என் மலர்tooltip icon

    தரவரிசை

    மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் லிண்டா கார்டிலனி, பேட்ரிசியா வெலஸ்குவெஸ், ரேமண்ட் குரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவளின் சாபம்' படத்தின் விமர்சனம். #AvalinSaabam
    குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றி வருகிறார் லிண்டா கார்டிலனி. வழக்கமான தனது விசாரணைக்காக அந்த பகுதியில் இருக்கும் பேட்ரிசியா வெலஸ்குவெஸ் வீட்டிற்கு செல்கிறார். பேட்ரிசியாவுக்கு 2 குழந்தைகள். பேட்ரிசியா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது குழந்தைகளை காட்ட மறுக்கிறாள்.

    இதையடுத்து குழந்தைகளை பேட்ரிசியா சித்தரவதை செய்வதாக நினைத்து லிண்டா தன்னுடன் வந்த அதிகாரிகள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு செல்கிறாள். ஆனால் அடுத்த நாளே அந்த குழந்தைகள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர்.



    இதுகுறித்து அந்த குழந்தைகளின் அம்மாவான பேட்ரிசியாவிடம் விசாரிக்க, தன் குழந்தைகளை அவள் தான் கொன்றிருப்பாள். அவள் உன் குழந்தைகளையும் கொன்று விடுவாள், இது அவளின் சாபம் என்று லிண்டாவிடம் கூறுகிறார்.

    கடைசியில், குழந்தைகளை கொன்று வரும் அந்த அவள் யார்? அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள்? அவளின் சாபம் என்ன? என்பதே மீதிக்கதை.

    குழந்தைகளுக்கான பாதுகாப்பு அதிகாரியாக லிண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். தனது குழந்தைகள் கடத்தப்படும் போதும், தனது குழந்தைகளை காப்பாற்றும் தருணத்திலும் நல்ல நடிப்பு. பேட்ரிக்கா, ரேமண்ட் குரூஸ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    தான் இறக்கும் தறுவாயில் சாபம் வாங்கிய ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த கதையை இயக்கியிருக்கிறார் மைக்கேல் சாவ்ஸ். படம் திகில் காட்சிகளுடன் நகர்வது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

    ஜோசப் பிசாராவின் பின்னணி இசையும், மைக்கேல் பர்கீஸின் ஒளிப்பதிவும் திகிலை கூட்டியிருக்கின்றன.

    மொத்தத்தில் `அவளின் சாபம்' தொடரும். #AvalinSaabam #AvalinSaabamReview #LindaCardellini #RaymondCruz #PatriciaVelásquez

    விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, தேவ், சார்லி, பூஜா தேவாரியா, பெய்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் விமர்சனம். #VellaiPookal #VellaiPookalReview
    விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

    அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார். 



    இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.

    கடைசியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. 

    விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.



    தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் வித்தியாசமான அமெரிக்காவை பார்க்க முடிகிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.

    மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்' பூக்கட்டும். #VellaiPookal #VellaiPookalReview #Vivekh

    ராகவா லாரன்ஸ் இயக்கி, அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காஞ்சனா 3' படத்தின் விமர்சனம். #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

    போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.



    தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.

    பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.



    ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. 
    கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா - தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் - தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.



    வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.



    திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் `காஞ்சனா 3' கலகல பேய் கதை. #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence #Vedhika #Oviya #NikkiTamboli #KovaiSarala

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவேதா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் விமர்சனம். #MehandiCircus #MehandiCircusReview
    தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

    இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.



    நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

    கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை.



    இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.



    எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்' இனிமை. #MehandiCircus #MehandiCircusReview #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    டேவிட் ஹார்பர் நடிப்பில் நெய்ல் மார்ஷல் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஹெல்பாய்’ படத்தின் விமர்சனம். #Hellboy #HellboyReview
    517 ஆம் ஆண்டு, மரணமில்லாத பெண்ணாகவும், ரத்தத்தின் மகாராணி என்று அழைக்கப்படும் நிமோ மனிதர்களை அழித்து வருகிறார். இதை தடுப்பதற்காக கிங் ஆர்த்தர் நிமோவை தன்னுடைய சக்தி மிகுந்த வாளால் ஆறு பாகங்களாக வெட்டி மந்திரம் செய்த பெட்டியால் அடைத்து, தன்னுடைய தளபதிகள் மூலம் அந்த பெட்டியை யாரும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அனுப்பி வைக்கிறார். 

    நிகழ் காலத்தில் சீக்ரெட் ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார் ஹெல்பாய். இந்நிலையில், பூமியில் வேற்று கிரகவாசிகள் உலாவுவதாக தகவல் கிடைக்கிறது. இதன் பின்னணியில் நிமோவின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காக அவை செயல்பட்டு வருவதாகவும், மொத்த பாகங்களை ஒன்று சேர்த்தால் நிமோ உயிர் பெற்று உலகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவாள் என்பதையும் ஹெல்பாய் அறிகிறார். 



