தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர்செல்வம்


அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவை பெற எடப்பாடி-ஓ.பி.எஸ். போட்டி சுற்றுப்பயணம்

Published On 2022-08-28 05:39 GMT   |   Update On 2022-08-28 05:39 GMT
  • எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் விலகி செல்வது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒரு சிலர் விலகி தங்கள் பக்கம் வருவது ஓ.பி.எஸ். தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. யார் பக்கம்? என்பதை நிரூபிப்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

நிர்வாகிகள் ஆதரவு தன் பக்கம் இருப்பதால் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறார்கள்.

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்களை தன்பக்கம் இழுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் ஓ.பி.எஸ். எடுத்து வருகிறார்.

இதற்காக மாவட்டம்தோறும் ஆட்களை நியமித்து அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் பதவிகள் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

சசிகலா, தினகரன் ஆகியோரும் இணைய போவதால் எதிர்காலத்தில் கட்சி நம் வசமாகும். எங்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்று பேசி பேசியே மனதை மாற்றி வருகிறார்கள்.

இதற்கு ஓரளவு பலன் கிடைத்து வருவதாகவே கூறுகிறார்கள்.

சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ் ஓ.பி.எஸ். பக்கம் சேர்ந்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

மேலும் பல எம்.எல்.ஏக்கள் வரவிருப்பதாகவும், அது, பரம ரகசியம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

இதன் மூலம் பலரை இழுப்பதற்கான முயற்சிகள் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் விலகி செல்வது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதை தடுக்கவும், கட்சியினரிடையே நம்பிக்கையை ஊட்டவும் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பொதுக்குழு வழக்கு தீர்ப்பு இன்னும் 2 நாட்களில் வரவுள்ளது. அதன் பிறகு சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தயாராகும் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

இந்த சுற்றுப்பயணத்தை திண்டுக்கல்லில் இருந்து தொடங்கவும் ஆலோசித்து வருகிறார்கள். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு முதல் முதலில் தேர்தலை சந்தித்தது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்தான். அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

எனவே அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னம் அறிமுகமான திண்டுக்கல்லில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒரு சிலர் விலகி தங்கள் பக்கம் வருவது ஓ.பி.எஸ். தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தனித்தனி அணியாக நின்றனர். அப்போது தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தார்கள்.

அதே போல்தான் இன்றைக்கும் உண்மை நிலையை அறிந்த பிறகு தான் தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைகிறார்கள். அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்தி செயல்படுத்த மாவட்டம்தோறும் புரட்சிப்பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.

இப்படி இருவரும் போட்டி போட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இரண்டு தரப்பிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கள் பலத்தை காட்ட மாவட்டங்களில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News