செய்திகள்

ஏமனில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிப்பு

Published On 2017-09-12 11:00 GMT   |   Update On 2017-09-12 11:00 GMT
ஏமன் நாட்டில் உள்ள தொண்டு இல்லத்தின்மீது தாக்குதல் நடத்தி கடந்த ஆண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிக்கப்பட்டதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
மஸ்கட்:

ஏமன் நாட்டில் உள்ள தொண்டு இல்லத்தின்மீது தாக்குதல் நடத்தி கடந்த ஆண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிக்கப்பட்டதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு டான் பாஸ்கோ கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர் பாதிரியார் தாமஸ் உலுன்நளில். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் ஏமன் நாட்டின் பழமையான ஏடன் நகரில் ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி அந்த தொண்டு நிறுவனத்துக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 நர்சுகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் இந்திய நர்சு ஆவார்.

அங்கிருந்த பாதிரியார் தாமஸ் உலுன்நளிலை கடத்திச்சென்றனர். ஓராண்டுக்கு மேலாகியும் ஆகியும் அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்?, அவரை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர்? என்பது பற்றி எந்த தகவலும் தெரியவரவில்லை.

இதனால் பாதிரியார் தாமஸ் உலுன்நளில் கொல்லப்படுவதற்கு முன்பாக அவரை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு பெங்களூரு டான் பாஸ்கோ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக, ஏமனுக்கு அருகாமையில் உள்ள நாடுகளும் தாமஸ் உலுன்நளிலை விடுவிக்க உதவுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், பாதிரியார் தாமஸ் உலுன்நளில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஓமன் நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு அவர் மீட்கப்பட்டாரா? அல்லது, பிணைத்தொகை அளித்து விடுவிக்கப்பட்டாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.


தாமஸ் உலுன்நளில் விடுவிக்கப்பட்ட தகவலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
Tags:    

Similar News