என் மலர்
தரவரிசை
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மான்ஸ்டர்' படத்தின் விமர்சனம்.
இந்த உலகத்தில் வாழும் எந்த உயிரையுமே கொல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரும், கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர். ஆனால் ஏதோ காரணத்தால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க பிரியா பவானி சங்கரிடம் இருந்து போன் வர சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிடுகிறார்.

பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. தினமும் இந்த நிலையே தொடர அதனை கொல்ல விருப்பமில்லாமல், அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.

கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.
எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம். பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.

ஒரு நாள் கூத்து படத்தில் யதார்த்தமான வாழ்க்கை முறையை படமாக்கிய நெல்சன் வெங்கடேசன், இந்த படத்தில் எலியால் ஏற்படும் தொல்லைகளை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஒட்டாமல் இருப்பது போல தோன்றுகிறது. பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த உலகில் வாழும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.
மொத்தத்தில் `மான்ஸ்டர்' சுவாரஸ்யம் குறைவு.
சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் விமர்சனம்.
கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.
வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.

இந்த நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் வந்து விட, அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். இது மற்ற இருவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ண, ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யாவை பார்க்கும் இருவருக்குமே பிடித்துப் போகிறது.
இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட கவின் ரம்யாவை காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும், எந்தவித எதிர்ப்பும் இன்றி கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இதனால் இவர்களது நட்பில் விரிசல் ஏற்படுகிறது.
கடைசியில், நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? அதன் பின்னணியில் நடக்கும் பின்னணியே நட்பான மீதிக்கதை.

இந்த படத்தின் மூலம் கவின் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். நண்பர்களுடனான காட்சியிலும் சரி, காதலியுடனான காட்சியிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். முன்று நண்பர்களின் நட்புக்கு இடைஞ்சலாக வரும் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குநராக வெற்றி வாகை சூடியிருக்கும் அருண்ராஜா காமராஜூக்கு இந்த படம் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும் எனலாம். இனி முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அனைத்தையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ராஜூ தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

மற்றபடி இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தனது முதல் படத்திலேயே நட்பு, காதலை மையப்படுத்திய கதையை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வரை மெதுவாக போகும் கதை, கதாபாத்திரங்கள் பற்றிய புரிதல் ஏற்படும் போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது. காதலும், நட்புப் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும் இந்த கதையில், காமெடிக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. நண்பர்கள் முன்று பேருமே அவர்களது கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு முக்கிய பலம்.
சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வந்து ரசிக்க வைக்கிறது. கே.யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `நட்புனா என்னானு தெரியுமா' கலாட்டா.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.
பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.

இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.
பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.

ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `100' படத்தின் விமர்சனம். #100TheMovie #Atharvaa #Hansika
நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார்.
அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.

தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.
இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.
நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.

போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘100’ அவசரம். #100TheMovie #Atharvaa #Hansika #YogiBabu
காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி - அனேகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கீ' படத்தின் விமர்சனம். #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.
பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.

இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.
இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.
இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.

கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.
ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.
கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `கீ' சாவி. #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
ஆர்.வி.பாண்டி இயக்கத்தில், தருண், ராபியா, அனன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ படத்தின் விமர்சனம்.
நாயகன் தருண் ஊரில் வேலை இல்லாமல் இருக்கிறார். இவருடைய அப்பா ஆர்.வி.பாண்டி போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார். தருணுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த கனவு தினமும் தொடர்கிறது. கனவில் காதலியுடன் பல இடங்களுக்கு செல்கிறார் தருண்.
அந்த பெண் யார் என்று நிஜத்தில் தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கனவில் சென்ற இடங்களை நிஜத்தில் பார்க்கிறார். மேலும் அந்த பெண் அருகில் எங்கையோதான் இருக்கிறார் என்று உணர்கிறார்.
இந்நிலையில், தொழில் அதிபர் கேபிஜே-வின் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கிறார் தருண். கனவில் வரும் காதலி ஒருநாள் ஒருவரை கொலை செய்ய தூண்டுகிறார். தன்னுடைய முதலாளிதான் கொலை செய்யும் நபர் என்று தருணுக்கு தெரியவருகிறது.

