செய்திகள்

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

Published On 2017-07-29 03:36 GMT   |   Update On 2017-07-29 03:36 GMT
ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு ஐ.நா. பொது செயலாளர் ஆண்டான்யோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்:

ஜப்பான் கடல் பகுதியில் நேற்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. அதை ஒப்புக்கொண்டுள்ள வடகொரியா ஊடகங்கள் இந்த ஏவுகணை அதிக தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை எளிதாக தாக்கமுடியும் என கருதப்படுகிறது. ஆனால் தகவலை மறுத்துள்ள ரஷ்யா, வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறைந்த தூர இலக்கை தாக்கும் திறனுடையது என பதிலளித்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் பதிலை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்துள்ளன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அடுத்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.வின் பொது செயலாளர் ஆண்டான்யோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டன செய்தியை அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வடகொரியாவின் இந்த செயல் கொரியா கடல் பகுதியில் மேலும் பரபரப்பான சூழலுக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News