செய்திகள்

அமெரிக்காவில் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Published On 2017-12-16 03:04 GMT   |   Update On 2017-12-16 03:04 GMT
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பலசரக்கு விற்பனை மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் கருணாகர் காரெங்கிள் (வயது 53).

இந்தியரான இவர், கடந்த 11-ந் தேதி இரவு 10 மணிக்கு வேலையில் இருந்தபோது, முக்காடு போட்டுக் கொண்டு 2 பேர் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அதற்கு கருணாகர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த பேர்பீல்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்துவந்து, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரை மீட்டு, வெஸ்ட் செஸ்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

உயிரிழந்த கருணாகருக்கு அமெரிக்காவில் உறவினர் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருவது, அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிகாகோவில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 58 ஆயிரத்து 491 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 14 ஆயிரத்து 763 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News