என் மலர்tooltip icon

    தரவரிசை

    சூர்யாவின் 2டி தயாரிப்பில் விஜய்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உறியடி 2’ படத்தின் விமர்சனம். #Uriyadi2 #Uriyadi2Review
    வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார். 

    அந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.



    தொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.

    சில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.

    அதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

    இறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார். முதல்பாதி துள்ளலான நடிப்பையும், பிற்பாதியில் போராடும் இளைஞராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார். ஏய் இங்க வாடா என்று போலீஸ் கூப்பிடும் காட்சியிலும், 500 அரசியல்வாதிகள் கோடி கணக்கில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதா... என பேசும் வசனங்களில் கைத்தட்டல் பெறுகிறார். இடைவெளிக்கு முன்பு பதற்றத்தையும், இடைவெளிக்குப் பின் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். படம் பார்ப்பவர்களை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்று விடுகிறார். 

    மருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தொழிற்சாலை முதலாளியாக வரும் துரை ரமேஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.



    படத்திற்கு பெரிய பலம் இசை. 96 படத்தில் மெலோடி இசையை கொடுத்து மயக்கிய கோவிந்த் வசந்தா, இப்படத்தின் காட்சிகளில் நம்மை கடத்தி இருக்கிறார். இவருடைய பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. நம்பள ரொம்ப பீல் பண்ண வைத்திருக்கிறார் மனுஷன்.

    பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் பரிதவிப்பையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார். கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. தெளிவான காட்சிகளில் இவரின் நுணுக்கமான வேலைபாடுகள் பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘உறியடி 2’ அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி.
    பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் விமர்சனம். #KuppathuRaja #GVPrakashKumar
    வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ், குப்பத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். ஜி.வி.பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும், பார்த்திபனும் நண்பர்கள். தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் இருக்கிறது.

    அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.



    அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.

    கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் அடுத்த பாதி.



    நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் வடசென்னை இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அதகளப்படுத்தியிருக்கிறார். சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.



    நடன இயக்குநராக இருந்து திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் பாபா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. குப்பத்தில் நடப்பவற்றை மிகைப்படுத்தி காட்டியிருப்பது போல் தோன்றுகிறது. படத்தின் படத்தொகுப்பு, கலை பணிகள் சிறப்பு.
     
    ஜி.வி.பிரகாஷ் இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `குப்பத்து ராஜா' அரியணை இல்லை. #KuppathuRajaReview #KuppathuRaja #GVPrakashKumar #PalakLalwani #Parthiban #PoonamBajwa

    சத்தீஷ்வரன் இயக்கத்தில் ஜெய்க்குமார் - நந்திதா ஜெனிபர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `குடிமகன்' படத்தின் விமர்சனம். #Kudimagan #KudimaganReview
    விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.

    விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், ஜெனிபர் மகன் ஆகாஷுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதி கவுன்சிலரான கிரண் அங்கு மதுக்கடை ஒன்றை திறக்கிறார்.



    இதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் ஊர்த் தலைவரான பாவா செல்லத்துரை தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதையடுத்து விரைவில் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். மதுக்கடையை மூட கிரண் நடவடிக்கை எடுக்காததால், பொறுப்புடன் செயல்பட்டு வந்த அந்த ஊரை சேர்ந்த பலரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். நாயகன் ஜெயக்குமாரும் குடிக்கு அடிமையாக, அவரது குடும்பம் மோசமான நிலைக்கு செல்கிறது.

    கடைசியில் குடி மகிழ்ச்சியான அந்த குடும்பத்தை எந்த அளவுக்கு அழித்தது? குடியால் ஏற்பட்ட, ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை சொல்லக்கூடிய படம் தான் குடிமகன்.



    நாயகன் ஜெயக்குமார் காட்சிக்கு ஏற்ப பொறுப்போடு நடித்திருக்கிறார். பொறுப்பான இளைஞராக இருந்து போதைக்கு அடிமையாகி அவரது வாழ்க்கையே மாறும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னமும் அனுபவம் தேவை. நாயகி ஜெனிபர் இயல்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார். குடியில் இருந்து மீளும் கதாபாத்திரத்தில் பாலாசிங் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, மது பிரியராக வரும் வீர சமர் காமெடிக்கு கைகொடுத்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் ஆகாஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    குடியால் தமிழகத்தில் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுள்ளது என்பதை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் சத்தீஷ்வரனுக்கு பாராட்டுக்கள். மதுவால் ஏற்படும் தீமைகளை ஒரு கிராம பின்னணியில் ஒரு குடும்பத்தை வைத்து யதார்த்தமாக இயக்கியிருக்கிறார். குடியால் மதுபிரியர்களின் வாரிசுகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், அவர்களது எதிர்காலம் என்னவாகிறது என்பதையும் சொல்லும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டியிருந்தால் இன்னமும் கவர்ந்திருக்கலாம்.



