செய்திகள்

ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி ரெயில் நிலையத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

Published On 2017-07-28 00:10 GMT   |   Update On 2017-07-28 00:10 GMT
ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி ரெயில் நிலையத்தின் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சிட்னி:

ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி சென்டிரல் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பது வாடிக்கை.

அந்த ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள பூக்கடையின் அருகே கத்திரிக்கோல் ஏந்திய ஒரு நபர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சித்தார். இது தொடர்பாக போலீசார் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவம் பற்றி நியூ சவுத் வேல்ஸ் போலீசார் கூறும்போது, “இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல” என்று குறிப்பிட்டனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், “சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்த நபர் கையில் கத்திரிக்கோல் வைத்திருந்தார்” என்று கூறினர்.

பூ வியாபாரி மேனுவல் தியோஹரஸ், “சுட்டுக்கொல்லப்பட்ட நபர் என் கழுத்தருகே ஒரு உடைந்த பாட்டிலை வைத்து மிரட்டினார். இங்கிருந்து நீ நகரக்கூடாது. தைரியம் இருந்தால் போலீசைக் கூப்பிடு என்று சொன்னார். நான் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடினேன். அப்போது அவர் இங்கிருந்த கத்திரிக்கோலை பறித்துக்கொண்டார்” என்று கூறினார்.

கொல்லப்பட்ட நபர் ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 
Tags:    

Similar News