என் மலர்tooltip icon

    தரவரிசை

    அருண் காந்த் வி இயக்கத்தில் ராம்குமார் - தனுஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோகோ மாக்கோ' படத்தின் விமர்சனம். #GokoMako #GokoMakoReview #RamKumar #Dhanusha
    சிறு சிறு ஆல்பங்களுக்கு இசையமைத்து வரும் அருண் காந்த் வி, தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆல்பங்களுக்கு வீடியோ பதிவை உருவாக்க எண்ணுகிறார். அதற்காக கேமராமேனாக சாம்ஸை தேர்வு செய்கிறார்.

    ஒய்.ஜி.மகேந்திரனும், சந்தானபாரதியும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது மகன், மகளான நாயகன் ராம்குமாரும், நாயகி தனுஷாவும் காதலிக்கிறார்கள். இருவரும் ஒருநாள் சுற்றுலா செல்ல, அவர்களுடன் சாம்சும் செல்கிறார். இவர்களை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை தனது முதலாளியான அருண் காந்துக்கு அனுப்பி வைக்கிறார் சாம்ஸ்.

    கடைசியில், ராம்குமார் - தனுஷாவின் காதல் என்னவானது? அருண்காந்தின் கனவு நிறைவேறியதா? அந்த வீடியோவால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ராம்குமார், தனுஷா, அஜய் ரத்னம், சாம்ஸ், டெல்லி கணேஷ், தினேஷ், சந்தான பாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், சாரா ஜார்ஜ், வினோத் வர்மா என அனைத்து கதாபாத்திரங்களும் ஓரளவு திருப்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    படத்தை முழுக்க முழுக்க சிறிய ரக கேமராவிலேயே படமாக்கி இருக்கிறார் அருண் காந்த் வி. படத்தில் சொல்லும்படியாக பெரியதாக எதுவும் இல்லை என்றாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். இயக்குநரே படத்திற்கு இசைமைத்திருக்கிறார். சிறிய கேமரா என்பதால் காட்சிகள் அதற்கேற்றாற்போல் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `கோகோ மாக்கோ' கோமா தான். #GokoMako #GokoMakoReview #RamKumar #Dhanusha

    ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
    ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

    காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.



    தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.



    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

    சாம் கான் இயக்கி நடித்து, அவருடன், திவ்யகானா ஜெய்ன், எலிசபெத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காதல் மட்டும் வேணா' படத்தின் விமர்சனம். #KadhalMattumVena #KadhalMattumVenaReview #SamKhan
    படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கும் நாயகன் சாம் கானுக்கு திருமண ஆசை வருகிறது. ஆனால் அவரது வீட்டில் பெண் பார்ப்பதில் தீவிரம் காட்டாத நிலையில், ஒரு பெண்ணுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருடன் நெருங்கிப் பழக ஒரு நாள் திடீரென்று அந்த பெண் மாயமாகிறாள். இதுபற்றி போலீசில் புகார் அளிக்க, சில மாதங்களுக்கு முன்பே அந்த பெண் இறந்தவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    கடைசியில் சாம் கானின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அவருடன் பழகிய பெண் யார்? அந்த பெண் இறந்தது உண்மையா? அவரது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இயக்கம், நடிப்பு என இரண்டையும் கவனித்திருக்கிறார் சாம் கான். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாவது பாதி தொய்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. திவ்யகானா ஜெய்ன், எலிசபெத், ஹமீதா கட்டூன் என அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    சாந்தன் அன்பாஜாகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். ஜே.எஸ்,கே-வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `காதல் மட்டும் வேணா' சத்தியமாக வேண்டாம். #KadhalMattumVena #SamKhan #DivyanganaaJain #Elizabeth

    ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
    பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

    ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.



    கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.

    காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.



    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif 

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
    கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.

    இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.



    சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

    ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.



    விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.

    என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். 



    ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    அண்ணன்களுக்கு அரணாய் நிற்கும் ராம்சரணின் ஆக்‌ஷன் சரவெடி - வினய விதேய ராமா விமர்சனம்
    கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடும் 4 சிறுவர்கள் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு சிறு குழந்தை இருப்பதை பார்க்கிறார்கள். பின்னர் அந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்காக 4 பேரும் சேர்ந்து உழைக்கிறார்கள். அந்த குழந்தை தான் ராம் சரண். அவரது அண்ணன்களாக பிரசாந்த் உள்ளிட்ட 4 பேர் வருகிறார்கள்.

    கொஞ்சம் பெரிய ஆளான பிறகு வேலைக்கு செல்லும் தனது அண்ணன்களை படிக்க அனுப்பிவிட்டு தான் வேலை பார்க்க ஆரம்பிக்கிறார் ராம் சரண். 4 அண்ணன்களும் படித்து பெரிய ஆளாகின்றனர். ராம் சரண் அடிதடி என்று ஊர் சுற்றி வருகிறார். இதில் கலெக்டராகும் பிரசாந்த்துக்கு சில பிரச்சனைகள் வருகின்றன.

    தனது அண்ணனுக்கு வரும் பிரச்சனைகளை ராம்சரண் எப்படி தடுக்கிறார்? அண்ணன்களுக்கு எப்படி அரணாகிறார்? என்பதே ஆக்‌ஷன் கலந்த மீதிக்கதை.



    படத்தில் ராம்சரண் முழு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அண்ணன்கள் மீது பாசம், காதல், அடிதடி என அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். கியாரா அத்வானி அலட்டல் இல்லாமல் அழகாக வந்து செல்கிறார். பிரசாந்த் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அவருக்கு இன்னும் வலுவான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்.

    மற்றபடி விவேக் ஓபராய், சினேகா, அர்யான் ராஜேஷ், மதுமிதா, ரவி வர்மா, ஹரிஷ் உத்தமன், சலபதி ராவ், ஈஷா குப்தா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.



    ஒரு முழு நீள ஆக்‌ஷன் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் பொயபடி ஸ்ரீனு. தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான ஆக்ஷன் காட்சிகளை படத்தில் பார்க்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. மற்றபடி குடும்பம், பாசம், காதல், காமெடி என ஆங்காங்கு ரசிக்கும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 

    தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். தமிழில் பாடல்களும் கேட்கும் ரகம் தான். ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் `வினய விதேய ராமா' சரவெடி. #VinayaVidheyaRama #VinayaVidheyaRamaReview #RamCharan #KiaraAdvani

    ராபர்ட் ரோட்ரிகஸ் இயக்கத்தில் கீயன் ஜான்சன் - ரோசா சாலசர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அலிடா பேட்டில் ஏஞ்சல்' படத்தின் விமர்சனம். #AlitaBattleAngel #AlitaBattleAngelReview
    அயர்ன் சிட்டியில் பேரசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், அங்கு உடற்பாகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு, தேவையான செயற்கைக் கருவிகளை பொருத்தும் வேலையை செய்து வருகிறார். தனக்கு தேவையான பாகங்களை சேகரிக்க செல்லும் இடத்தில் வால்ட்சுக்கு அலிடாவின் தலையை கிடைக்கிறது.

    இதையடுத்து இறந்துபோன தனது மகளின் செயற்கை உடற்பாகங்களை அலிடாவுக்கு பொருத்தி உயிர்பிக்கிறார். தனது பழைய நினைவுகளை மறந்த நிலையில் உயிர்பெறும் அலிடாவுக்கு அற்புத சக்திகள் இருக்கின்றன.



    மறுபுறத்தில் நாயகன் கீன் ஜான்சன் உதிரி பாகங்களை திருடி விற்று வருகிறார். அலிடாவுக்கும், கீனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பின் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இந்த நிலையில், அந்த நகரில் சிறப்பாக இருக்கும் அனைத்தையும் அடைய நினைக்கும் மெஹர்சலா அலி, அலிடாவின் இதயத்தை திருட நினைக்கிறார்.

