search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Mess Review"

    ஜெய் இயக்கத்தில் ராஜ்பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் விமர்சனம். #AndhraMess
    பெரிய தாதாவாக இருக்கும் வினோத், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர்களிடம், அவர்களுக்கு சொந்தமான பொருட்களை தூக்கி வந்து விடுகிறார். அப்படி கடன் வாங்கிய ஏ.பி.ஸ்ரீதரிடம் ஒரு பெட்டியை தூக்கி வந்தால், கடனை திருப்பி தரவேண்டாம் என்று கூறி அனுப்புகிறார்.

    ஏ.பி.ஸ்ரீதரும், தனது கூட்டாளிகளான ராஜ் பரத், பாலாஜி, மதி ஆகியோருடன் பெட்டியை தூக்குகிறார். அந்த பெட்டியை திறந்து பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. இந்த பணத்தை வினோத்திடம் கொடுக்காமல், நான்கு பேரும் வடமாநிலத்திற்கு தஞ்சம் அடைகிறார்கள்.

    அங்கு ஜமீனாக இருக்கும் அமர் வீட்டில் அடைக்கலம் அடைகிறார்கள். சில நாட்களில் ஜமீனின் இளம் வயது மனைவியான தேஜஸ்வினிக்கும் ராஜ் பரத்திற்கும் காதல் ஏற்படுகிறது. 



    இறுதியில் தாதா வினோத், பணத்தை ஏமாற்றி சென்ற ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் கூட்டாளிகளை கண்டுபிடித்தாரா? ராஜ் பரத், ஜமீன் மனைவி தேஜஸ்வினியின் காதல் என்ன ஆனது? ஜமீனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பாலாஜி, மதி ஆகியோர் கூட்டாளிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகனாக தனித்து தெரிந்திருக்கிறார் ராஜ் பரத். காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பார்வையிலேயே மிரட்டுகிறார் ஏ.பி.ஸ்ரீதர். பிரபல ஓவியரான இவர் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த வில்லன் கிடைத்து விட்டார் என்றே சொல்லலாம். பாலாஜி, மதி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

    அறிமுக காட்சியிலேயே ரசிகர்களை துப்பாக்கியால் கைது செய்திருக்கிறார் நாயகி தேஜஸ்வினி. இவர் அதிகம் பேசவில்லை என்றாலும் இவரது கண்கள் அதிக பேசுகிறது. ரொமன்ஸ் காட்சிகளில் கிரங்கடித்திருக்கிறார். மதியின் காதலியாக வரும் பூஜாவின் நடிப்பு திரைக்கதைக்கு ஒட்டவில்லை. தாதாவாக வரும் வினோத், ஜமீனாக வரும் அமர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.



    பிளாக் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய். இவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. பல இடங்களில் காட்சியமைப்பு சிறப்பாக அமைத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதைதான் படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை. ஒரு யானை நடந்தால் 4 எறும்புகள் இறக்கும். அதுவே ஒரு யானை இறந்தால், 40 எறும்புகள் வாழும். அதாவது ஒரு கெட்டவன் வாழ்ந்தால், அவனை வைத்து நான்கு பேர் வாழ்வார்கள். அதுவே அவன் இறந்தான் 40 பேர் வாழ்வார்கள் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர்.

    பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முகேஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பிளாக் காமெடி படத்திற்கு ஏற்ப படம் முழுக்க ஒரே கலர் டோனை உபயோகப்படுத்தி இருக்கிறார். 

    மொத்தத்தில் ‘ஆந்திரா மெஸ்’ சுவைக்கலாம்.
    ×