என் மலர்tooltip icon

    தரவரிசை

    ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி நடிப்பில் கிரிஷ்ணா பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எம்பிரான்’ படத்தின் விமர்சனம். #Embiran #EmbiranReview
    தாத்தா மௌலி அரவணைப்பில் இருக்கிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி. இவர் டாக்டராக இருக்கும் நாயகன் ரெஜித் மேனனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். தன்னுடைய காதலை எப்படி ரெஜித்திடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த விஷயம் தாத்தா மௌலிக்கு தெரிய வருகிறது.

    ரெஜித்திடம் இவரின் காதலை சொல்ல, ராதிகா ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு செல்கிறார் மௌலி. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட தாத்தா மௌலி விபத்தில் இறக்கிறார். நாயகி ராதிகா ப்ரீத்தி கோமா நிலைக்கு செல்கிறார். 

    இந்நிலையில், ரெஜித் மேனனுக்கு, ராதிகா ப்ரீத்தி பற்றிய கனவுகள் வருகிறது. பின்னர் ராதிகாவின் கோமா நிலைமை அறிந்து அவருக்கு உதவி செய்கிறார். 



    இறுதியில் ராதிகா ப்ரீத்தி கோமா நிலைமையில் இருந்து மீண்டாரா? காதலில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகனாக நடித்திருக்கும் ரெஜித் மேனன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அழகாக இருக்கும் இவர், சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    ஒருதலை காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ்ணா பாண்டி. வழக்கமான கதையை வித்தியாசமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சிறிய கதையை மெதுவாக சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபட வில்லை. இயக்குனர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. படத்தொகுப்பும் கை கொடுக்கவில்லை.



    புகழேந்தியின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘எம்பிரான்’ எழவில்லை.
    பாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha
    போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் பாபி சிம்ஹா. இவரது நண்பர் சதீஷ். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான ரம்யா நம்பீசன், தனது பத்திரிகையாளர் தோழியை வைத்து பாபி சிம்ஹாவின் பேட்டிக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ரம்யா நம்பீசனின் தோழி வராததால், பாபி சிம்ஹா பேட்டி வேண்டாம் என்று சொல்லுகிறார்.

    அதே நேரத்தில் அந்த தோழி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட செய்தி வருகிறது. இந்த கொலையில் அவருடைய காதலர் சிக்குகிறார். இதை பாபி சிம்ஹா விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பிடிப்பட்டவர் கொலை செய்யவில்லை என்றும் வேறொரு சிறுவன் தான் கொலை செய்தான் என்பதை அறிந்துக் கொள்கிறார். 



    மேலும் இதுபோல் சிறுவர்களால் ஆங்காங்கே சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் வாதியான மதுபாலா செயல்படுவது பாபிசிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.

    இறுதியில், மதுபாலா அவ்வாறு செய்ய காரணம் என்ன? மதுபாலாவை பாபி சிம்ஹா எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக அக்னி தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம். துப்பறியும் காட்சிகளிலும் கோபப்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.



    அக்னி தேவி என்ற வில்லி அரசியல்வாதியாக மதுபாலா நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் சில உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கிறது. ஒரு சில இடங்களில் மிகைத்தனமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

    சதீஷுக்கு பாபியுடனே பயணித்து விசாரணையை கலகலப்பாக்கும் வேடம். எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், ஆகியோர் குணச்சித்திர பாத்திரங்களாக வருகின்றனர். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் இரண்டே காட்சிகளில் வந்து போகிறார்.



    சுவாதி கொலை உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களை இணைத்து கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. நாவலில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையிலும் இருக்கிறது. ஒரு கலவரத்தால் பலருடைய வாழ்க்கை முறை மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள் ஜேபிஆர், ஷாம் சூர்யா. நடிக, நடிகைகளின் மிகைத்தனமான நடிப்பு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் காதல், பாடல் காட்சிகள் என எந்த வேகத்தடையும் இல்லாமல் பரபரப்பான ஒரு துப்பறியும் படமாக அக்னி தேவி அமைந்துள்ளது.

    ஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் இசையும் திகிலை கூட்டுகின்றன. 

    மொத்தத்தில் ‘அக்னி தேவி’ வேகம் குறைவு.
    ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அகவன்' படத்தின் விமர்சனம். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty
    தமிழகத்தின் புராதன கோவில்களில் உள்ள பொக்கிஷங்களை மர்ம கும்பல் திருடப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரியான சரண் ராஜ் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கோவில்களுக்கு ரகசிய போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்கிறார். அதன்படி போலீஸ்காரரான நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன் அங்குள்ள சிவன் கோவிலுக்கு காவலாளியாக வருகிறார். 

