செய்திகள்

லண்டன்: இயற்கை எரிவாயு குழாயில் பயங்கர கசிவு - உ.பி. துணை முதல் மந்திரி பத்திரமாக வெளியேற்றம்

Published On 2018-01-23 13:35 GMT   |   Update On 2018-01-23 13:35 GMT
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டலின் அருகே இன்று இயற்கை எரிவாயு குழாயில் திடீரென பயங்கர கசிவு ஏற்பட்டதால் உ.பி. துணை முதல் மந்திரி உள்பட 1450 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
லண்டன்:

உலக கல்வி கருத்துக்களம் என்ற அமைப்பின் சார்பில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2018-ம் ஆண்டுக்கான மூன்றுநாள் கருத்தரங்கம் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. பிரிட்டன் நாட்டு கல்வித்துறை மந்திரி டாமியான் ஹின்ட்ஸ் இந்த கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். நாளை (புதன்கிழமை) வரை நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் உலகம் முழுவதும் இருந்து கல்வியாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநில துணை மந்திரி தினேஷ் சர்மா உள்பட பத்துபேர் கொண்ட இந்திய குழுவினர் சென்றுள்ளனர். லண்டன் நகரில் சாரிங் கிராஸ் பகுதியில் உள்ள அம்பா ஓட்டலில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த ஓட்டலின் வழியாக செல்லும் இயற்கை எரிவாயு குழாய் இணைப்பில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள், 20 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்தனர்.



ஓட்டலின் அருகாமையில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தேசிய எரிவாயு குழுமத்தை சேர்ந்த பொறியாளர்கள் வாயு கசிவை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அம்பா ஓட்டலின் அறைகள் மற்றும் அங்குள்ள இரவு விடுதியில் இருந்த சுமார் 1450 பேரை அவர்கள் பத்திரமாக வெளியேற்றினர். உத்தரப்பிரதேசம் மாநில துணை மந்திரி தினேஷ் சர்மா உள்ளிட்ட இந்திய குழுவினர் இரவு உடைகளுடன் அழைத்து செல்லப்பட்டு அருகாமையில் உள்ள வேறொரு ஒட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News