    பிரசாந்தின் பின்னணி இசை ஏற்கும் ரகம் தான். அருள் செல்வனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு மிளிர்கிறது.

    மொத்தத்தில் `குடிமகன்' வேண்டு(டா)ம். #Kudimagan #KudimaganReview

    பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஆதி மற்றும் அனகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் விமர்சனம். #NatpeThunai #NatpeThunaiReview
    பிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய தாய் கவுசல்யா. ஒரு மோதலில் நாயகி அனகாவை பார்க்கிறார் ஆதி. முதல் சந்திப்பிலேயே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. 

    ஹாக்கி வீராங்கனையான அனகாவை மீண்டும் சந்தித்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். இவருடன் பழக நினைக்கும் ஆதி, அனகா பயிற்சி செய்யும் மைதானத்திற்கு நண்பர் மூலமாக செல்கிறார். பல போராட்டங்களால் மீட்கப் பட்ட அந்த மைதானத்தின் பயிற்சியாளராக இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

    ஹாக்கி தேர்வின் போது நாயகி அனகாவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ஆதி தலையிட்டு, சிறப்பாக ஹாக்கி விளையாடி நாயகியின் தேர்வு உதவுகிறார். இதைப் பார்க்கும் பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் வியப்படைகிறார்கள். பிறகு அவர் இன்டர்நேஷனல் அளவில் இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடியவர் என்று தெரியவருகிறது.



    இந்நிலையில், அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன், உலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அனுமதி கொடுக்கிறார். அந்நிறுவனம் இதற்காக மைதானத்தை தேர்வு செய்கிறார்கள்.

    மைதானத்தை விட்டுவிட கூடாது என்று பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் பல்வேறு வழிகளில் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஹாக்கி விளையாடி வெற்றி பெற்றால் மைதானத்தை மீட்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்காக ஆதியை விளையாட அழைக்கிறார். ஆனால், ஆதியோ விளையாட மறுகிறார். 

    இறுதியில் அந்த மைதானத்தை ஹரிஷ் உத்தமன் மீட்டெடுத்தாரா? ஹாக்கி விளையாட ஆதி மறுக்க காரணம் என்ன? அமைச்சர் கரு பழனியப்பனின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி அனகாவை துரத்தி துரத்தி காதலிப்பது, நடனம், விளையாட்டு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் உள்ள காட்சியில் அசர வைக்கிறார். நாயகி அனகா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா, அதே அழகுடன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன், யதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர் பேசும் வசனங்கள் நிகழ்கால அரசியல் சூழ்நிலையை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக இறுதியில் பேசும் வசனம் செம்ம... பயிற்சியாளராக வரும் ஹரிஷ் உத்தமன் மிடுக்கான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு. மைதானம் விளையாட்டு என பல படங்கள் வந்திருந்தாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். விளையாட்டில் இருக்கும் அரசியல், அரசியல்வாதிகளின் தலையீடு என அனைத்தையும் சொல்லியிருக்கிறார். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டில் உலகளவில் விளையாடினாலும் அது மக்களுக்கு தெரியாது. அந்தளவிற்கு நம்நாடு இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். 



    அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் பெரிதளவு கைகொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘நட்பே துணை’  வலுவான நட்பு.
    வி.வி.விநாயக் இயக்கத்தில் ராம் சரண் - காஜல் அகர்வால், அமலா பால் நடிப்பில் வெளியான `நாயக்' படத்தின் விமர்சனம். #Naayak #NaayakReview
    நாயகன் ராம் சரண் ரகசியமாக சிலரை கொலை செய்து வருகிறார். இதற்கிடையே நாயகி காஜல் அகர்வாலை பார்க்கும் ராம் சரணுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். உள்ளூர் ரவுடியும், காஜல் அகர்வாலின் அண்ணணுமான ராகுல் தேவ் தனது தங்கை பின்னால் சுற்றும் ராம் சரணை கொல்ல திட்டமிடுகிறார்.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரை ராம் சரண் கொலை செய்வதை பார்த்து ராகுல் தேவ் மிரண்டுபோகிறார். இதையடுத்து ராம் சரண் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். அதில் ராம் சரண் இரட்டையர் என்பது தெரிய வருகிறது. இந்த வழக்கை ஆசிஷ் வித்யார்த்தி விசாரிக்க, கடைசியில் ராம் சரண் செய்யும் கொலைகளுக்கான காரணம் என்ன? ராம் சரண் - காஜல் அகர்வால் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ராம் சரண் ஆக்‌ஷன், காதல் என அதளகளப்படுத்தியிருக்கிறார். காஜல் அகர்வால், அமலாபால் என இருவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்தாலும், ஒரு பாடலில் மட்டும் நடனமாடி செல்லும் சார்மி ரசிக்க வைத்திருக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ராகுல் தேவ், ஆசிஷ் வித்யார்த்தி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    வழக்கமான பழிவாங்கல் கதையை கதைக்களமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் வி.வி.விநாயக். தற்போது பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தினாலும், படம் ரிலீசான நேரத்தில் வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.



    சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு அற்புதம். தமனின் இசை படத்திற்கு பலம் தான். பாடல்கள் சுமார் ரகம்.

    மொத்தத்தில் `நாயக்' அதிரடி இல்லை. #Naayak #NaayakReview #RamCharan #KajalAggarwal #AmalaPaul

    டம்போ என்னும் கற்பனையான யானைக்குட்டியை வைத்து குழந்தைகளை கவரும் வகையில் வெளியாகி இருக்கும் டம்போ படத்தின் விமர்சனம். #Dumbo #DumboReview
    டேனி டிவிட்டோ நடத்தி வரும் சர்க்கஸில் கொலின் பரல் பணிபுரிந்து வருகிறார். அந்த சர்க்கஸில் உள்ள பெரிய யானைக்கு புதிதாக ஒரு குட்டி யானை பிறக்கிறது. அதை அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள், அந்தக் குட்டியின் காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. யாருக்குமே அதைப் பிடிக்கவில்லை. எல்லோரும் அதனிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    இந்நிலையில், பெரிய யானையை ஏமாற்றி விற்றதாக கூறி அதை விற்று விடுகிறார்கள். தனிமையில் இருக்கும் குட்டியானைக்கு டம்போ என்று பெயர் வைக்கிறார்கள். இதனுடன் கொலின் பரலின் குழந்தைகள் விளையாடி வருகிறார்கள். அப்போது இறகை வைத்து விளையாடும் போது டம்போ காதை சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்கிறது. இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்.

    ஒருநாள் சர்க்கஸின் போது, டம்போவால் பறக்க முடியும் என்ற வியப்பான விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன்பின் டம்போவுக்குப் பயிற்சி தருகிறார்கள். சர்க்கஸும் செழிப்பாகிறது. 



    பெரிய சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் மைக்கேல் கீட்டன் இதையறிந்து டம்போவை வாங்க முயல்கிறார். இதை தர மறுக்கும் சர்க்கஸ் குழுவினரை பார்ட்னராக மாற்றி டம்போவை வாங்கி அவர் இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்.

    அங்கு ஒரு நாள் சர்க்கஸின் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் தன்னுடைய தாய் யானை இருப்பதை டம்போ அறிந்து அங்கு சென்று விடுகிறது. இதை பிரிக்க நினைக்கிறார் மைக்கேல் கீட்டன். இறுதியில் இவரது திட்டம் நிறைவேறியதா? தாய் யானையுடன் டம்போ சேர்ந்ததா? என்பதே படத்தின் கதை.