    இந்த தகவல் அலிடாவுக்கு தெரிய வர, அவள் தனது எதிரிகளை அழிக்க நினைக்கிறாள். அதே நேரத்தில் தனது பழைய நினைவுகளையும் பெற முயற்சிக்கிறார். 

    கடைசியில், அலிடா தனது எதிரிகளை அழித்தாளா? பழைய நினைவுகள் அலிடாவுக்கு திரும்ப வந்ததா? அலிடா - கீன் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    மனிதன் - இயந்திரத்திற்கு இடையேயான காதலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராபர்ட் ரோட்ரிகஸ். படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன், காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படத்தை 3டி-யில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.

    ஜங்கி எக்ஸ்.எல்.-ன் பின்னணி இசையும், பில் போப்பின் ஒளிப்பதிவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஸ்டீபன் இ.ரிக்வினின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `அலிடா பேட்டில் ஏஞ்சல்' ஆக்‌ஷன் அதிரடி. #AlitaBattleAngel #AlitaBattleAngelReview

    ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

    இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.



    இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

    கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

    இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.



    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

    ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக் - மீரா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவதார வேட்டை' படத்தின் விமர்சனம். #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.



    கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.



    உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

    மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `அவதார வேட்டை' கோட்டைவிட்டது. #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak #RadhaRavi #MeeraNayar #Sona

    சீயோன் இயக்கத்தில் கருணாகரன் - சந்தோஷ் பிரதாப் - அருண் ஆதித் - அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் விமர்சனம். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran
    டாக்சி டிரைவராக இருக்கும் கருணாகரனின் அண்ணன் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டே டாக்சி ஓட்டி வருகிறார் கருணாகரன். கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். மெக்கானிக்காக இருக்கும் அருண் ஆதித் தனது காதலி சுபிக்‌ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார். 

    இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அண்ணனை தேடுவது, காதலியிடம் கெஞ்சுவது, கந்துவட்டி கும்பலின் பின்னணி தெரிந்ததும் தப்பி ஓடுவது என்று கருணாகரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    மிரட்டி வசூல் செய்யும் அடியாள் வேடத்தில் சந்தோஷ். ஒரு கட்டத்தில் நிதர்சனம் புரிந்து அவர் சாந்தமாவது, இறுதிக்காட்சியில் வஞ்சத்தால் வீழ்த்தப்படுதல் என அவருக்கும் இது முக்கியமான படம். யோக் ஜேபி வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருண் ஆதித் சாதாரண இளைஞனாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

    அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா என 3 கதாநாயகிகள். மூவரில் சுபிக்‌ஷா கவனிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.



    கந்துவட்டி என்று சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய வி‌ஷயத்தின் பின்னணியில் இருக்கும் தாதா கும்பல், போலீஸ் பின்னணி, அரசியல் ஆதரவு அனைத்தையும் திரில்லர் கதையாக கூறி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சீயோன். அன்றாடம் நடக்கும் பகீர் சம்பவங்களை கதையில் கோர்த்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக தெரிகிறார்.

    5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்துவட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் பேசியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கந்துவட்டி பற்றி அனைவரும் ரசிக்க விதத்தில் திகில் படமாக கொடுத்த விதத்தில் பொது நலன் கருதி தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது.

    ஹரி கணேஷ் இசை, சுவாமிநாதன் ஒளிப்பதிவு இரண்டும் கச்சிதம். கிரைசின் படத்தொகுப்பில் சில காட்சிகளை கத்தரித்து இருக்கலாம்.

