தமிழ்நாடு

4 நாட்கள் பெய்த தொடர் மழையால் வயலிலேயே முளைவிட்ட நெல்மணிகள்- விவசாயிகள் வேதனை

Published On 2024-05-22 03:37 GMT   |   Update On 2024-05-22 03:37 GMT
  • கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
  • ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

மணப்பாறை:

கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடும் வெயிலால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டது. விவசாய பயிர்களும் கருகும் நிலையும் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலும் 109 டிகிரிக்கும் மேல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

முதல் 2 நாட்கள் மிதமான மழை பெய்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மிக கனமழை பெய்தது. மணப்பாறை அருகே தொப்பம்பட்டி, நல்லாம்பிள்ளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அப்பகுதி விவசாயிகள் சுமார் 300 ஏக்கருக்கு மேல் கோடை காலத்திற்கு ஏற்ற குறுவை நெல் ரகங்களை பயிரிட்டிருந்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மணப்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன. மேலும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் மணிகள் முளைவிடத் தொடங்கின.

தண்ணீரை வெளியேற்றவும், அறுவடை செய்யவும் வழியில்லாமல் தொடர்ந்து நெல் மணிகள் வயல்களிலேயே முளைவிட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்,

கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. அப்போது மழை பெய்திருந்தால் பயிர்கள் செழிப்பாக வளர உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்போது பெய்திருக்க வேண்டிய மழை காலம் கடந்து நெற்கதிரானபோது காற்றுடன் மழை பெய்துள்ளதால் நெற்கதிர்கள் சாய்ந்து விட்டன.

அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பெய்த மழையால் நெற் பயிர்கள் வயலில் தேங்கிய நீரில் மூழ்கி, முளைவிடத் தொடங்கிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

ஆனால் கோடை கால சாகுபடி என்பதால் விவசயிகள் பலரும் பயிர் காப்பீடு செய்ய தவறிவிட்டனர். எனவே, அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News