செய்திகள்
ராமதாஸ்

சென்னை வெளிவட்டச் சாலை 2-ம் பகுதியை உடனே திறக்க வேண்டும்: ராமதாஸ்

Published On 2021-01-23 08:44 GMT   |   Update On 2021-01-23 08:44 GMT
சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கக்கூடிய சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. மிக முக்கியமான நெடுஞ்சாலையைத் திறக்காமல், முடக்கி வைத்திருப்பது மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்னைக்குள் நுழையாமல் புறவழிச்சாலைகள் வழியாக பயணிப்பதற்கு வசதியாக சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 62.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2156.40 கோடி செலவில் வெளிவட்டச் சாலை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டு 2012- ம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

நெமிலிச்சேரி- மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் 2 ம் கட்டப் பணிகளில் 97 சதவீதம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முழுமையாக பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், அதன்பின் ஏறக்குறைய ஓராண்டு ஆகியும் சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதி திறக்கப்படவில்லை.

இந்த சாலையை தமிழக முதல்-அமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே, திறப்புவிழா தாமதப்படுத்தப்படுவதாக இந்த சாலையையொட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் கூறியுள்ளனர். லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான சாலையின் திறப்பு விழா எந்த ஒரு தனி மனிதருக்காகவும் தாமதப்படுத்தப்படக்கூடாது. இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த சாலைப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக அதன் திறப்பு விழாவை தாமதப்படுத்துவது சரியல்ல.

எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News