செய்திகள்
குற்றாலம் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

Published On 2021-11-13 05:16 GMT   |   Update On 2021-11-13 05:16 GMT
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாநகர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி விட்டது.

அணைகளில் இருந்து உபரி நீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் திறக்கப்படுவதால் பிசான பருவ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 135.85 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 138.85 அடியானது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.44 அடி நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு 4,002.13 கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 1,352 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86.25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாகவும் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அதிகபட்சமாக 39 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மில்லி மீட்டரும், களக்காடு பகுதியில் 12 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

பணகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆலந்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது.

வள்ளியூர் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இன்றும் அதிகாலை முதலே சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் வள்ளியூர், தெற்கு வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதே போல் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

ராதாபுரம் தாலுகாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதால் கடலோர கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர், பணகுடி, இடிந்தகரை, கூட்டப்புளி, செட்டிகுளம், வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாங்குநேரி, திசையன்விளை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் அதிகளவு விழுகிறது.

அடவிநயினார் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 32 மில்லி மீட்டரும், தென்காசியில் 10.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதியில் 80.50 அடியும், கருப்பாநதியில் 68.24 அடியும் நீர் இருப்பு உள்ளது.

85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 124 அடி நீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது.



Tags:    

Similar News