நாம் நல்லவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், ஒரு பெரிய நிறுவனம் ஒன்று சூப்பர் ஹீரோக்கள் மீது தவறு இல்லை என்பதை நாம் நிரூபிப்பதாகவும் என்றும், சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்காக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஹீரோவின் மனைவியான ஹாலி ஹன்டர் தான் அதற்கு பொருத்தமானவர் என்று அவளை தேர்வு செய்கின்றனர். இதனால் கவலைக்குள்ளாகும் கிரெய்க், தனது மனைவியை அந்த வேலைக்கு அனுப்பி விட்டு அவர்களது குழந்தைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த நிலையில், வில்லனான ஸ்கிரீன் ஸ்லேவர் பற்றிய தகவல்களை ஹாலி ஹன்டர் கவனித்து வருகிறார். மேலும் ஒரு குற்றம் செய்ததாக ஸ்கீன் ஸ்லேவரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் சூப்பர் ஹீரோக்கள் நல்லது செய்பவர்கள் தான் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்து அனைத்து நாட்டு அதிபர்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் ஒரு கப்பலில் கூடுகின்றர். அதில் சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக அறிவிக்க ஒப்பந்தம் போடவும் திட்டமிடுகின்றனர்.

இந்த நிலையில், சூப்பர் ஹீரோக்களை கெட்டவர்களாக காட்ட அந்த கப்பலில் இருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஸ்கிரீன் ஸ்லேவர் வசியம் செய்து அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.
அந்த கப்பலி இதில் க்ரெய்க்கின் குழந்தைகள் கப்பலில் இல்லாததால், அவர்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து தப்பிக்கின்றனர். கடைசியில், சூப்பர் ஹீரோக்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து விடுபட்டார்களா? நாட்டை காப்பாற்றினார்களா? சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்களா? அவர்களை காப்பாற்றியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கிரெய்க் கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர், சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ என அனைவருமே காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக கிரெய்க்கின் கடைசி குழந்தை செய்யும் குறும்பும், அட்டகாசமும் முக்கியமான காட்சியிலும், சிரிப்பை ஏற்படுத்தும்படியாக உள்ளது.
இன்க்ரெடிபில்ஸ் சூப்பர் ஹீரோக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போராடும்படியாக கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பிராட் பர்டு. படத்தில் விறுவிறுப்பும், குழந்தைதனமும், ஆக்ஷன், மாயாஜாலங்கள் என அனைத்தும் கலந்து படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணைக் கவர்கிறது.

மைக்கேல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மயார் அபுசயிதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் இன்க்ரெடிபில்ஸ் 2 கவர்ச்சி. #Incredibles2
கஜினி முருகன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர்.மனோகர் நடிப்பில் முரபா செலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘என்ன தவம் செய்தேனோ’ படத்தின் விமர்சனம். #EnnaThavamSeitheno
அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட பெரும்புள்ளி, ஆர்.என்.ஆர்.மனோகர். இவர் சாதி வெறியரும் கூட, இதற்காக பல கொலைகளை செய்தவர். இவருடைய ஒரே மகள் விஷ்ணு பிரியா. இவர் மீது அதிகம் பாசத்துடன் இருந்து வருகிறார். இவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்.
மனோகர் மேல் உள்ள கோபத்தால், நான்கு பேர் விஷ்ணு பிரியாவை கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்று கற்பழிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தெருத்தெருவாக ஐஸ் விற்கும் நாயகன் கஜினி முருகன் முரடர்களுடன் போராடி, விஷ்ணு பிரியாவை காப்பாற்றுகிறார்.
தன் மானத்தை காப்பாற்றிய கஜினி முருகன் மீது விஷ்ணு பிரியாவுக்கு காதல் ஏற்படுகிறது. தன் காதலை சொல்ல கஜினி முருகனை தேடி ஓடுகிறார். அவருடைய அப்பாவை நினைத்து பயந்து கஜினி முருகன் ஓடுகிறார். ஆனாலும் அவரை விடாமல் விஷ்ணு பிரியா துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், விஷ்ணு பிரியாவின் காதலை கஜினி முருகன் ஏற்றுக் கொள்கிறார். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களை கொலை செய்ய ஆர்.என்.ஆர்.மனோகர் தன் அடியாட்களுடன் துரத்துகிறார்.

