தமிழ்நாடு
வி.பி.துரைசாமி, அண்ணாமலை

இலங்கை தமிழர்களுக்கு உதவும் முதலமைச்சரின் முடிவை பாஜக வரவேற்கிறது- அண்ணாமலை பேட்டி

Published On 2022-05-05 00:19 GMT   |   Update On 2022-05-05 00:19 GMT
தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

இலங்கையில் 4 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 4 நாட்களாக இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை அதிபருக்கு கொடுக்கும் மரியாதையை நமது பிரதமர் மோடிக்கும் அங்குள்ள மக்கள் கொடுக்கிறார்கள். 

இந்தியா சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட 14 ஆயிரம் வீடுகளிலும் பிரதமர் மோடியின் படத்தை அந்த மக்கள் வைத்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவை தமிழக பாஜக வரவேற்கிறது. முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தமிழக பா.ஜ.க.வும் அரசுடன் கைகோர்த்து நிதியுதவி வழங்கி மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அனுப்பும்.

இலங்கைக்கு சென்றபோது அங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் மூலம் இலங்கை அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். 

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய விழாவிற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்.

1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி 6-வது பிரிவின்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் வலைகளை காய போடுவதற்கும், கச்சத்தீவைத் தாண்டி நெடுந்தீவு வரை சென்று மீன் பிடிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. 

அந்த 6-வது பிரிவு 1976-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன். 

தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். இல்லாவிட்டால், தடையை மீறி பட்டின பிரவேச நிகழ்ச்சியை தமிழக பா.ஜ.க. நடத்தும்.

ஒரு குருவை பல்லக்கில் தூக்குவதை மனிதனை தூக்குவதாக பார்க்க கூடாது. என்னை பொறுத்தவரை குருமார்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். 

எனவே, நானே அங்கு நேரில் சென்று பல்லக்கை தூக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் கூலிக்கு பல்லக்கு தூக்குவதை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News