    குழந்தைகளுக்கான பேன்டஸி படங்கள் வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டிம் பர்டன். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் திரைக்கதை நகர்கிறது. டம்போவைப் பார்த்துக்கொள்ளும் நபராக, கொலின் பரல். அவரது குழந்தைகள்தான் படத்தின் நிஜ ஹீரோக்களாக வருகிறார்கள். வில்லனாக மைக்கேல் கீட்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். சர்க்கஸில் வேலை பார்க்கும் பெண்ணாக ஈவா க்ரீன் என கலர்புல் பட்டாளமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘டம்போ’ குழந்தைகளின் செல்ல பிள்ளை.
    ஸ்காட் மேன் இயக்கத்தில் டேவ் பேட்டிஸ்டா - லாரா பீக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபைனல் ஸ்கோர்' படத்தின் விமர்சனம். #FinalScoreReview #DaveBautista
    ராணுவ அதிகாரியான பேட்டிஸ்டா தனது சகோதரர் வீட்டிற்கு வருகிறார். அங்கு தவறான வழிக்கு சென்று தனது அம்மாவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தனது சசோகதரரின் மகளான லாரா பீக்கை வெளியே அழைத்துச் செல்கிறார். இருவரும் கால்பந்தாட்ட போட்டியை காணச் செல்கின்றனர்.

    மைதானத்தில் லாரா பீக் தனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றுவிடுகிறார். லாராவை காணாமல் தேடும் பேட்டிஸ்டா, அந்த மைதானத்தை ஒரு மர்மகும்பல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதை தெரிந்து கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அவர்களை தடுக்கவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.



    கடைசியில் லாரா பீக்கை, பேட்டிஸ்டா கண்டுபிடித்தாரா? மைதானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மர்ம கும்பலின் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஆக்‌ஷன் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் பார்த்த பேட்டிஸ்டாவை ஆக்‌ஷன் கலந்த செண்டிமென்ட் கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. பியர்ஸ் பிராஸ்னன், லாரா பீக், ரே ஸ்டூவன்சன், அலெக்சாண்ட்ரா தினு, மார்டின் போர்டு, அமித் ஷா, லக்கி கேஸ்கல் என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.



    வழக்கமான ஒரு கதையை வித்தியாசமான கோணத்தில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறார் ஸ்காட் மேன். ராபர்ட் ஹாலின் படத்தொகுப்பு படத்துக்கு முக்கிய பலம்.

    ஜேம்ஸ் எட்வர்டு பார்கர், டிம் டெஸ்பிக்கின் பின்னணி இசையும், எமில் டோபுசோவின் ஒளிப்பதிவும் சிறப்பு.

    மொத்தத்தில் `ஃபைனல் ஸ்கோர்' விறுவிறுப்பு. #FinalScoreReview #DaveBautista

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview
    பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.

    மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.



    மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.

    இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.



    கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.



    சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.



    நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

    தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 



    படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    சுரேஷ் இயக்கத்தில் வீரசமர், அமிதா ராவ், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டிபுலம்’ படத்தின் விமர்சனம். #Pattipulam #PattipulamReview
    பைக் ரேசராக இருக்கும் வீரசமர், டியூ கட்டாத பைக்குகளை தூக்கி வருகிறார். மேலும் அதே பகுதியில் இருக்கும் நாயகி அமிதா ராவை காதலித்து வருகிறார். ஒரு நாள் அரசியல்வாதி மூலம் ஒரு பைக் ரேஸ் நடக்கிறது. இதில் நாயகன் வீரசமருக்கும் ஒரு கும்பலுக்கும் சண்டை ஏற்படுகிறது.

    அந்த கும்பல் வீரசமரை அடித்து ஒரு பெட்டிக்குள் வைத்து உயிருடன் புதைத்து விடுகிறார்கள். நினைவு திரும்பி பார்க்கும் வீரசமர், எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார். தன்னுடைய செல்போன் நெட்வொர்க் மூலம் காதலிக்கு பட்டிபுலம் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் அளிக்கிறார்.

    இறுதியில் அமிதா ராவ், வீரசமர் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? உயிருடன் பெட்டிக்குள் புதைக்கப்பட்ட வீரசமர் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கலை இயக்குனரான வீரசமர், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். பைக் ரேசராகவும், பெட்டிக்குள் அடைத்தவுடன் பதட்டமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் நடித்திருக்கிறார் அமிதாராவ். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு ஒரே பலம். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.

    பைக் ரேசை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ். ஆனால், பெரிதளவிற்கு திரைக்கதை கைகொடுக்க வில்லை. படம் பார்க்கும் போது பழைய ஒரு சில படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஆர்.கே.வர்மாவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். வல்லவனின் இசை கவனம் பெற வில்லை.

