செய்திகள்
ராமதாஸ்

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும்: ராமதாஸ்

Published On 2021-09-23 08:56 GMT   |   Update On 2021-09-23 08:56 GMT
நடப்பாண்டு முதலே நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாக வைத்து டெல்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வே மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என்பது இன்னுமொரு வேதனை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடியில் உண்மையான மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்போது கூட டெல்லி, ராஞ்சியில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. நீட் மோசடி செய்பவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு இருக்கிறது என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன.

இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; மருத்துவக் கல்வி வணிக மயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் ஆகிய இரு உன்னத நோக்கங்களை நிறைவேற்ற நீட் தவறி விட்டது.

இத்தகைய சூழலில் மோசடிகளின் கூடாரமாக நீட் உருவெடுத்திருப்பது தேர்வு சார்ந்த மோசடிகள் அதிகரிக்கவும், மருத்துவக் கல்வியின் தரம் குறையவும் தான் வழி வகுக்கும்.

எனவே, நடப்பாண்டு முதலே நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்; அதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News