என் மலர்
தரவரிசை
நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சத்ரு’ படத்தின் விமர்சனம். #Sathru #SathruMovieReview #Kathir #SrushtiDange
லகுபரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணக்கார வீட்டு குழந்தைகளாக தேர்ந்தெடுத்து கடத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கிறார். அந்த வகையில் ஒருவரின் குழந்தை கடத்தப்பட, தனது குழந்தையை மீட்க போலீசின் உதவியை நாடுகிறார்.
மாரிமுத்து தலைமையிலான காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருக்கும் கதிர் இந்த வழக்கை விசாரிக்கிறார். குழந்தையின் தந்தையிடம் பணத்தை வாங்கிச் செல்லும் லகுபரனின் நண்பனை டிராக்கர் மூலமாக கண்டுபிடித்து சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை மீட்டுச் செல்கிறார். இதையடுத்து நண்பனை கொன்ற கதிரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்க திட்டமிடுகிறார் லுகுபரன்.
இதற்கிடையே கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கதிரின் மொத்த குடும்பத்தையே அழிக்க நினைக்கும் லகுபரன், அவரது அண்ணன் குழந்தையை காரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்லப்போவதாக கதிரை மிரட்டுகிறார்.

இறுதியில், தனது வேலையை இழந்த கதிர், லகுபரன் மற்றும் அவரது கூட்டாளிகளை எப்படி சமாளிக்கிறார்? தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதிர் படம் முழுக்க ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தனது பணியை நேர்மையுடன் செய்யும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். சிருஷ்டி டாங்கே கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
ஹீரோவாக நடித்து வந்த லகுபரன், இந்த படத்தில் வில்லனாக மிரட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லகுபரனின் நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். பொன்வண்ணன், மாரிமுத்து அனுபவ நடிப்பையும், சுஜா வருணி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.

போலீஸ், திருடன் கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், பிற்பாதி வேகம் குறைவாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
அம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சத்ரு’ திறமையானவன்.
வி.ஆர்.ஆர். இயக்கத்தில் கௌசிக் - அக்னி பவார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஸ்பாட்' படத்தின் விமர்சனம். #SPOT #SPOTReview #Kaushik #AgniPawar
போலீஸ் அதிகாரியின் மகனான நாயகன் கௌசிக், தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடி வருகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லனாக இருக்கும் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபாலனை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இதை பார்க்கும் கௌசிக், கராத்தே கோபாலனிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றி தன்னுடைய நண்பர்களுடன் காரில் அழைத்து செல்கிறார். இவர்களை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலனும் செல்கிறார். சென்னையில் இருந்து ஆந்திரா வரை கௌசிக்கின் காரை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலன் செல்கிறார்.

அக்னி பவாரை கொல்ல தடையாக இருக்கும் கௌசிக்கையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய சொல்கிறார் நாசர். ஒரு கட்டத்தில் கௌசிக்கின் கார் டீசல் இல்லாமல் நிற்க, நண்பர்களில் ஒருவர் தனியாக செல்ல, அவரை கராத்தே கோபாலன் கொன்று விடுகிறார்.
இதனால் விரக்தியடையும் கௌசிக், கராத்தே கோபாலன் துரத்தும் காரணத்தை அக்னி பவாரிடம் கேட்க, தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அக்னி பவார் விவரிக்கிறார்.
கடைசியில், அக்னி பவாரின் பிரச்சனையை கௌசிக் தீர்த்து வைத்தாரா? அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன? அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் கௌசிக், துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் திறம்பட நடித்திருக்கிறார். நாயகி அக்னி பவார் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபாலன். இவர் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். சரவணன், சங்கிலி முருகன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.ஆர். படத்தின் முதற்பாதி சேஸிங்கிலேயே செல்கிறது. பிற்பாதியை மட்டுமே ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேஸிங் காட்சிகளை குறைத்திருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம்.
விஜய் சங்கர் இசையில் ஒரு பாடல் சிறப்பாக இருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ரசிக்கும் விதம்.
மொத்தத்தில் ‘ஸ்பாட்’ வலுவில்லை. #SPOT #SPOTReview #Kaushik #AgniPawar
நேசம் முரளி இயக்கி, அவரே நடித்து, அவருக்கு ஜோடியாக பேபி ஐஸ்வர்யா, நந்தினி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கபிலவஸ்து' படத்தின் விமர்சனம். #Kabhilavasthu #KabhilavasthuReview
மீரா கிருஷ்ணன் தவறான வழியில் கர்ப்பமாகி, பொது கழிப்பிடத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே விட்டுச் செல்கிறார். அந்த குழந்தையை அங்கு வேலை செய்பவர், எடுத்து வளர்க்கிறார். வளர்ந்து பெரியளாகும் நாயகன் நேசம் முரளி, பொது கழிப்பிடத்தை கவனித்து வருகிறார்.
பொது கழிப்பிடத்திற்கு அருகே, நாயகி நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாலையோரத்தில் தங்குகிறார். நந்தினிக்கு பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டும் என்று விருப்பம்.

