தமிழ்நாடு

தமிழகத்தை அழிவுப்பாதைக்கு தி.மு.க. அரசு கொண்டு செல்கிறது

Published On 2024-04-22 06:47 GMT   |   Update On 2024-04-22 06:47 GMT
  • போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
  • தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News