    மொத்தத்தில் `பொது நலன் கருதி' பார்க்க வேண்டும். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran #SanthoshPrathap #ArunAdith #AnuSithara #Subhiksha #Leesa #Zion

    ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனம். #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் டாக்டராக இருக்கிறார் நாயகி ஷிர்தா சிவதாஸ். ஷிர்தாவிடம் யாராவது காதலை சொன்னால், அவரை பேய் அடித்துவிடுகிறது.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் டி.எம்.கார்த்திக், சந்தானத்தின் தொல்லை தாங்க முடியாமல், சந்தானத்தை, ஷர்தாவுடன் கோத்துவிட திட்டமிடுகின்றனர். அதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. ஷிர்தாவை பார்த்தவுடன் சந்தானத்திற்கு அவர் மீது காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்ல சந்தானத்தையும் பேய் அடித்துவிடுகிறது.

    கேரளாவில் மந்திரவாதியாக இருக்கும் ஷிர்தாவின் அப்பாவை பார்த்து பேசினால் தான் எல்லாம் சரியாகும் என்று தனது மாமா மொட்டை ராஜேந்திரனுடன் கேரளா செல்கிறார் சந்தானம்.



    அங்கு ஷிர்தாவின் தந்தையை பார்த்து தனது காதல் பற்றி பேசினாரா? சந்தானத்தின் காதலுக்கு ஷிர்தாவின் அப்பா பச்சைக் கொடி காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தில்லுக்கு துட்டுவின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் தனது வழக்கமான காமெடி மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஷிர்தா சிவதாசுக்கு தமிழில் முதல் படம் என்றாலும், அவர் தனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    சந்தானத்தின் மாமாவாக வரும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரமும் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் படத்தின் ஹைலைட். இருப்பினும் ஒரு சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. மாஸ்டர் சிவசங்கர், ஐயப்பா பைஜூ, டி.எம்.கார்த்திக், ராமர், தனசேகர் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கும் ராம் பாலா ரசிர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பேயை கலாய்க்கும்படியாக வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாவது பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷபீரின் பின்னணி இசை படத்திற்கு பலம், பாடல்களும் கேட்கும் ரகம் தான். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `தில்லுக்கு துட்டு 2' ஒர்க்அவுட்டு. #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    முருகேஷ் இயக்கத்தில் சரண் - கிஷோர் - ஆயிரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சகா' படத்தின் விமர்சனம். #SagaaReview #Sagaa #Saran #PrithviRajan #Kishore #PakodaPandi #SreeRaam #Aayira
    சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோர் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அங்கு பிரித்விராஜ் - சரண் இடையே மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து நெருங்கிய நண்பர்களான சரண் - பாண்டியை ஜெயிலில் பிரித்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் பாண்டி இறந்துபோக அதற்கு காரணம் பிரித்விராஜ் தான் என்று அவரை பழிவாங்க நினைக்கிறார் சரண்.

    ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் இவர்கள் அனைவரும் யார்? இவர்களின் முன்கதை என்ன? அவர்கள் செய்த குற்றம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி அனைவருமே அவர்களது வழக்கமான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கின்றனர். ஆயிரா குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

    சண்டை போடுவது, பெட் கட்டுவது, தவறாக பேசுவது என, ஒரு சீர்திருத்த பள்ளியில் என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதையெல்லாம் படத்தில் இடம்பெறுகிறது. இதன்மூலம், தவறு செய்பவர்கள் ஜெயிலுக்கு போனாலும் சுதந்திரமாக வாழலாம், கெத்து காட்டலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. சில இடங்களில் தேவையில்லாமல், மாஸ் ஹீரோவுக்களை காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி தொழில்நுட்ப குழுவை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.



    ஷபிர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் திருப்திபடுத்தியிருக்கிறார். நிரண் சந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ஹரிஹரனின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம் தான்.

    மொத்தத்தில் `சகா' சீர்திருத்தம் வேண்டும். #SagaaReview #Sagaa #Kishore #Saran #PakodaPandi #PrithviRajan #SreeRaam #Aayira 

    ×