பிளாட்பாரத்தில் நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் தங்குவதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. இப்படி ஒரு பிரச்சனையில் நந்தினிக்கு உறுதுணையாக இருக்கிறார் நேசம் முரளி. இதிலிருந்து இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனையில் சிக்கி நேசம் முரளி ஜெயிலுக்கு செல்கிறார். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும் நேசம் முரளி, பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நந்தினி, தன் குடும்பத்துடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

பின்னர் நந்தினியை தேடி அலைகிறார். இறுதியில் நந்தினியை நேசம் முரளி கண்டுபிடித்தாரா? நந்தினியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தவறான வழியில் பிறக்கும் குழந்தைகளின் நிலைமையையும், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களின் நிலைமையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் நேசம் முரளி, இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பையும், அழுத்தமான கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நந்தினி, பிளாட்பாரத்தில் இருந்து, வாடகை வீட்டிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடித்து மனதில் பதிகிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மீரா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரம் பேபி ஐஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் கஷ்டப்படுவர்களை யதார்த்தம் மீறாமல் படம்பிடித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ எதார்த்தம். #Kabhilavasthu #KabhilavasthuReview #NesamMurali #Nandhini
அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `90 எம்.எல்.' படத்தின் விமர்சனம். #90ML #90MLReview #Oviyaa #STR #AnitaUdeep
புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு தனது ஆண் நண்பருடன் குடிபெயர்கிறார் ஓவியா. அங்கு ஓவியாவுக்கும், 4 பெண்களுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.
கவர்ச்சியாக வலம் வரும் ஓவியாவும் அந்த பெண்களும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் என வாழ்க்கையை அனுபவித்து வரும் ஓவியாவுடன் அந்த 4 பெண்களும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் கதை.
ஓவியா இதுவரை நடிக்காத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவொரு தயக்கமுமின்றி அப்பட்டமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மாறி வரும் உலகில் ஆண், பெண் என அனைவருமே அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது ஓரளவிக்கு அனைவருக்கு தெரிந்திருக்கும். ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஓரளவுக்கு காட்டியிருக்கும் தமிழ் சினிமா, பெண் தோழிகள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் என்பதை இதுவரை காட்டியதில்லை. முதல்முறையாக பெண்கள் ஒன்று சேர்ந்தால் நடப்பவற்றை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அனிதா உதுப்.
தமிழிலில் இதுவரை இதுபோன்ற ஒரு படம் வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள், கவர்ச்சி, ஓரினச்சேர்க்கை என அனைத்தையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். படம் இந்த காலத்து இளைஞர்களை கவர்ந்தாலும், அனைவரையும் கவருமா என்றால் கேள்விக்குறி தான். பெண்களை பெருமைப்படுத்தும் பல படங்களுக்கு இடையே இப்படியும் ஒரு படம் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை செல்கிறது. இப்படியும் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதை அறியாத கலாச்சார பெண்கள் இதை பார்த்து மாறாமல் இருந்தால் சரி என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தை தனது இசையாலேயே நகர்த்துகிறார் சிம்பு. அத்துடன் தனது பாணியில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகம் தான். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இளமையாக வந்துள்ளன.
மொத்தத்தில் `90 எம்.எல்.' குடும்பத்திற்கு ஒத்துவராது. #90ML #90MLReview #Oviyaa #STR #AnitaUdeep
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா - ஆனந்த்பாண்டி - ஸ்ரீபல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `தாதா 87' படத்தின் விமர்சனம். #DhaDha87 #DhaDha87Review
நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள்.
இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார்.

இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலை ஏற்றுக் கொண்டபின் தான் ஒரு திருநங்கை என்பதை ஆனந்த் பாண்டியிடம் சொல்லுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? அதன்பின் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக ஆனந்த் பாண்டி துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். நடிப்பில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக வரும் ஸ்ரீபல்லவி, கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வன செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அனுபவ நடிகை போல் தெரிகிறார்.

