செய்திகள்
கொஞ்சி மகிழும் பெரியோர்கள்

சுவிட்சர்லாந்தில் குழந்தைகளை கொஞ்சி மகிழ தாத்தா-பாட்டிகளுக்கு அனுமதி

Published On 2020-04-30 14:31 GMT   |   Update On 2020-04-30 14:31 GMT
சுவிட்சர்லாந்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அவர்களது தாத்தா-பாட்டிகள் கொஞ்சி மகிழலாம், கட்டித் தழுவலாம் என்று அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பெர்ன்:

கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. குழந்தைகளையும், சிறார்களையும் பெருமளவில் பாதிப்பதும் தெரிய வந்தது. இதனால் சுவிட்சர்லாந்து அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களையும், குழந்தைகளையும் அவர்களின் தாத்தா, பாட்டிமார்கள் கொஞ்சி மகிழ்ந்து கட்டித் தழுவ தடை விதித்தது.

குழந்தைகள், சிறார்கள் மூலமாக கொரோனா மூத்த குடிமக்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மிக அண்மையில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வின் முடிவில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மூலம் கொரோனா முதியோருக்கு பரவாது என்பது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து, அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவர் டேனியல் கோச் கூறுகையில், “10 வயதுக்கு கீழான சிறார்கள் மற்றும் குழந்தைகள் மிக அரிதாகவே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களது உடல் இத்தொற்றை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் குழந்தைகள் கொரோனா வைரசை பரப்பி விடுபவர்களும் அல்ல. எனவே இவர்களால் நோயாளிகளுக்கோ,முதியவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது”என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களையும், குழந்தைகளையும் அவர்களது தாத்தா-பாட்டிகள் எப்போதும்போல் கொஞ்சி மகிழலாம், கட்டித் தழுவலாம் என்று சுவிட்சர்லாந்து அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News