    தம்பி ராமையாவுடன் இணைந்து கோவிலை காவல் காக்கும் போது, அங்கு சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து கிஷோர் ரகசியமாக கண்காணித்து வருகிறார். அங்குள்ளவர்கள் கிஷோரின் பின்புலம் தெரியாமல் அவருடன் சகஜமாக பழகி வருகிறார்கள்.



    அதே நேரத்தில் அந்த கோவிலுக்கு அருகே பூ கடை வைத்திருக்கும் அக்கா, தங்கையான நாயகிகள் சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி இருவருமே கிஷோரை காதலிக்கிறார்கள். 

    கடைசியில், கோவிலில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கான காரணம் என்ன? கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார்? அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ரகசிய போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் எல்லா காட்சியிலுமே ஒரே மாதிரியான பாவத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் வளர வேண்டும். தங்கையாக நடித்திருக்கும் நித்யா ஷெட்டி காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறும்புத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். திருவிழா பாடலில் நடனமாடி கவர்கிறார். அக்காவாக வரும் சிராஸ்ரீ அஞ்சன் கொடுத்த வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். தம்பி ராமையா தனது வழக்கமான பேச்சால் குறிப்பிட்ட இடங்களில் நகையை உண்டுபண்ணுகிறார்.

    சரண் ராஜ், சினி ஜெயந்த், ஹோலோ கந்தசாமி என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    நமது முன்னோர் கட்டிய புராதன கோவில்கள், அதன் பெருமைகள், அதனுள் இருக்கும் பொக்கிஷங்கள் என கோவில்களை மையப்படுத்தியே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. படத்தின் திரைக்கதையின் நீளமும், அதன் போக்கும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும், கோவில்களின் பெருமையை கூறியிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

    சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு பக்கபலம்.

    மொத்தத்தில் `அகவன்' உள்ளிருப்பவன். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty

    ஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
    போலீஸ் அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியையும், மருத்துவரான நாசரையும் கொலை செய்துவிட்டு, ரவிசங்கரை கொலை செய்வதற்காக போகும் போது, கிச்சா சுதீப்பை போலீசார் கைது செய்கிறார்கள். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் ஜெகபதி பாபு.

    கொலை குறித்து ஜெயகதி பாபுவின் விசாரணையில் சுதீப் கூறும் போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தானும் தனது குடும்ப நண்பரும், உதவியாளருமான பருல் யாதவ்வும் காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஆசிஷ் வித்யார்த்தியும், நாசரும் தனது வாழ்க்கையில் வந்து, தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் விவரிக்கிறார்.



    கடைசியில், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் நாசரை சுதீப் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட முன்கதை என்ன? என்பதே சுதீப் எனும் கைதியின் மீதிக்கதை.

    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தனது வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறைவான நேரங்கள் மட்டுமே வந்தாலும் பாவனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையோடு ஒன்றி தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் பருல் யாதவ். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், ஜெகபதி பாபு என அனைவருமே அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.



    கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் நடித்த கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு த்ரில்லர் படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கும் வேளையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த த்ரில் கதையை தற்போது பார்க்கும் போது ஒருவித நெருடலை கொடுக்கிறது. எனினும் வித்தியாசமான கதை என்பதால் பார்ப்பதில் தவறில்லை.



    ஷஷாங்க் இயக்கம், வி.ஹரிகிருஷ்ணாவின் இசை, ஷேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, ரவி வர்மாவின் படத்தொகுப்பு என படக்குழுவினரின் வேலைகள் கச்சிதம்.

    மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு கைதி' பார்க்கலாம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav

    மனோஹரன் இயக்கத்தில் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ், தீப்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கில்லி பம்பரம் கோலி’ படத்தின் விமர்சனம். #GilliBambaramGoli #GilliBambaramGoliReview
    வெவ்வேறு கிராமத்தில் இருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர், கில்லி, பம்பரம், கோலி விளையாடுவதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்ப கஷ்டம் காரணமாக இவர்கள் மலேசியாவிற்கு வேலைக்காக செல்கிறார்கள். இதேபோல், நாயகி தீப்தி ஷெட்டியும் குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு செல்கிறார். 

