தமிழ்நாடு
மழை

தேனி மாவட்டத்தில் கனமழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து

Published On 2022-05-27 05:08 GMT   |   Update On 2022-05-27 05:08 GMT
தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையிலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் விவசாய பணிகளை தொடங்க உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 371 கனஅடி நீர்வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5177 மி.கனஅடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 64.53 அடியாக உள்ளது. வரத்து 25 கனஅடி, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் மேலும் 100 கனஅடிநீர் குறைக்கப்பட்டு 1100 கனஅடி திறக்கப்பட்டது. இதுதவிர மதுரைமாநகர குடிநீருக்கு 72 கனஅடி என மொத்தம் 1172 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4528 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.60 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 95.44 அடி, திறப்பு 3 கனஅடி.

பெரியாறு 5.2, வைகை அணை 37.2, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 11, போடி 5.6, ஆண்டிபட்டி 39.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News