இறுதியில் ஆர்.என்.ஆர்.மனோகர், காதலர்களை கண்டுபிடித்தாரா?, அவரிடம் இருந்து காதல் ஜோடி தப்பியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கஜினி முருகன், நடிப்புக்கு புதுசு என்பதை அவர் தொடர்பான ஆரம்ப காட்சிகள் காட்டிக் கொடுக்கின்றன. விஷ்ணு பிரியாவின் அப்பாவுக்கு பயந்து ஓடுகிற காட்சிகளிலும், அடியாட்களிடம் உதை வாங்கும்போதும், அய்யோ பாவமாக தெரிகிறார். நாயகி விஷ்ணு பிரியா, கலையான முகம். கனமான கதாபாத்திரத்தை சுலபமாக சுமந்து இருக்கிறார். கஜினி முருகனிடம் அழுது புலம்பி தன் காதலை ஏற்றுக்கொள்ள செய்கிற காட்சியிலும், அப்பா வரப்போகிறார்... நம் பிள்ளையை கொஞ்சப் போகிறார் என்று மகிழ்ச்சியில் துள்ளும் காட்சியிலும், ஒரு மகளின் இயல்பான பாச உணர்வை முகத்தில் வெளிப்படுத்துகிறார்.
சாதி வெறியும், கொலை வெறியும் கொண்ட முரட்டுத்தனமான அப்பா வேடத்தில் பயமுறுத்தியிருக்கிறார், ஆர்.என்.ஆர்.மனோகர். அவருடைய பெரிய கண்களும், மிரட்டலான குரலும் ரத்த வெறி பிடித்த பெரிய மனிதர் வேடத்துக்கு ஆயுதங்கள் போல் அமைந்துள்ளன. சிங்கம்புலி, மயில்சாமி, ஆர்த்தி கணேஷ் ஆகிய மூவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

தேவ்குரு இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சந்திரகாந்தின் பின்னணி இசையில், வாத்தியங்களின் சத்தம் மிகையாக இருக்கிறது. முரபாசெலன் டைரக்டு செய்திருக்கிறார். காதலும் அதனால், ஏற்படும் கவுரவ கொலையையும் மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர். பார்த்த கதையும், பழகிய கற்பனைகளுமாக படத்தின் முதல் பாதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. இரண்டாம் பாதியில், கதை வேகம் பிடித்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘என்ன தவம் செய்தேனோ’ பார்க்கலாம்.
விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ரோகிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிராபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம். #TrafficRamasamy #SAChandrasekar
டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது திரையில் படமாக நகர்கிறது. கதையில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி ரோகிணி மற்றும் தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார் டிராபிக் ராமசாமி.
தனது கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் டிராபிக் ராமசாமி முதலில் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அளிக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் மதிப்பில்லாமல் போக, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுகிறார்.

தொடக்கத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை கையில் எடுக்கும் டிராபிக் ராமசாமி அதில் வெற்றியும் காண்கிறார். இந்த நிலையில், நகர்ப் புறத்தில் மீன்பாடி வண்டிகளால் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதாக உணர்கிறார். மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, இதுகுறித்து ஒரு கணக்கெடுப்பும் நடத்துகிறார். அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கும், ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொதுநலனுக்கா போராடும் டிராபிக் ராமசாமியையும் போலீசார் தாக்குவதால், அவர் மீது ஆர்.கே.சுரேஷுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. இதையடுத்து ராமசாமிக்கு அவர் சிறிய சிறய உதவிகளையும் செய்ய முன்வருகிறார்.
இதில் மீன்பாடி வழக்கில் தொடர்புடையதாக சம்பந்தப்பட்ட அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்கிறார். இதேபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி வழக்கு போடுகிறார்.

இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் சதி செய்கின்றனர். அவர்களிடமிருந்து டிராபிக் ராமசாமியை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆர்கே.சுரேஷயும் கொல்ல சதி நடக்கிறது.
கடைசியில், டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? கொலைகாரர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் பயணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில், டிராபிக் ராமசாமியையே நினைவுபடுத்துகிறார். அவரது நடையிலும், உடையிலும், ஒவ்வொரு அசைவிலும் டிராபிக் ராமசாமி தெரிகிறார். குறிப்பாக இந்த வயதிலும் சந்திரசேகர் தன்னை வருத்திக் கொண்டே நடித்திருக்கிறார்.

