செய்திகள்

வடகொரியா முதலில் அமெரிக்காவை தாக்கினால் சீனா நடுநிலையாக இருக்கவேண்டும்: சீன அரசு ஊடகம் யோசனை

Published On 2017-08-11 11:34 GMT   |   Update On 2017-08-11 11:34 GMT
அமெரிக்கா மீது வடகொரியா முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்தினால் சீனா நடுநிலையாக செயல்பட வேண்டுமென சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங்:

அமெரிக்கா - வடகொரியா இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவிற்கு சொந்தமான குயாம் தீவு மீது தாக்குதல் நடத்த நான்கு ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக வடகொரியா அறிவித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் வடகொரியா பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் இத்தகைய கடும் எச்சரிக்கையால் அமெரிக்கா - வடகொரியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் குயாம் தீவு மீது வடகொரியா ஏவுகணை வீசினால் அதை நாங்கள் சுட்டு வீழ்த்துவோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இத்தகைய மிரட்டலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மீது வடகொரியா முதலில் தாக்குதல் நடத்தினால் சீனா நடுநிலையாக செயல்பட வேண்டும் என சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ‘வடகொரியா முதலில் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தினால் சீனா நடுநிலையாக இருக்கும் என்பதை முதலில் உறுதிபடுத்த வேண்டும். அதுவே அமெரிக்கா முதலில் வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் அதை சீனா தடுக்க வேண்டும்’ என கூறியுள்ளது.
Tags:    

Similar News