    மூன்று பேரும் டூரிஸ்ட் கைடு, சூப்பர் மார்க்கெட், ஓட்டல் ஆகிய வேலைகளை செய்து வருகிறார்கள். அதே ஓட்டலில் கஞ்சா கருப்பு வேலை செய்து வருகிறார். மேலும் அங்கு நாயகியும் வேலைக்கு சேருகிறார்.

    ஒரு கட்டத்தில் இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகுகிறார்கள். அதே ஊரில் அடியாட்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக இருக்கும் சந்தோஷ் குமாருக்கும் நண்பர்களில் ஒருவரான டூரிஸ்ட் கைடு வேலை செய்பவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் நண்பர்கள் நான்கு பேரும் சிக்கிக் கொள்கிறார்கள். 



    மேலும் நாயகி தீப்தியை அடைய நினைக்கிறார் சந்தோஷ் குமார். இந்த பிரச்சனை காரணமாக நண்பர்கள் நான்கு பேருக்கும் வேலை பறிபோகிறது. பின்னர் தலைவாசல் விஜய்யிடம் வேலைக்கு சேருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகனை ஒன்று கூடி எதிர்க்கிறார்கள். 

    நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோரின் திறமைகளான கில்லி, பம்பரம், கோலி விளையாடி வென்றால்தான் அவர்களை கொலை செய்யும் சூழ்நிலை தாதா சந்தோஷ் குமாருக்கு வருகிறது. இறுதியில் சந்தோஷ் குமார் விளையாடி வென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகர்களாக நடித்திருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் தீப்தி ஷெட்டி, வில்லனுக்கு பயப்படுவதும், பின்னர் அவருக்கு சவால் விடுவதும் என தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். முதலில் வில்லத்தனத்தில் மிரட்டும் சந்தோஷ்குமார், இறுதியில் காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    ஓட்டலில் வேலை செய்பவராக வரும் கஞ்சா கருப்பு, கார் கேரேஜ் நடத்தும் தலைவாசல் விஜய் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோஹரன். டெக்னாலஜி வளர்ச்சியால் தற்போதுள்ள இளைஞர்கள் மொபைல் போனில் கேம் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இதனால் நண்பர்களோடு இணைந்து விளையாடும் பழைய விளையாட்டுகளை மறந்துவிட்டோம். களத்தில் இறங்கி விளையாடுவதே சிறந்தது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே சில காட்சிகளில் தோய்வு ஏற்பட்டாலும் படம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மேலும் மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கில்லி பம்பரம் கோலி’ சிறந்த விளையாட்டு.
    கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன் - சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் விமர்சனம். #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag
    தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நாயகன் அனந்த் நாக் தனது நண்பன் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார். பின்னர் இருவருக்கிடையே நட்பு வளர்கிறது. ஒரு கட்டத்தில் அஞ்சு குரியனுக்கு, அனந்த் நாக் மீது காதல் வளர்கிறது.

    இதையடுத்து இருவீட்டாரும் பேசி இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களுக்கு நிச்சதார்த்தமும் நடக்கிறது. அஞ்சு குரியனுடன் காதல் வயப்படாத அனந்த் நாக் அஞ்சுவிடம் இருந்து விலகியே இருக்கிறார். இந்த நிலையில், இவரது அலுவலகத்துக்கு வரும் சம்யுக்தா மேனனுடன் அனந்த நாக்குக்கு பழக்கம் ஏற்படுகிறது.



    இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பிக்கின்றனர். வேறு ஒருவருடனாக காதலை முறித்துக் கொண்டு வந்த சம்யுக்தா மேனனை, அனந்த் நாக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் சம்யுக்தா, அனந்த் நாக் மீது பெரியதாக விருப்பம் கொள்ளவில்லை. எனினும், இவர்களது நெருக்கம் அதிகமாகிறது. சம்யுக்தா மற்றவர்களுடன் பழகுவதை விரும்பாத அனந்த் நாக், சில அறிவுரைகளை கூற அது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை.

    கடைசியில், அஞ்சு குரியனின் காதல் வென்றதா? அனந்த் நாக்கின் காதல் வென்றதா? இவர்களின் காதல் என்னவானது? என்ற முக்கோணக் காதல் கதையே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.

    இதற்கு முன்பாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனந்த் நாக் இந்த படத்தில் நாயகனாக வலம் வருகிறார். காதல், பிரிவு என இந்த கால இளைஞனாக பளிச்சிடுகிறார். அஞ்சு குரியன் அழகு பதுமையாக வந்து ரசிக்க வைக்கிறார். 