டிராபிக் ராமசாமியின் மனைவியாக நடித்துள்ள ரோகிணி, காவலராக பிரகாஷ்ராஜ், ரவுடி கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ், வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். நீதிபதியாக அம்பிகா கலகலக்க வைத்திருக்கிறார். மற்றபடி இமான் அண்ணாச்சி, குஷ்பு, சீமான், மனோபாலா, மதன் பாப் என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். டிராபிக் ராமசாமியின் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.
டிராபிக் ராமசாமியின் முழு வாழ்க்கையை அப்படியே படமாக எடுக்கவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் நடந்த, அவர் சந்தித்த பிரச்சனைகளில் சிலவற்றை, குடும்பம், பாசம், போராட்டம், சமூக நலன் என மாசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி. அதுமட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்கள், கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டால் தான், நாடு திருந்தும், முன்னேறும் என்பதையும் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
பாலமுரளி பாலு பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `டிராபிக் ராமசாமி' உத்வேகம். #TrafficRamasamy #SAChandrasekar
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனம். #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.
விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.

சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.
இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
ஜெய் இயக்கத்தில் ராஜ்பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் விமர்சனம். #AndhraMess
பெரிய தாதாவாக இருக்கும் வினோத், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர்களிடம், அவர்களுக்கு சொந்தமான பொருட்களை தூக்கி வந்து விடுகிறார். அப்படி கடன் வாங்கிய ஏ.பி.ஸ்ரீதரிடம் ஒரு பெட்டியை தூக்கி வந்தால், கடனை திருப்பி தரவேண்டாம் என்று கூறி அனுப்புகிறார்.
ஏ.பி.ஸ்ரீதரும், தனது கூட்டாளிகளான ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோருடன் பெட்டியை தூக்குகிறார். அந்த பெட்டியை திறந்து பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. இந்த பணத்தை வினோத்திடம் கொடுக்காமல், நான்கு பேரும் வடமாநிலத்திற்கு தஞ்சம் அடைகிறார்கள்.
அங்கு ஜமீனாக இருக்கும் அமர் வீட்டில் அடைக்கலம் அடைகிறார்கள். சில நாட்களில் ஜமீனின் இளம் வயது மனைவியான தேஜஸ்வினிக்கும் ராஜ் பரத்திற்கும் காதல் ஏற்படுகிறது.

இறுதியில் தாதா வினோத், பணத்தை ஏமாற்றி சென்ற ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் கூட்டாளிகளை கண்டுபிடித்தாரா? ராஜ் பரத், ஜமீன் மனைவி தேஜஸ்வினியின் காதல் என்ன ஆனது? ஜமீனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பாலாஜி, மதி ஆகியோர் கூட்டாளிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகனாக தனித்து தெரிந்திருக்கிறார் ராஜ் பரத். காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பார்வையிலேயே மிரட்டுகிறார் ஏ.பி.ஸ்ரீதர். பிரபல ஓவியரான இவர் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த வில்லன் கிடைத்து விட்டார் என்றே சொல்லலாம். பாலாஜி, மதி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அறிமுக காட்சியிலேயே ரசிகர்களை துப்பாக்கியால் கைது செய்திருக்கிறார் நாயகி தேஜஸ்வினி. இவர் அதிகம் பேசவில்லை என்றாலும் இவரது கண்கள் அதிக பேசுகிறது. ரொமன்ஸ் காட்சிகளில் கிரங்கடித்திருக்கிறார். மதியின் காதலியாக வரும் பூஜாவின் நடிப்பு திரைக்கதைக்கு ஒட்டவில்லை. தாதாவாக வரும் வினோத், ஜமீனாக வரும் அமர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

