search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalpana Priyadarshini"

    ஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இட்லி' படத்தின் விமர்சனம். #ITLY #SaranyaPonvannan
    சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து விடுகின்றனர். 

    அந்த பணத்தை வங்கிக் கணக்கில் போடுவதற்காக மூன்று பேரும் வங்கிக்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கி செல்கின்றனர். வங்கி மேலாளரான சித்ரா லட்சுமணனிடம் இதுகுறித்து மூன்று பேரும் புகார் கூற, பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் மட்டுமே அதனை திருப்பித் தர ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் கையை விரிக்கிறார். 



    பணம் போனதை எண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் மூலமாக அவர்களுக்கு துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது. 

    அந்த துப்பாக்கியை பயன்படுத்தி, பணத்தை தொலைத்த வங்கியில் இருந்தே கொள்ளையடிக்க திட்டமிட்டு வங்கிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் போலீசார் அந்த வங்கியை சுற்றிவிட, வங்கியில் இருக்கும் அனைவரையும் பிணயக் கைதிகளாக பிடித்து வைத்து அங்கிருந்து தப்பிக்க மூன்று பேரும் முயற்சி செய்கின்றனர். 



    அவர்கள் தனது ஆட்கள் தான் என்று கூறி, தீவிரவாதியான மன்சூர் அலி கான் போலீசுக்கு தகவல் கொடுத்து ஜெயிலில் இருக்கும் தனது ஆளை ரிலீஸ் செய்ய நிபந்தனையிடுகிறார். 

    இதனால் மூன்று பேரும் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்பட கடைசியில், விட்ட பணத்தை மீட்டார்களா? போலீசில் சிக்கினார்களா? சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. மூன்று பேருமே படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டு என மூத்த நடிகர்கள் முதிர்ச்சியான நடிப்புடன் காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மன்சூர் அலி கான் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    விட்ட பணத்தை திரும்ப பெற பணம் போன வழியையே தேர்ந்தெடுத்து அதில் சிக்கிக் கொண்டு அல்லோல கல்லோலபடும் மூன்று பெண்கள் அதில் வெற்றி பெற்றார்களா என்பதை மையமாக வைத்து காமெடி, பாசம், குடும்பம் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் ஆர்.கே.வித்யாதரன். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பையும், காட்சியின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 



    ஹரி கே.கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பரணி கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `இட்லி' இன்னும் வேகவைத்திருக்கலாம். #ITLY #SaranyaPonvannan #KovaiSarala #Kalpana

    ×