    கள்ளங்கபடமற்ற தனது காதலை வெளிப்படுத்துவதும், அதிலிருந்து வெளியேறுவதும் என அவரது வேலையை செவ்வென செய்துவிட்டுச் செல்கிறார். சம்யுக்தா மேனன் அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

    இந்த காலத்து இளைஞர்களின் காதல், பிரிவு, மீண்டும் காதல் என்ற இயல்பை படமாக இயக்கியிருக்கிறார் கே.சி.சுந்தரம். படத்தில் ஆங்காங்கே காமெடியும், படம் முழுக்க வரும் காதலும், பிரிவும் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு முக்கோணக் காதல் கதை என்று எளிதாக சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை நகர்கிறது. படத்தில் நீளத்தை சுருக்கி, திரைக்கதையை வலுப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.



    ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ரசிக்கும்படியான பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடுகின்றன. டேமல் சேவியரின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `ஜூலை காற்றில்' காதல், பிரிவு. #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag #AnjuKurian #SamyukthaMenon

    தினேஷ் பாபு இயக்கத்தில் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, அக்‌ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிருஷ்ணம்’ படத்தின் விமர்சனம். #Krishnam #KrishnamReview
    தொழிலதிபர் சாய்குமாருக்கு மகனாக இருக்கும் நாயகன் அக்‌‌ஷய் கிருஷ்ணன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கல்லூரியில் இருப்பவர்கள் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள். இதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாசை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் கிருஷ்ணன்.

    தந்தை சாய்குமாரும், அக்‌‌ஷய் கிருஷ்ணனும் நண்பர்கள் போல பழகி வருகிறார்கள். மகனின் எல்லா செயல்களுக்கும் துணையாக இருக்கும் தந்தை சாய்குமார் இந்த காதலுக்கும் துணையாக இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அப்போது அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.



    மருத்துவ சோதனையில் அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு கொடிய நோய் பாதித்திருப்பதாகவும், ஆபரே‌ஷனில் அவர் உயிர் பிழைக்க சிறிதளவே வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்லுவதை நினைத்து வருந்தும் சாய் குமார், தன்னுடைய தெய்வமான குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார்.

    குருவாயூரப்பனின் அருளால் அக்‌‌ஷய் கிருஷ்ணன் உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    அக்‌‌ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களையே படமாக்கி இருக்கிறார்கள். அதை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யா உல்லாஸ் அழகாக வந்து நடித்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சாய் குமார், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங்களில் நடித்த சாந்தி கிருஷ்ணா இந்த படம் மூலம் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார். இவரின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. இனி அடிக்கடி அம்மா வேடங்களில் பார்க்கலாம். 



    உண்மை சம்பவத்தை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் பாபு. இவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு முதல் பாதியில் குறைவு என்றே சொல்லலாம். கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை நம்பினால் நல்லது நடக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள். கடவுள் மகிமை படங்கள் வந்து வெகு காலம் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கிறது.

    ஹரி பிரசாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கிரிஷ்ணம்’ பக்தி பரவசம்.
    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

    இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.



    தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.



    இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

    பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

    மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

    செல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி நடிப்பில் வெளியாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் விமர்சனம். #Nedunalvadai #NedunalvadaiReview
    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், டூலெட் போன்ற படங்கள் எளிமையான கதையுடன் மக்களின் வாழ்வியலை சொல்லும் படங்களாக வெளியாகி பெருமைப்பட வைக்கின்றன. அந்த வரிசையில் சேரும் இன்னொரு படைப்பு நெடுநல்வாடை.

    திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பூ ராமுவுக்கு மைம் கோபி, செந்திகுமாரி என 2 பிள்ளைகள். காதல் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப் போகும் செந்திகுமாரி கணவனின் தொல்லை தாங்காமல் மகன் இளங்கோ மற்றும் மகளுடன் தனது தந்தை வீட்டுக்கு வருகிறார்.

    ஆனால், மைம் கோபி அவர்களை சேர்த்துக்கொள்ள மறுக்க பூ ராமுவே மகள் குடும்பத்துக்கு அரணாக மாறுகிறார். பேரன், பேத்தி இருவரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர பாடுபடுகிறார். சிறுவயது முதல் ஒன்றாக பழகி வரும் இளங்கோவும், அஞ்சலி நாயரும் காதலிக்கிறார்கள். 



    தனக்கு பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு இளங்கோ பக்குவப்பட வேண்டும் என்று விரும்புகிறார் பூ ராமு. இளங்கோ நல்ல நிலைக்கு வர வேண்டிய நிலையில், அவரது காதல் குறுக்கே நிற்கிறது. 