பிளாக் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய். இவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. பல இடங்களில் காட்சியமைப்பு சிறப்பாக அமைத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதைதான் படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை. ஒரு யானை நடந்தால் 4 எறும்புகள் இறக்கும். அதுவே ஒரு யானை இறந்தால், 40 எறும்புகள் வாழும். அதாவது ஒரு கெட்டவன் வாழ்ந்தால், அவனை வைத்து நான்கு பேர் வாழ்வார்கள். அதுவே அவன் இறந்தான் 40 பேர் வாழ்வார்கள் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர்.
பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பிளாக் காமெடி படத்திற்கு ஏற்ப படம் முழுக்க ஒரே கலர் டோனை உபயோகப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஆந்திரா மெஸ்’ சுவைக்கலாம்.
சிவானி செந்தில் இயக்கத்தில் ஜிஸ்னு மேனன் - சிவானி செந்தில் நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்கில் படத்தின் விமர்சனம். #KargilReview
ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் நாயகன் ஜிஸ்னு மேனனும், நாயகி சிவானி செந்திலும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் சிவானியின் அப்பாவை பெங்களூருவுக்கு கூட்டி வர வேண்டும் என்றும், இதற்கிடையே ஜிஸ்னு, அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி காதலுக்கு பச்சைக் கொடி வாங்கிவிட வேண்டும் என்றும் சிவானி திட்டமிடுகிறார். சிவானியின் அப்பாவை கூட்டிவர ஜிஸ்னுவும் சம்மதம் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், ஜிஸ்னு மேனனுக்கு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்க, அதற்கான இண்டர்வியூ வைக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக ஜிஸ்னு பெங்களூரு செல்கிறார். இதையடுத்து சிவானி அப்பாவை அழைத்து வர தனது நண்பன் ஒருவனை அனுப்பி வைக்கிறார். கடைசி நேரத்தில் ஜிஸ்னுவின் நண்பனும் சொதப்ப, ஜிஸ்னு மேனனை ஒருதலையாக காதலிக்கும், அவருடன் பணிபுரியும், அவரின் கல்லூரி தோழி உதவிக்கு வருகிறாள்.
அவளிடம் தனது பிரச்சனையை கூற, சிவானியின் அப்பாவை தான் அழைத்து வருவதாக அவள் கூறுகிறாள். இதன்மூலம் ஜிஸ்னு மேனனையும், சிவானியையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று ஜிஸ்னுவின் தோழி திட்டமிடுகிறாள்.

இவ்வாறாக ஒரே நாளில் தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் ஜிஸ்னு மேனன் எப்படி சமாளித்தார்? சிவானியின் தந்தை சம்மதத்தை வாங்கினாரா? சிவானியை கரம் பிடித்தாரா? அமெரிக்கா சென்றாரா? ஜிஸ்னுவின் தோழியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகன் ஜிஸ்னு மேனன் மட்டுமே காட்சியில் தோன்றும் நிலையில், அதை அவர் பொறுப்புடன் சமாளித்து நடித்திருக்கிறார். படத்தை இயக்கியுள்ளதுடன், படத்தில் நாயகியாகவும் நடித்துள்ள சிவானி மேனன், காட்சியில் நாயகனை மட்டுமே நிறுத்தி கதையை நகர்த்தி இருப்பது பொறுமை இழக்கச் செய்கிறது. கதைக்கேற்ற விறுவிறுப்பு படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே நாளில் நாயகனை பிரச்சனைகள் சூழ அதனை அவர் காரில் பயணம் செய்து கொண்டே சமாளிக்கும் படியாக காட்சிகள் போர் அடிக்க வைக்கிறது.

விக்னேஷ் பை பின்னணி இசை படத்திற்கு பலம். கணேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் `கார்கில்' வலுவில்லை.
எம்.சத்யமூர்த்தி இயக்கத்தில் மு.ரா.சத்யா - மானசா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்னோடு நீ இருந்தால்' படத்தின் விமர்சனம். #EnnoduNeeIrundhal
வெளியூர் வரும் நாயகன் மு.ரா.சத்யா தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். இவர்கள் இரண்டு பேரும் ரியல் எஸ்டேட் நிறுவனதத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த நாயகி மானசா நாயர் சென்னை வரும் போது, நண்பர்கள் மூலமாக சத்யா - மானசா நாயர் சந்திப்பு நடக்கிறது.
பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் மானசாவை ஒருபக்கமாக காதலிக்க ஆரம்பிக்கிறார் சத்யா. இந்த நிலையில், மானசாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக செய்தி கேட்டு அதிர்ச்சியாகிறார். நாட்டில் நடக்கும் தவறுகளின் பட்டியலை சேகரித்து வைக்கும் சத்யா, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தணடனை கொடுக்க வேண்டும் என்று மனநிலை உடையவர்.
இப்படி இருக்க மானாசாவின் திருமணம் நின்றுவிடுகிறது. மானசாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தப்பானவர் என்ற தகவல் கிடைக்கிறது. இதையடுத்து மானசாவை சந்திக்க ஆசைப்படும் சத்யாவுக்கு மானசாவின் போன் கிடைக்கிறது. அதில் பேசும் மானசா, குறிப்பிட்ட நபர்களை சுட்டிக்காட்டி அவர்கள் தவறு செய்துள்ளதாகக் கூறி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