இறுதியில் நாயகன் தருண் தன்னுடைய முதலாளியை கொலை செய்தாரா?, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா? நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் தருண், நாயகி ராபியா ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் போலீஸ் ஏட்டாகவும் நடித்திருக்கிறார் ஆர்.வி.பாண்டி. தொழில் அதிபராக வரும் கேபிஜே, மற்றொரு நாயகியாக வரும் அனன்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.வி.பாண்டி, நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் என்ன தரமுடியோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கோல்டு சந்துருவின் ஒளிப்பதிவும், ஏ.கே.ராம்ஜியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ பார்க்கலாம்.
ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி இயக்கத்தில் மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி நடிப்பில் வெளியாகி இருக்கும் வேதமானவன் படத்தின் விமர்சனம். #Vedhamanavan
ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி எழுதி இயக்கி இருக்கும் படம்.
மனோ ஜெயந்த் ஒரு கிராமத்துக்கு மீன் விற்க வருகிறார். அந்த கிராமத்தில் பெண்கள் நகைக்காக கொல்லப்படுகிறார்கள். மீன் விற்கும் மனோ ஜெயந்துக்கும் ஊர்வசி ஜோசிக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் நகைக்காக பெண்களை கொலை செய்வது மனோ தான் என்பது தெரிய வருகிறது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தண்டனைக்கு பின் வெளியே வரும் மனோ திருந்தி வாழ முயற்சிக்கிறார்.
அவரை இந்த சமூகம் திருந்தி வாழ விட்டதா? அவர் ஏன் பெண்களை கொலை செய்து நகையை திருடுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோசி இருவரும் புதுமுகங்கள் என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடத்தில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மூ.புகழேந்தி தான் தீர்ப்பு வழங்கிய ஒரு உண்மை சம்பவத்தையே கதையாக எழுதி இயக்கி இருக்கிறார். கதை, திரைக்கதை எதிலுமே அழுத்தம் இல்லை. மனோ கொலைகள் செய்வதற்கும் விடுதலையாவதற்கும் வலுவான பின்னணி காரணங்கள் இல்லை. குற்றவாளிகள் திருந்தி வாழ நாம் சந்தர்ப்பம் தரவேண்டும் என்ற சமூக கருத்தை சொன்ன விதத்தில் வேதமானவனை பாராட்டலாம்.
எஸ்.கண்ணனின் ஒளிப்பதிவும், சவுந்தர்யன் இசையில் வரும் பாடல்களும் ஓரளவுக்கு ஆறுதல். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.
மொத்தத்தில் `வேதமானவன்' சந்தர்ப்பம். #Vedhamanavan #VedhamanavanReview
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், பிரித்விராஜ், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தின் விமர்சனம். #Lucifer #MohanLal
முழுக்க முழுக்க அரசியல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் தமிழக முதல்வராக இருக்கும் சச்சின் கெடேகரின் திடீர் மறைவால், முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் இணைகின்றனர்.
சச்சின் கெடேகரின் மகன் டோவினோ தாமஸ், மகள் மஞ்சு வாரியர், அவரது கணவர் விவேக் ஓபராய் மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாய் குமார் மற்றும் கட்சியில் சத்தமில்லாமல் பலம் வாய்ந்தவராக இருக்கும் மோகன் லால் உள்ளிட்டோரிடையே போட்டி நிலவுகிறது.

இதில் டோவினோ தாமஸ் பெயரை முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்க, அதில் சூழ்ச்சி வரும் சூழ்ச்சிகளை மோகன் லால் தடுத்து நல்ல தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறார். மோகன் லாலின் வலது கையாக அவர் சொல்வதை செய்து வருகிறார் பிரித்விராஜ்.
கடைசியில், முதல்வர் பதவியில் உட்கார்ந்தது யார்? சூழ்ச்சிகளை மோகன் லால் எப்படி எதிர்கொண்டார்? என்பதே லூசிபர் படத்தின் மீதிப்பாதி.

படம் முழுக்க பெரும்பாலும் வெள்ளை வேஸ்டி, சட்டையுடனேயே வலம் வருகிறார் மோகன் லால். பதுங்கியிருப்பதும், பிரச்சனை வரும் போது பாய்வதும் என மாஸ் காட்டிச் சென்றிருக்கிறார். மோகன் லால் சொல்வதை செய்யும் விசுவாசியாக பிருத்விராஜ் ஆக்ஷன் அவதாரம் எடுத்து கலக்கியிருக்கிறார். டோவினோ தாமஸ் அமைதியான வில்லனாகவும், விவேக் ஓபராய் மாஸான வில்லனாகவும் வந்து கவர்கின்றனர். மஞ்சு வாரியர் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி, பத்திரிகையாளராக இந்திரஜித் சுகுமாரனும், சாய்குமார், நந்து, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் அரசியல்வாதியாகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

