தமிழ்நாடு

ஏற்காட்டில் திடீரென பெய்த கோடை மழை- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2024-05-03 03:51 GMT   |   Update On 2024-05-03 03:51 GMT
  • கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது.
  • 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வாரவிடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு அவை கோடை விழா மலர்கண்காட்சி நேரத்தில் பூத்து குலுங்கும். இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

இந்த நிலையில் கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது. மேலும் மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள், செடிகள், கொடிகளில் இலைகள் உதிர்ந்து சருகாக மாறியது. இதனால் கொளுத்தும் கோடை வெப்பத்தால் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.

ஆனாலும் சமவெளி பகுதிகளில் அனல் காற்று வீசிவருவதால் ஏற்காடுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை இல்லாவிட்டாலும் சுற்றுலா தலங்கள் ஓரளவுக்கு பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

கோடை மழை பெய்தால் தான் சுற்றுலா தலங்கள் மீண்டும் தனது பழைய பசுமையை திரும்ப பெறும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், அண்ணாபூங்காவில் ஊஞ்சல் விளையாடியும், பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தும் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மாலை குளிர்ந்த காற்று வீசி மழை வருவது போல் மேக கூட்டங்கள் திரண்டது. பின்னர் சிறிது நேரத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைத்து கொண்டே படகு சவாரி செய்தும், மழையில் துள்ளி குதித்தும் விளையாடினர். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் ஏற்பட்டது. இது குறித்து ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது. கோடை மழை பெய்ய தொடங்கினாலே சீசன் களை கட்டும். அந்த வகையில் இனி வரும் நாட்களிலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்யும். இதனால் வனப்பகுதிகள் மீண்டும் பசுமையாக மாறி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று கூறினர்.

Tags:    

Similar News