என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshay Krishnan"

    தினேஷ் பாபு இயக்கத்தில் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, அக்‌ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கிருஷ்ணம்’ படத்தின் விமர்சனம். #Krishnam #KrishnamReview
    தொழிலதிபர் சாய்குமாருக்கு மகனாக இருக்கும் நாயகன் அக்‌‌ஷய் கிருஷ்ணன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கல்லூரியில் இருப்பவர்கள் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள். இதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாசை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் கிருஷ்ணன்.

    தந்தை சாய்குமாரும், அக்‌‌ஷய் கிருஷ்ணனும் நண்பர்கள் போல பழகி வருகிறார்கள். மகனின் எல்லா செயல்களுக்கும் துணையாக இருக்கும் தந்தை சாய்குமார் இந்த காதலுக்கும் துணையாக இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அப்போது அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.



    மருத்துவ சோதனையில் அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு கொடிய நோய் பாதித்திருப்பதாகவும், ஆபரே‌ஷனில் அவர் உயிர் பிழைக்க சிறிதளவே வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்லுவதை நினைத்து வருந்தும் சாய் குமார், தன்னுடைய தெய்வமான குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார்.

    குருவாயூரப்பனின் அருளால் அக்‌‌ஷய் கிருஷ்ணன் உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    அக்‌‌ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களையே படமாக்கி இருக்கிறார்கள். அதை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யா உல்லாஸ் அழகாக வந்து நடித்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சாய் குமார், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு படங்களில் நடித்த சாந்தி கிருஷ்ணா இந்த படம் மூலம் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார். இவரின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. இனி அடிக்கடி அம்மா வேடங்களில் பார்க்கலாம். 



    உண்மை சம்பவத்தை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் பாபு. இவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு முதல் பாதியில் குறைவு என்றே சொல்லலாம். கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை நம்பினால் நல்லது நடக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள். கடவுள் மகிமை படங்கள் வந்து வெகு காலம் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து அப்படி ஒரு படமாக வெளியாகி இருக்கிறது.

    ஹரி பிரசாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கிரிஷ்ணம்’ பக்தி பரவசம்.
    ×