    இறுதியில் நிமோ உயிர்தெழுந்தாரா? ஹெல்பாய் தடுத்தாரா? என்பதே படத்தின் கதை.

    ‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு மூன்றாவதாகத் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். ராட்ஷச தேகம், சிவந்த நிறம், முன் நெற்றியில் அறுபட்ட கொம்புகள், பாறை வலது கரம் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் தோரணையுமாக வலம் வருகிறார் ஹெல்பாய்.

    ஹெல்பாயாக நடித்திருக்கும் டேவிட் ஹார்பரும், ரத்த மகாராணியாக நடித்திருக்கும் நிமோவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 



    சூனியக்கார ரத்த ராணியான நிமோவை ஹெல்பாய் எதிர்கொள்வதும் இருவருக்கும் இடையிலான இதுவரை வெளிப்படாத உறவும் சொல்லப்பட்டிருக்கிறது. பயமுறுத்தும் உயிரினங்களும், மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹெல்பாயின் சாகசங்களும் ரசிக்க வைக்கிறது.

    முதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தை நெய்ல் மார்ஷல் இயக்கியுள்ளார். பெஞ்சமினின் இசையும், லாரென்சோ செனடோரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஹெல்பாய்’ குட்பாய்.
    கிரிஷ் இயக்கத்தில் நந்தா - ஈடன் குரைக்கோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ழகரம் படத்தின் விமர்சனம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse
    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் காதலிக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் சிலகாலம் இவர்கள் பிரிந்து இருக்க, தொல்பொள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா இறந்துவிடுகிறார். 

    இந்த நிலையில், நந்தாவை சந்திக்க வரும் பெரியவர், நந்தாவிடம் அவரது தாத்தாவின் இறப்பு இயற்கையானதில்லை என்றும், மர்ம கும்பல் ஒன்று அவரது தாத்தாவை கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார். நந்தாவின் தாத்தா தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான தடயங்கள், வழித்தடங்கள் அவருக்கு மட்டும் தெரியும் என்றும் கூறுகிறார்.



    இதற்கிடையே நந்தாவின் அப்பா, அவரது தாத்தா பரிசாக கொடுத்ததாக ஒரு பொருளை கொடுக்கிறார். அதனை பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பகடைக்காய் சில குறியீடுகளுடன் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று புரியாத நந்தா, தனது நண்பர்களின் துணையோடு அது பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். மேலும் அந்த புதையல் இருக்கும் இடத்தையும் தேடி வருகிறார்.

    இந்த நிலையில், அந்த புதையலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நந்தாவின் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மர்ம கும்பல் ஒன்று மிரட்டுகிறது.



    கடைசியில், நந்தா புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? தனது காதலியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

    நந்தா தனது தாத்தா விட்ட பணியை தொடர வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ஈடன் குரைக்கோஸ் அழகு பதுமையாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    உணவு தரக்கூடிய பொருள் தான் உலகத்திலேயே பெரிய பொக்கிஷம் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியருக்கிறார் கிரிஷ். அத்துடன் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழியின் பெருமையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் பாராட்டும்படியாக உருவாக்க்கியிருக்கிறார்கள்.

    தரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம். பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `ழகரம்' உணவின் முக்கியத்துவம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
    கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

    இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.



    பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

    கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.



    காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.



    ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், இசன்யா, சாயாஜி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம். #RockyTheRevenge
    இரட்டை நாய்களை ஒரு கும்பல் கடத்துகிறது. இதில் ஒரு நாய் தப்பித்து விபத்தில் சிக்குகிறது. இதை போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த், காப்பாற்றி தன்னுடன் வளர்க்கிறார். இதற்கு ராக்கி என்றும் பெயர் வைக்கிறார். ராக்கி மிகவும் புத்திசாலியாக இருப்பதால், பிரம்மானந்தம் மூலமாக போலீசில் துப்பறியும் நாய்கள் பயிற்சியில் சேர்க்கிறார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் சாயாஜி ஷிண்டேவின் கூட்டாளி சுந்தரை ஆயுதம் கடத்தியதாக ஸ்ரீகாந்த் கைது செய்கிறார். ஆனால் சுந்தர், எம்.எல்.ஏ. சாயாஜி மூலம் வெளியே வந்து விடுகிறார். மறுபடியும் சுந்தரை பிடிக்க முயற்சி செய்யும் போது ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். இதை ராக்கி நாய் பார்த்து விடுகிறது. 

    இறுதியில் ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை ராக்கி எப்படி பழி வாங்குகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். வழக்கம் போல் இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இசன்யாவிற்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சாயாஜி, போலீஸ் உயர் அதிகாரியாக வரும் நாசர் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள். 

