search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvakannan"

    செல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி நடிப்பில் வெளியாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் விமர்சனம். #Nedunalvadai #NedunalvadaiReview
    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், டூலெட் போன்ற படங்கள் எளிமையான கதையுடன் மக்களின் வாழ்வியலை சொல்லும் படங்களாக வெளியாகி பெருமைப்பட வைக்கின்றன. அந்த வரிசையில் சேரும் இன்னொரு படைப்பு நெடுநல்வாடை.

    திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பூ ராமுவுக்கு மைம் கோபி, செந்திகுமாரி என 2 பிள்ளைகள். காதல் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப் போகும் செந்திகுமாரி கணவனின் தொல்லை தாங்காமல் மகன் இளங்கோ மற்றும் மகளுடன் தனது தந்தை வீட்டுக்கு வருகிறார்.

    ஆனால், மைம் கோபி அவர்களை சேர்த்துக்கொள்ள மறுக்க பூ ராமுவே மகள் குடும்பத்துக்கு அரணாக மாறுகிறார். பேரன், பேத்தி இருவரையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர பாடுபடுகிறார். சிறுவயது முதல் ஒன்றாக பழகி வரும் இளங்கோவும், அஞ்சலி நாயரும் காதலிக்கிறார்கள். 



    தனக்கு பிறகு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு இளங்கோ பக்குவப்பட வேண்டும் என்று விரும்புகிறார் பூ ராமு. இளங்கோ நல்ல நிலைக்கு வர வேண்டிய நிலையில், அவரது காதல் குறுக்கே நிற்கிறது. 

    கடைசியில் பேரனின் காதல், தாத்தாவின் பாசம், இரண்டில் வென்றது எது? என்பதே கதை.

    பூ ராமுவுக்கு இளங்கோ குடும்பத்தையும் படத்தையும் தாங்கும் கதாபாத்திரம். சின்ன சின்ன அசைவுகள் முதல் உணர்வுமிக்க காட்சிகள் வரை செல்லையாவாகவே வாழ்ந்து அசத்தி இருக்கிறார். படம் முழுக்கவே நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் காட்சிகள் செல்லையாவின் வாழ்க்கைக்குள்ளேயே நம்மை ஒன்ற வைக்கிறது. இந்த ஆண்டு பல விருதுகளை பூ ராமு குவிப்பார் என்று சொல்லலாம். தேசிய விருதுக்கே தகுதியான நடிப்பு.



    தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக இந்த ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த வரவாக இளங்கோ இருப்பார். தாத்தாவின் பாசத்துக்கும், அஞ்சலி நாயரின் காதலுக்கும் இடையே தவிக்கும் நாயகனாக இளங்கோ, அந்த தவிப்பை நமக்கும் கடத்தி இருக்கிறார்.

    படத்தில் அஞ்சலி நாயருக்கு காதலிப்பதுதான் வேலை. ஆனால் வெறுமனே அழகு பொம்மையாக வந்து போகாமல் படத்தின் உயிர்நாடியாக நடித்து இருக்கிறார். 90-களின் கதாநாயகிகளை நினைவுபடுத்தும் வசீகரம். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பில் கைதட்டல்கள் பெறுகிறார்.



    வெறுப்பை உமிழும் மாமாவாக மைம் கோபி, கணவனை பிரிந்த கையறு நிலை தாயாக செந்தி குமாரி, அஜய் நடராஜ், ஐந்து கோவிலான், ஞானம் என மற்றவர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