முரளி கோபி எழுதிய கதையை மாஸாக இயக்கியிருக்கிறார் பிரித்விராஜ். மோகன் லாலை ரசித்து ரசித்து மாஸாக காட்டியிருப்பது போன்று தோன்றுகிறது. மாஸ் காட்சிகளை தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் காட்டியிருப்பது சிறப்பு. வழக்கமான ஒரு பழிவாங்கல் கதை தான் என்றாலும் அதை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
தீபக் தேவின் இசையும், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம் கூட்டியிருக்கின்றன.
மொத்தத்தில் `லூசிபர்' மாஸ். #Lucifer #MohanLal #PrithvirajSukumaran #VivekOberoi #ManjuWarrier #TovinoThomas
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே 13' படத்தின் விமர்சனம். #K13 #K13MovieReview #Arulnidhi
திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ண சொல்லி ஒருவர் கேட்கிறார்.
இந்நிலையில், நண்பர்களுடன் கிளப்புக்கு செல்கிறார் அருள்நிதி. அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் வீடு வரைக்கும் செல்கிறது.
மறுநாள் காலை வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருக்கும் அருள்நிதி, கண் விழித்து பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அருள்நிதி, அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.

இறுதியில் அருள்நிதி எப்படி தப்பித்தார்? ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை யார் கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முழுக்கதையை தாங்கி பிடித்திருக்கிறார். தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகி ஷ்ரத்தா அழகாக வந்து கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள். காயத்ரி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். அதை சைக்கோ திரில்லருடன் கொடுத்திருக்கிறார். வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பது அருமை. சிறிய கதையை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கே-13’ விறுவிறுப்பு.
எம்.ஸ்ரீநிவாஸ் ரவீந்திரா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - பூஜா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் விமர்சனம். #ArjunReddy #VijayDevarakonda
சிறிய அளவில் திருடி பிழைப்பு நடத்தி வரும் விஜய் தேவரகொண்டா, பெரியதாக ஒருமுறை திருடி செட்டிலாக வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்காக கோயிலில் ஒன்றை தேர்வு செய்து திருட சென்ற இடத்தில் பூஜா சவேரியை பார்த்து காதல் வயப்படுகிறார்.
விஜய்யை பார்க்கும் பூஜா, திருடன் என்று கத்த அங்கிருந்து தப்பித்து ஓடி ஒளிகிறார். அந்த இடத்தின் சொந்தக்காரர் விஜய் தேவரகொண்டாவை சக்திவாய்ந்த சாமியார் என நினைத்துக் கொண்டு அங்கேயே தங்க வைக்கிறார். வசதியான வாழ்க்கை கிடைக்க, விஜய்யும் அங்கேயே செட்டிலாகிவிட எண்ணுகிறார். சாமியார் என்ற முகமூடியுடன் பிரபலமாகும் விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் வருகிறது.

ஆனால் விஜய் யார் என்பது தெரிந்த அந்த பகுதி ரவுடிகள், விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். விஜய் அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணும் போது, மீண்டும் பூஜாவை பார்க்க அங்கேயே இருந்துவிடுகிறார்.
ஒருகட்டத்தில் விஜய் - பூஜா இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். தன்னை கரம்பிடிக்க வேண்டுமென்றால், விஜய் திருட்டுத்தனத்தை விட்டு நல்ல மனிதனாக திருந்தி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
கடைசியில், விஜய் நல்ல வழிக்கு திரும்பினாரா? விஜய் - பூஜா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அர்ஜுன் ரெட்டியின் மீதிப்பாதி.

விஜய் தேவரகொண்டாவின் ஆரம்ப காலத்தில் வெளியான படமாக இருந்தாலும், இதிலும் ரசிகர்களை கவரும்படியாகவே நடித்திருக்கிறார். பூஜா சவேரி அழகு தேவதையாக வந்து செல்கிறார். பல்லிரெட்டி பிருத்விராஜ், பிரபாகர், பிரகாஷ்ராஜ், ரகுபாபு எர்ரா, ஷக்கலக்க ஷங்கர், சுரேகா வாணி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
எம்.ஸ்ரீநிவாஸ் ரவீந்திரா இயக்கியிருக்கும் இந்த படம் காதல், காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படம் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு ஏற்படும்படி இருக்கிறது.
சாய் கார்த்திக்கின் இசையும், ஷியாம் கே நாயுடுவின் ஒளிப்பதிவும் அர்ஜுன் ரெட்டிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
மொத்தத்தில் `அர்ஜுன் ரெட்டி' ஒரிஜினல் இல்லை. #ArjunReddy #ArjunReddyReview #VijayDevarakonda #PoojaJhaveri
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் விமர்சனம். #Devarattam #GauthamKarthik
மதுரையில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் பெப்சி விஜயன், ஊரில் பெரிய ரவுடியாக வலம் வருகிறார். தவமிருந்து பெற்ற தனது மகன் மீது தீராத அன்பு கொண்டவர். தனது மகனுக்காக எதையும் செய்யத் துணிந்தவர். இந்த நிலையில், ஒரு பிரச்சனையில் வேல ராமமூர்த்தியை கொன்று விடுகிறார்.
வேல ராமமூர்த்திக்கு 6 மகள்கள், ஒரே மகன் தான் நாயகன் கவுதம் கார்த்திக். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து தனது அக்காள்களின் வளர்ப்பில் வளர்கிறார்.
அக்காள்கள் சேர்ந்து கவுதம் கார்த்திக்கை சட்டம் படிக்க வைக்கிறார்கள். தவறு என்று தோன்றினால் தட்டிக் கேட்கும் மனோபாவம் கொண்ட இவரது குணம் பிடித்துப்போக, வழக்கறிஞரான நாயகி மஞ்சிமாவுக்கு கவுதம் கார்த்திக் மீது காதல் வருகிறது. பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த நிலையில், இளம்பெண் விஷயத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் பெப்சி விஜயனின் மகனுக்கும், கவுதம் கார்த்திக்குக்கும் மோதல் ஏற்படுகிறது. தனது மகன் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் தானே களமிறங்கும் பெப்சி விஜயன், கவுதம் கார்த்திக்கின் குடும்பத்தையே அழித்துவிட எண்ணுகிறார்.
கடைசியில், பெப்சி விஜயனின் ரவுடித்தனத்துக்கு கவுதம் கார்த்திக் எப்படி முட்டுக்கட்டை போடுகிறார்? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தேவராட்டம் கதையின் அடுத்த பாதி.