இதையடுத்து சத்யா அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறார். செய்திகளில் வரும் தவறுகள் உட்பட தவறு எங்கு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கொலை செய்கிறார். இந்த நிலையில், சத்யாவுக்கு விபத்து ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு அவரை சோதனை செய்து பார்த்ததில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டது தெரிகிறது.
கடைசியில், சத்யா சரியான மனநிலைக்கு வந்தாரா? தெரிந்து தான் கொலை செய்தாரா? நாயகியை கரம்பிடித்தாரா? அல்லது அவரது கொலை வேட்டை தொடர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சத்யா, மானசா நாயர், பிளாக் பாண்டி, வெண்ணிற ஆடை மூர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் எம்.சத்யமூர்த்தி. படத்தின் கதைக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பு குறைவாக உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
கே.கே. இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மணி ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராக வந்துள்ளன.
மொத்தத்தில் `என்னோடு நீ இருந்தால்' கற்பனை. #EnnoduNeeIrundhal
ரசாக் இயக்கத்தில் ரத்தீஷ் - தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா படத்தின் விமர்சனம். #KilambitaangayaaKilambitaangayaa
நண்பர்கள் இருவர் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்துகின்றனர். நிறுவனம் நஷ்டத்தில் போவதாகக் கூறி, தப்பான கணக்கு காட்டி தனது நண்பரை ஏமாற்றப் பார்க்கிறார். தன்னை ஏமாற்ற நினைப்பதை அறிந்து கொள்ளும் அவரது நண்பர் தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டும் கொடுக்காததால், அவரை பழிவாங்க முடிவு செய்கிறார்.
இதுகுறித்து தனது உதவியாளர் அனு மோகனிடம் கேட்க, அவர் முன்னாள் ரவுடிகளான சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட 4 பேரை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த ரவுடிகள் மூலம், தனக்கு பணம் தராத தனது கூட்டாளியின் மனைவி, மகளை கடத்தி வர திட்டமிடுகிறார்.
வயதான காரணத்தால் கடத்தல் தொழில் அவர்களுக்கு செட்டாகவில்லை. இதையடுத்து நாயகன் ரித்தீஷ் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மனைவி, மகளை கடத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு போன் செய்யும் கடத்தல்காரர்கள், அவரை மிரட்டுகின்றனர்.
அதேநேரத்தில் பின்னணியில் டிவியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் தான் என்று போலீசார் முடிவு செய்து அவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கின்றனர்.

இதையடுத்து நாயகன் உள்ளிட்ட கடத்தல்காரர்கள் அனைவரும் காட்டுக்குள் தப்பி ஓடுகின்றனர். அங்கு காட்டுவாசியான மன்சூர் அலிகானிடம் சிக்கிக் கொள்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்க பாக்யராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
கடைசியில் நாயகன் உள்ளிட்ட அனைவரும் போலீசில் சிக்கினார்களா? அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன் ஆகிய அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களின் வெகுளித்தனமான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகனாக வரும் ரத்தீஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக கே.பாக்யராஜ் வந்த பிறகு திரைக்கதை சூடுபிடித்திருக்கிறது. அரசியல்வாதியாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், காட்டுவாசித் தலைவராக வரும் மன்சூரி அலிகான் ஆகியோர் திரைக்கதைக்கு ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
கடத்தல்காரர்களிடம் சிக்கும் அஸ்மிதாவின் நடிப்பு அபாரம். மற்றொரு நாயகியான தாரா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில், பல திறமையான இயக்குனர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரசாக். நடிகர்களை தேர்வு செய்து அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதி மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா’ காமெடி கலாட்டா.






