செய்திகள்
பொது மேலாளர் பயான்கா சம்முத்திடம் கின்னஸ் நிறுவன அதிகாரி வழங்கியபோது எடுத்த படம்.

அபுதாபியில், கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்க வளாகத்துக்கு 2 கின்னஸ் சாதனை சான்றிதழ்கள்

Published On 2020-08-19 17:18 GMT   |   Update On 2020-08-19 17:18 GMT
அபுதாபியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்க வளாகத்துக்கு 2 கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் கிடைத்து உள்ளது.
அபுதாபி:

அபுதாபி நகரில் கடந்த 2016-ம் ஆண்டில் உயரமான சுவர் ஏறும் சாகச அரங்கம் மற்றும் உள்ளரங்கத்தில் ‘ஸ்கை டைவிங்’ செய்யும் வசதிகளுடன் பிரமாண்ட கட்டுமானம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை யாஸ் தீவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை கடந்து கடந்த 2018-ம் ஆண்டில்தான் இதன் திட்டப்பணிகள் முழு வீச்சில் தொடங்கியது.

இந்த திட்டத்திற்காக மிரல் அரசு பொதுத்துறை நிறுவனம் 36 கோடியே 70 லட்சம் திர்ஹாம் நிதியில் கட்டுமான பணிகளை செய்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.



இதில் முக்கியமாக ‘பிளைட் சேம்பர்’ எனப்படும் ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் இடமாகும். இதில் காற்று மூலம் மனிதர்களை மிதக்கச்செய்யும் கண்ணாடி கூண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உள்ளே தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு வானத்தில் இருந்து குதிப்பது போன்ற அனுபவத்தை பெறலாம். அதனை தத்ரூபமாக உணரவைக்க வி.ஆர் (மெய்நிகர் காட்சி) கருவி தரப்படும். இதனை தலையில் மாட்டிக்கொண்டால் கண்களுக்கு எதிரில் உள்ள திரையில் தோன்றும் காட்சி வானில் உயரத்தில் இருந்து பறப்பது போன்று நம்மை உணரச்செய்யும்.

இந்த உள்ளரங்க அறை 32 அடி அகலம் 179.2 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்களை அந்தரத்தில் தூக்கி செல்ல 16 ராட்சத மின் விசிறிகள் அடியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் உயரத்தில் மிதந்து கொண்டு விண்வெளியில் நடப்பதுபோல் நடக்கவும் செய்யலாம்.

உலகில் உள்ள ஸ்கை டைவிங் உள்ளரங்குகளில் இது பிரமாண்டமானதாக உள்ளதால் இந்த அரங்கம் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்து உள்ளது. மேலும், அங்கு மலையேறும் பயிற்சி போல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள 138.32 அடி உயரமுள்ள சுவர் ஏறும் சாகச பகுதிக்கும் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்திற்கு கிடைத்த 2 கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்களையும் கின்னஸ் நிறுவன அதிகாரியிடம் இருந்து ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்க வளாகத்தின் பொது மேலாளர் பயான்கா சம்முத் பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News