இதுவரை பார்க்காத ஒரு துடிப்பான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் கவுதம் கார்த்திக். மதுரை இளைஞனாக, தப்பு என்றால் தட்டிக் கேட்கும் மிடுக்கான தோற்றத்தில் வந்து கலக்குவதுடன், ஆட்டம், பாட்டம், சண்டை என ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். மஞ்சிமா மோகன் வழக்கறிஞர், காதல் என ரசிக்க வைக்கிறார். சூரி காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்.
போஸ் வெங்கட் பொறுமையின் உச்சமாகவும், வினோதினி அம்மாவான அக்காவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் பெப்சி விஜயன் வில்லத்தனத்தில் மிரட்ட, வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தென் மாவட்ட ஸ்டைலில் குடும்பம், உறவுகள், பாசம், கோபம் என அனைத்தையும் ஒருங்கே சேர்த்து தனக்கே உரிய பாணியில் இயக்கியிருக்கிறார் முத்தையா. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பாசப் போராட்டங்களும் இடம்பெற்றிருக்கும் கதையில் மதுரை சாயலில் வரும் பாடல்கள் மண்வாசனையை கூட்ட, ஒரு சில பாடல்கள் படத்தின் போக்கிற்கு இடைஞ்சலாய் வருவது போல் தோன்றுகிறது. திரைக்கதை வேகமாக நகர்ந்தாலும், ரசனையை இன்னமும் கூட்டியிருக்கலாம். பெண்ணின் மீது கை வைத்தால், கருவறுக்க வேண்டும் என்பதை படம் பேசுகிறது.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்க, சக்தி சரவணனின் ஒளிப்பதிவு மதுரை மண்ணை கண்முன் நிறுத்துகின்றன.
மொத்தத்தில் `தேவராட்டம்' மண்வாசனை. #Devarattam #DevarattamReview #GauthamKarthik #ManjimaMohan
பல சூப்பர் ஹீரோக்களை கொண்டு பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் விமர்சனம். #Avengers #AvengersEndgame
திரை உலக ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவெஞ்சர்ஸின் இறுதி பாகம் ஆகும்.
கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களை கைப்பற்றிய தானோஸ், தனது சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுகிறார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் பாதிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இப்படம் ஆரம்பிக்கிறது. அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார். உடல்நிலை மோசமாக இருக்கும் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இழந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ். ஒரு வழியாக தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தானோஸிடம் கற்கள் இல்லாததை கண்டு விசாரிக்கும் போது, கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள்.
நவரத்தின கற்கள் இல்லாமல் அவெஞ்சர்ஸ் இழந்தவர்களை எப்படி மீட்டார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
பல பாகங்களை விட இறுதி பாகத்தை பார்க்க உலக திரை ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்தி செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல தேவையில்லை. அனைவரும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்களை திரையில் பார்க்கும் போது அனல் பறக்கிறது. இந்த முறை தோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்.
சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரம்மாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம். அதுவும் 3-டியில் பார்க்கும் போது புது அனுபவத்தை கொடுக்கிறது. தமிழில் பார்க்கும் போது விஜய் சேதுபதியின் பின்னணி குரல் படத்திற்கு மைனசாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதியை தவறு சொல்லவில்லை. ஆனால், ஐயன்மேனுக்கு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் சூட்டாகவில்லை.
மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பிரம்மாண்டத்தின் உச்சம்.






