search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imran Khan"

    • மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
    • புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

    அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

    தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் கூறும்போது, அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோலில் இருந்தது. நாக்கில் விஷத்தின் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

    புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதையடுத்து புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே புஷ்ரா பீபி கூறும்போது, கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை எனக்கு உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன், உணவு , தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன. தற்போது கழிப்பறையை சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன.
    • அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமம்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "முதலில் எங்களது கட்சி சின்னத்தை சதி செய்து முடக்கினர். தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டன. மக்களின் ஆணை திருடப்பட்டு இருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."

    "நடைபெற்று முடிந்த தேர்தலில் எனது கட்சியினர் மட்டும் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை தேர்தலை சந்தித்த மற்ற 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன."

    "தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பெஷாவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    • நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
    • பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9-ந் தேதியன்று பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் அவர் 2-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க ராணுவமும் சர்தாரிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிப் அலி சர்தாரி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார்.

    • 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
    • பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்

    பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.

    தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.

    இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.

    பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.

    இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.

    வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    • ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்தது.
    • குரேஷி, அவரது மகன் ஜெய்ன் குரேஷியின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது.

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    முல்தான் உள்ளிட்ட 2 சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்தஇடத்தில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

    • இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    அடியாலா சிறையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    • தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக ஒரு பேரணியில் இம்ரான் கூறினார்
    • ராவல்பிண்டி நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது

    2018 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவி ஏற்றார்.

    2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

    ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

    2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

    அந்த ரகசிய செய்தி குறிப்பு "சைஃபர்" என அழைக்கப்படுகிறது.

    ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது புகார் எழுந்தது.

    மேலும், அரசாங்க ரகசியத்தை காக்க தவறிய குற்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    "சைபர் வழக்கு" (cipher case) என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

    இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

    ஆனாலும், பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இந்திய தூதரக உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் அஜய் பிசாரியா.
    • அவர் பாலகோட் தாக்குதல் நடந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக முன்னாள் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் அஜய் பிசாரியா. இவர் சமீபத்தில் "தி ஆங்கர் மேனேஜ்மேன்ட்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய ராஜதந்திர உறவு" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    அதில், பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நெருக்கடியைத் தவிர்க்கும் முயற்சியில் பிப்ரவரி 27, 2019 அன்று பிரதமர் மோடிக்கு நள்ளிரவில் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக அதிகாரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும், சீனா இரு நாடுகளுக்கும் துணை மந்திரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தன. ஆனால் தேவையில்லை என இந்தியா மறுத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்ரவரி 14 அன்று இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது.

    அடுத்த நாள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து, ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அப்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி செய்தபோது, பாகிஸ்தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் இந்தியா கடுமையான பதிலடிக்கு தயாரானது. இந்த நேரத்தில்தான் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

    பிசாரியாவின் கூற்றுப்படி, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜுவாவுக்கு அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து, இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானை எந்நேரத்திலும் தாக்கலாம் என்ற செய்தி வந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களிடம் இதுகுறித்து அவர்களுடைய நாட்டு தலைவர்கள் இந்தியாவிடம் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அப்போது ஒரு நாடு சார்பில், இந்தியாவிடம் நேரடியாக பேசுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான் டெல்லியில் இருக்கும்போது அப்போதைய பாகிஸ்தான் உயர் அதிகாரி சோஹைல் மஹ்மூத் என்னை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் நாட்டின் பிரதமர் மோடியிடம் பேச விரும்புகிறார் என்றார். நான் பிரதமர் மோடி தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். முக்கியமான தகவல் என்றால் தன்னிடம் தெரிவிக்கவும். நான் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கிறேன் என்றேன். அதன்பின் எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்றார்.

    டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து பிரதிநிதிகள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரிடம் அன்றிரவு "நிலைமையைத் தணிக்கவும், பயங்கரவாதப் பிரச்சனையை தீவிரமாக்க விடாமல் கையாள பாகிஸ்தான் தயாராக உள்ளது" என கூறியுள்ளனர்.

    அடுத்த நாள், இம்ரான் கான் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுதலை செய்வதாக ஊடகங்களிடம் அறிவித்தார். இம்ரான் கான், வர்தமானின் விடுதலையை "அமைதியான செயல்முறை" என்று குறிப்பிட்டாலும், அது இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் விளைவு என சுட்டிக்காட்டுகிறார்.

    பிரதமர் மோடி பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் இந்த சம்பவத்தைக் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக, விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இல்லையெனில் அன்று இரவு ரத்தக்களரி நடைபெற்றிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    • பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
    • தற்போது கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது.

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாய் கட்சி தலைவரான இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த 2 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    இந்த நிலையில் இம்ரான் கான் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி அக்கட்சி சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தெக்ரிக்-இ-இன்சாப்பின் உட்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறியதாக சின்னத்தை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து பெஷாவர் ஐகோர்ட்டில் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

    கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அதில் தீர்ப்பளித்த கோர்ட்டு, கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு பிராந்திய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

    பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாக் கட்சிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் ஆைணயம் அதன் அரசியல் அமைப்பு தேர்தல் செயல்முறையை தொடங்கு மாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கோர்ட்டு தீர்ப்ப ளித்தது.

    இதுகுறித்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் தலைவர் கோஹர்கான் கூறும்போது,

    தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.

    பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை கட்சி புறக்கணிக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. எங்களுக்கு கிரிக்கெட் மட்டையை ஒதுக்க முடியாவிட்டால், எங்களுக்கு வேறு சின்னம் தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கேட்போம் என்றார்.

    • இம்ரான் கானின் வேட்பு மனு, தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
    • நேர்மையற்றவர் எனும் தீர்ப்பால் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறார் என்றது ஆணையம்

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.

    இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

    ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார். இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிடிஐ கட்சியின் 90 சதவீத தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
    • நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.

    லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×