    மொத்தத்தில் ‘பட்டிபுலம்’  இன்னும் பட்டி பார்க்கணும்.
    சர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் - மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.

    கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.



    மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.

    கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
     அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

    எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.



    சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `ஐரா' திகில்.

    டீன் டிபோலிஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் படத்தின் விமர்சனம். #HowToTrainYourDragon
    ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் வரிசையில் டிராகன்களின் ரகசிய உலகத்தை மையப்படுத்தி இந்த பாகம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் டிராகன்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் நாயகன் ஹிக்கப். டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து வராது, டிராகனும், மனிதர்களும் ஒன்றாக வாழலாம் என்பதை உணர்த்தும் ஹிக்கப், நிஜத்தில் அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்.

    இதற்கிடையே டிராகன்களால் மனிதர்களுக்கு ஆபத்து தான் என்று அதனை அடிமைப்படுத்தி அழிக்க நினைக்கிறார் கிரிம்மல். ஹிக்கப்பிடம் இருக்கும் டிராகன்களின் அரசனான நைட் பியூரியை (டூத்லெஸ்) கவர்ந்து அதன் மூலம் மற்ற டிராகன்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.



    அதற்காக லைட் பியூரி எனப்படும் வெள்ளை டிராகன் மூலம் லைட் பியூரியை பிடிக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து டிராகன்களை கிரிம்மல்லிடம் இருந்து பாதுகாக்க தனது அப்பா சொல்லும் பாதுகாப்பான ரகசிய உலகத்தை தேடுகிறார்.

    கடைசியில், பாதுகாப்பான உலகத்தை கண்டுபிடித்தாரா? அனைத்து டிராகன்களையும் அங்கு அழைத்துச் சென்றாரா? மனிதர்கள், டிராகன்கள் ஒன்றாக ஒரே உலகத்தில் வசித்தனவா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படம் முழுக்க முழுக்க அனிமேஷன், கிராபிக்ஸ் என 3டியில் உருவாகி இருப்பதால் திரையில் பார்க்க ஒரு விருந்தாகவே அமைகிறது. படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன. ஆக்‌ஷன் காட்சிகள், அதில் வரும் இடங்கள் என அனைத்தும் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன.

    குறிப்பாக டிராகன்களின் ரகசிய உலகத்தில் வரும் வண்ணமயமான டிராகன்கள் மற்றும் இடங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. டிராகன் - மனிதர்களுக்கு இடையேயான பாசம், பிரிவு என செண்டிமெண்ட்கள் இடம்பெற்றிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன்' விருந்து. #HowToTrainYourDragon #HowToTrainYourDragonReview

    அனூப் சிங், சாய் தன்ஷிகா நடிப்பில் சுனில்குமார் தேசாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உச்சக்கட்டம்’ படத்தின் விமர்சனம். #Uchakattam #UchakattamReview
    அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இருவரும் தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, நடக்கும் கொலை ஒன்றை பார்த்து ஏதேச்சையாக மொபைல் போனில் வீடியோவாகவும் படம் பிடிக்கிறார் தன்ஷிகா. இதைக்கண்டு அதிர்ந்த கொலைக் கும்பல், தன்ஷிகாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். 

    இதிலிருந்து தன்ஷிகாவை அனூப் சிங் எப்படி காப்பாற்றினார்? கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்த அனூப் சிங், இப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சாய் தன்ஷிகா, ரவுடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் அபாரம். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வேதாளம் படத்தின் வில்லனாக நடித்த கபீர் சிங், இப்படத்திலும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். 

    சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசை ஓகே ரகம் தான். விஷ்ணுவர்தனின் ஒளிப்பதிவு கர்நாடகா மாநில காடுகளை அங்குலம் விடாமல் அலசி இருக்கிறது. படத்திற்கு பலமாகவும் அமைந்திருக்கிறது.

    விறுவிறுப்பாக திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சுனில்குமார் தேசாய். விறுவிறுப்பு ஒன்றே குறிக்கோள் என கடிவாளம் போட்டது போன்று நேர்கொண்ட பார்வையுடன் படத்தை மிக வேகமாக நகர்த்துகிறார். கதாநாயகி வில்லன் கும்பலிடம் மீண்டும் மீண்டும் பிடிபட்டு தப்புவது போன்ற காட்சிகளை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘உச்சக்கட்டம்’ குறைவான உச்சம்.
    ×