செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியா? -பாகிஸ்தான் மறுப்பு

Published On 2021-06-20 16:27 GMT   |   Update On 2021-06-20 16:27 GMT
ராணுவ தளங்களை வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத் துறை மந்திரி சவுத்ரி பாவத் உசைன் ஆகியோர் கூறி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியபின்னர், பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை பயன்படுத்தி, அங்கிருந்தபடி எல்லை தாண்டிச் சென்று தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கேட்டதாக நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்தி வெளியானது. 

இது தொடர்பாக பாகிஸ்தானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், ஒப்பந்தம் ஏற்பட சாத்தியக்கூறு இருப்பதாக சில அதிகாரிகள் கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. 

ஆனால், ராணுவ தளங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத் துறை மந்திரி சவுத்ரி பாவத் உசைன் ஆகியோர் கூறினர்.

இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தெளிவுபடுத்தி உள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியின்போது அவர் பேசியதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவை பாகிஸ்தான் அனுமதிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், ‘நிச்சயமாக இல்லை. பாகிஸ்தான் பிரதேசத்தின் எந்த ஒரு தளத்தை பயன்படுத்தவோ, இங்கிருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கையையோ நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை’ என்று கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை தலிபான் அமைப்பு வரவேற்றுள்ளது. ‘பாகிஸ்தானில் உள்ள தளங்களை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கப் படைகள் கேட்டது நியாயமற்றது, பாகிஸ்தான் சரியாக பதிலளித்துள்ளது’ என்று தலிபான் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News