தாதாவாக வரும் சாருஹாசன், சாதிகள் ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதும், மனைவியாக வரும் சரோஜாவுடன் ரொமன்ஸ் செய்வதும் என நடிப்பில் மிளிர்கிறார். தாதாவுக்கான கெத்தும், கணவருக்குண்டான பாசம், ரொமன்ஸ் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் ஜனகராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெறுகிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. உண்மையான காதலுக்கு எதுவும் தடையில்லை என்பதை சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுகள். குறிப்பாக திருநங்கையின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் ஆழமாக சொல்லியிருக்கிறார். மேலும் திருநங்கைகளின் பெற்றோர்களின் வலி, சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மற்றவர்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். படத்தின் முதற்பாதி திரைக்கதை அங்கும், இங்கும் சென்றாலும், பிற்பாதியில் தான் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதற்பாதியில் சாதி அரசியல் பற்றி சொன்னவிதம் அருமை. சாருஹாசனை கையாண்ட விதம் சிறப்பு.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருஃபன், சக்கரவர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘தாதா 87’ வலி. #DhaDha87 #DhaDha87Review #CharuHaasan #SarojaRajagopal #AnandPandi #SriPallavi
சேரன் இயக்கி நடித்து, சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `திருமணம்' படத்தின் விமர்சனம். #Thirumanam #ThirumanamReview
ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார்.
இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி - காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி - காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதை புரிதலோடு காட்டியிருப்பதே படத்தின் மீதிக்கதை.
சேரன் ஒரு அண்ணனாகவும், நேர்மையான, சாதாரண குடும்ப தலைவனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உமாபதி, காவ்யா சுரேஷ் இருவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துவிட்டு செல்கின்றனர். தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை திருப்திகரமாக செய்திருக்கின்றனர்.

திருமணத்தை சாதாரணமாக நடத்திவிட்டு, வாழ்க்கையை மேன்மையோடு வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சேரன். ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையற்ற செலவை குறைத்து சிக்கனமாக திருமணம் செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார். திருமணத்திற்கான தேவையில்லாத ஆடம்பர செலவுகளை மணமக்களின் வளர்ச்சிக்காக செலவிடலாம் என்பதை தனது பாணியில் கூறியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையின் வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம். முடிவில் இயற்கை விவசாயமும் அதனால் கிடைக்கும் உணவுப் பொருட்களும் அவசியம் என்பதை புரிய வைத்திருக்கிறார்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை சிறப்பு. பாடல்களும் கேட்கும் ரகம் தான். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `திருமணம்' தேவை. #Thirumanam #ThirumanamReview #Cheran #UmapathyRamayya #KavyaSuresh #Suganya
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தான்யா ஹோப் - ஸ்மிருதி வெங்கட் - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தடம்' படத்தின் விமர்சனம். #Thadam #ThadamReview #ArunVijay #TanyaHope
இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இன்ஜினியரான அருண் விஜய்யும், தன்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் முதலீடு செய்கிறார் இவர்.
யோகி பாபுவுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார் ரவுடி அருண்விஜய். சீட்டு விளையாட்டில் பணத்தை பறிகொடுக்க, யோகி பாபுவை ஒரு கும்பல் பிடித்து செல்கிறது. யோகி பாபுவை மீட்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது ஸ்மிருதி வெங்கட் - அருண் விஜய் இடையே பழக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், அருண் விஜய்யால் ஒருவர் கொல்லப்படுகிறார். இதையடுத்து இரண்டு அருண் விஜய்யையும் போலீசார் கைது செய்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வித்யா பிரதீப் வருகிறார். முன்பகை காரணமாக போலீஸ் அதிகாரி பெஃப்சி விஜயன் இன்ஜினியர் அருண் விஜய்யை பழிவாங்க நினைக்கிறார்.
கடைசியில் எந்த அருண் விஜய் இந்த கொலையை செய்தார்? ஒரே மாதிரியாக இருக்கும் இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கு என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரத்திலும் ஒரே மாதிரியான தோற்றத்தில் வந்தாலும், நடிப்பில் வித்தியாசத்தை காட்டி பளிச்சிடுகிறார் அருண் விஜய். குறிப்பாக இன்ஜினியராக வரும் கதாபாத்திரத்தில் இன்னும் அழகானவராக தோன்றும் அருண் விஜய் அனைவரையும் கவர்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக வந்து செல்கிறார் தன்யா ஹோப். ஸ்மிருதி வெங்கட் தனது கண் பார்வையாலேயே கவர்கிறார். அருண் விஜய்யுடனான காதல் காட்சியிலும், அவர் மீதான நம்பிக்கையிலும் ரசிக்கும்படியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