    நாய் பழிவாங்குவதை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.சி.பொகாடியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதுபோல் ஒரு படத்தை பார்க்கும் அனுபவம் இருந்தாலும், ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது பழைய படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். 



    பப்பி லஹரி மற்றும் சரன் அர்ஜுனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. அஸ்மல் கானின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘ராக்கி’ கொஞ்சம் வீக்.
    பிரித்வி, ஓவியா நடிப்பில் ரதீஷ் இரேட் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் விமர்சனம். #GaneshaMeendumSanthippom
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த நபர் கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.

    சென்னையில் யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.

    இந்நிலையில், பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார். ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிக் கொண்டு புறப்படுகிறார் பிரித்வி.



    இறுதியில் பிரித்வி எதற்காக திருடி பணம் சேர்க்கிறார்? யாருக்காக பணம் சேர்க்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திருட்டுதனம் செய்து முழிப்பது, பதறுவது, காதலியை நினைத்து ஏங்குவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார் பிரித்வி. முதல் பாதியில் மட்டும் துணை நடிகை போல் வருகிறார் ஓவியா. 90 எம்எல் படத்தை போலவே இதிலும், தம்மடிப்பது, பீர் குடித்து என சகலமும் செய்கிறார். 

    ஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார். 



    ஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

    என்எல்ஜி சிபி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விபிந்த் வி ராஜ். 

    மொத்தத்தில் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ ஒருமுறை போதும்.
    டேவிட் எஃப் சான்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `ஷசாம்' படத்தின் விமர்சனம். #Shazam #ShazamReview
    மாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். வருடங்கள் ஓடிப்போக தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இதில் மந்திரவாதி சிறுவன் ஒருவனை சோதனைக்கு உட்படுத்துகிறார். சோதனையில் சிறுவன் தீயசக்திகளை விடுவிக்க முயற்சிக்கிறான். தக்க நேரத்தில் மந்திரவாதி சிறுவனை தடுத்து வெளியே அனுப்பிவிடுகிறார்.



    சில ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய ஆளாக மாறிய பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு போவதற்கான வழியை அறிந்து அங்கு சென்று தீய சக்திகளை விடுவிக்கிறான். தீய சக்திகள் அவன் உடலினுள் சென்று தீய சக்திகளின் அதிபதியாகிறான்.

    இதையடுத்து தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெடுக்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளை இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.



    ஷசாம் வெகுளித்தனம் நிறைந்த காமெடி கதாபாத்திரத்தில் வருகிறார். சிறுவயதில் அம்மாவை பிரிந்த ஏக்கத்திலும், ஷசாமாக மாறும் போதும், மாறிய பிறகு செய்யும் குறும்புகளும் ரசிக்கும்படியாக சிரிக்க வைக்கின்றன. ஒரு சிறுவன் போல் தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கும் சாச்சரி லீவிவுக்கு பாராட்டுக்கள். மார்க் ஸ்டிராங் வில்லத்தனத்தில் பாரபட்சமின்றி மிரட்டியிருக்கிறார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    பெற்றோரால் பாதிக்கப்படும் நாயகன், வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் கதை. அதில் மாந்திரீகம், பாசம், காமெடி, சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க். குறிப்பாக படம் முழுக்க முழுக்க காமெடியாகவே நகர்வது பாராட்டுக்குரியது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.



    பெஞ்சமின் வால்பிச்சின் பின்னணி இசை, மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `ஷசாம்' சாகசம். #Shazam #ShazamReview

    பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரசூல் பூக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு கதை சொல்லட்டுமா' படத்தின் விமர்சனம். #OruKadhaiSollattuma #ResulPookutty
    சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றவுடன், கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறுகிறார்.

    அதன்படி நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது, ரசூல் பூக்குட்டிக்கும், அவரது நண்பருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.



    இருந்தாலும், தானே அந்த ஆவண படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார் ரசூல். இந்நிலையில், அவருக்கு பல்வேறு வழிகளில் பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் ரசூல் பூக்குட்டி எப்படி சமாளித்தார்? பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்தாரா? என்பதே படத்தின் அடுத்த பாதி.

    சவுண்ட் டிசைனராக ரசிகர்களை கவர்ந்த ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.இப்படத்திற்காக இவரின் உழைப்பு அபாரம். சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தால், நுணுக்கமான ஒலிகளை கூட ரசிக்க முடியும். அந்தளவிற்கு சிறப்பான ஒலிகளை கொடுத்திருக்கிறார்கள்.



    சாதாரண திரையரங்குகளில் பார்த்தால், இப்படத்திற்கான உழைப்பு உங்களுக்கு தெரியாமல் போய்விடும். கமர்ஷியல் படம் ரசிப்பவர்களுக்கு இப்படம் பிடிக்காது.

    அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார்கள். ராகுல் ராஜ்ஜின் இசையும் ரசிக்க வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ சிறந்த ஒலி. #OruKadhaiSollattuma #ResulPookutty

    ×