    உணர்வுகளை காட்சிகளுக்குள் கொண்டு வந்து அவற்றை அப்படியே ரசிகர்களிடத்தில் கொண்டு செல்லுதல் என்பது ஒரு கலை. எளிமையான கதையையும், அறிமுக நடிகர்களையும் கொண்டு அந்த கலையை அழகாக செய்து காட்டி இருக்கிறார் செல்வகண்ணன். எளிமையான கதை தான் என்றாலும் அதை திரையில் காட்டியிருக்கும் வடிவத்தில் நிற்கிறார் இயக்குநர். புதுமுகங்கள் என்றாலும், அவர்களின் சிறப்பான பங்களிப்பு படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி சரியான கதைக்களம், தொழில்நுட்பங்கள் என இதனை ஒரு அழகிய படைப்பாக மாற்றி இருக்கும் செல்வகண்ணனுக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. எல்லோருக்கும் பொருந்த கூடிய ஒரு கதையில் சில சாதி அடையாளங்கள் காண கிடைப்பது மட்டுமே திருஷ்டி.




    வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் அல்லாமல் 2 மணி நேரம் நம்மை பேச்சியம்மாவுக்காக கலங்க வைத்து, மருது பாண்டி, கொம்பையா மீது கோபப்படுத்தி, அமுதாவை  காதலிக்க வைத்து, செல்லையா போன்ற ஒரு தாத்தாவுக்கு ஏங்க வைத்து அனுப்புகிறது நெடுநல்வாடை.

    முக்கியமாக வைரமுத்துவின் வரிகள் படத்துக்கு உயிர்பை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக கருவாத்தேவா பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளான, ஒரு பசுவின் தியாகம் தான் உசுரா ஒழுகுது பாழாக, ஒரு மனுசனின் தியாகம் தான் ஒவ்வொரு குடும்பமும் ஆளாக என்ற வரியும், ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக, நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக போன்ற வரிகள் மூலமாக படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்.



    ஜோஸ் பிராங்ளினின் இசை, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு மூன்றும் செல்வகண்ணனின் எழுத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர உதவி இருக்கின்றன. ஜோஸ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் காதுகளுக்கு விருந்து தான். வினோத்தின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த உதவியிருக்கிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் நேர்த்தி.

    மொத்தத்தில் `நெடுநல்வாடை' பாராட்டப்பட வேண்டிய படைப்பு. #Nedunalvadai #NedunalvadaiReview

    செல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் முன்னோட்டம். #Nedunalvadai
    பி ஸ்டார் புரொடக்‌ஷன் சார்பில் ஒன்றாக படித்த 50 நண்பர்களட இணைந்து தயாரித்துள்ள படம் `நெடுநல்வாடை'.

    பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், அஜெய் நடராஜ், மைம்கோபி, ஐந்துகோவிலான், செந்தி, ஞானம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வினோத் ரத்தினசாமி, இசை - ஜோஸ் ஃபிராங்க்ளின், பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, படத்தொகுப்பு - மு.காசிவிஸ்வநாதன், கலை - விஜய் தென்னரசு, சண்டை பயிற்சி - ராம்போ விமல், நடனம் - தினா, சதீஷ் போஸ், தயாரிப்பு - பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செல்வகண்ணன்.



    படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது,

    எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும். என்னோட இந்த நெடுநல்வாடை படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை.

    இந்த படம் பார்க்கிறவர்கள் இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி இருப்பீர்கள். இது 75 சதவீதம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட படம். பூ ராமுவை நான் ஒவ்வொரு காட்சியிலும் என் தாத்தாவாகத் தான் பார்த்தேன்.

    சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் வருகிற மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றார். #Nedunalvadai #NedunalvaadaiFromTomorrow

    நெடுநல்வாடை டிரைலர்:

    செல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் நெடுநல்வாடை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #Nedunalvaadai
    பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பூ ராமு இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், மைம் கோபி, அஜய் நட்ராஜ், ஐந்துகோவிலான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நெடுநல்வாடை'.

    செல்வகண்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் மண் மனம் மாறாத காதல், சென்டிமெண்ட் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளையும், விஜய் தென்னரசு கலை பணிகளையும் கவனித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Nedunalvaadai

    நெடுநல்வாடை படத்தின் டீசரை  பார்க்க:

    ×