வித்யா பிரதீப் நேர்மையான போலீஸாக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் தனது காமெடியால் ரசிக்க வைக்கிறார். பெஃப்சி விஜயன் வில்லத்தனத்தில் தனது அனுபவ நடிப்பையும், சேனியா அகர்வால் நீண்ட இடைவேளைக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மீரா கிருஷ்ணன் முதல்முறையாக இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது.
த்ரில்லர் கதைக்கு பெயர் போனவர் மகிழ் திருமேனி என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், இந்த படத்தையும் ரசிக்கும்படியாக கிரைம் த்ரில்லாக உருவாக்கி இருக்கிறார். முதல் பாதி காதல், காமெடி என நகர, இரண்டாவது பாதியில் காட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியாக நகர்வது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. படத்தின் முடிவில் காட்டப்படும் இரண்டை பிறவிகள் பற்றிய தகவல் வியப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு கச்சிதம்.

அருண்ராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `தடம்' தரம். #Thadam #ThadamReview #ArunVijay #TanyaHope #SmruthiVenkat #VidyaPradeep #SoniaAgarwal #YogiBabu
எம்.எஸ்.செல்வா இயக்கத்தில் சரவணன், அனு கிருஷ்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் படத்தின் விமர்சனம். #ArandavanukkuIrundathellamPei
நாயகன் சரவணனும் நாயகி அனு கிருஷ்ணாவும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பங்களாவிற்கு வசித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் மீது விருப்பம் இல்லாததால், பிரிய நினைக்கிறார்கள்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் பேய் இருந்ததா? பேய் இருப்பது போல் பிம்பத்தை உருவாக்கியது யார்? இருவரும் பிரிய நினைத்தது நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சரவணன், இதற்கு முன் அகிலன், சரித்திரம் பேசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அறிமுக நடிகர் போல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா, கணவன் மீது வெறுப்பு காட்டும் காட்சிகளிலும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிங்கம்புலி வரும் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. குமரேசன், கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பேய் கதையை மையமாக வைத்து 10 மணி நேரத்திற்குள் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.செல்வா. இயக்குவதோடு மட்டுமில்லாமல், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சாதனைக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் லாஜிக் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு சுமார் ரகம். ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
மொத்தத்தில் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ பயம் இல்லை.
ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எல்கேஜி’ படத்தின் விமர்சனம். #LKG #LKGMovie #LKGMovieReview
ஆளுங்கட்சியில் கவுன்சிலராக இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதே கட்சியில் பேச்சாளராக இருக்கிறார் இவரின் தந்தை நாஞ்சில் சம்பத். பேச்சாளராகவே இருந்து வரும் தந்தையை போல் இல்லாமல், கவுன்சிலரில் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி என அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார் ஆர்ஜே பாலாஜி.
இவருடைய மாமா மயில்சாமி துணையுடன் ஏரியா மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில், இவரின் கட்சித் தலைவரான முதலமைச்சர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருப்பவர் ராம்குமார். இவருக்கும் அதே கட்சியில் இருக்கும் ஜே.கே.ரித்திஷுக்கும் மோதல் இருந்து வருகிறது.
முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலமைச்சர் தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக நினைத்து சென்னைக்கு வருகிறார். அங்கு சமூக வலைத்தளத்தில் சிறந்து விளங்கும் நாயகி பிரியா ஆனந்தை சந்திக்கிறார்.

இவர் மூலம், சமூக வலைத்தளத்தில் பிரபலமாக என்னவெல்லாம் வழி இருக்கிறதோ, அதையெல்லாம் செய்து பிரபலமாகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில், முதலமைச்சர் இறக்க, ராம்குமார் ஆர்ஜே பாலாஜியை அழைத்து பேசி இடைத்தேர்தலில் நிற்க வைக்கிறார்.
இதற்கு ஜே.கே.ரித்திஷ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி, அதே தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இறுதியில், ஆர்ஜே பாலாஜி, ஜே.கே.ரித்திஷை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக காமெடியில் அதகளப்படுத்தி இருக்கிறார். கதாநாயகனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
நாயகி பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜிக்கு ஆலோசனையாளராகவும், அறிவுரையாளராகவும் நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி வில்லனாக வரும் ஜே.கே.ரித்திஷ், பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத், மாமாவாக வரும் மயில்சாமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராம்குமார் நடிப்பில், சிவாஜியும், பிரபுவும் வந்து செல்கிறார்கள்.