    கடைசியில் பேரனின் காதல், தாத்தாவின் பாசம், இரண்டில் வென்றது எது? என்பதே கதை.

    பூ ராமுவுக்கு இளங்கோ குடும்பத்தையும் படத்தையும் தாங்கும் கதாபாத்திரம். சின்ன சின்ன அசைவுகள் முதல் உணர்வுமிக்க காட்சிகள் வரை செல்லையாவாகவே வாழ்ந்து அசத்தி இருக்கிறார். படம் முழுக்கவே நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் காட்சிகள் செல்லையாவின் வாழ்க்கைக்குள்ளேயே நம்மை ஒன்ற வைக்கிறது. இந்த ஆண்டு பல விருதுகளை பூ ராமு குவிப்பார் என்று சொல்லலாம். தேசிய விருதுக்கே தகுதியான நடிப்பு.



    தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக இந்த ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த வரவாக இளங்கோ இருப்பார். தாத்தாவின் பாசத்துக்கும், அஞ்சலி நாயரின் காதலுக்கும் இடையே தவிக்கும் நாயகனாக இளங்கோ, அந்த தவிப்பை நமக்கும் கடத்தி இருக்கிறார்.

    படத்தில் அஞ்சலி நாயருக்கு காதலிப்பதுதான் வேலை. ஆனால் வெறுமனே அழகு பொம்மையாக வந்து போகாமல் படத்தின் உயிர்நாடியாக நடித்து இருக்கிறார். 90-களின் கதாநாயகிகளை நினைவுபடுத்தும் வசீகரம். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பில் கைதட்டல்கள் பெறுகிறார்.



    வெறுப்பை உமிழும் மாமாவாக மைம் கோபி, கணவனை பிரிந்த கையறு நிலை தாயாக செந்தி குமாரி, அஜய் நடராஜ், ஐந்து கோவிலான், ஞானம் என மற்றவர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

    உணர்வுகளை காட்சிகளுக்குள் கொண்டு வந்து அவற்றை அப்படியே ரசிகர்களிடத்தில் கொண்டு செல்லுதல் என்பது ஒரு கலை. எளிமையான கதையையும், அறிமுக நடிகர்களையும் கொண்டு அந்த கலையை அழகாக செய்து காட்டி இருக்கிறார் செல்வகண்ணன். எளிமையான கதை தான் என்றாலும் அதை திரையில் காட்டியிருக்கும் வடிவத்தில் நிற்கிறார் இயக்குநர். புதுமுகங்கள் என்றாலும், அவர்களின் சிறப்பான பங்களிப்பு படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி சரியான கதைக்களம், தொழில்நுட்பங்கள் என இதனை ஒரு அழகிய படைப்பாக மாற்றி இருக்கும் செல்வகண்ணனுக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. எல்லோருக்கும் பொருந்த கூடிய ஒரு கதையில் சில சாதி அடையாளங்கள் காண கிடைப்பது மட்டுமே திருஷ்டி.




    வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் அல்லாமல் 2 மணி நேரம் நம்மை பேச்சியம்மாவுக்காக கலங்க வைத்து, மருது பாண்டி, கொம்பையா மீது கோபப்படுத்தி, அமுதாவை  காதலிக்க வைத்து, செல்லையா போன்ற ஒரு தாத்தாவுக்கு ஏங்க வைத்து அனுப்புகிறது நெடுநல்வாடை.

    முக்கியமாக வைரமுத்துவின் வரிகள் படத்துக்கு உயிர்பை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக கருவாத்தேவா பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளான, ஒரு பசுவின் தியாகம் தான் உசுரா ஒழுகுது பாழாக, ஒரு மனுசனின் தியாகம் தான் ஒவ்வொரு குடும்பமும் ஆளாக என்ற வரியும், ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக, நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக போன்ற வரிகள் மூலமாக படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்.



    ஜோஸ் பிராங்ளினின் இசை, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு மூன்றும் செல்வகண்ணனின் எழுத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர உதவி இருக்கின்றன. ஜோஸ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் காதுகளுக்கு விருந்து தான். வினோத்தின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த உதவியிருக்கிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் நேர்த்தி.

    மொத்தத்தில் `நெடுநல்வாடை' பாராட்டப்பட வேண்டிய படைப்பு. #Nedunalvadai #NedunalvadaiReview

    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
    தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள். 

    அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.



    கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange

    அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் ஃப்ரீ லார்சன் - சாமுவேல் ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கேப்டன் மார்வெல்' படத்தின் விமர்சனம். #CaptainMarvel #CaptainMarvelReview
    1995-ல் ஹலா கிரகத்தில் கீரி இனத்தவருடன் ஸ்டார்போர்ஸ் உறுப்பினராக இருக்கிறார் வெர்ஸ் (ஃப்ரீ லார்சன்). ஜெட் விமானியான வெர்சுக்கு தனது கடந்த கால நினைவுகள் அவ்வப்போது வந்து செல்கிறது. அதீத சக்தி படைத்த வெர்சுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகிறார் யோன் ராக் (ஜூட் லா). இந்த நிலையில், தங்களது கிரகத்திற்குள் ஸ்கிரல்ஸ் இனம் புகுந்த தகவல் கிடைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த தேடலில் வெர்சும் இடம்பெறுகிறார். அப்போது இரு கும்பலுக்கும் இடையேயான சண்டையில், ஸ்கிரல்ஸ், வெர்ஸை கடத்தி சென்று அவளது மூளையில் இருக்கும் பழைய நினைவுகளை திருட முயற்சிக்கிறார்கள். தன்னையறியாமல் தனக்கும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் வெர்ஸ், ஸ்கிரல்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.



    அப்போது வெர்ஸ் செல்லும் விண்கலத்தை ஸ்கரல்ஸ் தாக்கிவிட விண்வெளியில் அந்த விண்கலம் வெடித்து, வெர்ஸ் பூமியில் வந்து விழுகிறாள். அங்கு ஷூல்டு ஏஜெண்ட் சாமுவேல் எல்.ஜாக்சன் - வெர்ஸ் இருவரும் சந்திக்கிறார்கள். அதேநேரத்தில் வெர்சை தேடி ஸ்கிரல்ஸ் பூமிக்கு வந்துவிடுகிறது.

    கடைசியில், ஸ்கிரல்ஸ் வெர்ஸை தேடி வருவதற்கான காரணம் என்ன? வெர்சுக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதா? அவர் எப்படி கேப்டன் மார்வெல்லாக மாறுகிறார்? என்பதே படத்தின் படத்தின் மீதிக்கதை.



    ஃப்ரீ லார்சன், சாமுவேல் எல்.ஜாக்சன், பென் மெண்டல்சோன், டிஜிமோன் ஹோச்சோ, லீ பேஸ், லக்‌ஷனா லிஞ்ச், ஜூட் லா என அனைத்து கதாபாத்திரங்களுமே அசத்தியிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ சமீபத்தில் மறைந்த நிலையில், இந்த படத்திலும் அவர் சிறப்பு தோற்றம் ஏற்றிருக்கிறார். 

    அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் மார்வெல்லின் வழக்கமான சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி இருக்கிறது. காமெடி, ஆக்‌ஷன், பிரமிப்பு என மற்ற அனைத்து ரசிக்கும்படியாக இருந்தாலும், மற்ற கதைகளில் இருக்கும் ஸ்வாரஸ்யம் சற்றே குறைவு தான். படத்தின் முடிவில் வரும் போஸ்ட் கிரெடிட் ரசிகர்களை கவர்வதுடன், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் பூனை கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.



    பினார் தோபார்க்கின் பின்னணி இசை, பென் டேவிசின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் `கேப்டன் மார்வெல்' புதுமை. #CaptainMarvel #CaptainMarvelReview #BrieLarson #SamuelLJackson

    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பூமராங்’ படத்தின் விமர்சனம். #Boomerang #BoomerangReview
    படம் ஆரம்பத்தில் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். அந்தளவிற்கு அவரது முகம் சிதைந்து போகிறது. அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு வைக்கின்றனர். 

    ஒரு குறும்படம் இயக்குவதன் மூலம் நாயகி மேகா ஆகாஷுக்கும் அதர்வாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில், ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரர் உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் அதர்வா.



    இறுதியில் அந்த முகத்திற்கு சொந்தக்காரர் யார்? அவரை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

    முதல் நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதற்பாதியில் சதீஷ் காமெடியும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியின் காமெடியும் திரையின் ஓட்டத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.



    விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதல்பாதி வேகமாகவும், பிற்பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மற்ற படத்தின் ஞாபகம் வந்து செல்கிறது. நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

    ரதன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரசன்னா எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு, முற்பகுதி நகரத்தையும், பிற்பகுதி கிராமத்தையும் அழகாக படம்பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பூமராங்’ சமூக அக்கறை.
    ×