ஆர்ஜே பாலாஜி மனதில் நினைத்ததை திறம்பட இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.பிரபு. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த அரசியல் விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது. விது ஐய்யனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எல்கேஜி’ ஜெயிச்சாச்சி.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.
அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.

அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் விமர்சனம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin
அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.
அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா, ஒரே நபர் ஊரில் உள்ள பலருக்கும் கடன் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இது கோபத்தை உண்டுபண்ண, உதயநிதி தமன்னா இடையே சிறிய மோதல் ஏற்படுகிறது. பிறகு இவர்களுக்கிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. பின்னர் தங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். வடிவுக்கரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போக, இருவரையும் சந்திக்கவோ, பேசவோ விடாதபடி செய்கிறார்.
கடைசியில், உதயநிதி - தமன்னாவின் காதல் என்னவானது? இருவரும் இணைந்தார்களா? இவர்களது திருமணத்திற்கு வடிவுக்கரசி சம்மதித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

விவசாயியாக வரும் உதயநிதி படம் முழுக்க கமலக்கண்ணன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் தனது மவுனத்தின் மூலமே தனக்கு உண்டான வலியை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகள் கடன், நீட் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியிக்கு முக்கிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தும் தைரியமான பெண்ணாக தமன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். பண்பானவராக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள்.

கோபம், காமெடி என வடிவுக்கரசி வித்தியாசமான பாட்டி வேடத்தில் வந்து கவர்ந்து செல்கிறார். பூ ராமுவுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், பார்வையாலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வசனங்களே பேசினாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மைகள் நிதர்சனமானவை என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றபடி வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன், ஷாஜி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கும் கதாபாத்திரமும் கவரும்படியாக இருக்கிறது.

ஒரு சாதாரண கதையில் பாசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சீனு ராமசாமி. கண்ணுக்குள் புதைந்திருக்கும் ஈரத்தை தன்னுடைய காட்சிகள் மூலம் கண்ணீராக வரவைப்பதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஈர்த்துவிடுகிறார். கதாபாத்திரங்களிடம் எதார்த்தமான நடிப்பை வரவைப்பதில் சீனு ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். மூ. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
விவசாயிகளின் வலி, நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் மண் சார்ந்த கதையை உருவாக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள். மிகைப்படுத்தாத வசனங்கள் இயல்பானதாக படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக கலங்க வைக்கின்றன. ஜலேந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. அருமை.
மொத்தத்தில் `கண்ணே கலைமானே' அன்பான படம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin #Tamannaah
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சந்தோஷ், ஷீலா நடிப்பில் பல விருதுகளை குவித்திருக்கும் டூலெட் படத்தின் விமர்சனம். #Tolet #ToletReview #ToletMovieReview
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் மிக எளிமையாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களின் விருதுகள் முதல் தேசிய விருது வரை டூலெட் திரைப்படம் வென்றுள்ளது.
நாயகன் சந்தோஷ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி ஷீலா, மகன் தருண். ஏழ்மையான நிலையில் இருக்கும் சந்தோஷுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில், சந்தோஷ்க்கும் வீட்டு ஓனருக்கும் பிரச்சினை வருகிறது. இதனால் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
குறிப்பிட்ட நாட்களில் வீட்டை காலி செய்ய சொன்னதால், வாடகைக்கு வீடு தேடி தன் குடும்பத்துடன் அலைகிறார். அவர்களது தேடல் என்ன ஆனது என்பதே படம்.

வளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் நகரமயமாக்கல் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எளிய கதை மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் செழியன்.
வீடு தேடி செல்லும் காட்சியில் ஒரு வீட்டில் முதியவர்களின் நிலையை பார்த்துவிட்டு திரும்பும் காட்சி, சந்தோஷ், ஷீலா தம்பதியோடு சேர்ந்து குருவிகளிடம் கூட எழும் பதற்றம், மனைவிக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீட்டும்போது இருவரின் ரியாக்ஷன், புது வீட்டுக்கு செல்வதுபோல் மகன் நடித்து காட்டும் காட்சி என படம் நெடுக கவிதைகள்.
சந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.

ஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.
பின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள் கூட்டி செல்கின்றன.
மிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.
மொத்தத்தில் ‘டூலெட்’ நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்.






